வாழ்வியல் மரபுகள் தகர்க்கப்பட்டுவரும் சூழல் இருபத்தியோராம் நுற்றாண்டாகும், ஒன்றின் இழப்புக்குப் பின் அந்தவிடத்திற்கு மிகவும் காட்டமான பழைய மரபுசார்ந்தெழுகின்ற ஒரு பிற்போக்கு வடிவத்தை புதியவொழுங்கு போன்று ஒப்பவிக்கிறது இந்த நுற்றாண்டு.

இதற்கு புதிதாய் மலிந்துவிட்ட விஞ்ஞானச் சாகசங்கள் நன்றாய்த் துணைபுரிகின்றன,இதன்பொருட்டு இன்றைய செய்மதிச் செய்திப்பரிவர்த்தனை வானளாவிய தொலைத் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி-வானொலி, இணைய வலைப் பின்னல்களை தனிநபர்-தனிப்பட்ட வலயத்திற்குள் திணித்து விட்டுள்ளது, இது பற்பல சாத்தியங்களை மக்கள் சமூகத்துள் தோற்ற இதன் பயன் பாரிய சமுதாயப் பின்னடைவை-பிளவை வற்புறுத்துகிறது,என்றுமில்லாதவாறு சமூக முரண்கள் மழுங்கடிக்கப்பட்டு சமுதாய மாற்றம் நிகழாத சூழலை ஏகாதிபத்திய நிறுவனங்கள் நிறுவனமயப் படுத்துகின்றன, தற்செயலாகவேனும் உலகமயத்திற் கெதிரான கல்வியல் சார்ந்த கட்டுமானம் நிகழாதபடி இந்த உலகமய அரசியற்தந்திர வியூகம் இப்போது பலமாகக்கட்டப்படுகிறது.

நிகழ்வுசார்ந்தெழுகின்ற அனைத்து நிலமைகளும் நன்றாகத் திட்டமிடப்பட்டுள்ளது, இதன் ஒவ்வொரு அசைவும் நுணுக்கமாக ஆய்வுக்குட்படுத்தி சட்டநிலைமைகளால் தடுக்கப்பட்டு வரும் நிலையில் நமது தமிழ்ச்சூழலை மையப்படுத்தி எதையும் குறித்துரைக்காதிரக்கமுடியாது!

இன்றைய சூழல் நம்மைக் கணிசமான அளவு உதிரிவர்க்கமாகவும், நாடோடிகளாகவும்-ஒட்டுண்ணிகளாகவும் அறிவுத்திறனற்ற அடிமைகளாகவும் மாற்றியுள்ளது, நாம் நமது பாரம்பரியக் கனவுகளில் தஞ்சம் புகுகின்றோம்,தப்பித்தல் எந்த வகைப்பட்டதாயினும் அது நமது பொருள் வயப்பட்ட வாழ்வைப் பாதிக்காதிருக்க கவனமாகப் பழக்கப்பட்டுள்ளோம். மூன்றாம் உலகத்துக்கேயுரிய அடங்கிப்போகும் மனோபாவம் நம்மை இன்னும் வக்கொழிந்தவர்களாகப் பார்க்கும்படி நாமேயேர்ப்படுத்தி அவற்றை நமது அடுத்த தலைமுறைக்குக் கடத்திக்கொள்ள பற்பல ஊடகங்களுடாய் செயற்படுதல் தற்போது சகஜமாகப்பார்க்க முடியும், எனினும் எமது வாழ்வும் துய்ப்பும் நம்மில் பலரை இதற்கு மாற்றீடாய்ச் சிந்திக்க வைத்தாலும் நமது கருத்தியற் தளம் மிகவும் பலயீனப்பட்ட நிலைகளால் மிகச்சாதரண காரியத்தைக்கூட மக்கள் சமூக வட்டத்துள் சாதிக்க முடியாதபடி ஆக்கப்பட்டள்ளது.


