04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

மே தின ஊர்வலமும், புலிகளும் சில (சுவாரஸ்ய) - துயரமான நிகழ்வுகளும்!

நேற்றைய மே தின(01.05.2006) நிகழ்வுகளில் நான் பெற்றுக்கொண்ட சில அநுபவங்களைப் பகிர்வதென்பது ஊருக்கு உபதேசம் செய்வதற்கல்ல. உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதும், நமது நிலைமைகளை(புலிப்பாசிசத்தை) உலகத்தமிழ் வாசகர்கள் புரிவதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை வலைப்பதிவில் சாத்தியமாக்குவதற்குமே!

எனக்குப் பிடித்த நிகழ்வுகளில் "மே தின ஊர்வலமும்"ஒன்று.

இந்த ஊர்வலத்தில் எப்பவும் பங்குகொள்வது எனது மனதிற்கினியவொரு துடிப்புடைய செயலாக இருப்பதும் ஒரு காரணமாக அமைவதால், ஒவ்வொராண்டும் இதில் ஆர்வத்தோடு இணைந்து கொள்வேன்.

இம்முறை வீட்டிலிருந்த வெளிக்கிடும்போதே மல்லுக்கட்டித்தாம் புறப்படவேண்டிய நிலை.குழந்தைகளையும் கூட்டிச் செல்லும்படி என் பொண்டாட்டியின் அழுங்குபிடியில், அவர்களையும் அழைத்துச் செல்லும்படியாகி, அவர்களும் வெளிக்கிட்டு வருவதற்கு ஆயத்தப்படுத்தியபோது, நேரம் ஒன்பதைத் தாண்டியது. அத்தோடு அவர்களும் வருவதானால் நிச்சியம் சாப்பாட்டுக்குப் பணம் வேண்டும். வீடுமீள மதியம் மூன்றைத்தாண்டுமென்பதால், காசு கேட்டு மனைவியுடன் மல்லுக்கட்டிப் பணம் கிடைக்காதபோது, மூத்த பயலின் "கைச்செலவு" காசு ஐந்து யுரோவுடன் வெளிக்கிட்டேன். இந்தக்காசில் ஒருவனின் பசிக்கே எதுவும் வேண்டமுடியாது. எனினும் புறப்பட்டுப் பேருந்து நிலையம் செல்லும்போது, மனையாள் மீளவும் குழந்தைகளை வீட்டுக்கழைத்தாள் செல்லிடப்பேசியில். அவர்களை ஒருவாறு வீட்டுக்கனுப்பியபோது என்னிடம் ஐந்து யுரோ எனக்காக இருந்தது. இது எனக்கு எதையாது கடிக்கப் போதுமானது.புறப்பட்டேன். கூட்டம் நகர்ந்து, மறைந்துவிட்டது!


நான் டுசில் டோர்வ் (Duesseldorf) நகரத்துக்குச் சென்றபோது மணி 10.30, எனினும் குறுக்கு வழியால் சென்று, ஊர்வலத்தில் இணைந்தேன். ஜேர்மன் மார்க்சிய-லெனினியக் கட்சியின் ஊர்வலத்தோடு ஒன்றிச் சென்று, பின்பு புலிகளின் கூச்சலோடு இணைந்தேன். இம் முறை தமிழ்ச்; சிறார்கள்- பள்ளி மாணவர்களே புலியின் ஊர்வலத்தின் கதாநாயகர்கள்."Wir wollen echte Frieden!Unsere haende fuer unsere land ." ( உண்மையான சமாதானமே எமக்கு வேண்டும், எங்கள் கரங்கள் எங்கள் தேசத்துக்கே!) என்று வலுவான கோசங்களைச் சத்தமாகக் கத்தினார்கள் சிறார்கள். நானும் சிலரோடு உரையாடி,"இம்முறை கொஞ்சம் வித்தியாசமாக "மேள தாளமின்றி" ஊர்வலஞ் செய்கிறீர்கள், இது எடுபடக்கூடியது! யாரிதை ஒழுங்கு செய்தது?, நீங்களோ? "என்று,ஊர்வலத்தின் முன் மிதந்தவொரு "மேழியர்" கனவானைக் கேட்டேன். அவரும் "நானும் உம்மைப் போல இதில தலைகாட்டிற ஆள்தான்"என்றார் கடுப்பாக. இவருடைய கடுப்புக்குக் காரணம் புலிகளின் ஊர்வலத்தை நான் எனது ஒளிபடக்கருவிக்குள் அடக்கியது அவருக்குப் பிடிக்கவில்லை. என்னுடன் வாக்குவாதப்பட்டவர், மெல்ல எந்தப் பத்திரிகையென்றபோது- நான் எந்தப் பத்திரிகையுமில்லை, சாதரணத் தமிழுணர்வுடைய உங்களைப்போன்ற ஒருவரென்றேன். இதுதாம் அவரது கடுப்புக் காரணமென நான் புரிந்ததும், அது பின்பு தப்பென்று புரிந்தது.

