இலங்கையில் மீளவும் போர்: சிங்களத் தேச ஒருமைப்பாட்டுக் கூச்சலோடு- ஈழத்தின் கனவோடு வெடித்துவிட்டது!

ஸ்ரீலங்கா அரசும்,புலிகளும் கடற்சமரில் பாரிய இழப்பில்...

இன்றைய சூழலில் போர் எதற்கு?

இலங்கை அரசால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்களென உண்மையிலேயே புலிகள் நம்பியிருந்தால்-மக்களை, பிரச்சனைகளை அரசியல்ரீதியில் கையாளும்படி ஏன் நெறிப்படுத்தவில்லை? போருக்கு முன் புலி இயக்கம்- (இத்தகையவொரு) விடுதலையமைப்புச் செய்வது அவசியமில்லையா?

இத்துடன்-நியாயப்பாடுகளைத் தெளிவாக்கிப் போரை மிகவும் பின் தள்ளியிருக்க வேண்டும். இது மிகவும் அவசியம்!

ஆனால், எதுவித வாதப்பிரதிவாதங்களே அல்லது எதற்காக-என்னதான் சமாதானப் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின்பான பேச்சு வார்த்தைகளில் நேர்ந்தன என்பதைக் கூட மக்களிடம் எடுத்துச் செல்லாமல், போரைத் திணிப்பது இரு தரப்புக்கும் நியாயமல்ல.

இன்றுவரை மக்கள் அனுபவித்த-அனுபவிக்கும் துன்பம் எல்லையற்ற வண்ணம் அதிகரித்தபோதும் தமிழ்-சிங்கள சமுதாயங்களில் ஜனநாயக விரோத ஆதிக்க-அதிகாரத்துவ அரசியல் மீளவும் உச்சத்தில் பறக்கிறது.

சுனாமி அழிவுக்குப் பின் தமிழ்ப் பகுதிகளில் ஒருவித ஏமாற்றமும், வாழும் ஆசையும்-துய்ப்பின் துடிப்பும் ஒருங்கே குடிகொண்டிருக்கிறது.ஆனால் சிங்கள அரசோ வான்வழித் தாக்குதல்மூலம் இவற்றையெல்லாம் பொருட் படுத்தாது பழைய பாணியில் தாக்க முனைந்துவிட்டது! சுனாமிக்குப் பின்னும் இதே பழைய கதை...என்னவொரு சிங்கள அரசு-என்னவொரு விடுதலை இயக்கம்!!

உணர்ச்சி மிக்க இனவாதச் சவடால்கள் மக்களின் மனங்களை அள்ளிக் கொள்ளும்போது மரபுவழி யுத்தம் மீளவும் வலுப்பெறத் தொடங்கிவிடும்.

இந் நிலையிலும் இலங்கை அரசும் புலிகளும் மற்றும் சிறு குழுக்களும் தமக்கு எதிரானோரைத் தட்டுவதிலும், துரோகியெனச் சாட்டுவதிலும் மும்மரமாகச் செயலாற்றியபடி.மறுபுறமோ பின் கதவால் இரகசியப் பேரங்கள்-ஒப்பந்தங்கள்,ஆலோசனைகள் மேசைமீது வந்து விழுந்தபடி வீச்சாகக் காரியமாகிறது.

மக்களோ தினமும் மரணித்தபடி... பசித்திருக்கும் இந்த மக்களின் "எதிர்காலக்கண்" முன்னே குருதி ஆறாக ஓடுகிறது!

இதுவரை தொடர்ந்த-தொடரும் போராட்ட வாரலாற்றை ஆராய்ந்தால் புலிகளின் தடுமாற்றமும், இரட்டைப் போக்கும் நிறைந்த போராட்ட வாழ்வை நாம் எதிர்கொள்ள முடியும். இதன் தொடர்ச்சி மிகவும் பாரிய மனித அழிவைச் செய்துவிடப் போகிறது!தொடங்கப்பட்ட கடற் சமர் ஒரு ஒத்திகை!இதில் புலிகளின் பல கடற்கலங்கள் இலங்கைக் கடற்படையால் அழிக்கப்பட்டும்,அதேயளவு உயிர், ஆயுதத் தளபாடங்கள் இலங்கைக் கற்படைக்கும் புலிகளால் நாசமாகியுள்ளது.

