Language Selection

பி.இரயாகரன் 2001-2003
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

book _6.jpgஇயற்கையில் மனிதன் தனது வாழ்வுக்கான போராட்டத்தை எதிர் கொண்ட போது அவனுக்கு இயற்கையே புதிராக இருந்தது. இயற்கையின் எழுச்சிகள், அழிவுகள் எல்லாம் மனிதனுக்கு அழிவையும், ஆக்கத்தையும் கொடுத்த போது, அதன் மீதான கட்டுப்பாட்டைச் செலுத்தமுடியாத நிலைக்குள் தள்ளப்பட்டான். இது போல், தனது உடல் சார்ந்த மாற்றங்கள் எப்படி? எதனால? ஏற்படுகின்றன என்பதை அறிய முடியாத மனிதனாகப் புதிர்களின் முன் வெறுமையாக நின்றான்.


எல்லா உயிரினங்களையும் போல் மனிதனும் இயற்கையைச் சார்ந்து இருந்த நிலையில் இருந்து மாறி, உழைப்பை இயற்கையின் மீது பயன்படுத்தத் தொடங்கியவுடன், அது சார்ந்து சிந்தனையும் அதன் மேல் உருவாகத் தொடங்கியது. உழைப்பு மூலம் இயற்கையை மனிதன் தனது தேவைக்கு ஏற்ப மாற்றத் தொடங்கியபோது, இயற்கை மற்றும் மனித உடலியல் புதிர்களைப் பற்றிய தேடுதலும் ஆரம்பமாகியது. இந்தக் கேள்விகளை ஒட்டி இயற்கைச் சீற்றங்களின் போதும், அழிவுகளின் போதும் மனித உழைப்பால் எதையும் செய்ய முடியாத போக்கில், இந்த இயற்கை நெருக்கடி மனித அழிவுகளை ஏற்படுத்தியது. இதை மனிதனால் புரிந்து கொள்ள முடியாத நிலையில், அதை மாற்ற முடியாத நிலையில், அதை அன்னியமான சக்தி ஒன்றின் செயலாக எண்ணத் தொடங்கினான். இதனால் இயற்கை சார்ந்து அழிவுகளை ஏற்படுத்தும் ஊடகங்களை நோக்கி அஞ்சத் தொடங்கினான். இது போல் போராடி வெல்ல முடியாத மிருகங்களையும் கண்டு அஞ்சுவதன் மூலமும், மனித ஆற்றலால் முடியாத விசயங்களை நோக்கி கெஞ்சுவதன் மூலமும் அதைத் தடுக்க முயன்றான். இந்தக் கெஞ்சுவதும், அஞ்சுவதும் மனிதன் இயற்கையில் இருந்து வெளிவந்து, செயற்கையில் இயற்கையை மாற்றத் தொடங்கிய மனித வரலாற்றில் நடந்தது. மனித உழைப்புக்கு அன்னியப்பட்டுக் கட்டுப்பட மறுத்த இயற்கையின் மீதும், அது சார்ந்த விசயங்கள் மீதும் இவை நிகழ்ந்தன. பின்னால் அதைத் தொடர்ந்து விளக்குவதும் மனிதப் போக்காகியது.

 