ஊர்வலம் இறுதியிடத்துக்குச் (Duesseldorf-Hochgarten) சென்றபோது நான் ஜேர்மனியத் தொழிற்சங்கக் கூட்டத்துள் கலந்து, நம் மாநில முதல்வரின் உரையைச் செவிமடுத்தேன். அவ்வுரையைத் தொழிலாளர்கள் விசில் ஒலியெழுப்பிக் கேட்காமல் செய்தார்கள். முதல்வர் தனது அரசு இன்றைக்குப் "பொருளாதார வளர்ச்சிக்காக(?!)" முதலாளிகளுக்குச் சார்பாகச் சிலவற்றை விட்டுக்கொடுக்க வேண்டுமென்றார். அவர் தொழிலாளர்களுக்குப் பாடை கட்டுபவர்களில் முதலிடத்திலிருக்கும் ஒரு அரசியல்வாதி.

இவர் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியின் "நோர்த்தன் வெஸ்ர்பாளின்" மாநிலத்துக்கான முதல்வர் யுர்கன் றுட்கார் (Juergen Ruetger)! இவருக்குப் பின்பு உரையாற்றியவர் உலகத்தின் கடைசிப் புத்திஜீவியாக ஜேர்மனில் வாழ்ந்துவரும் யுர்கன் ஆபர்மார்சி ன் (Jergen Abermas) மாணவரான பேராசிரியர் ஓஸ்கார் கென (Oskar Kehne). ரொம்பக் காட்டமாக முதலாளியத்தை விமர்சித்து, முதலாளியத்தின் முறைமைகளில்தான் பிழையிருப்பதாகவும்இ அது மக்களுக்கு எல்லைகளைப் போடுவது நியாயமில்லையென்றும், அவற்றை அரசு தவிர்க்காதுபோனால் போராடுவது தவிர்க்க முடியாததென்றார். கூடவே பிரான்சின் மாணவர்களுக்கெதிரான சட்டம் மூளைப் பழுதானவர்களின் சட்டமென்றும்,பிரான்ஸ் மாணவர்கள் முப்பது இலட்சம் பேர்கள் வீதிக்கு இறங்கியதுபோன்று ஜேர்மனியிலும் மாணவர்கள் இறங்கும் நிலை தொடரும், அரசியல் வாதிகள் தவறான சட்டமியற்றினால் என்றார்.

இந்தப் பேச்சுத் தொடர்ந்தபோது "எனக்குப் பின்னால் வந்த தமிழர்களெங்கே" என்று திரும்பியபோது, அவர்கள் தனிமையாக வேறொரு வயற்பரப்பில் குழுமினார்கள். இதுவென்ன கோதாரியென்று நான் புலிகளை அண்மித்தபோது கடுப்பான மனிதரின் குரல் ஓங்கியொலித்தது.

