04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" -குறள்423:அறிவுடமை.

எனக்குச் சில நேரத்தில் தோன்றுமுணர்வோ மிக அலாதியானது!

தமிழருக்குப் புத்தி சொல்ல வெளிக்கிட்ட வள்ளுவனைப்பிடித்து நாலுக்காறு போட்டாலென்னவென்று அடிக்கடி தோன்றுகிறது.இருந்திருந்து பிடரியிலுறைந்த கறுப்புப் பல பொழுதுகளில் என்னைக் கொல்வதும்,அதை நான் களைவதுமாகக் காலஞ் செல்வதுண்டு.என்றபோதும் எமது சமூகத்துக்கு-இளந் தலைமுறைக்கு படிப்பறிவின்மீதான கண்ணோட்டம் தற்காலக் கருத்துநிலையால் அறிவியல் மனத்துவாரத்துள் கடுகளவும் உரசிக்கொள்வதாவில்லை!-இது கவலையான கண்ணீருக்குச் சொந்தமாகிறது.

வள்ளுவன் சொன்னானென்று எதையோ புரியும்(அவர்கள் தாங்கள் ஏதோ உண்மையை எழுதுவது போலவும், நடுநிலையாளர்கள் போலவும் காட்டிக்கொண்டு மக்களைத் திசை திருப்புவதற்காக கையாளும் உத்தியே இது. "ஆகா, இவங்கள் சொல்லிறதும் உண்மை போல தான் இருக்கு" என்று மக்கள் சொல்லும் அளவுக்கு நம்பக் கூடிய விதமாக எழுதுவார்கள். "எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப் பொரூள் மெய்ப் பொருள் காண்பதரிது" எனும் வள்ளுவன் வாக்குப் போல அரசியல் அறிவு குறைந்த மக்கள் , இவர்களின் மாயைக் கருத்துக்களின் மெய்ப்பொருளை அறியாமல் நம்பி குழப்பமடைந்து விடுவதும் உண்டு. இக் கும்பலுக்கு உண்மையில் எம் மக்களின் விடுதலையில் அக்கறை இருந்தால், இக்கருத்துக்களை புலிகளின் தலைமைக்கு எடுத்துச் சொல்லி ஏன் தலைமையுடன் விவாதிக்கக் கூடாது? நேரடியாக விவாதிக்க முடியாவிட்டால் இக் கருத்துக்களை தலைமைப் பீடத்திற்கு கடித மூலமாகவே அனுப்பி விளக்கம் கேட்கலாமே? இங்கே உங்களுக்கு ஓர் சங்கதியைச் சொல்ல விரும்புகிறேன். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் பல தமிழ்ப் புத்திஜீவிகளும், பல தமிழ் அரசியல் அறிஞர்களும் பல விமர்சனங்களை , மாற்றுக்கருத்துக்களை, தமது கருத்துக்களை நாள் தோறும் புலிகளின் தலைமைப் பீடத்திற்குச் சொல்லிக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் இவர்கள் சிங்கள அரசுகளினதும் துரோகக் கும்பல்களினதும் பரப்புரை ஊடகங்கள் மூலம் மக்களைத் திசை திருப்பி விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் விதத்தில் சொல்வதில்லை. ஆகவே, இப்படியான துரோகக் கும்பல்களின் கபடத் தந்திரங்களுக்கு[dirty tricks] பலியாகி விட வேண்டாம் என என் உறவுகளைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்-வெற்றி)ஒரு கற்றுக்குட்டிக்குக் கல்வியென்பதைப் பேராடும் பல்கலைக்கழகத்துச் சுவரில் தொங்கும் கரும்பலகையில் விளக்கமுறும் பண்டமாகக் காணுவதில் பெருமகிழ்வு.ஆனால் மடமையைக் கடைந்தேற்றவேறொரு வலைப்பதிவு(!).


"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"-குறள்423:அறிவுடமை.

(எப்பொருளை-கருத்தைச் சொல்லறிவைச் செயலை,பழியை-வதந்தியை,வாய்மையை,எண்ணத்தை-எழுத்தை...யார் யாரிடம் கேட்டாலும்(கேட்டவாறே கொள்ளாமல்)அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே சரியான-தெளிவான,கறாரான கல்வி-அறிவு) இப்படித்தாம் வள்ளுவன் வடித்தான்!