சமுதாயத்தின் உழைப்பைச் சார்ந்த அறிவார்ந்த பிரிவுகள் உழைப்பில் இருந்து விலகிய வேலைப்பிரிவினையுடன், அதாவது மக்கள் கூட்டத்தின் முக்கியமான ஆலோசனை வழங்கிய மற்றும் மருத்துவ ரீதியாக அறிவை பெற்றுக் கொண்டவர்கள், மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட விசயங்களை மற்றொரு சக்தியின் செயலாக வருணிக்கத் தொடங்கினர். பின்னால் மனித உழைப்பில் இருந்து அன்னியப்பட்ட கூட்டம் உழைப்புக்கு முன் தடுக்கமுடியாத அழிவுகள், இயற்கையின் எழுச்சி, இயற்கையின் அழிவையிட்டுக் கற்பனையான காரணத்தை முன்வைத்தது. இதன் மூலம் முந்திய போக்கான விளக்கங்கள் ,அஞ்சுவது மற்றும் கெஞ்சுவதை விட்டு அதை நோக்கி வழிபடுவது என்ற நிலைக்கு மனிதன் மாறினான். இந்த வழிபாட்டை ஒழுங்குபடுத்த ஒரு புரோகிதர் கூட்டம் உழைப்பில் இருந்து அன்னியப்பட்ட பிரிவில் இருந்து உருவானது. மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட, மனிதக் கற்பனையாக உருவான சக்திக்கு, தனது உணவில் ஒரு பகுதியைப் படைப்பதன் மூலம் இயற்கையின் எழுச்சியையும், அழிவையும் தணிக்க சடங்குகள் வளர்ச்சி பெற்றன.
இவை இயற்கை மீது வளர்ச்சி பெற, இயற்கை பற்றி கற்பனைப் புனைவுகள் இயற்கையின் இயங்கியல் அறியாமைக்குள் வளர்ச்சி பெறுவது திரிபடைந்தது. இந்த இயற்கையின் ஆற்றலை வைத்து உருவான உழைப்பில் இருந்து, அன்னியமான ஒரு புல்லுருவிக் கூட்டத்தின் வாழ்நிலைக்கும், நலனுக்கும, சுரண்டலுக்கும் ஏற்ப, இயற்கை பற்றிய புனைவுகள் சடங்குகளாக உருவாக்கப்பட்டன.


இதுபோல், இயற்கையின் பரிணாமத் தேர்வான மனித உடல்களின் செயல்பாடுகள், நோய்கள் (இங்கு மனிதன் அல்லாத மற்ற பிரிவுகளின் பரிணாமம்) மனிதன் முன் புதிராகவே, இயற்கையின் இயங்கியல் மனித உழைப்புக்கும் அது சார்ந்த அறிவுக்கும் முன்னால் நீண்டு கிடந்தது. இந்தப் புதிர்கள் மனிதனின் வாழ்வு மீதான அச்சத்துடன் கூடிய மாற்றங்களையும், புரோகிதர் கூட்டம் தமது நலன்சார்ந்த விளக்கங்களுடன் கூடிய அறிவு, மற்றும் புல்லுருவியாக வாழத் தொடங்கிய வாழ்நிலையுடனான விளக்கங்கள் சடங்குகளைச் செய்ய வழிகாட்டியது.


மனிதக் குழந்தைகளைப் பெண் உருவாக்கிய போக்கில் ஆண் செயலற்றவனாக இருந்தான். எப்படி குழந்தை உருவாகின்றது என்பது நீண்ட வரலாற்றில் புதிராகவே இருந்தது.


கி.பி. 1827-ஆம் ஆண்டு வரை பெண்ணுக்குள் கருமுட்டை உருவாகின்றது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. கி.பி. 1875-ஆம் ஆண்டு வரை கருவுயிர்க்கும் முறை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் மனிதன் இவைகளையொட்டித் தனது கற்பனை மற்றும் வாழ்நிலைக்கு ஏற்ப தொடர்பு கொண்ட விசயங்களை விளக்கவும், அதையொட்டிச் சடங்குகளை உருவாக்கவும் பழகிக் கொண்டான். சடங்குகள் புரியாத புதிர்களின் மீதான அறிவியல் தேடுதல்களை நிகழ்த்துவதை மறுத்தும், அதைச் செய்வதைக் குற்றமாக்கியும், மீறிச் செய்தால் தண்டிக்கும் முறைகளையும் கூட இச்சடங்குகள், பண்பாடுகள், கலாச்சாரங்கள் அமுல் செய்தன. இதைப் பயன்படுத்தி புரோகிதர் கூட்டம் தனது சொந்தப் புல்லுருவித்தனத்தில் இருந்து தமது நலன் சார்ந்து, தவிர்க்கமுடியாத ஆதிக்கப் பண்பாட்டுக் கலாச்சாரத்தை மக்கள் மேல் திணித்தனர்.