"எங்கயடா அவன், செவிட்டைப் பொத்திக் குடுத்தனென்றால்..."கத்திக்கொண்டே ஊர்வலத்தில் திரண்டு நின்ற தமிழர்களை "எல்லாரும் அங்க போங்கோ" என்று ஆடுமாடுகள் போன்று துரத்தினார். மக்களும ;"ஏன் எதற்கு" என்ற விசாரணையின்றித் தொழிற்சங்கக் கூட்டத்தோடு இணைந்தார்கள்.

கடுப்பாகச் செயலாற்றிக்கொண்டிருந்தவர் பெயர் சிவா.

இவர் புலியினது பொறுப்பாளர்.

அதே திமிர், அதே மேய்க்கிற குணம்.

மனதுக்குள் பொருமியபடி நான் பேச்சாளர்களின் மேடைக்கு மிக அண்மித்து, முன் தளத்துக்குச் சென்றேன். அப்போதுதாம் அங்கே ஒரு ஜேர்மனியர் "நம்ம" தேசியத் தலைவரின் படத்தை ஒரு பக்கமும் மறுபக்கம் புலிச் சின்னமும் பொறிக்கப்பட்ட பதாகையை கைகளில் வைத்திருந்தார். அவரைப் பார்க்கும்போது, எனக்குப் புலிகளுக்கு ஜேர்மனிய மொழியிலொரு நூல் (Das verlangen der Tamilen nach einen Gerechten frieden-ISBN:3-9805369-3-9) எழுதிக் கொடுத்த ஆமைந சுயனநஅயஉhநச என்ற டோட்முண்ட் நகரில் வாழும் ஜேர்மனியரோவென்ற கற்பனை விரிய "அவரிடமே கேட்போமே" என்று வாய்திறந்த சில நொடிகளில், எங்கிருந்தோ புலி பாய்ந்து என்னருகில் வந்து- நான் கதைப்பதை ஒட்டுக் கேட்க முனைந்தபோது, நான் மிகவும் ஆத்திரத்தோடு "உமக்கு என்ன வேண்டுமென" டொச்சில் வினாவிய கணத்தில், "தமிழில் பேசும்" என்றார். எனக்கு அந்த அவசியமில்லையென்றும், நான் ஜேர்மனியரோடுதாம் இப்போது உரையாடுகிறேன், நீர் சம்பந்தம் இல்லாது இங்கு ஆஜராகியுள்ளீர் என்றபோது புலியின் வாயிலிருந்து இப்படி உதிர்ந்தது:

"நீ வூப்பெற்றாலில் இருக்கும் "ரீ.பீ.சி.வானொலியின" செய்தியாளன். உன்னை நாங்க கணக்குப் பண்ணியே வைத்திருக்கிறோம். எங்கள் தலைவர் கணக்குப் போட்டால் தப்பாது . உனது கணக்கை முடிப்பதுதான் இனிப்பாக்கி." என்றார்.

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது

எங்கே நாம் வாழ்கிறோம்!

அதுவும் ஜேர்மனியிலும் வாய்பூட்டா?

நாம் மற்றவர்களுடன் பேசுவதற்கே முடியாமல்-ஒட்டுக்கேட்கும் புலியை நினைத்தபோது ஊரிலுள்ள மக்களின் நிலை எப்படியிருக்குமெனப் பதறினேன்.

"பாசிஸ்ட்டுகள் தங்கள் நிழலையே கண்டு அஞ்சுபவர்கள்" என்பது உண்மைதாமென இந்தச் சம்பவத்தில் நான் நம்பிக்கொண்டு, அந்தப் புலிக்கு மூக்குடைக்க விவாதித்தேன் .புலிக்குப் புலிகள் துணையாகத் திரண்டு என்னோடு வாக்குவாதப்பட்டதைத் திரண்டிருந்த பொலிஸ்காரர்கள் நோட்டமிட்ட அதே கணம், நான் புலிகளையின்னும் உரத்த குரலில் ஏசினேன். அவர்கள் இறுதியில் "புலிகளை எதிர்ப்பவர்கள் எல்லோருக்கும் மரணத் தண்டனை " என்று விலத்தினார்கள்.