சிலகால வரலாற்றுண்மைகளை நாம் கேள்விக்குட்படுத்திவிடுதலும் பின் அவற்றை முழு நிலவுகின்ற சூழலுலக்குமான மொத்தக் கண்ணோட்டமாகக் கருதிவிடுதலும் பின்தங்கிய உற்பத்தி நிலவுகின்ற நாடுகளிலுள்ள புத்திஜீவ மட்டத்தின் பகுப்பாய்வாக இதுவரை நிகழ்ந்துவருகிறது,இதன் அப்பட்டமான பரிந்துரைப்புகளை நாம் பல் வகைகளிலான வரலாற்று ஆவணங்களிலும் பார்க்கமுடியும்!

இந்தப்பார்வைகள் வைக்கின்ற மௌன மேதாவியக்கோரிக்கைளை அவற்றை வைத்தவர்களே இன்று மறந்துவிட்டு உலகமய அரசியலில் தமது இருப்பிற்கேற்ற வாறு புதிய மொந்தைக்குள் பழையதை ஊற்றமுடியாது மண்ணுக்கேற்ற மார்க்சியம் பேசும் சூழலில் மறந்துபோயும் வர்க்கம் சார்ந்து பேசாதிருக்கப் பழக்கப்பட்டுவிட்டார்கள்,உலகமயமாதலை ஒருநாட்டினது சுய பொருளாயுத வளர்ச்சியாக வர்ணிக்கும் மேதமையை புலம்பெயர் நாடு
களில் புதிதாய் பட்டம்(!?)பெற்ற தமிழ்ச்சிறுவர்கள் செய்துவருகிறார்கள் .இந்த உலகமயமாதல் என்ன என்பதை அறியவைத்தல் தமிழ்ச்சூழலுக்கான(வெகுஜன)ஆய்வு முறையாக இன்னும் வளரவில்லை.தமிழர்களினது வர்க்கச் சிந்தனை மிகவும் கவனமாக வளர்த்தெடுக்கப்பட்டது,இது தன்னையும் தன் குடும்பத்தையுமே மானுடமாகப் பார்க்கப்பழகியது, எனவே அதன் தேவைகள் அண்டிப்பிழைத்தல் அரசியலை மையப்படுத்தி நகரத்தொடங்கி இன்று கிட்டத்தட்ட ஈராயிரமாண்டாகிவிட்டது!

புலம் பெயர் தமிழ் குழுமம்:

புலம்பெயர்வாழ்வு மிகவும் முரண்படுதன்மைகளை -பொருந்தாத்தன்மைகளை தன்னகத்தே கொண்டுடியங்குகிறது,இணக்கமற்ற இருவேறு அணுகுமுறைகளின் ஒருமாதிரி சேர்க்கையிலேதாம் புலம் பெயர் தமிழ்மக்களினது இருப்பே தங்கியுள்ளது. இங்கெல்லாம் நாம் நமது வாழ்வை சமூகக்கூட்டாகமைக்க முடியவில்லை .இதனால் சமுதாயரீதியான அணுகுமுறையற்றுப்போவதால் குழுவாரீயான அணுகுமுறையே நிலவுவதால் அஃது ஒன்று,மற்றது: தனிநபர்வாத அணுகுமுறை! குழுவாரியான அணுகுமுறைக்குள் சிறு சுய அமைப்பாண்மையும்,ஆற்றலையும் காணும்போது மறுபுறத்திலோ தனிநபர்வாத அணுகுமுறை எல்லாச்சீரழிவுக்கும் பசளையிடும் காரியத்தில் இயங்கிக்கொள்கிறது.

