04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

ஷோபா சக்தியின் இவ் விமர்சனமானது...

"Der Krieg heute aber kommt nicht vom Himmel oder von Gott wie der Regen,sondern er hat allein gesellschaftliche Ursachen.-Heinz Liepman.(Kriegsdienst verweigerung.seite:40)

"யுத்தமானது இன்று வானத்திலிருந்து வருவதில்லை அல்லது இறைவனிடமிருந்து மழையைப் போன்றோ அல்ல,மாறாக யுத்தமானது சமூகக் காரணிகளிலிருந்தே தோன்றுகிறது."-கைன்ஸ் லீப்மான்.


சத்தியக்கடதாசியில் நண்பர் ஷோபா சக்தி புஷ்பராஜாவின் நூலுக்கான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அவர்தம் விமர்சனமானது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் பொருந்தத்தக்க எண்ணங்களையும்,அதனூடான சமூகவுண்மைகளையும் நமக்குமுன் இழுத்து வருகிறது!இதுவரையான ஈழத்தமிழ் மக்களின் போராட்டப் பாதையில் ஆயுதக் குழுக்களால் விதைக்கப்பட்ட புணங்களையும் அந்தப் புணங்களின் தோற்றத்துக்கான கண்ணிகளையும் மிக நுணுக்கமாகச் சொல்லும் ஷோபா சக்தியின் தரவுகள்-அறிவுக் கொள்கைகள் மிக உண்மையானது.விஞ்ஞானப+ர்வமானது.இந்தவொரு தளத்திலிருந்துகொண்டு நாம் எந்த நோக்கத்தில் இன்றைய போராட்ட வாழ்வையும் அதன் இயலாமையையும் நிராகரித்து மக்களின் வாழ்வியல் பெறுமானங்களை முன் நிறுத்துகிறோமென்பதுற்கு அவரது விடாப்பிடியான அறிவ+க்கமிக்க பரிந்துரைப்புகள் சாட்சியாகி வருகிறது.

யுத்தத்தின் வாயிலாக வந்தடைந்த மரணவோலமும்,பயங்கரவாதமும்,காட்டுமிராண்டித்தனமும்-கொலையும்,கொள்ளையுமே நமது மக்களின் வாழ்வியல்ப் பெறுமானமாகிப் போய்,ஒரு தலைமுறையே யுத்தத்தில் மூழ்கி முடவர்களாகிப் போனது அங்கத்தில் மட்டுமல்ல அறிலும்தாம்.இத்தகையவொரு சமூக இழிநிலையில் அந்தச் சமுதாயத்தின் பால் இன்னமும் நம்பிக்கையோடு அதைக் காலத்துக்கேற்ற முறைமைகளில் மக்களின் நலன்களை முன் நிறுத்துவதற்கான தகமைக்கிட்டுச் செல்லத் தூண்டுவது அவசியமாகும்.இதைப் புஷ்பராஜாவின் மொழியில் இப்படிக் கேட்கலாம்:

"விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களின் தலைவர் பிரபாகரன் பற்றியும் இன்று உலகம் விசாலமாகப் பேசிக்கொள்ளும் அளவுக்கு அந்த இயக்கம் எல்லாவிதமான காய்களையும் தனது வசதிக்கேற்ப நகர்த்திக்கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தின் பாறை போன்ற கட்டமைப்பும் மன்னிப்புக்கே இடமில்லாத அதன் கொள்கையும் ஈன இரக்கமற்ற அதன் நடவடிக்கைகளும் தாங்களும் தங்களுடன் சேர்ந்தவர்களுமே தியாகிகள் என்கிற அதன் போக்கும் வரலாற்றில் ஓர் அதிசயம் மிக்க பக்கம் தான். என்றாலும் அது தான் அந்த இயக்கத்தின் இருப்புக்கான காரணமும் கூட. அனைத்து ஈழப்போராளிகள் இயக்கங்களையும் அழித்து விட்டு ஈழ விடுதலைக்காக இன்று போராடும் ஒரே இயக்கம் நாங்கள்தான் என மக்களிடம் ஆதரவு கோரும் விடுதலைப்புலிகளின் தந்திரமே ஒரு மாயையை ஏற்படுத்தும் நடவடிக்கை தான். அவர்கள் யாருடனும் பேசுவர். ராஜீவ் காந்தியுடன் பேசுவர், ரணில் விக்கிரமசிங்க வுடன் பேசுவர், சந்திரிகாவுடன் பேசுவர், பிரேமதாஸாவுடன் பேசுவர், இந்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுடன் பேசுவர், இந்திய இராணுவத்துடன் கை கொடுப்பர். இலங்கை இராணுவத்துடன் உறவாடுவர். ஆனால் மற்றைய இயக்கங்கள் இப்படி ஏதாவது ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டால் துரோகிகள் என்பர். தங்களைத்தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது என்னும் போக்கும் மற்றவர்கள் எல்லோரையும் சந்தேகிக்கும் சுய பயமுள்ள மனோநிலைமையுமே இதற்குக் காரணம். பயத்தின் அடிப்படையில் இருந்தே அராஜகம் பிறக்கிறது.