பெண்ணின் மாதவிடாய் என்பதும் மனிதனுக்குப் புதிராகவே இருந்தது. திடீர் என இரத்தம் பெண் உறுப்பில் இருந்து வருவதும், தொடர்ந்து மாதமொருமுறை வெளிவரும் இரத்தமும், அது திடீர் என நின்று போவதும், பின் மீள வருவதும் புதிராகவே இருந்தது. குழந்தை தரிக்கும் போது பெண்ணின் மாதவிடாய் நின்று போவது மேலும் புதிராக இருந்தது. அத்துடன் வயது போன பெண்களின் மாதவிடாய் நிற்பது எல்லாம் மனிதனுக்குப் புதிராக நீடித்தன.


இந்தப் போக்கில்தான் தமது வாழ்வு அனுபவங்களை ஒட்டி இவற்றுக்குப் பற்பல விளக்கங்களைப் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபட்டு மனிதன் கொடுத்தான்.


''பல சமுதாயங்களில், மாதவிடாயின் ஒரு பகுதி; குருதியானது கருவறையில் தங்கி குழந்தை உருவாகின்றது" என்று நம்பினர். அரிஸ்டாட்டில் கருப்பையில் தங்கிய குருதிக்கு ஓர் ~அசைவுக்கான தூண்டுதலை| ஆண்களின் விந்து வழங்குகிறது என விளக்கினர். இதை அவர் பாலை உறைய வைக்கும் ~உறைமோரோடு| ஒப்பிட்டுப் பேசினார். ஹீப்ரூ மொழியில் இப்படி விளக்கம் உண்டு. அதில், கருப்பையில் நிறைந்துள்ள குருதியில்;, ஒரு துளி வெள்ளை விழுந்தவுடன் குழந்தை உருவாகின்றது. இதைப் பாலில் இருந்து தயிர் உருவாவதோடு ஒப்பிட்டு விளக்கியுள்ளது. மாதவிடாய்க் குருதி, ஆண் விந்தை அடைகாப்பதன் மூலம், ஆண் விந்தில் இருந்து குழந்தை உருவாகின்றது என்ற இன்னொரு விளக்கமும் உண்டு. சில பழங்குடி சமூகத்தினர் கருவுயிர்த்தலுக்கு ஆண் தேவையில்லை. ஏதோ ஓர் ஆவி பெண்ணின் கருப்பைக்குள் புகுந்து குழந்தையாகப் பிறக்கிறது என நம்பினர். சிலர், கருவுயிர்த்தலுக்கு ஆண் துணைக் கருவிதான். கடவுள் செயல் கட்டாயம் உண்டு என நம்பினர். மெக்ஸிக்கோவிலுள்ள பியூப்னேளா இந்தியப் பழங்குடியினர் கோடைக் காலக் கனத்த மழையினால் ~கன்னிகள்| கருவுயிர்ப்பதாக நம்பினர். இதை விட புராணங்களில், பற்பல பிற சக்திகள் பற்றிய புனைவுகள் உண்டு"14


300 ஆண்டுகளுக்கு முன், ''உயிர் தானாகவே தோன்றுகிறது என்பதில் ஆதி காலத்தவர் நம்பிக்கை வைத்திருந்தனர். ஈக்கள் அழுகிய இறைச்சியினாலும், சுண்டெலிகள் அழுக்குத் துணிகளாலும் உண்டாகின்றது என நம்பினான். மிகச் சிறிய மனிதர்களைச் செய்வதற்கான வழி தங்களுக்குத் தெரியுமென்று இரசவாதிகள் கூறினார்கள். பைபிளில், தேனீக்கள் இறந்த சிங்கத்தின் குடலில் இருந்து பிறக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது..... அரிஸ்டாடில் சுயப் பிறப்பில் நம்பிக்கை வைத்திருந்தார்."15


கிரேக்கத்தின் பழமையான புனைக் கதைகளில், ''கருவுறுவதற்கு ஆண் தேவையில்லையென்றும் காற்று மட்டும் போதும் என்றும், அக்கால மக்கள் நம்பினர்."16 பகவத் கீதையில் உயிர்த்தல் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம்.


