காதற் தியானிப்புத் தேவையில்லை
கள்ள விழிப்பார்வையும்
கடிதவரைவும்
கண்விழித்திருப்புந் தேவையில்லை.


மனதுக்குள் கும்மியடிக்கும்
விமானமொன்று குடற் சுவரில் முட்டிமோதிப் பறக்கும்
அம்மாவை வெறுத்தொதுக்கும்
அப்பனை வெட்டிப் புதைக்கும்
"எந்தவுணர்வுக்கும்" அவசியமில்லை!

அவனுக்காய்-அவளுக்காய் "காயும்"காலங்கள்
வெட்டெனச் சாய்ந்து மேலெழும்
தலைக் கோலமும் தேவையில்லை!

மேனிமுகரும் ஆசையோ இல்லைப் பட்டகர்த்தி
பாய்விரிக்கும் அவசரமும்
பள்ளமும் புட்டியுமாகப் படாதபாடாய்ப் படுத்திய
முத்தக் கனவுக்கும் முயற்சி தேவையில்லை

பக்குவமாய்க் களிப்பதற்கு
பால் பழம் புசிப்பதற்கு
மாலை வரத் தேவையில்லை.

மாசம் சுமப்பதற்கு
மசக்கையுணர்வதற்கு
மாங்காய் கடித்திடுவதற்கு
சாம்பல் உருசித்திடுவதற்கு
சிரமப்படத் தோன்றாது!

யோனி கிழிந்திடவோ
குருதி கொட்டிடவோ முக்கி மலமிருந்து
"ஈன்று சாகும்" பிரசவப் பொழுதை
"சுகப் பிரசவம்"என
அஞ்சல் செய்யும் கணவனுந் தேவையில்லை.

தொட்டிலிடவோ
தோளில் சுமந்திடவோ
தாலாட்டுப் பாடிடவோ
தாயாகித் தந்தையாகி மோந்திடவோ

கால்பிடித்து
மூக்கிழுத்து
முழு நிலாவாய் தலைவருவதற்கு
உருட்டிப் பிசைவதற்கோ
எண்ணை தேய்த்து"கற்கண்டு-கருப்பட்டி"க் கதைகளெல்லாம்
கடுகளவும் தேவையில்லை!

நாத்திட்டிக்குக்"கரும் பொட்டும்"காய்ச்சியிறக்கப்
பாட்டிக்கோ,
"உஞ்சு கடிக்கும்-மீயா எலி பிடிக்கும்"
கதைவிடப் பாட்டனுக்கோ தொடருறவாய் நீள்வதற்கும்
உறவெதுவும் தேவையில்லை.

சொத்துச் சேர்த்திடவோ
சோறூட்டச் "செவ்விதிழ்"தாய்மைக்கும்
சுகமில்லை என்றவுடன் காற்றில் இறக்கைவிரித்துக்
காத தூரம் "கட்டிப்" பறக்கும்
அப்பாவி அப்பனுந் தேவையில்லை!

................... குண்டெறி
குடிமத்துள் உலாவரும் சிங்கள இராணுவத்துக்கு
கோதாரி தானாய் வரும்
வெட்டியும்,வேல்பாய்ச்சிப் பெண்மையைப் பிய்த்தெறிதலும்
பிஞ்சுகளின் விழிகள் முன்னே
சிங்களத்துக் காடைக்கூட்டத்துக்கு வியர்த்துவிடும்!

பிறகென்ன?

"மாவீரர்கள்" மனத்தளவில் தயார்!
தரணம் பார்த்துச் சொல்:
..........................சிங்களவன் கொலைக்காரன்
...........................எங்கள் பெற்றோரை,உற்றோரைப்
பேசுமெங்கள்"தமிழை"அழித்திட்ட மிருகம்!
................."போரைத் தவிர வேறொரு வழி?



........................கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க-

சிங்களத்துக்கு:
தேச ஒருமைப்பாடு,"ஒரே தேசம்-ஒரே இனம்!"நாம் ஸ்ரீலங்கர்கள்.
பயங்கரவாதம்.

தமிழுக்கு:
தமிழீழம்,சுயநிர்ணயம்-தாயகம்!
தேசியம்,
தமிழ்-சமூகவிரோதி.
மாவீரர்
துரோகி,
ஒட்டுக்குழு-இனத் துரோகி,தேசத்துரோகி!
எடுத்துவிடு
இன்னும் ஓராயிரம்"புரியா மொழியில்"எந்த நிகழ்வுக்கும்
எங்கேயுமொரு காரணம் இருப்பது புரியும்.


வேறு,

நம்பிக்கையறுந்த நடுச்சாமப் பொழுதில்
தூக்கத்தின் தற்கொலையில்
புரண்டும்,நிமிர்ந்தும் விழிமறுத்த
தூக்கத் தற்கொலையைத் தடுக்கமுடியாத தவிப்பு

அகதிச் சங்கிலியில் பிணைத்துப் போட
ஒரு வாழ்வும்,ஏதோவொரு எதிர்பார்ப்பும்
ஊரிழந்தும் உணர்வு வெளிக்குள் நங்கூரமிட்டபடி
திசையறியத் தெருவுக்கு வழித் துணை தேடுவதைப்போல்

தீப்பட்டு வெந்தவிந்த
விறகுக்கு"முன்னம்"விறகென்று எவரிடுவார் நாமம்?
கரிக்கட்டை"விறகாகா"வினைப் பயனே
அகதியப்"புலப் பெயர்வு"பெருவாழ்வுக்கும்.

அச்சப்பட்ட மனதின்
பேரிரைச்சலுக்கு
எதையுந் தயாரித்திட
திக்குந் தெரியும்-திசையுந் தெரியும்
துப்புவதற்குத் துணைபோகாதிருக்கும் வரை!

ப.வி.ஸ்ரீரங்கன்
07.05.2006