"Was hast du da in der Hand?"

"Eine Eisenstange."

"Was willst du mit der Eisenstange?"

"Den Sohn totschlagen."

"Warum willst du ihn totschlagen?"

Weil er rettunlos verdorben ist,weil Hopfen und Malz an ihm verloren ist."

-Signale von Heinrich Kemner.seite:26.

>கையில் என்ன வைத்திருக்கிறாய்?<

>இரும்புக் கம்பி.<

>இரும்புக் கம்பியினால் என்ன செய்யும் உத்தேசம்?<

>எனது மகனைக் கொல்லப் போகிறேன்.<

>எதற்காக அவனைக் கொல்வதில் உனது நாட்டம்?<

>காப்பாற்ற வக்கில்லாமால் பழுதடைந்து போனதால்,வாற் கோதுமையும் கொடி முந்திரியும் அழிந்துவிட்டது.<

இரண்டாவது யுத்தத்துக்குப்பின் ஜேர்மனியில் நிகழ்ந்த சமூக விளைவுகள் பற்பல, அதை மையப்படுத்திய படைப்புகளை முன்வைத்தவர் கைன்றிக் கெம்னர்.

சமூகத்தில் மிகக்கடுமையான ஏற்ற தாழ்வுகளும் கொடிய வறுமையும் தலைவிரித்தாடிய போது மிக அவசியமான உற்பத்தி, விவசாயமாக முக்கியம் பெற்றது-அதைப் பராமரிப்பதற்கான முறைமைகளில் மக்கள் அவசியமாகக் கவனஞ் செய்யாதபோது ஜேர்மனிக்கு அமேரிக்கா உதவும் நிலை தோன்றியதன் விளை(ழை)வாக இப்படைப்பு எழுகிறது!

இங்கே-தனது தேசத்துப் பயிர்களைக் காக்காத மகனை அப்பன் கொல்வதற்காகவே இரும்போடலைகிறான்.

உணவுத் தேவைக்காகப் பயிரிடும் விவசாயியோ தனது பயிரின் அழிவில் அதீதக் கோபம் கொள்கிறான்!-மகனைக் கொல்வதில் அவன் முனைப்பாக இருக்கிறான். ஏனெனில் பயிர்களின் அழிவுக்கு அவன் காரணமாகிறான்.

அவன் அதன்மீது கரிசனை கொண்டு பராமரித்திருந்தால் இவ்வளவு தூரம் அழிந்திருக்க முடியாது.

மீளவும் கேட்ப்போம்:

எதற்காக?

பயிரினது அழிவுக்கு அவனே காரணமாக இருப்பதால்!

இங்கோ- நமது ஈழத்திலோ மக்கள் தினமும் அழிகிறார்கள்,நாடு அமைதியிழந்து மக்களின் மரண மயானமாகிறது. எதனால்?

சிங்கள-தமிழ் ஆளும் வர்க்க-அரச பயங்கரவாதப் போரினால்! மக்களின் எந்தவுரிமையையும் பொருட்படுத்தாது தமது தேவைகளின் பொருட்டுப் போர் மக்களை அழித்து வருகிறது.

சாதாரணமாகப் போர் மனித நாகரீகத்தையே தமிழ்ச் சமுதாயத்திடம் இல்லாதாக்கி அவர்களைக் காட்டுமிராண்டிகளாக்கியபின்னும் நாம் நமது தேசத்தின்-மக்களின் பால் கவனஞ் செய்தும் "ஆயுதங்கள்" நம்மைக் கட்டிப் போடுகிறது! மக்கள் வாய் திறந்து எதிர்வார்த்தை பேசமுடியாது திணறிக்கொண்டிருக்கிறார்கள்.

எனினும் மரணப்பயம் மக்களின் மனதைக் கட்டிப் போடுகிறது.