''அன்னால் பவந்தி பூதானி பாஜ்ஜன் யாதன்ன ஸம்பவ
யஜ்ஞால் பவந்தி பர்ஜ்ஜன்யோயஜ்ஞ - கர்மஸமுத்பவ
கர்மப்ரஹ்மோத்பவம் வித்திப்ரஹ்மா கஷரஸமுத்பவம்
தஸ்மால் ஸர்வகதம் ப்ரஹம் நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்" 17


இதன் அர்த்தம் ''அன்னத்திலிருந்து உயிர்களும், மழையிலிருந்து அன்னமும், யாகத்திலிருந்து மழையும், கர்மத்திலிருந்து யாகமும், வேதத்திலிருந்து கர்மமும்.."17 என்று இந்துப் பார்ப்பனியம் உயிர் உயிர்த்தலைப் பற்றி அறிவற்ற விளக்கத்தைப் புனைந்தது. பார்ப்பனரின் ரிக் வேதத்தில,; தியவுஸ் என்ற கடவுள் பற்றிய குறிப்பில், ''தியுவுஸின் மனைவியாகப் பிருதிவி சித்தரிக்கப்பட்டது. தந்தையான தியவுஸ் மழையாகப் பிருதிவியில் பொழியும் பொழுது, பூமி கருவுற்றுப் பிரசவிக்கும் என்பதும்... செடிகளும், கொடிகளும், மரங்களும் பூமியிலிருந்தல்லவா முளைத்தெழுகின்றன"7 என்ற உவமை விளக்கத்தில், ஆணின் துணையின்றி கருவுறுவது சாத்தியமில்லை என்ற காரணத்தை அனுபவ ரீதியாகப் புரிந்து கொள்கின்றனர். இறுக்கமான நாடோடி ஆணாதிக்கச் சமூகத்தில் இந்த அனுபவவாதம் தெளிவாகத் தெரிந்து கொள்ளப்படுகின்றது. இதில் இருந்தே தந்தையின் பாத்திரம் வெளிவருகின்றது. ஆனால், தந்தையின் விந்து பற்றியோ, எப்படி கரு உருவாகின்றது என்பது பற்றியோ தெரிந்திருக்கவில்லை. ''ரிக் வேதத்தில், மற்றோரிடத்தில், சமுத்திரத்திலுள்ள தண்ணீர் கர்ப்பமடைந்தாகக் கூறப்படுகின்றது. இந்தக் கர்ப்பத்திலிருந்தே உயிர்களும்,உலகின் தத்துவமும், உலகின் முதல் முதலாகப் பிறந்தவனும், பூமியைப் படைத்தவனும், உருவாக்கியவனுமான ~விசுவ கர்மா| தோன்றியதாகவும்"18 புனையப்பட்டுள்ளது.


''கர்ப்பத்திலிருக்கின்ற குழந்தையை அழிக்கும் இராட்சதன் பச்சை மாமிசத்தை உண்பவன் என்றும், அந்த இராட்சதனுக்கு இரண்டு முகங்களும், நான்கு கண்களும், ஐந்து பாதங்களும் உண்டென்றும், முகம் கீழ் நோக்கி இருக்குமென்றும்"18 அதர்வண வேதத்தில் கூறப்படுகின்றது.


''பார்ப்பனர் கடவுளின் வாயிலிருந்து பிறந்தனர். சத்திரியர் கைகளிலிருந்து வந்தனர். தொடைகளிலிருந்து வைசியரும், பாதங்களிலிருந்து சூத்திரரும் பிறந்தனர்."18


இப்படியான விளக்கங்கள் எல்லாம் மனிதன், கற்பனை, மற்றும் இயற்கையின் வௌ;வேறு நிகழ்ச்சிகள் செயல்களுடன் ஒப்பிட்டு வருணித்தனர். இயற்கையில் உணவுக்காகப் போராடிய மனிதன் இரத்தத்தை இழக்கும் போது மரணம் அடைவது கண்டு பயந்தான். அதையொட்டி, மாதவிடாயைப் பார்க்க, விளக்க முற்பட்டான். இதனால், பெண்ணின் உடலில் இருந்து வெளியேறும் இரத்தத்தை இட்டும், குழந்தை பற்றிய தொடர்புகளும் இயற்கை மீதான அறியாமையில் இருந்து, பொதுவாக இரத்தம் மீதான அச்சத்தில் இருந்து சிந்தித்தான். இதனால் இந்த முதல் நிகழ்வை அச்சத்தின் மீதான ஒரு சடங்காக மனிதன் மாற்றினான். இதை அச்சத்துடன் கூடிய புனிதத்திற்குரிய நிகழ்வாகப் பரிணாமித்தது. சாமத்தியச் சடங்கானது ஆணாதிக்கத்தின் வளர்ச்சியுடன், பெண் தாழ்ந்த நிலைக்குத் தள்ளியது. இது பெண்ணின்; மீதான அடக்குமுறையை நிறுவுவதற்கான ஊடகமாக மாதவிடாய் வெளியேற்றம் ~தீட்டாக| மாற்றம் கண்டது.