வாய் விரிந்த வம்புப் பேர்வழிக்கு வரம்புமீறிய கடுப்பு.இதன் வாயிலாக எந்தவொரு கருத்தும் புரியாமல் "தும்பி"பிடிக்கும் சின்னப் பயலின் சிந்தனையோடு ஈழம்-புலிகள் குறித்துவேறு கனவு காணுது.

அரைவேக்காட்டுத் தறுதலைகளுக்குத் தமிழும் புரியுதில்லை-தமிழரையும் புரியுதில்லை.


அதைவிடக் கொடுமை,புலிகளைப்பற்றிய புரிதல்! புலிகளை விமர்சிப்பவனுக்குப் பிடரியில் ஒன்றுமில்லையென்று, "யாரு சொல்லுகிறார்?" குறளுக்குக் குற்றுயிராக்கும் ஒரு கற்றுக்குட்டி!

"தம்பி,அம்புலியை ஞானி காட்டினால் நீயோ அவரின் சுண்டுவிரலைப் பாராதே.மாறாக அம்புலியை நோக்கடா மகனே!"என்பார்,என் தாயார்.இது எல்லோருக்கும் பொருந்தும்.


நசிகேதன் என்ற ஒரு மகா ஞானி எமனிடம் பிரமத்தைப்பற்றிக் கற்றானாம்.அவன் எல்லா வகையான தத்துவங்களையும் கேள்விகளாலேயேதாம் வேள்வி செய்து,தன்வயப்படுத்தியதாகவொரு பண்டைய பாரதத்தின் நம்பிக்கை.

அறிவைப் பெறுவதற்கு"பிரத்தியட்சம்,ஊகம்,அநுபவவாக்கு"என்ற அடிப்படைப் பிரமாணங்கள் உண்டு.அதைத்தாம் பலர் படிப்படியாக வளர்த்து,"புற நிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டி விடுவதாகும்"என்றார்கள்.-இங்கு எந்தப் புற நிலையும் இந்தப் புலி அநுதாபிகளைத் தூண்டுவதாவில்லை.அகத்தின் கருத்துப்பரப்பு:"ஆதிகேசன் போட்டான் கோடு,அது வழியே நமது பொடி நடை"என்ற மாதிரித் திரியும் ஒரு தலைமுறைச் சீர்கேடு.

அறிவைப் பெறுதலுக்கான எந்த வழியையும் மூடிவைத்துவிட்டுப் புலி அமைப்புக்குள்ளேயிருந்து வெடித்துச் சிதறிவிடும் "எறிகணையில்" தேசியத்தையும்,தமிழுரிமையும் காணுமொரு தலைமுறைக்குத் "தம்மை-எம்மை"ப் புரிகிறதுக்குப் புறத்தே பற்பல தடுப்புச் சுவர்கள்"தமிழீழம்,தேசியம்,தனிநாடு,தலைவர்-இயக்கம்"என்ற வடிவில்.மக்கள் என்ற மையப் புள்ளிக்கு எதுவும் தெரியாதாம்!எது சரி,எது தவறென்றறியாப் பச்சைப் பால் குடிகளைப் "புலிஎதிர்ப்பாளர்கள்" கெடுக்கிறார்களாம்!:-))))))

"மக்களிடமிருந்து கற்று,அதை மக்களிடமே வழங்கல்"என்று எவனொருவன் கத்து,கத்தென்று கத்தித் தொலைத்தான்.கூடவே"கற்றறி,கற்றறி,இன்னுமொரு முறை கற்றுத் தெளிவுறு"என்றான்.-அவன் புரட்சிக்காரன்,சோவியத்தை நிறுவிக்காட்டினான்.

இங்கோ"தலைவர் சொன்னார்,தலைவர் செய்தார்,தலைவருக்குத் தெரியும்,தலைவர்...தலைவர்,தலைவர்..."விளைவு?அதோ கண்ணில் தெரியுது கருங் குருதி!

இப்படியிருக்குமொரு நிலையில்- இவர்கள்தாம் தமிழ்ச் சமுதாயத்தின் நாளைய"பெருங் குடிகள்".நமக்கு இப்பவே மண்டையில் ஆராச்சியைத் தொடுக்கும் இதுகளின் பிரண்டல் தாங்க முடியவில்லை.

இன்னொருவர் எழுதுகிறார்:"அடிக்கு அடி-வன்னியில் வெடித்தால்,கட்டுநாயக்காவில் வெடித்துச் சிதறுவது சிறப்பாம்!என்றபடி...

