அவர்களுக்கென்றொரு அரசியல்
இவர்களுக்கென்றொரு அரசியல்
இடையில் மக்கள்:நான்-நீ,மற்றும் சுற்றம்
கொன்றபின் யோனியில் ஆண்குறி அமிழ்ந்ததா?
ஆராய்தல் அலுத்த கதை...

கொல்லுவதில்
எவரும் சளைத்தவர்களில்லை!
சிங்களத்து இராணுவத்திடமும்
புலிகளிடமும் பேசும்"மொழிகள்" வேறுபடலாம்
ஆனால்
கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே!!

காத்தான்குடி முன்
அநுராதபுரம்,
சமீபத்தில் கனகம் புளியடி,
வங்காலை வழி
யுத்தத்திற்கு நியாயம்:
"கொழும்பில்"கையை வைக்கப் புலிகளுக்கு ஆலோசனை...

தெரியாதா இது?
புலி அறியாத மக்கள் திரள் உண்டோ?
இறப்பவர்களும் கொலை செய்கின்றார்கள்
கொலையாகிவிடுபவர்களும் இறக்கின்றார்கள்
இறப்புக்கு:
ஸ்ரீலங்கா-தமிழீழ நாட்காட்டி,
சோற்றுக்கு:தேசவொருமைப்பாடு-ஈழ விடுதலை!

பிஞ்சுகளின்
குருதியில் கை நனைப்பவர்களுக்கு
தேசம்,
தேசியம்,
மொழி-மதம்
உணர்வு வழி உயர்வென்றால்
மக்களற்ற மண்ணை
எந்த மடையன்-மடைச்சி கோடிட்டுக் குறி வைப்பான்(ள்)ஸ்ரீலங்கா-ஈழமென்று?

கை நீட்டிச் சோற்றுக்கு அலைந்தவர்களின்
பிணங்களைக் காட்டி
ஈழத்துக்கு இரங்கற்பா பாடுவது தெருக்கூத்து-இது
திராவிடத்து அரசியலின் திருநோக்கு!

செத்தவர்களைச் சொல்லிப் பிழைப்பதும்,
சாக வைப்பதும் ஈழப் போருக்குப் புதிதில்லை
குமரப்பா,
புலேந்திரன்
குல தெய்வமான(புலிகளுக்கு) தீன் மறுக்கப்பட்ட திலீபன்!!!

ஒரு கணப் பொழுதில்
கூடு குலைத்தெறியப்பட்ட யாழ் முஸ்லீம்களும்
இரயர் போட்டெரிக்கப்பட்ட
மாற்றியக்கப் போராளிகளும்
மறுக்கப்பட்ட ஜனநாயகத்துக்காக
மரித்துப்போன விமலேஸ்வரன்- சிவரமணியும்
எதிர்க் கேள்வி கேட்டதற்கு இரையான செல்வி- ரஜனி திரணகமவும்
மனிதர்கள்தாம்-தமிழர்கள்தாம்!

மாத்தையாவும்
அவருடன் மரித்த பல நூறு பாலகர்களும்
கருணாவின் பாசறையில் ஒதுங்கியதற்காகக்
கொல்லப்பட்ட குழந்தைகளும்
தமிழிச்சிகளின் முலைக் காம்பைச் சுவைத்தவர்கள்தாம்.

முண்டங்களே!
பிணங்களின்மீதேறி
தமிழுக்கு உரிமை கேட்காதீர்!
பிணங்களின் முன்னைய நிலையிருப்பில்
ஓலைக் கொட்டிலில்
ஒரு நேரக் கஞ்சியையும் காட்டாதவர்கள் நீங்கள்.

உங்கள் அரச கரும மண்டபங்களில்
உலாவித்திரியும் தாது நீரின் உச்ச சுகாதாரத்தில்
ஒரு பங்கைக்கூட அவர்கள் நுகர்ந்தவர்களில்லை!

அறத்தின் அடி வயிற்றில் கத்தியேற்றி,
மறத்தின் உச்சத்தை உலகுக்கு வழங்கும்
ஒப்பற்ற தமிழ்த் தேசியக் கூச்சல்
இன்னும் எத்தனை பிணங்களோடு
உலகத்தில் கண்ணீர் சொட்டும்?


ஊரெல்லாம்
தமிழர்களை
எட்டப்பரும்,துரோகிகளுமாக
உருவகப்படுத்தும் புலிகள்
உயிர் பறிப்பதும்,கொலைக்கு ஆட்த் தேடுவதும்
தமிழீழ வீரத்தின் விழுப் புண்!

சிங்களத்து உலங்கு வானூர்த்திகளில்
கூடிக் கும்மாளமடித்து
புதுப் பொலிவொடு புன்னகைக்கும்
சூனாப் பானாக்களும்
புலித் தேவர்களும்
மதுவுரைஞர்களும்
சிங்களத்து இரணுவத்துடன்
சிரித்துக் கை குலுக்கும்போது
வங்காலையில்
வாய்க்கரிசி விழுகிறது!

சுண்ணத்தைச் சேர்ந்தே இடிப்பவர்கள்
தமிழகத்து மக்களிடம் திருவாசகம் படிப்பதற்கு
விண்ணப்பித்தபடி...

ஊரெங்கும்
தெருவெங்கும்
வங்காலைக் கொலைகளை
ஒட்டிவைப்பவர்கள்
சிங்களத்துக் கிராமங்களுக்கும்
கொலைகளை
ஏற்றுமதியாக்கிவிடுவதில் ஒருமித்த வீராப்புடன்!

உயிருக்கு:மொழியென்ன-மதமென்ன,இனமென்ன?
முன்னாளில்-
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்"என்ற
தமிழன் வள்ளலாரானார்!

"பேசிய தமிழனைக் கண்டபோதெல்லாம் போட்டேன்"என்றவரும்
தேசத்துப் பிதாவாவார்-பின்னாளில்!!

பிறகென்ன
பிணங்களின் வகை தொகைகளில்
பிணக்கு வைத்து
இனக் குரோதமொன்று தீயாகும்போது
இருப்பவர்களுக்கு
இன்னுமொரு விடுதலை
சாவாக வருவதில்
வியப் புண்டோ-கண்ணீருண்டோ?

அல்லைப் பிட்டியென்ன
அகதி முகாமென்ன
அழிவுக்கு வழிகாட்டி
அரசொன்று கோலாச்சி
தமிழர்களுக்குத்
தேசமொன்று இடுகாடாய்ச் சுடுகாடாய்...

போ,போ-போய்ப் பிணங்காவி வா
பின்னொரு தேசிய யுத்தஞ் செய்ய!
போதுமே உன்
பிணக்கூத்து ஈழமே
இனியாவது
இருப்பவரை வாழ்விக்க மாட்டாயோ?

ப.வி.ஸ்ரீரங்கன்
14.06.2006