சடங்கின் போக்கில் அப்பெண் மீதான ஆணாதிக்கக் கட்டுப்பாடுகள், ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை மீதானதாக, அச்சமூக அமைப்புக்கு ஏற்ப உருவானது.


மனிதன,; விலங்கான குரங்கு நிலையில் இருந்த போது நான்கு கால்கள் கொண்டு நடமாடினான். பின், குரங்கு மனிதன்; இயற்கை மீதான உழைப்பை, முன் இரு கால்களால்(இரு கைகளால்) படிப்படியாகச் செய்யத் தொடங்கினான்;. பின்னர், மனிதன் இந்த உழைப்பைச் செய்ய சிறு பொருட்களான கல், தடி, எலும்பு... போன்றவற்றைக் கண்டுபிடித்தான். இந்த உழைப்பால் சேகரித்த உணவை இடம் மாற்ற, இரு கைகளையும் பயன்படுத்திய போது தவழ்ந்து செல்வது இலகுவானதாக இருந்ததில்லை. இதனால் சேகரித்த உணவை இடம்மாற்ற, சேகரிப்புக் கருவியைத் தொடர்ந்து கண்டுபிடித்தான் மனிதன். சேகரிப்பு கருவியையும், சேகரித்த உணவையும் இடம் மாற்ற மனிதன் நிமிர்ந்து நிற்பது அவசியமாகியது. இது நீண்ட பரிணாம வளர்ச்சி ஊடாகவே வளர்ச்சியுற்றது.


இந்த மாற்றம் பாலியல் உறுப்புகளில் தீவிர மாற்றத்தைக் கொண்டுவந்தது. நிமிர்ந்த மனிதனுக்கும், தவழ்ந்த மனிதக் குரங்குக்கும் இடையில் பாலியல் உறுப்பில் பரிணாமத்தின் மாற்றம் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. தொடக்கத்தில், மனிதக் குரங்கில் பெண்ணின் பாலியல் உறுப்பு வெளிப்படையாகத் தெரிந்ததுடன், மார்பு போன்ற பால் சுரப்பிகள் மறைவுத்தன்மையைக் கொண்டு இருந்தது. ஆணின் பாலியல் உறுப்பு மறைவுத் தன்மையில் இருந்தது.


மனிதக் குரங்கில் இருந்து, ~நிமிர்ந்த மனிதனாக| மாறிய மனிதனில் இவை எதிரிடையாக மாறியது. பெண்ணின் பாலியல் உறுப்பு மறைவாக மாற, ஆணின் பாலியல் உறுப்பு பகிரங்கமாக வெளிப்பட்டது. அத்துடன் பெண்ணின் பால் சுரப்பியும் பகிரங்கமாக மாற்றம் கண்டது. இதனால் பெண்ணின் பால்சுரப்பி மற்றும் ஆணின் பாலியல் உறுப்பு முக்கியத்துவமான உறுப்பாகியது. இது மனித உளவியலில் தீவிரமான மாற்றம் கண்டது. பெண்ணின் இரகசியமான உறுப்பு மீதான ஆணாதிக்க உளவியல், ஆண் தனது உறுப்பை இரகசியமாக மாற்றவும் செய்தது. பெண்ணின் பால்சுரப்பி மற்றும் பெண் உறுப்பைப் பகிரங்கமாகக் கொண்டுவரும் உளவியல் பண்பானது ஆணாதிக்கத்துடன் இன்று வரை நீடிப்பதைக் காணமுடிகின்றது.


