தமிழீழக் குடை

தமிழீழத்துக்கான
"ஆதரவை"க் கோருகிறது பொங்கு தமிழ்
வர்த்தகத் தேசியம்
ஆதரவு இருந்ததனாற்றான்
தற்கொடைப் போராளியும் அவர் தாய்ப்பாசமும்
இதுவரை இவர்களைச் செல்வர்களாக்கியும்
தேசத்தைக் குருதிக்குள் தொலைத்தபடி
குழந்தைகளைக் குண்டுடன் தொலைக்கிறது!

தமிழைச் சொல்லியே
தரணியில் சந்தைப்படுத்தப்படும்"ஈழத்துக்கு"
ஆதரவைக் காட்ட
நீ,
அழகான தமிழிச்சி
அமுகிப் பிடிக்கும்
அற்புதத் தமிழீழக் குடையை வேண்டு!

கோரிக்கைதான் இது


கொம்பு முளைத்த
தமிழ்த் தேசியத்தின் ஏக குத்தகைக்காரர்
செய்வித்துத் தரும் குடைக்களும்
தமிழீழத்தை மொத்தமாக ஏலத்தில் விட
தமிழிச்சி உடலைத் தற்கொடையாய்க் கொள்ளும்
தமிழீழத் தாகம் மட்டுமல்ல
அதைச் சொல்லி கல்லாவை நிறைப்பவர்களும்
தமிழிச்சியின் உடலைப் புசித்தபடி
வர்த்தகத்தில்"ஆதரவு"கோருகிறது!-மங்கு தமிழ்!!


இதுவும்,
தேசத்தின் விடிவுக்குத்தான்
பல்லிளிக்கும் உடலும்
பகட்டான உடையும்
பக்கா வியாபாரம்
தேசியத்தின் பெயரில்


தூ...
பெண்ணுரிமை
தேசியம்
விடுதலை
தமிழீழம் சுயநிர்ணயம்
குப்பைகளைச் சொல்லியே
கோபுரங்கள் கட்ட
தாய்மையை ஏலத்தில் விடும் புலிப்பாசிசம்

தமிழையும்
தமிழச்சிகளையும்
ஏலத்தில்விட்ட இந்தத் தேசியம்
இலட்சம் உயிர்களையுந் தேடிப் புதைத்தது
தேசிய வர்த்தகத்தில்

இதுவும் அதன் வினைப் பயனாய்...


இன்னும்
என்னென்ன கூத்துக்கள்
இந்தக் கொலைக்காரக் கோமாளிகளால்
நமக்கு விடியும்?


ப.வி.ஸ்ரீரங்கன்.
20.06.2008