-சில குறிப்புகள்:சிந்திப்பதற்கு.


அன்பு வாசகர்களே,

தேசம் இணையவிதழில் திரு.சபா நாவலன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

 

"பின்னூட்டம் மக்கள் ஊடகவியலின் புதியபரிமாணம்."என்று எழுதத்தொடங்கிய அந்தக்கட்டுரையானது இணைய ஊடகத்தளத்தில் "தேசம்நெற்"எனும் வலைஞ்சிகையைத் தூக்கி நிறுத்தும் முயற்சியாகவே நாவலனால் மேற்கொள்ளப்பட்டது.இன்றைய எதிர்க்கருத்தாடலுக்கும்,மாற்றுக்கருத்துக்குமான திறந்தவெளி விவாதத்தளத்தை மிக உயரிய நோக்கில் தேசம் செய்துவருவதாக அவரது கட்டுரை பறையடித்துக்கூறுகிறது.இத்தகைய பாதையில் தேசம்நெற்றே முதன்மையாகப் பின்னூட்ட முறைமையையும்,வாசகர்களின் கருத்தை உடனடியாக வெளிப்படுத்தும் உத்தியை மக்களின் நலனினது அடியொற்றி மாற்றுக் கருத்தாடலுக்கு வழி திறந்ததாகவும் கூறுகின்ற அபாண்டமான மிகைப்படுத்தலை, கேள்விக்குள்ளாக்கின்றார் சுவிஸ் மனிதம் ரவி.

 

ரவியினது பின்னூட்ட எதிர்வினையானது மிகவும் பொறுப்புணர்வோடு நம்முன் நியாயம் உரைக்கிறது-உண்மை பேசுகிறது.

 

இலங்கைத்தமிழர்கள் புகலிடம்தேடிப் புலம்பெயர்ந்துவாழும் ஐரோப்பியக்கண்ட நாடுகளில் அவர்கள் முகங்கொடுத்த பிரச்சனைகளில் முக்கியமானவொன்று இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த அதீத அராஜகக் காடைத்தனமாகும்.இது புலம்பெயர்ந்த தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்தும் புலி இயக்கவாத மாயைக்கு அடிபணியவைக்கவெடுத்த முயற்சிகளோ அடி,தடி,வெட்டுக் குத்துக் கொலையெனத் தொடர்ந்தது.இத்தகையவொரு அவலச் சூழலில் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த எமது அரசியல்காரணிகளை மாற்றுக்கருத்தாளர்கள் விவாதித்து,ஈழக்கோசத்தின் பின்னே சதிராடும் இயக்கச் சர்வதிகாரத்தையும்,சிங்கள அரசின் தமிழர்கள்மீதான இனவொடுக்குதலையும் நிறுத்துவதற்கான கருத்துகளையும்,முன்னெடுப்புகளையும் செய்துகொண்டோம்.இதற்காகப் புலம்பெயர்ந்த மக்கள்பட்ட துன்பங் கணக்கிலடங்காதவை.இதை சுவிஸ் இரவி அவர்கள் மிகவும் வருத்தத்தோடு வெளிக்கொணர்கிறார்-இதற்கான விலையாகக் கொடுக்கப்பட்ட உயிர்ப்பலிகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

 

புலிகளினது மிகக்கெடுதியான கொலை அரசியலிலிருந்து விடுபடுவதற்கான மாற்றுக்கருத்தாளர்களின் போராட்டம், 1985 இல் இருந்து ஆரம்பமாகிறதென்பது வரலாற்றுண்மையாகும்.இத்தகைய சூழலைமிக இலகுவாக நாவலன் மறைத்துக்கொண்டு,தேசம் இணையத்தின் இருப்புக்கு உரம்போடுவதற்காகவே முழுவுண்மையையும் திட்டமிட்டுச் சிதைக்கின்றார்.இன்றைக்கும் புலிகளை எதிர்த்துத் துணிகரமாகக் கருத்தாடும் பல தோழர்களைப் புலிகளின் அராஜக அரசியலும்,அதுசார்ந்த வன்முறையும் படாதபாடுபடுத்துகிறது.திட்டமிட்டுப் புலி ஆதரவாளர்களும்,புலி உளவுப்படையும் பற்பல மனோவியல் யுத்தத்தை நடாத்தியபடி மாற்றுக் கருத்தாளர்களைத் "துரோகிகளாக்கி"த் துப்பாக்கிக்கு இரையாக்கியது-இரையாக்கிறது!


தமது ஏகப்பிரதிநித்துவத்துக்கு எதிரான மக்கள் அணித்திரட்சியடைந்து,ஜனநாயகத்தைக்கோரும் தருணத்திலெல்லாம் இத்தகைய கோரிக்கைகளை அடியோடு சாய்ப்பதற்காகப் புலிகள் இப்போது"பொங்கு தமிழ்"எனும் வடிவத்தோடு இனவாத்தைத் தூண்டித் தமது இருப்பை உறுதிப்படுத்த எடுக்கும் முயற்சியின் ஆழத்தைப் பார்க்கும் ஒருவருக்கு அன்றைய புலிப்பாசிசக் கொலைகளை இத்தகைய நிகழ்வின்விருத்தியோடு பொருத்திப்பார்க்கும் நிலை தானாகவே தோன்றும்.