உடலியல் நீண்ட பரிணாம வளர்ச்சியூடாக வளர்ச்சி கண்டது. இக்காலத்தில் வரைமுறையற்ற புணர்ச்சியைத் தமக்கிடையில் கொண்டிருந்த வரை, ஆண் பெண்ணுக்கிடையில் இந்த உளவியல் கண்ணோட்டம் ஏற்பட்டு விடவில்லை. உழைப்பு தனிச்சொத்துரிமையின் ஆதிக்கத்துக்குள் மாறிய போது, பெண் சமூகச் சொத்துரிமையை இழந்தாள். இதனூடாகப் பெண் ஆணின் சொத்துரிமை ஆக்கப்பட்டாள். வரைமுறையற்ற புணர்ச்சி, வேறுபட்ட கட்டத்தின் ஊடாக ஓர் ஆணைத் திருப்தி செய்யும் புதிய பாலியல் வடிவத்தைத் தேர்ந்து கொண்டது. அதாவது வரைமுறையற்ற புணர்ச்சியின் மீதான மறுப்பு, ஒருதார மணத்தால் ஈடுசெய்யப்பட்டது. பெண்ணின் சொத்துரிமை பறிப்பால் கட்டாயமான ஒருதாரமணத்தைப் பெண்ணுக்கு நிபந்தனையாக்கி, பெண்ணை ஆணாதிக்கத்துக்கு உள்ளாக்கியது. ஆனால் ஆண் இதை மீறுவது பலவழிகளில் சாத்தியமானது. இதன் ஒரு பாகமாகவே பெண்ணின் உறுப்பு மீதான நிர்வாணப்படுத்தல் உளவியலாகின்றது. பலதாரமணத்தின் பிரதிநிதியான ஆண் பழைய பலதார மணத்தின் வெளிப்பாடாகப் பெண் உறுப்பு மீதான பகிரங்கத்தைக் கோரினான். மேலும் பெண்ணின் பால் சுரப்பி முக்கிய பாலியல் உறுப்பாக ஆணாதிக்க உளவியலில் இடம் பெற்றது. இதை இன்றைய சமூக வெளிப்பாடுகளில் வெளிப்படுவதுடன், ஆணாதிக்கத்தைத் திருப்தி செய்ய பெண் உந்தித் தள்ளப்படுகின்றாள். பெண்ணின் அழகியல் இதற்குள் சீரழிந்துள்ள இன்றைய நிலையில், ஆணாதிக்க உளவியல் இதை ஊக்குவிக்கின்றது.


இந்த உறுப்புகளில் ஏற்பட்ட பரிணாம மாற்றம் மாதவிடாய் தோன்றுவதற்கான முக்கியமான ஒரு மாற்றத்தைக் கண்டது. மனிதக் குரங்கிலும், (இங்கு இவை தீவிரமான மாற்றத்தைக் கொண்ட காலம்), அதற்கு முந்திய குரங்கிலும் பெண் உறுப்பில் இருந்து வெளிப்படும் ஒரு பாலியல் தேவையைத் தூண்டும் திரவம் மற்றும் தீவிரப் பாலியல் நாட்டம் ஆகியவை ஆண் குரங்கைத் தூண்டி கலவியின் ஊடாக இனவிருத்தி செய்தன. இது வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் குறிப்பிட்ட காலத்தில், மட்டும் கலவியை இனவிருத்தி சார்ந்து இன்ப நாட்டத்தைத் தூண்டியது.


ஆனால் நிமிர்ந்த மனிதனில் பெண் உறுப்பு மறைந்த போது, பாலியல் உறுப்பில் மாற்றங்கள் உள்ளேயே ஏற்பட்டது. இதனால் பெண்ணுக்குக் குறித்த காலத்தில் உந்தித் தள்ளும் இனவிருத்தி சார்ந்த இன்பநாட்டத்தை, ஆண் இலகுவில் புரிந்து கொள்ளமுடியாத வகையில் பெண்ணால் இயற்கையின் வெளிப்படுத்தலும் மாறுபடத் தொடங்கியது.