சமுதாயத்தை இவ்வளவு கொடுமையாக அடக்கித் தமிழ் மக்களின் வரலாற்றைக் காட்டுமிராண்டிச் சமுதாயமாக மாற்றி அழித்துவரும் கொடிய வன்முறையாளர்களை அழிப்பதற்கு நம்மால் இரும்புக் கம்பிகளை எடுக்க முடியாதுபோனாலும்,குறைந்த பட்சமாகவேனும் இத்தகைய அழியுறும் சமுதாயத்தைக் காத்தாகக் கதைத்தோ,பறைந்தோ-பேசிப் பறைந்து கொடுமையான யுத்ததை அம்பலப்படுத்தியாக வேண்டும்.

இங்கே ஷோபா சக்தியின் நோக்கம் அந்த முறைமையில்
சிங்கள தேசத்தின் நிகழ்கால-எதிர்கால அரசியலைச் சுட்டி அதை நம்மோடு பறைந்து கொள்கிறது:

//இன்று சிறிலங்காவில் சிங்கள இனவாதம் அதன் உச்சக் கட்டத்தில் இருக்கிறது. சிஹல உருமய, பூமி புத்ர போன்ற பச்சை இனவாதக் கட்சிகள் வெகு வேகமாகச் செல்வாக்குப் பெற்று வருகின்றன. ஆளும் பொதுஜன முன்னணி அரசு மொத்த நாட்டையும் கூட்டி அள்ளி ஏகாதிபத்தியங்களுக்கு அடவு வைத்துள்ளது. அரசு சாத்தியமான வழிகளில் எல்லாம் தமிழ் மக்களின் முசுலிம் மக்களின் மலையக மக்களின் அரசியல் உரிமைகளை மறுத்து வருவதோடு நில்லாது உழைக்கும் சிங்கள மக்களின் வாழ்வாதார உரிமைகளையும் பறித்து வருகிறது. பொது நிறுவனங்களை அந்நிய பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்றுத் தள்ளுவதில் அரசு ஒரு வேகச் சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தச் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைப்பதற்கான தருணத்தை எதிர்நோக்கி ரணில் விக்கிரமசிங்க காத்திருக்கிறார்.//

ஒன்று மட்டும் உண்மை!

நாம் யாருக்காப் பேசுகிறோம்,எழுதுகிறோமென்பதை
மக்கள் புரிந்தார்களோ இல்லையோ ,நாட்டைச் சுடுகாடாக்கும் வானரங்கள் நன்றாக நம்மையறிந்துள்ளார்கள்!

அவர்களின் செவிகளில் மக்களில் கலகக் குரல் தினமும் ஒலிக்கிறது.இந்தவொலி சிதறியாக வேண்டும்.

சிதறுவதற்கு என்ன செய்யலாம்?

மக்களைப் பழமையில் நீந்த வை!

அப்போது காசு பணம் புரட்டிவிடுவதும்,தொடர்ந்தும் துப்பாக்கிக்குத் தலை சாய்த்திடுவது சகஜமாக நிலைக்கும்.

மக்களிடம் தண்டிய சொத்தில் கோவிலமைத்துக் கோவிலால் கொள்ளையடிப்பது ஒரு வியாபார யுக்தி.

ஐரோப்பாவில் கோவிலென்பது பணமுழைக்கும் ஒரு
அற்புதமான வழியைத் திறந்திருப்பதைப்
புலிகளைவிட மற்றெவரும் அறியவில்லை.

இங்கே சோபா சக்தியும் கும்பிடுவதோடு நிற்கிறார்.

//உலகிலேயே போராட்டத்திற்கு என்று பொது மக்களிடம் பணம் சேர்த்து அந்தப்பணத்தில் கோயில் கட்டிக்கும்பிடும் ஒரே விடுதலை இயக்கம் விடுதலைப் புலிகளின் இயக்கம் தான்.//

எங்களுடைய போராட்ட ஆரம்பமானது எவ்வளவுதாம் புரட்சி பேசினாலும் அது உண்மையில் ஒரு புரட்சிகரக் கட்சியின் வழியில் நகர்த்தப்பட்ட முன்னெடுப்புகளில்லை!