இத்தகைய தனிநபர்வாத அணுகுமுறை பழைய குட்டிப்பூர்ச்சுவா குணாம்சம் காரணமாக மிகவும் இறுக்கமான மரபுசார்ந்து செயற்படும் தந்திரத்தில் மையங்கொண்டுள்ளது, இது கண்டதையும் காசாக்கும் நோக்கோடு சகல 'மக்கள் தொடர்பாடலையும்' பார்க்கிறது. இந்தப்போக்கின் விருத்தியே தமிழ் வானொலி-தொ(ல்)லைக்காட்சி வியூகமும்,அதுசார்ந்த வர்த்தகமும்.இது சுயநலன் கொண்ட தற்பெருமையும்,இறுமாப்பும் கொண்ட தனி நபர்களை உருவாக்கிவிட்டுள்ளது, இவர்களது சமூகவாரியான புரிதல் மிகவும் தாழ்நிலையில் இருக்கிறது,இவர்களே புதிதாய் கற்றுவிட்ட மேதாவிகளாய் உலகத்தின் எந்த பிரச்சனைக்கும் எழுந்தமானத்திற்குப் பதிலளிக்கிறார்கள்
இந்தியா இன்னும் இருபதாண்டுகளில் வல்லரசாகிவிடுமென கருத்திடும் இவர்கள் உலகமயமாக்கலை சுயவளர்ச்சியாகப் பார்க்கும் பிரமையை இறுமாப்பென்பதா அல்ல மூடத்தனமென்பதா?இந்த பட்டதாரி இளைஞர்கள் தமிழ்பேசும் மக்களின் எந்தப்பிரச்சனையையும் புரிய மறுத்து மேற்குலகக் கல்வியின் பிரதி நகலாக-மேற்குலக மானுடர்களாக தொலைக்காட்சிகளில் தோன்றி சாதரணமக்களை அடிமைத்தனத்திற்குப் பழக்கி அதில் தங்கிவாழ வியூகம் அமைத்து யார் யாருக்கோ உதவுகிறார்கள்!


இந்த நிலையே கேள்விகளை-சாரத்தை-இயங்குதளத்தை புரிந்துகொள்வதில் சிக்கலிட்டுள்ளது, முரண்நிலையிலிருந்து கேள்வி கேட்பது சமூக விஞ்ஞானத்தின் ஆரம்பப்படி,இதன்படியே நம்மை-நாம் புரிந்துகொள்வது இன்று மிக மிக அவசியம். புலம்பெயர் தமிழ்பேசும் மக்களினது வாழ்வானது இரண்டும் கெட்டான் சமூகசீவியமாகவிருக்கின்ற இன்றைய சூழலில் இ;துகுறித்து பொறுப்புணர்வோடு ஆய்வுகள்,கருத்துக்கள் முன்வைப்பது இன்றைய இளைய படிப்பாளிகளின் பொறுப்பாகும்!



ஐரோப்பியக்கூட்டமைப்பு நாடுகளினது உயர்கல்லுரீ மற்றும் பல்கலைக்கழகங்களின் சமூக உளவியற்சூழல் மிகவும் தாழ் நிலையிலேயே இருக்கிறது,இஃது ஐ.கூ.அமைப்பின் பொருளியல் நலன்களின்மீதான கருத்தமைவுகளுடன் பிணைவுற்றே தன்னை வெளிப்படுத்துவதால் இதன் வேர்களை நாம் மிக இலகுவாக இந்த ஐ.கூ.அமைப்பின் சமூகக்கட்டுகளுக்குக் கீழ் நிலவும் பாசிசத் தன்மைக்குள் காணமுடியும்.இது ஒரு வகையில் பழைய கொலனித்துவ மற்றும்1938 களில் நிலவிய சமூக உளவியலை மீளக்கட்டுவதற்கும், இளைய தலைமுறையை பூர்ச்சுவா கருத்தமைவுகளுடன் பிணைப்பதற்கும் திட்டமிட்டபடி பெரும் நிறுவனமான பாடசாலை-பல்கலைக்கழகங்களை பயன்படுத்திவருவதை சகல உயர்கல்வி மாணவர்களும் சற்று அவதானமாக நோக்கினால் அறிய முடியும், மேற்குறிபிட்ட படி இதைச் சகல வடிவங்களிலிருந்தும் அந்தக் கல்வி நிறுவனம் சரிவரத் திட்டமிட்படி கடைப்பிடிக்கிறது,ஐரோப்பியக் கூட்டமைப்பின் பாடத்திட்டங்களை வகுக்கின்ற கல்வியாளர்களே இந் நாடுகளின் இன்றைய சமூக உளவியலைத் தீர்மானிப்பவர்களாக சமூகப் புறநிலையுள்ளது.ஐ.கூ.வந்துவிட்டது!

பல் தேசங்கள் கூடி,தத் தம் தேசிய எல்லைகளைக் கடந்து 'கண்ட அரசியலை' நகர்த்தினாலுங்கூட இவர்களது அரசியல் சந்தைப் பொருளாதாரத்தைப் பாதுகாத்துக்கொள்வதும் அந்தப் பாதுகாப்புக்கவசத்திற்கு என்றுமே எதிரிகளற்ற கருத்தியல் மேல்நிலையைக் கட்டிக்கொள்வதுமே.

