04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

கலைஞர் கருணாநிதி அவர்களின் கணக்கு!

சொன்னதைச் செய்த செயலூக்கத் தமிழ் முதலமைச்சர். எனக்குச் சரியாக ஞாபகமிருக்கு அதுவொரு மழைக்கால மார்கழி மாதம்.

தோட்டம் துரவெல்லாம் பயிரிடப்பட்டு அவைகள் அல்லி குத்திக் குருத்தெறிந்திருந்தன.

வருடமோ 1968.

எங்கள் வீட்டிலொரு கதைப் புத்தகத்தை அண்ணன் தலைமாட்டில் வைத்து அடிக்கடி படிப்பான். பின் தலையணைக்கடியில் திணித்து வைத்தபடி தானும் கதை எழுதிப்பார்ப்பான். அந்த குறிப்புப் புத்தகத்தில்-முன் அட்டையில் முத்தமிழ் வித்தகர் அறிஞர் அண்ணா என்றும ;பின்னட்டையில் கலைஞர் மு.கருணாநிதி என்றும் எழுதி வைத்திருப்பான். அன்றிந்தத் தலைவர்களே எமது சிந்தனைகளுக்குள் உலாவந்த பெருந் தலைவர்கள். இளைஞர்களுக்குக் கதையெழுதுவதற்கு அறிஞர் அண்ணாவின் கலைஞர் கருணாநிதி அவர்களின் தமிழ் அசலாக ஊக்கங் கொடுத்திருக்கவேணும். இல்லையேல் கதையெழுதும் முயற்சியை அண்ணை எடுத்திருக்க மாட்டான். பின்னாளில் இவன் எந்தக் கதையையும் எழுதும்படி முயற்சிக்கவுமில்லை. இவனது வாசிப்புப் பின்பு பேய்கள் பற்றிய கதைகளாக இருந்திருக்கிறது.
அது 1974 ஆம் வருடம்.

ஓரிரவுப் பொழுது. அண்ணன் ஊர் சுற்றப் போயிருந்தபோது அவனது கதைப் புத்தகங்களிலொன்றையெடுத்துப் படித்துப் பார்த்தேன். சில பக்கங்கள் வாசிப்பதற்குள் நெஞ்சுக்குள் பயம் குடி கொண்டது!

ஒரு தீக்குச்சியை எடுத்துப் பற்ற வைத்தபோது கொங்கு நாட்டுப் பேயொன்று றீம்றீமென்று திடீரென முன்வந்து உனக்கென்ன வேண்டும்-உனக்கென்ன வேண்டுமென்றது அந்தப் பேயிடம் என்ன கேட்டார்களோ எனக்குத் தெரியாது. நான் அதற்குமேல் அதைப்படிக்கவில்லை!

ஆனால் தமிழகத்து அரசியல் தலைவர்களோ அதே கொங்கு நாட்டுப் பேயின் நிலையெடுத்துத் தமிழர்களிடம் உனக்கென்ன வேண்டும் உனக்கென்ன வேண்டுமென்று கேட்டுக் கேட்டு அள்ளி வழங்கும் போது எனக்கு அந்தப் பேயை எண்ணாதிருக்க முடியவில்லை!

இத்தகையத் தலைவர்கள் யாவரும் மக்களுக்குச் சேவை செய்யப் பேயுருவோடு அலைவதைப் பார்க்கும்போது அவர் தம் பெருஞ் சேவை மனதைக் காட்டிவிடுகிறதல்லவா?

ஆம்! இருக்காதா பின்ன? கலைஞர் ஆச்சே எங்கள் மகமாயி அம்மாவாச்சே!

தேர்தலில் அள்ளியிறைத்த போலிக் கோசமெல்லாம் பொய்யின்றிச் செயலுருப் பெறுவது நிசமாகவே ஏழை மக்களின்பால்-மழலைகளின் ஆரோக்கியத்தின்பால் விவசாயிகளின்பால் ஓட்டுக்கட்சிகளுக்கு ஏற்பட்ட கரிசனையான மனிதாபிமானமா?

மக்களின் குரல்வளைகளை உலக வங்கியின் உத்தரவின் பேரில் சுருக்கிட்டு முறித்தெறிந்த ஜெயலலிதா கருணாநிதிகளா இங்ஙனம் பாச மழை பொழிவது!

இராமநாதபுரம் மாவட்டத்தில் பற்பல விவசாயிகள்எலிக் கறி உண்டதற்கு யாருதாம் காரணம்?

எங்கள் கவிஞனொருவன்:

......................மாலையிலே கூழ் குடித்துக்

குறட்டைவிட்டு மேனி தூங்கி

காலையிலே கண் விழித்துத்

தாரமுடன் குழந்தைகளும்

தனியாகப் பின் தொடர

நடக்கின்றான் விவசாயி.

விவசாயி வாழ்கின்ற சிற்றூரே வாழிய நீ

என்று ஆரம்பப் பள்ளிப் புத்தகத்தில் எழுதியிருந்தான்.

பாடல் சரியாகப் பாடமில்லை இப்போது!

அவ்வளவுக்கு விவசாயிகள் படும்பாடு வேதனையானது!

தலைவர் கருணாநிதி

6400.கோடி இந்திய பாய்களுக்கான அவர்களது

(விவசாயிகள்) பழைய கடன்களைத் தள்ளுபடி செய்து

2 பாய்க்குப் படியரிசி போட்டு

ஒன்றுக்கு இரு தடவைகள் ஊட்டச் சத்து முட்டைகளை

மழலைகளின் தட்டுக்குச் சொன்ன மாதிரிச் செய்தே காட்டிவிட்டார்!

அப்பாடா பெரிய மனிதாபிமானமும்

உத்தமருமான உலகத் தமிழ்த் தலைவர் நாணயவானாகிறார்!

எதற்குத்தாம் பதவி ஏற்றவுடனே ஒப்பமிட்டு உத்தரவிட்டார்?

மக்களின் துன்பத்துக்காகவா?

வெறும் 95 இடங்களோடு கூட்டணியுடன் ஆளமுடியுமா?

இது கடினமானது!

கலைஞர் வல்லவர்.

நாடகங்கள் போட்டவர்

நல்ல தமிழில் படங்களுக்கு வசனமெழுதியவர்.

கூட்டங்களுக்குள் சொல்லி வைத்தவர்களின் கேள்விகளுக்குச்

சுவையாக முன்கூட்டித் தயாரித்த பதில்களைக்

கணப்பொழுதில் கக்கி அறிஞர் எனப் புகழ் பெற்றவர்!

விடுவாரா தவறு?

இந்த அரசுக்குக் குற்றுயிர்தாம் என்பதை அவர் அறிந்தபோது

சொன்னதையுடனே செய்யுங்கால ;இடையில் வரப்போகும் தேர்தலில் தனித்த பெரும்பான்மை தி.மு.க.வுக்குத் தயாரிக்கக் கலைஞர் கண்ணியவானாகிறார்!

நெல்லுக்கிறைத்த நீர்

புல்லுக்கும் அங்கே பொசியும் என்ற மாதிரி

அப்பாவி மக்கள் நன்மையடையவாவது கூட்டணி ஆட்சிகளே தொடர்வது தொந்தரவு மக்களுக்கில்லை அது கட்சிகளுக்கே!

பிச்சைதாம்!

எனினும்

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் ப+ சக்கரை என்பதுபோல்

கலைஞரின் தேர்தல் வாக்குறுதி நிசமாவதும் இப்படியேதாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்

13.05.06


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்