04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

படுகொலை அரசியல்.

இன்றைய இலங்கை எங்கே செல்கிறது?

இது நவீனப் பண்பாடுடைய மக்கள் வாழும் நாடுதாமா அல்லது காட்டுமிராண்டிக் கூட்டம் வாழும் கற்கால இலங்கையா?
அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கொலைகாரர்களால் செயற்படுத்தப்படும் காட்டுமிராண்டிப் படுகொலைகளுக்கு நிகராகப் பற்பல தாக்குதல்களை இலங்கை-புலி இராணுவங்கள் செய்துமுடிக்கிறார்கள்,-சாவது அப்பாவி மக்கள்!

சமீபத்து வங்காலைக் கொலைக்கு கொழும்பில்-சிங்களக்கிராமங்களில் புலிகள் தாக்கவேண்டுமென விரும்பிய தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள கெப்பித்தக்கொலாவ எனும் சிஙகளக்கிராமத்தில் பேரூந்து வெடித்துச் சிதறுகிறது இன்று! சாவு:64 பயணிகள்-அப்பாவி ஏழை மக்கள்!!-குழந்தைகள்...

குஞ்சு குருமான்கள் என்ன பாவம் செய்தார்கள் இந்த நாட்டில்?

நிம்மதியாக வாழும் இயல்பு நிலையை மறுக்கும் அரசியலின் நோக்கமென்ன?

கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக நடைபெறும் பாலஸ்தீன-இஸ்ரேலியப் பயங்கரவாதத் தாக்குதல்கள் யாவும் பழிக்குப் பழி தீர்க்கும் பயங்கரவாதத் தாக்குதல்களாகவே உலகத்தால் பேசப்படுகிறது.எனினும், இத்தகைய தாக்குதல் தொடர்கதையாய்...

இது,இன்று இலங்கையிலும் தொடர்கிறது.
நாடும் மக்களும் எங்கே செல்லப் போகிறார்கள்?

இந்த விவஸ்த்தையற்ற "இலங்கை-புலி அரசியல் பயங்கரவாதம்" எந்த நிலையில் செயலூக்கமாக முன் தள்ளப்படுகிறது?இதைச் செய்து முடிக்கும் மனிதர்கள் எந்த இலக்கை எட்டிவிட முடியும்?வரலாற்றைக் கற்றவர்கள்தாமென தம்பட்டம் அடிக்கும் தமிழ்ச் சிறார்களுக்கு பாலஸ்தீனம்-இஸ்ரேல் பாடம் மனசாகவில்லை!

இன்றைய இலங்கை-புலிப் பயங்கரவாதம் உலகத்துக்கு ஒரு பகுதி மக்களினத்தை(தமிழ் பேசுவோரை)படுகேவலமான காட்டுமிராண்டிகளாகவும்,பயங்கரவாத நோக்குடையவர்களாகவும் காட்டி விடுகிறது.கெப்பித்தக் கொலாவத் தாக்குதல் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமை வாதத்துக்குக் கிடைத்த மாபெரும் அடியாகும்.இது தமிழ் மக்களினதுமட்டுமல்ல உலகத்திலுள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை அரசியல் வழியில் மட்டுமே தீர்க்க முடியுமென மீளவும் நிரூபிக்கும் படுகொலைகளாகும்.

ஈழத்தமிழ் ஆயுதக்கும்பல்களால் எந்தப் பொழுதிலும் புரட்சியை முன்னெடுக்க முடியாதென்பதற்கு மீளவும் உறுதி கூறும் தாக்குதல்தாம் இது.

இந்த வகை அரசியல் எம்மினத்தை இன்னும் அரசியல் அநாதையாக்கும் சூழ்ச்சிமிக்கப் பயங்கரவாதச் செயற்பாடாக விரிந்து முழு இலங்கையையும் ஒரு பெரும் இனவாதத் தீக்குள் சிக்க வைக்கும் கபட அரசியலாகும்.இதனால் அரசியல் வகைப்பட்ட எந்த முன்னெடுப்பும் பின் தள்ளப்பட்டு,ஆயுதக் கலாச்சாரத்தில் மூழ்கிவிட்டர்வகள் தம்மையும் தமது இருப்பையும் தக்க வைப்பதற்கான இனவாத அரசியலையும்,போரையும் தொடக்கி நமது மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் அழித்துவரத் திட்டமிட்டாச்சு!-இங்கே புரட்சிகரமான போராட்டம் மிகவும் பலவீனமாக்கப்பட்டு மக்கள் ஐக்கியம் பாழடிக்கப்படுகிறது!!இது தமிழர்களின் அனைத்துத் தார்மீக உரிமைகளையும் இல்லாதாக்கி வருகிறது.