ஐரோப்பியக் கூட்டமைப்பின் அரசியல் தேசங்களின்-மக்களின் கூட்டாகவன்றி வெறுமனவே உடமை வர்க்கத்தினது கூட்டாகக் காணமுடிகிறது!இஃது மிக விரைவாகச் சிதறியே தீரும், யூரோ நாணயம் இன்று பலமுடையதாயினும் நாளை அதன் முடிவு நெருங்கிவிடும்.அப்போது நடைபெறப்போகும் நாடகம் நமது கனவுகளை நொருக்கி நம்மை புகலிடத்திலிருந்தே விரட்டும்,இதை நமது இளைய தலைமுறை புரிந்து விடுமென நம்பமுடியாது.இது இப்படியிருக்க இந்தியாவின் வியூகமோ சொல்லிமாளா!


வாழ்வியல் முரண்கள் புதியவற்றை படைக்கத்துண்டும் நிலைமகளில் - நம்மை வற்புறுத்தும் இன்றைய புலம்பெயர் வாழ்வில் நாம் அவற்றைத் தெரிந்து-புரிந்து காரியமாற்றமுடியாதபடி மிகக் கவனமாக தமிழ்பேசும் மக்களின் விரோதிகள் காரியமாற்றுகிறார்கள், இந்த விரோதிகள் தமிழ்பேசும் மக்களை தமது நலனுக்கேற்றவாறு பயன்படுத்தும் நோக்கோடு நமக்குள் ஆய்வுகளை, கருத்தக்களைக் கொட்டுகிறார்கள்.

இவை புலம்பெயர் வாழ் தமிழ் மக்களை வெறும் கலாச்சாரடிமைகளாக மாற்றிவிடும் வியூகத்தை அடிப்படையாகக் கொண்டியங்குகிறது. இந்தக் கபடவலைக்குடந்தையாக இன்றைய ஊடக வளர்ச்சி இருக்கிறது
இது தமிழக இறுமாப்பு நிறைந்த வர்த்தகச் சினிமா மனிதர்களைப்போல் நமது மனோபாவத்தை மாற்றிவிட பாடு படுகிறது, இதனுடாக நமது சுயவளர்ச்சி முடக்கப்படுகிறது, எதற்கும் இந்தியப் பார்ப்பன கருத்தியலைச் சார்ந்து இயங்கும் மனிதக்குழுவாக நம்மைத் தயார்ப்படுத்தப் பாடுபடும் இந்திய நலன் நமக்கான சுய விடுதலையை,சுதந்தரத்தை-ஆத்மீகவளர்ச்சியை,தனித்துவத்தை,தேசிய அடையாளத்தை நிர்மூலமாக்குவதில் மெதுவாக வெற்றியடைந்து வருகிறது!

இதன் போக்கால் இந்தியச் சந்தை விரிவாக்கப்பட்டுள்ளது,நிரந்திரமான ஒரு நுகர்வுக்கூட்டத்தை ஐரோப்பா மற்றும் அமெரிக்கா,அவுஸ்ரேலியா,ஆபிரிக்காவெங்கணும் கட்டிக்கொள்ள இந்தியத் தரகுமுதலாளிய வர்க்கம் முயற்சித்து வருகிறது.இது இந்தியாவினது ஆசியச் சந்தையைவிட மிக வருமானத்தை அதற்கு அளிக்கக்கூடியது, இந்தச்சந்தையின் நுகர்திறன் வளாச்சியடைந்த சமூகத்தின் திறனோடு ஒப்பிடத்தக்கது.நமது மனோபாவம் வளராவிடினும் நாம் வளர்ச்சியுற்ற முதலாளித்துவ நாடுகளில்தாம் வாழ்கிறோம்.