இன்றைய அவலங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது எமது சமுதாயத்தின்முன் விரிந்து கிடக்கும் குட்டிமுதலாளியப் பண்பாகும்.வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படையாக இருப்பதால் எந்தெந்த வர்க்கம் தத்தமது நலனுக்கான முன்னெடுப்பில் கட்சியில் ஆதிக்கம் பெற்றுக் கொள்கிறதோ அந்த வர்க்கமே கட்சியின்
முன் நகர்வை-போராட்டச் செல் நெறியை,யுத்த தந்திரோபாயத்தைச் செய்கிறது-அந்த வர்க்கத்தின் முரண்பாடுகளேயேதாம் அது கையாள முனைகிறது.

எமது தேசிய விடுதலையமைப்புகள் முன்வைத்த கோசங்கள் பல இந்த வகையிலே எழுந்தவை.

இனவொதுக்கல்,
தரப்படுத்தல்,
தமிழுக்கு அரசகரும மொழி
அந்தஸ்த்துக்காக குரல் கொடுத்த கட்சிகள் தமது சமுதாயத்துக்குள் உழைப்பவர்களை
நாயிலும் கேவலமாகப்"பறையன்,நளவன்,பள்ளன்,அம்பட்டன்,வண்ணான்"
என்று சாதி சொல்லி அடக்கியபடி இவற்றைக் கேட்டுக் கொண்டது.

சிங்கள அரசிடம் தமிழருக்கான தனி மண்ணைக் கேட்ட அதே அரசியல் தனக்குள் ஒடுக்கப்படும் தலித்துக்களை எந்தவுரிமையுமின்றி வாழ நிர்ப்பந்தித்தது.

இத்தகைய வரலாற்றுத் தவறுகளிலிருந்துதாம் போராட்ட இயக்கங்கள் தம்மைத் தகவமைத்தன.அவை தமது படையணிக்கு அடியாளகமட்டுமே தலித்துக்களை இணைத்தார்களேயொழிய புரட்சிகரக் கட்சியைக்கட்டிப் போராடுவதற்கல்ல.

இத்தகைய குட்டி முதலாளியப் பண்பானது இயக்கங்களுக்குள் போட்டியை வெளியிலிருந்து திணிப்பதற்குமுன் உள்ளேயே முகிழ்க்கும் கருவ+லங்களை இந்த நடுத்தரவர்க்க மேல் சாதிய ஆதிக்கக் கல்வி செய்து முடித்தது.இந்தத் தரணங்களின் யாழ்ப்பாண வேளாள ஆதிக்க மனதானது அனைத்துப் புரட்சிகரச் சக்திகளையும் இனம் கண்டு அழித்தொழித்தது.

இதுவே உட்கட்சிக் கொலைகளுக்கு ஆரம்பமான கருத்தியலை போராட்ட இயக்கங்களுக்கு வழங்கியது.இதன் உச்சத்தை அந்நிய நலன்கள் செய்து முடித்தன!

//வர்க்க ஒடுக்குமுறையற்ற சாதியமற்ற இனவாதமற்ற சோஸலிசத் தமிழீழத்தை நோக்கித் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட ஈழப்போராட்டம், அந்த இலட்சியங்களின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் திரளிடையே பெரும் ஆதரவைப் பெற்றிருந்த ஈழப்போராட்டம் இன்று குறுந்தேசிய வெறியும் ஏகாதிபத்திய அடிபணிவும் சகோதரப் படு கொலையும் - பாஸிஸமுமாகப் பரிமாணம் பெற்றிருக்கிறது. இதைத்தான் ஈழப் போராட்டத்தின் தோல்வி என்கிறோம். இந்தத் தோல்வி ஒரு நாளில் நம்மை வந்தடைந்த தில்லை. ஈழப் போராட்டத்தின் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் இந்தத் தோல்விக்கான காரணங்கள் விரவிக்கிடக்கின்றன. அந்த அத்தியாயங்களை கட்டவிழ்ப்பதன் மூலமாகவும் அதன் மூலமாக இதுவரை எழுதப்பட்ட ஈழப் போராட்டத்தின் வரலாற்றைச் சிதைக்கப் பெருமளவு முயல்வதாலும் சி.புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ மிக முக்கியமானதொரு அரசியல் நூலாக - அதன் உள் முரண்களோடு சேர்த்துப் பார்த்தால் கூட - தன்னை நிறுத்திக் கொள்கிறது.//

ஷோபா சக்தியின் இவ் விமர்சனமானது மிகவும் ஊன்றிப் படிக்கத் தக்கது!
இது அவசியமான காலக்கட்டத்தில் வந்திருக்கும் தரமான பார்வையைக் கொண்டிருக்கிறது!


ப.வி.ஸ்ரீரங்கன்
05.06.2006


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்