 

ஏகப்பிரதிநிதிகள் புலிகள் எனும் வாத்தையைத் தொடர்ந்து நிலைப்படுத்தப் புலிகள் செய்த-செய்யும் கொலைகள்,ஆட்கடத்தல்,அச்சுறுத்தல்,தாக்குதல்கள் எல்லாம் இன்றுவரையும் தொடர்கதையாகவே இருக்கிறது.இதைக்கடந்தும் மாற்றுக்குரல்கள் ஓலிகின்றதென்றால் அது மக்களின் நலன்சார்ந்து ஆற்றும் அரசியலோடு சம்பந்தப்பட்டு மக்களை நம்பிய முன்னெடுப்பாகவேமட்டும் இருக்கமுடியும்.

 

மக்களைத் தொடர்ந்து அடக்கி,அவர்களின் அழிவைத் தத்தமது இயக்க-கட்சி நலன்களுக்காகப் பயன்படுத்துபவர்கள் என்றைக்கும் தமது உண்மை முகத்தை மக்களிடமிருந்து மறைத்தே வருகிறார்கள்.இதற்காகவே"துரோகி"என்று மிலேச்சத்தனமான முறையில் கணிசமான மக்களைப் போட்டுத் தள்ளுகிறார்கள்.அந்தவுண்மையான முகமானது மிகமிகப் பாசிசத்தனமான அடக்குமுறையென்பதை மாற்றுக் குரல்களே அம்பலப்படுத்தி வந்திருக்கிறது.இதற்கு இன்றுவரை உயிர்கொடுத்தவர்கள்பலர்,உதைப்பட்டவர்கள்-படுபவர்கள் பலர்.

 

இத்தகையவொரு யதார்த்தச் சூழலை முழுமையாகத் தேசத்துக்குத்தாரவார்த்துக் கெளரவிக்கும் அரசியல் மிகவும் கபடத்தனமானது.தேசத்தின் ஊடாகக் காரியமாற்ற முனையும் மக்கள் விரோத தளமொன்று இங்ஙனம் செயற்படுவதை நாவலனின் கட்டுரையிலிருந்து நாம் விபரமாக உள்வாங்க முடியும்.இத்தகைய விபரத்தை ஓரளவேனும் பூர்த்தி செய்கிறது திரு.இரவியின் எதிர்வினையாகும்.

 

படித்துப்பாருங்கள்,பட்ட துன்பங்கள் யாவும் அராஜகத்தைத் தோற்கடிக்கவே என்று புரியும்.

 

இதை மறுத்து தேசம்போன்ற ஊடகங்களை மேல் நிலைக்கு எடுத்துவந்து"இதுதான் மாற்றுக் கருத்துக்கு முன்னோடி" என்பவர்கள்,இலக்கியச் சந்திப்பை ஆரம்பித்தகர்த்தா பரா மாஸ்டர் என்பதைப்போன்றதே.இது, காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த கதைமாதிரித்தான்.

 

இன்றைக்குப் புலம்பெயர்ந்த தமிழ்பேசும் மக்களிடத்தில் மிக அராஜகமாக இனவாதத்தையும் அதுசார்ந்து குறுந்தேசிய வாதத்தையும் விதைத்துப் புலிகள் தமது இயக்க நலனைப் பேணுவதற்கெடுக்கும் முயற்சியானது"பொங்கு தமிழ் மட்டுமல்ல.மாறாக, இன்னும் பல கொலைகளில் முடியப்போகிறது.இதன் ஒரு சுற்று நடைபெற்று இறுதிக்கட்டம் வந்தடையும் நிலையில், அடுத்த சுற்றுக்கு அடியெடுத்துக்கொடுக்கும் அரசியல் சூழ்ச்சியைத் தேசம் இணையத்தினூடாக மக்கள் விரோதிகள் செய்வதற்குத் தேசம் உடந்தையான செயல்களில் ஈடுபடுகிறது.

 

எங்கே மக்கள் கூடுகிறார்களோ அங்கே குண்டு வைக்கும் புலிகளின் அரசியலுக்கு மிகவும் வசதியான தளமாகப் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்குள் முன்தள்ளப்படும் தேசம் இணையம் என்பதே நமது கருத்தாகும்.இதைவிட்டுத் தேசத்தின் அரசியல் மக்களைச் சார்ந்தியவதாக எவராவது கதை புனைவாராகின் அங்கே, வேட்டைக்கான மிருகங்களைத் தேடியலையும் ஒருகூட்டம் முகாமிட்டிருப்பதாகவே நாம் அடித்துக்கூறுவோம்!

 

இதைக் கவனத்திலெடுத்து இரவியின் எதிர்வினையை உங்கள் முன் வைக்கின்றோம்.

சபாலிங்கம் கொலைசெய்யப்பட்ட காலகட்டம் பற்றிய நிலைமையை மறந்து தண்ணிபாய்ச்சுவது ஒரு ஆய்வுமுறையே அல்ல

 

நன்றி,வணக்கம்.

அன்புடன்,

கருணாநந்தன் பரமுவேலன்.
15.06.2008