நாம் எதிர்வு கூறும் எந்த அரசியல் முன் நகர்வும் மேலும் அபிவிருத்தியடைய வாய்ப்பில்லை!எது எப்படி நடைபெற வேண்டுமோ அது அப்படி முன்னெடுக்கப்படும் அரசியில் விய+கத்தைச் சிதறடிக்கும் இயக்க-கட்சி நலன்கள் மக்களின் இருப்பைச் சூறையாடுகிறது.அது மனிதத் தன்மையே இல்லாத பயங்கரப் பாசிசத்தை இலங்கைத் தீவில் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

ஆயுதக் காட்டுமிராண்டிகள் அப்பாவிகளின் உயிரைத் தமது தலைமைகளின் இருப்பின் பொருட்டுப் பறிக்கும்போது நாடு மக்களின் சுயாதிபத்தியத்தை சட்டரீதியாக வலு விழக்கவைக்கிறது.இங்கே மானுடவுரிமை,ஜனநாய மரபு யாவும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு,கட்சி-இயக்க ஆதிக்கம் வன்முறைசார்ந்த அதிகாரமாக நிறுவப்படுகிறது.இந்த வன்முறைசார் அதிகாரமானது எந்தத் திசைவழியை மக்களின் விடுதலைக்கு வழங்குகிறதென்றால்-மக்களின் விடுதலையென்பது குறிப்பிட்ட அதிகார வர்க்கத்தின் நலன்களைக் காக்கும் திசைவழியையே மக்களின் விடுதலையாக மக்கள் குழுமத்தில் சமூக எண்ணமாக விதைக்கிறது.இது மிகக் கொடுமையான மக்கள் விரோதமாகும்.மேலும் பிறிதொரு பாதையில் மக்களின் அனைத்து வளங்களையும்(ஆன்ம-உடல் மற்றும் பொருள்)தமது இருப்புக்கு இசைவாகத் திருடிக் கொள்கிறது.

இனிமேல் இந்த வகை அரசியலை தமிழீழத்துக்கான இறுதி இலட்சியமாக விதந்துரைக்கும் பரப்புரைகள் மக்கள் வெளிக்குள் விதைக்கப்படும்.இது பாரிய பின்னடைவை ஜனநாய முன்னெடுப்புகளுக்கு வழங்கும்.இத்தகையவொரு சூழலில் இலங்கை அரசியல் நகர்வு நிச்சியம் தமிழ் பேசும் மக்களின் அனைத்துவகைவுரிமைப் போராட்டத்தையும் சிதறிடித்து, தமிழ் மக்களைப் புதிய வகையில் ஓடுக்கும் சட்டரீதியான யாப்புகள் இலங்கைச் சிங்கள அரசால் எய்யப்பட்டு,தமிழ் மக்களின் தலையில் தீயை அள்ளிக் கொட்டும்.இங்கே பயன் பெறுவது ஆயுதக் காட்டுமிராண்டிகளின் தலைவர்களும்-மாபியாக் கும்பல்களுமே!

மக்களோ எந்த ஜனநாயக விழுமியங்களுமற்ற இலங்கை மண்ணில் யுத்தப் பிரபுகளின் அடியாட்களாகி அடிமையாய் வாழவே நேரப்போகிறது!

இதைத் தடுத்தாக வேண்டும்!

மக்கள் தமது பிரச்சனைகளுக்கான போராட்டத்தை தமது இருப்புக்கான போராட்டத்தோடு இணைத்து,ஜனநாயகரீதியாக வீதிகளுக்கு இறங்கியாக வேண்டும்.இங்கே இன,மத பேதங்கள் கடந்து மக்களின் கரங்கள் கோர்வைப்படுவது அவசியம்.இந்த நிலைமை உருவாகாதவரை பாசிச அதிகாரங்களை வீழ்த்த முடியாது!மக்களை அணிதிரட்டிப் போராட வைக்கும் சக்தி மக்களின் நலனில் அக்கறையுடைய கல்வியாளர்களிடமே தேங்கிக்கிடக்கிறது.

இவர்களது பங்களிப்பு என்றுமில்லாதவாறு இன்று மிக அவசியமாக இருக்கிறது.ஆயுதங்களுக்காக-அடக்குமுறைகளுக்காகத் தமது ஆன்ம வலுவை இழந்திருக்கும் மக்கள் நல இன்றைய கல்வியாளர்கள் நாளைக்கு முழுமொத்த இலங்கை மக்களையும் அழிக்கும் அரசியலுக்கு உடந்தையாகுவார்களா அல்லது மக்கள் எழிச்சிக்கு வித்திடுவார்களா என்பதை இனிவரும் காலவர்த்தமானம் நிர்ணயிக்கும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
16.06.2006

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்