புறத்தே வீசியடிக்கும் சோழகம்

பெயரளவிலான கூதல்

மதியம் மடிந்து

மௌனிக்கும் சூரியனுக்குக் கீழே

நெருப்பெறிந்து இதயத்தைப் பற்றவைக்கும்

ஈழச் சவாரி!

கர்ப்பத்தில் கனவுதரித்திருக்க

இச்சைப் பாலைத் தர மறுத்தவள்

கெந்தகப் பொதிக்கு இரையாக்கி

விடுதலை கொடுத்தாள்

மறுப்பதற்கும், தடுப்பதற்கும்

மனிதராய் இருந்தபோது முடிந்தது

சுமையைக் காவும்

ஒட்டகமாய் மாறிய மண்டையுள்

இதற்கெல்லாம் பதிவறை ஒதுக்கப்படவில்லை!

இருப்பது, நடப்பது

உண்பது, உறங்குவது

உயிர் நாற்றமடிக்கும்

உடற்கந்தைக்கல்ல

மறவன் மன்னன்தம்

மனக்கதவின் ஒற்றைத் துவாரத்துள்

மெல்லப் புகுந்திடுவதற்குள்

கட்டிய குண்டின் அதிர்வொலி

ஒப்பாரும் மிக்காருமற்ற மறவனுக்கு

மனதாகும்போதே

"மாவீரத் தாலாட்டு"மடைதிறக்கும்

பங்கர் வழியால்

நெடிய அழுகுரலில்

அமிழ்ந்துபோன வாழ்வின் சுருதி

அநாதையாய்த் தெறித்த குருதித் துளியில்

விகாரமாய் கிளர்ந்தெழ

கிடப்பில் கிடக்கும்

மூக்கறுந்த மூக்கு (முன்னைய)ப் பேணிக்கு

ஈயம் ஊற்றும்

ஒரு செயலாய்

"இது" மெல்ல நடக்கிறது!

மூக்கிருந்தாலாவது

நொடிந்துபோன ஆசையோடு

நெஞ்சு வலிக்க

நெருடிக் கொண்டிருக்கும்

பழையகுருதிக் குடத்துக்கு

நீர் நிரப்ப நினைத்தாகலாம்

சேலையை

மறைப்புக்குக்கூட கட்ட மறந்த

ஈழத் தாய்க்கு(ஈழக் கோசம்)

இரட்டைப் பிள்ளை

ஒன்றுக்கு:

"மாவீரர்"

மற்றத்துக்குத்

"துரோகி" என்ற நாமம் வேற.

மீளவும்,

கள்ளக் கலவியில்

கருத்தரிக்க

"ஒட்டுக் குழுவென"நாமமிட்டு

உலகஞ் சுற்றும்

தேச பிதாக்கள்

மற்றவர்

கருவைக் கலக்கி ஒத்திகை செய்ய

ஒழுக்கம் மட்டும்

தமிழன் பெயரால்!

எனினும்,

சோழகம் போய்

வாடைக் காற்றாகிப் பின் கொண்டலாய்ச்

சூறாவளி வெடித்து வீசும்!

ஒருவிடியல்

சேலைக்காய்(ஜனநாயகம்)

மெல்லப் பிறக்கும்!

ஏவாளுக்கேற்பட்ட வெட்கம்

ஈழத்தாய்க்கு மலர்ந்தால்

மெல்லவேறும்

இடுப்பில்,

இல்லைத் தொடர்ந்து அம்மணமாய்

அதை

மெல்லக் கொடுக்கும்

தேசியக் கொடிக்கு!


ப.வி.ஸ்ரீரங்கன்
04.05.2006