மீளவும் ஜேர்மனியர் "என்ன பிரச்சனையெனும்போது" நான் எனது கோபத்தை தீர்த்துக் கொண்டேன்.

ஜேர்மனியர் மிக அமைதியாகப் "பயப்படாதே" என்று கூறியவாறு தனது "ஜெக்கட்"டுக்குள்ளிருந்து அடையாள அட்டையைக்காட்டித் "தான்" குற்றப் புலனாய்வு அதிகாரியென்று சொல்லி, மீளவும் தொடர்ந்தார் "இங்கே பார், இது ஜனநாயக நாடு.எல்லோருக்கும் கருத்துச் சொல்லவுரிமையுண்டு. அதைப் புலிகள் இங்கே மட்டுப்படுத்தமுடியாது. நாங்கள் புலிகளையின்னும் தடை செய்யவில்லை. இதிலிருந்தே பார்த்துக்கொள் எமது ஜனநாயகத்தை" என்றார்.

இதை நான் சாதகமாய்ப் பயன்படுத்திச் சொன்னேன "உண்மைதாம். ஆனால் புலிகள் தமது கட்டுப்பாட் டிலுள்ள பகுதிகளில் தனியொரு கட்சி, தனியொரு ஆட்சி. தமக்கு எதிரான மாற்றுக்கருத்தையே அநுமதிக்காத சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடிப்பதால்தாம், இங்கேயும் அந்தப் புலி உறுப்பினர்கள் உயிர்கொல்லத் திரிகிறர்கள்! நீயோ அவர்களின் தலைவர் படத்தைக் காவுகிறாய்"என்றேன். அதற்கு சிவிலில் இருக்கும் அந்தப் பொலிசோ "இது நான் அவர்களிடம் கேட்டு வேண்டியது. எனக்கு இவர்கள் பற்றிய தகவல்களுக்கு இது உதவும்"என்றார்.

நான் மௌனித்தேன்.

தொழிற் சங்க ஊர்வலமும், உரையும் முடிந்தபோது எனக்குப் பசியாய் இருந்தது .நல்ல உணவுகளைச் சமைத்து காசுக்கு விற்ற ஒவ்வொரு அமைப்புகளிடமும் கூட்டம் அதிகமாக இருந்தது. பியர் புக்கிகளில் சனம் நிரம்பி வழிந்தது!

எனக்குப் புலிகளின் வக்கிரமான எண்ணத்தைப் பற்றியே மனம் அரித்தபடி.

"புலியை எதிர்ப்பவர்கள் எல்லாருக்கும் மரணத் தண்டனை"

இப்பிடி வெகு லேசாகச் சொல்லும் காட்டுமிராண்டிகளா நமக்கு விடுதலை பெற்றுத் தருவார்கள்?

இது "Sinhala-only-Act -மாதிரி LTTE-ONLY-ACT " இல்லையா?

நமது சிறார்கள் கதி என்ன?

நமது மேற்குலக வாழ்வில்கூட புலிப்பாசிச அச்சமின்றி வாழ முடியாதா?

பிரான்சில் சபாலிங்கத்தைச் சுட்டவர்கள், கஜனை, நாதனை இன்னும் எத்தனையோ பேர்களை ஐரோப்பாவில் போட்டவர்கள்தாம் இந்தப் பாசிசப் புலிகள்.

நினைக்க அச்சமும் கவலையும் மேவ, பசியுடன் வீடு மீண்டேன்.

பிள்ளையிடம் பறித்த ஐந்து யுரோவையும் மீள அவனிடமே கொடுத்துவிட்டு இக்கட்டுரையை எழுத முனைந்தேன்.

எப்போது பிணமாவேன் என்பது தலைவருக்கு மட்டுமே தெரியும்!


ப.வி.ஸ்ரீரங்கன்
01.05.2006


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்