புலம்பெயர் தமிழராகிய நாம் உளவியல் இரீதியாகப் பலவீனப்படுத்தப்பட்டுள்ளோம்,தமிழகத் திரை முகங்களிடம் தஞ்சமடையுமளவுக்கு நமது அகவளர்ச்சி தடுக்கப்பட்டுவிட்டது. இதிலிருந்து மீள இங்கிருக்கும் குழுவாரியான சுய அமைப்பாண்மையுடைய தமிழப்புத்திஜீவிகள் தமது ஆற்றலை இவைநோக்கித்திருப்பிவிட அவர்களுக்கிருக்கும் ஒரே தடை கருத்துச்சுதந்திர மறுப்பேயாகும்! இஃது தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் கூடுதலாகப் பார்க்கமுடியும்.மாற்றுக்கருத்துக்கு நாம் இடமளிப்பதே நமது எதிர்காலத்தை விருத்திக்கிட்டுச் செல்லும்,இதை இங்கிருக்கும் எந்த ஊடகமும் மறுக்கமுடியாது.

இலங்கை மற்றும் தமிழகச் சூழல்:


பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பகுதிகள் இப்போது தமிழர்களின் சுதந்திரமான உயிர்வாழும் ஜனநாயக உரிமையை உறிதிப்படுத்துவதாக யாரும் கனவுகூடக் காணமுடியாதவொரு சூழலை அவைகொண்டுள்ளன, ஒரு
திமிர்த்தனமான அரசபயங்கரவாத நெருக்குவாரத்தோடுகூடிய தனிநபர்பயங்கரவாதம் தலைவிரித்தாடும் தமிழ்ப் பிரதேசங்களில் ஜனநாயகப் பண்புகள் துளியளவேனும் நிலவுவதாக யாரும் குறித்துரைத்தால் அவர் விசமம் பண்ணுபவராகவே கருத இடமுண்டு,அவ்வளவு மோசமானவொரு சூழலை இவ்விடங்களில் வாழும் மக்கள் அனுபவிக்கின்றனர்.


அரை இராணுவத்தன்மையுடைய சர்வதிகார காட்டாட்சிக்குள் இலங்கை-தமிழக தமிழ்பேசும் மக்கள் வாழ்கிறார்கள், நேரடியான அரச வன்முறைஜந்திர நெருக்குவாரத்துக்கு தமிழக மக்கள் முகங்கொடுத்தால் இலங்கைத் தமிழ் மக்களோ அரச-தனிநபர் பயங்கரவாதத்திற்கும் பொருளியல் ஒடுக்குறைக்கும் முகங்கொடுப்பது மட்டுமல்ல முகத்துக்கு நேரே குறிவைத்துக்காத்திருக்கும் சுடுகருவிக்கும் தலைசாய்த்தே சீவிக்கவேண்டும்!

என்றுமில்லாதவாறு உயிர்வாழும் உரிமை மறுக்கப்படும் சூழலில் ஒரு ஆரோக்கியமான கருத்தியில் கட்டுமானம் நிலவமுடியாது,அங்கே நிலவுகின்ற சமூக உளவியல் அரபுநாடுகளை விட பின்தங்கிய குறைவிருத்தியுடைய ஜனநாயகத்தன்மையைக்கூட விட்டுவைக்கா.இது ஆண்டான் அடிமை அமைப்பை மறைமுகமாகப் பிரதிநித்துவப்படுத்துவதில் ஆளுமைமிக்கவர்களை தள்ளி அவர்களது நலனை முதன்மைப் படுத்தும் அரசியலை மையப்படுத்தியே சட்டவாக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதையேதாம் அமெரிக்க பொருளியல் நலன் மூன்றாமுலகில் விரும்புகிறது. இவ்விடங்களில் துளியளவேனும் ஜனநாயப்பண்பு
நிலவுதை உலக ஆண்டான்கள்விரும்புவதில்லை.


தமது அடிவருடியளைக்காக்க இதுவே சரியானதொரு அரசியல் வழியாக அவர்கள் கருதுவதால் இவ் மக்கள் மத்தியில் நிலவும் உணர்வு எப்படியும் உயிர்த்திருத்தலே, இதை விட வேறெதுவம் அவர்தம் சிந்தையில் தோன்றுவதாயின் அதுவே தப்பித்தலாக இருக்கும். இந்தத் தப்பித்தல் காலா காலத்திற்கு மாறு பட்ட வளர்சச்சியையெட்டமுடியுமேயொளிய மாறாக ஆரோக்கியமான வாழ்வியல் பண்புகளை,ஜனநாயகத்தன்மைகளைத் எட்டமுடியாது. ஏனெனில் இங்கு நிலவும் இராணுவப் பொருளாதார உறவுகள் இதற்கு மேலே செல்லும்படியான உற்பத்தியுறுவுகளை ஏற்படுத்த முடியாது
போய்விடுகிறது,சரியான முதலாளிய வளர்ச்சியற்ற தரகு முதலாளியச் சூழல் இதற்குமேல் நகர முடியாது.