கொடுமையான பேரினவாதச் சிங்கள அரசால்,புலிகளால் இவைகளின்; நடவடிக்கையால் போரை எதிர்கொள்ளும் அப்பாவித் தமிழ்-சிங்கள மற்றும் இஸ்லாமிய மக்களின் நிலைமைகள் மிகவும் குழப்பகரமானதாகிவிட்டது.குறுகிய நோக்கம் கொண்ட சிங்கள ஆளும் வர்க்கம் போரினால் தமிழ்பேசும் மக்களின் இறைமைகளைக் கூண்டோடு புதைப்பதற்கான பாரிய பொறியை ஏலவே வைத்திருந்தது.அதன் இந்தத் திட்டம் பலிப்பதற்காக உலகத்தைத் தனக்கிசைவாகவும் கரம் கோர்த்து வைத்திருப்தால் இம்முறை தமிழ் பேசும் மக்களின் அழிவுகள் வெறும் உள் நாட்டு ஊடகங்களின் கவனத்தையே பெறாது தட்டிக்கழிக்கப் படுவது நிசம்.

இத்தமாதிரியானவொரு சூழலில் போர் சிங்கள அரசுக்கு மிக இலாபகராமாக இருக்கும்.புலிகள் மீள முடியாத போரில் தமது இருப்பை உறுதிப் படுத்தத்தான் முடியுமேயொழியத் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியாது.

உண்மையான பேச்சு வார்த்தைய+டாக ஒரு அரசியல் இணக்கப்பாட்டை எட்ட முடியாத சிங்கள அரசு-புலிகள் இயக்க இயலாமை வெறும் அரசியல் சட்ட-ஆளும் வர்க்கப் பிரச்சனைகளல்ல.மாறாக இந்திய-அமெரிக்க,ஐரோப்பிய நலன்களோடு சம்பந்தப்பட்டு எந்த அரசியல் இணக்கப் பாட்டையும் எய்திட முடியாதுள்ளது.இது ஒவ்வொரு பொழுதும் புலிகளின் இருப்பைக் குறிவைத்துத் திட்டமிட்ட தாழ் நிலை ஆயுத-அரசியல் போரை செய்து வந்துள்ளது.இதனால் புலிகளை அரசியல்-ஆயுதரீதியில் வலுவிழக்க வைக்கும் உலக நாடுகளின் தடைகள் வேண்டுமென்றில்லாது- காரணத்தோடுதான் செய்யப்பட்டதென்பதை நாம் இலகுவாகக் காணலாம்.

ஸ்ரீலங்கா அரசின் பிற்போக்குவாதக் கொடூரங்களும், தமிழர்-சிங்களவர்-முஸ்லீம்கள் மீதான ஒடுக்கு முறைகளும் திடமானவொரு முடிவுக்கு வந்து, இல்லாதாகவேண்டும்.அதேபோன்றே புலிகளினதும் மற்ற(புலிகளின் மொழியில்:ஒட்டுக் குழுக்கள்) ஆயுதக் குழுக்களினதும் மக்கள்விரோதப் பயங்கரவாதமும் முடிவுக்கு வந்தாகவேண்டும். இதற்கேற்ற அரசியலானது யுத்தத்தில் நிலை பெறமுடியாது.யுத்தம் எப்பவும் மக்களால் முன்னெடுக்கப்பட்டு, மக்களிடம் அதிகாரத்தைக் குவிப்பதற்கானவொரு சூழலில்தான் வெற்றியை உறுதி செய்யும். இதை புலிகளின் போராட்ட முறையினால்-அமைப்பு அதிகாரத்தால் நிறைவேற்ற முடிவதில்லை.

அல்லைப்பிட்டி, வங்காலை, கெப்பித்தக் கொலாவப் படுகொலைகள் இந்த அரசியலின் மையப்பட்ட இலாபங்களை(பாராளுமன்ற ஆட்சி நெருக்கடி,புலி இருப்பு நெருக்கடி,நாட்டின் வறுமைச் சுமை,பொருளாதார நெருக்கடி) நோக்கிய விய+கங்களின் வெளிப்பாடே! இந்த விய+கமானது யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதை இந்தக் கடற்சமரும், சிங்கள அரசின் வான்வழி விமானத் தாக்குதலும் நிரூபிக்கிறது.

ஆரோக்கியமான-புரட்சிகரமான சமுதாயத்தை இலங்கையில் கட்டியெழுப்புவதையே மேன்மையான நோக்கமாகக் கொண்டு,மக்கள் திரள் எழிச்சியை-இனங்களுக்கிடையிலான தோழமையுடன் கட்டி வழி நடாத்திச் சிங்களச் சியோனிசத்தை வீழ்த்வேண்டிய வரலாற்றுத் தேவையை இந்த மக்களினங்கள் தவறவிடும் துர்ப்பாக்கிய நிலையையும்,பாரிய மனித அவலங்களையும் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுத்தி விடுகிறது.

எவரால் முடியும் யுத்தத்தை நிறுத்தி,மக்கள் அழிவைத் தடுக்க?

மீளவும் யுத்தம் :-((((((

ப.வி.ஸ்ரீரங்கன்
18.06.2006