"போரென்றால் போர்தாம்" என்ற ஜே.ஆர்.,பிரேமதாசா வகையறாக்களின் தொடர்ச்சியோ?

ஆண்டுதோறும் அழிவைக் காணும் பாலஸ்தீனத்தின் பால்குடி அட்டூழியத்தின் பிறப்பிடத்தில் வெடித்துச் சிதறிவிட,அப்பாவிப் பாலஸ்த்தீனியர்கள் "குஞ்சும் குருமானாக"க் குண்டடிபட்டுச் சாகும் நிலை இஸ்ரேலாகத் தலைமீது!
நாலென்ன,நாலாயிரம் தற்கொலைக் குண்டு வெடிப்பினும் விடுதலை வரா.இதற்குப் போராட்ட வழி வேறானது.கருப்புச் செப்டம்பர் கதை தெரியாதோ?

மக்களின் அழிவைத் தடுத்து நிறுத்துவதற்குக் குரல் போடுபவன் முட்டாள்களாம்.நல்லது!

மக்கள் நலன் என்று ப+சி,சிங்களவரின் சியோனிசத்தை மெழுகிவிடுவதாகவும் குற்றப் பத்திரிகை.

இன்னும் பலருக்கு நடு நிலைமை என்ற நாணயம்.

"நீ,ஓடுக்கப்படுபவர்களுக்கும் ஒடுக்குபவர்களுக்கும் நடுவில் நின்று,இருவருக்கும் பொதுவாய்ச் செயற்படுவதையா நடு நிலைமையென்கிறாய்? அப்படியுன்னால் செயற்பட முடியுமோடா தம்பி? ச்சீ,போங்க தம்பி!எப்பவும் தாமாஷாகத்தான் கிடக்கு."இப்படி இலக்கியச் சந்திப்பில் தலையைப் பிய்த்த தொடர்ச்சி.

மனிதாபிமானம் பொத்தாம் பொதுவானதா? மேலே கேட்கப்பட்ட இருவருக்கும் பொதுவானதாகக் கடைப்பிடிக்க முடியுமா?
இல்லை-பக்கஞ்சார்ந்தது!
என்னயிது கோதாரி வள்ளுவர் இப்படியும் சொல்லுகிறாராம்:

"நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை."-குறள் 328:கொல்லாமை.

ஐயா வள்ளுவரே,இப்போது யார் ஐயா சான்றோர்?அவர்களுக்குச் சாவு வழிச் சங்கடம் வருவதில்லை,மாவீரம் அல்லவோ வருகிறது.அல்லது மாமனிதன்!பின்னெப்படிக் கடை?"ஆக்கமொன்று இன்றியே சாவு வரும்,அதன் வழி எதுவெதுவோ வந்து"மழைக்கால் இருட்டென்றாலும் மந்தி(புலி)கொப்பிழக்கப் பாயாது"என்று மனதைக் கடைந்தேற்றும் கல்வியோடு சான்றோர் சங்கதி.

"அஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்"-குறள்428:அறிவுடமை

இப்பவும் தவறிழைக்கிறாயே வள்ளுவா!

இது "அறிவுடையார்தம் தொழில் என்கிறாய்"சமூகம் முழுதுமாகக் காய்நசித்தபின் கடுகளவும் கல்வி நிலைக்காதிருக்கும்போது"அடிக்கு அடிதாம்!"அஞ்சுவ தஞ்சாமை பேதமை" முட்டாள் வள்ளுவா!அங்கே பார்!அரும்பெருஞ் சுடரறிவு"அஞ்சா நெஞ்சாய்"அடைகிடக்கிறது.
அப்போது:"அடி,அடிக்கு அடி-இடிக்கு அடி-வெடி"அறுபடுவது எதுவென்றாலும் ஆவது விடுதலையென்பதில் "வரவு" வைத்தயே இன்றைய நேர்மையை!-இதுவே தமிழுக்குத் துரோகமற்ற"தமிழினச் செம்மலின்"சிறப்பு!மற்றறிவெல்லாம் மடமை!

"அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொள்ளல்" -குறள் 795:நட்பாராய்தல் -இதுதாம் வள்ளுவரே என் கண்முன் நிழலாக விரிவது!

ப.வி.ஸ்ரீரங்கன்
18.05.06

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்