சொந்த முரண்பாடுகளால் நமது சமூகவுருவாக்கம் நிகழும் படியாக கொலனித்துவம் விட்டு வைக்கவில்லை, அது தனது தேவைக்கேற்றபடி தரகு முதலாளியளை உருவாக்கிவிட்டு அதற்கேற்ற திட்டவாக்கத்தை நமக்கு கற்பித்து வருகிறது, இதிலிருந்து இந்தநுற்றாண்டில் மீளக்கூடிய ஆரோக்கியமான நகர்வு தென்படவில்லை.

பாராளுமன்ற ஓட்டுக் கட்சிகள் யாவும் நம்மையும் நமது நாட்டையும் தமது வருமானத்தின் மூலப்பொருளாக பாவித்தல் அறுபதாண்டுகளாக நடைபெற்றுவரும் சங்கதி.இதனால் நாம் நாடு எனும் அமைப்பை விட்டு,நாடுகள் என்ற அமைப்புகளுக்குள் நிர்பந்திக்கப்பட்ட வாழ்வை மேற்கொள்ளும் அவலமேற்பட்டுள்ளது.நமக்கான திட்டவரைவை உலகவங்கி எழுதுகிறது, அதன்படி காரியமாற்றும் ஓட்டுக்கட்சிகள் இப்போது கல்வியில் கைவைக்கும் உலக வங்கியை எதுவும் கூறமுடியாத வக்கற்வர்களாகி அறிவுசார்ந்த துறைகளை மூடிவிடச் சொல்லும் செயலை செவ்வனவே செய்து வருகிறார்கள், இதன்படி இனிமேல் தொழில் சார்ந்த ,அதுவும் உலகமயத்தின் கொள்ளைக்காரருக்குச் சேவகம் செய்யும் கல்வியே சாத்தியமாகப் போகிறது.


இந்தநிலையில் நமது தேசியக் கனவுகள்,தேசிய அலகுகள்,தேசியத்தன்மைகளெல்லாம் மாற்றம் பெறுகின்றன.
எமக்கான நீதி,நியாயம்,உரிமை யாவுமே ஏகாதிபத்யத்தின் நலனுக்கேற்வாறு மட்டுமே இயங்கும்.அடிப்படை வாழ்வுரிமை புதிய வகைமாதிரியானவொரு மொன்னைப் பேச்சாகவே இப்போது பேசப்படுகிறது,இதன் விருத்தி வேறொரு வகையில் மனிதாயத்தின் பெரும் தோல்வியாக -அதுவே ஒரு பெரும் கதையாடலாக இட்டுக்கட்டி அதன் கழுத்தில் நுகம் வைக்கப்பட்டுள்ளது! இந்த நுகத்தடி பற்பல வர்ணங்கொண்ட கனவுகளை விதைப்பினும்
மானிட நேயம்சார்ந்த சமூக உளவியல் இப்போது காலமாகிவிட்டது.


இனி இது குறித்த கதையாடல் பிறிதொரு பாணியிலான மொன்னைப் பேச்சுத்தாம்.இந்தப் பின் தங்கிய கருத்தாடலைத் தாண்டி சுய கௌரவம்,தனிநபர் சுதந்திரம்,தனிநபர் தனித்தன்மை என்பவைகளே உலக மய அரசியலில் ஏகாதிபத்யங்களால் பேசப்படும் உளவியலாக் கருத்துக்கள் கட்டப்படும். இதற்கேற்றவாறு இலங்கை-தமிழக தமிழ் புத்திஜீவகள் ஆய்வுகள் முன்வைத்து அவற்றைத் தலித்துவத்தோடு இணைத்து விடுவதில் பிரயத்தனஞ் செய்கிறார்கள்.இது ஏகாதிபத்யங்களளோடு கூட்டுச் சேர்ந்து நமது விடுதலையைப் பெறுமுடியுமென்று தமிழ் பேசும் உழைக்கும் வார்க்கத்தைக் காட்டிக்கொடுக்கும் மாபெரும் வரலாற்றுத் தவறை நமக்குத் தருமென்பதில் எமக்கு இருவேறு கருத்துக் கிடையாது!


மக்கள் புரட்சிகரமாக இருந்து ஒருமண்ணும் நிகழா,மாறாக நமக்கு உலகு தழுவிய புரட்சிகரக் கட்சியின் அவசியம் முன்னெப்போதையும் விட இப்போது தேவையாகவுள்ளது.உலக உழைக்கும் மக்கள் நம்முடன் தோள் சேரவேண்டும், இதுவே காலமாகிவிட்ட மனிதாயத்தை உயிர் பெறவைத்து நமக்காக அனைத்து தளைகளையெல்லாம் அறுத்தெறியும்.


அரச ஆதிக்கமும்,
அரச ஜந்திரமும் இருவேறு வினைகளின் வடிவங்கள்:

ஒரு நாட்டில் இருவேறு அரச ஜந்திரம் நிலவமுடியுமாவெனுங் கருத்தாடல்கள் இப்போது நமக்குள் நடை பெறும் சூடான விவாதமாகத் தொடர்கிறது,இரு அரச வன்முறை ஜந்திரம் ஒரு நாட்டுக்குள் நிலவுமாயின் அங்கே ஒரு அரச வடிவமில்லையென்பது தெளிவானதுதாம்.ஆனால் உண்மையில் இது சாத்தியமாக சுய பொருளியல் பலம் இருக்கவேண்டும்! எதற்குமே பொருளாதாரமே அடித்தளம்,பொருளாதாரமென்ற அடிமட்டத்தைக் காப்பதற்கான மேல்மட்டக் கவசங்களே அடிமட்டமாகப் பார்க்கப்படுதல் வெறும் சட்ட அறிவின் வெளிப்பாடுதாம், பொருளாதார அடிப்படையற்ற எந்த அமைப்பும் இறுதியில் அன்னியசக்தியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டேயாகவேண்டும்!


இன்றைய தேசிய இனப்பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வுகுறித்துக் கருத்தாடலிடும் சிறார்கள் தமிழ்பேசும் மக்களது பிரச்சனை 'ஒற்றையாட்சியலோ அன்றி கூட்டாட்சியிலோ 'தீர்க்கமுடியாதபடி தமிழர் தரப்பில் பலமான(!?) இராணுவக்கட்டமைப்பு உண்டு ,அது கலைக்கமுடியாதவரை இவை சாத்தியமில்லை, எனவே சுதந்திரக்கூட்டாட்சியே தீர்வாகும்,இது இருவேறு தனிநாடுகளின் கூட்டரசாகவே அமையமுடியும்,ஆகையினால் இலங்கை அரசியற்சட்டம் மாற்றி அமைக்காதவரை தீர்வுசாத்தியமில்லையென்றும் கருத்தாடுகின்ற திடீர் 'அரசியல் ஆய்வாளர்கள்' மத்தியில் சிக்கியுள்ள நாம் இந்த இராணுவக்கட்டமைப்பை இலங்கையரசின் ஆதிக்கத்திலிருந்து நோக்குவோமாயின் அதன் சிதறல் மிகவிரைவாக நிகழாதவரை எந்த உந்து சக்தி தக்கவைக்கின்றதென அறியமுடியும்.


இலங்கையரசின் ஆதிக்கத்திலிருந்து முழுமையாகவோ அன்றி பகுதியாகவோ தமிழ்ப்பிரதேசங்கள் விடுபடவில்லை, மொத்தமாகவே இலங்கையரசினது ஆதிகத்திற்குட்பட்ட பகுதியாகவிருக்கும் தமிழ்ப் பிரதேசங்கள் ஒருபோதும் சுயஅமைப்பாண்மையை பொருளாதார-இராணுவக் கட்டமைவில் செலுத்தமுடியாதென்தை சாதாரண உயர்கல்வி மாணவாரொருவர் புரிந்து கொள்ள முடியும்,இது இப்படியிருக்க இந்த ஆய்வாளர்கள் யாரினது நன்மைக்ககாக இல்லாததை இருப்பதாகக்காட்டி குட்டையைக் குழப்பி துண்டிலிட முனைகிறார்கள்?

இலங்கையரசு முற்றுமுழுதானவொரு பொருளாதாரத் தடையைக் கடைப்பிடித்தால் நிலமையென்னவாகும்?

பாரம்பரிய பிரதேசங்களென்பவை முதலில் இலங்கையரசாதிக்கத்திலிருந்து விடுபடாதவரை இரு இராணுவமெனுங் கருத்தாக்கமே சுத்தப் போலீயானது!

எந்த விடுதலைப் போராயினும் முதலில் நிலவுகின்ற அன்னிய ஆதிக்கத்தை உடைத்தபின்பேதாம் அதன் வன்முறைஜந்திரத்தின் மீது கைவைப்பார்கள்.அந்தக் கைவைப்பு முற்றுமுழுதாய் அதைச் சிதறடிப்பதில் முடிவுறும்,ஆனால் இலங்கையில் தமிழ்பேசும்மக்கள் வாழும் பிரதேசங்களிற் பார்ப்போமானால் நிலமை தலைகீழ்! ஒவ்வொரு பத்துச் சதுர கி.மீ. க்கும் இரண்டு அல்ல மூன்று இராணுவ முகாங்கள் உள்ளன. இவைகள் இலங்கையரினது வன்முறைஜந்திரம்.


இறுதியாகச் சில:


1): தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தவறான ஆய்வுகளைத் திட்டமிட்டு நம்மை ஒடுக்குபவர்கள் விதைக்கிறார்கள்.


2): இதற்கு உடந்தையாக சில தமிழ்ப் புத்திஜீவிகள் தெரிந்தோ தெரியாமலோ ஒத்துழைக்கின்றார்கள்.


3): இந்திய புலனாய்வுத்துறை மீளவும் நமது வாழ்வைச் சிதைக்க களத்தில் இறங்கி புலம் பெயர் மக்களை
தமது நலனுக்கேற்றவாறு மூளைச் சலவை செய்கிறது.


4): புலம்பெயர் தமிழர்கள் சுய அமைப்பாண்மையுடன் வளர்வுறுதலை மட்டுப்பட வைக்க இந்தியா தொடர்ந்து கருத்தியில் யுத்தத்தை தமிழ்ச்சினிமாவூடே நடாத்த முனைகிறது.


5): பாரிய வர்த்தக நலனுக்காய் நம்மீது நுகர்வடிமை மனோபாவத்தைத் திட்டமிட்டு வளர்த்தெடுக்க முனைந்து வரும் இந்திய -இலங்கைத் தரகு முதலாளித்துவம் நமது நாட்டின் இயல்பு நிலையை விரும்பாது தொடர்ந்து கொந்தளிப்பான அரசியல் நிலையைத்தோற்றுவிக்கப் படாதபாடுபடுகிறது.


6): உலக ஏகாதிபத்யம் தனது உலகமயப் படுத்தலில் நமது தேசியத் தன்மைகளை மறுத்து வெறும் கொத்தடிமைகளாக்கி நம்மை இந்திய-இலங்கை தரகு வர்த்தகத்தின் நலனுக்கேற்றவாறு பயன்படுத்தி வருகிறது.


7): இதனுடாய் உலக மயத்தை நம் நாடுகளில் சிறப்பாய்ச் செய்து அறுவடையை கையகப்படுத்த அனைத்து வியூகங்களும் வெற்றியாய் நடைமுறைக்கு வருகிறது.


8): இவ்வளவுக்கும் புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள ஊடகங்களும் ஒத்திசைவாகச் செயற்படுகிறது,இதற்குப் பரிசாக எலும்புத்துண்டங்கள் இவர்களுகிடப்பட்டுவருகிறது.


நாம் தொடர்ந்தும் வேலைக்குப்போய் வீடுமீண்டு சோற்றுக்கோப்பைக்குள் விழுந்தொழும்பி சண்,சண் கே,ஜெயா மற்றும் அதன் கூட்ட...,தீபம், ரி.ரி.என்.பார்த்துப் பின்னிரவு இரண்டு மணிக்கு கண்மூடி அதிகாலை ஐந்துக்கு மீளவும் வேலைக்குப் போகவேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்.
12.06.06