பெண்ணின் இயற்கை சார்ந்த பரிணாம மாற்றம் சிந்தனைத்துறையில் தூண்டுதலுக்குள்ளாகி, உடலியல் ரீதியில் மாற்றத்தை இசைவாக்கத் தூண்டியது. இயற்கை இதில் தீவிர மாற்றத்தை மனித உழைப்பு சார்ந்து மாற்றத் தொடங்கியது. மற்ற எல்லா விலங்கினங்கள் போல் அல்லாது, பெண்ணுக்கு மாறிய மனிதனின் உழைக்கும் ஆற்றல்;, இதனால் ஏற்பட்ட உடலியல் மாற்றம் மனிதனுக்கு இனவிருத்தி சார்ந்த மாதவிடாய் தோற்றம் கண்டது. இதனால் பெண்ணின் பாலியல் நாட்டத்தைத் தூண்டுவது இனவிருத்தியின் அடிப்படையாக இருந்தது. இதனால் பெண் பாலியல் இன்பத்தை எல்லா நேரமும் அடையக் கூடிய பரிணாமத்தை மற்ற விலங்கில் இருந்து சிறப்பான வகையில் வேறுபாடு அடைந்தாள். இந்த வளர்ச்சியை ஒட்டி ஆணின் பாலியல் இன்பமும் எல்லா நேரமும் ஈடுபடக் கூடிய வகையில் வளர்ச்சி பெற்றது. இது மனித இனத்தின் சில குறிப்பான வளர்ச்சியாக மிருகங்களில் இருந்து வேறுபட்டு உள்ளது.


பருவநிலைக்குக் கருக்கட்டும் விலங்குகளில் இருந்து மாறுபட்ட வகையில் பருவ எல்லை தாண்டி இனவிருத்தி செய்யும் நிலைக்கு மனிதன் வந்து அடைந்தான். பெண்ணின் கருக்கட்டும் தன்மையை உருவாக்கும் வகையில் கருக்கட்டும் முட்டையின் உருவாக்கத்தைப் புதுப்பிக்கும் போக்கில் பழைய கரு முட்டைகளை வெளியேற்றுவதை இயற்கை தேர்ந்த போது, அது மாதவிடாயாக மாற்றம் கண்டது.


ஒரு பெண் 3.5 இலட்சம் கரு முட்டைகள் உடன் பிறக்கின்றாள். 12 முதல் 13 வயது வரை கரு முட்டை முதிராமல் இருந்து முதிரத் தொடங்கியவுடன் மாதம் ஒன்று (அண்ணளவாக) வீதம் முட்டை முதிர்ந்து கருப்பைக்குள் வருகின்றது. இப்படி ஒரு பெண்ணின் ஆயுளில் 375 கரு முட்டை மட்டுமே முதிர்ந்து கருப்பைக்குள் மாதம் ஒன்று என்ற விகிதத்தில் வருகின்றது. இதன் ஆயுள் 24 மணி நேரம் மட்டுமே. இதே நேரம் ஆணின் விந்து ஒரே நேரத்தில் 30 கோடி உயிரணுக்கள் உடன் வெளிவருகின்றது. இதில் ஒன்று மட்டுமே பெண்ணின் கரு முட்டையுடன் இணைந்து உயிர் உருவாகின்றது. மனிதன் நிமிர்ந்த போது பெண்ணின் பாலியல் அங்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், பாலியல் மீது புதிய ஆர்வத்தைத் தூண்டுவதற்கான இயற்கையின் தேர்வாக, இறந்த கரு முட்டையினை வெளியேற்றும் இரத்தக் கழிவே மாதவிடாயாகும். மனித உழைப்பின் தேர்வால் ஏற்பட்ட உடலியல் மாற்றமே மாதவிடாய் தோன்றுவதற்கான காரணமாகவும், பெண்ணுக்குத் தவிர்க்க முடியாத உடலியல் கூறாகவும் ஆகியது.


கருத்தரித்தலுக்கான கரு முட்டை முதிரத் தொடங்கி, அது கருவாக (குழந்தையாக) உருவாக முடியாத கருக்கட்டாத கரு முட்டையும், கருப்பைச் சுவரில் இருந்து அதை அகற்ற வெளிவரும் இரத்தமும் சேர்ந்த நிலையில் வெளியேறும் இறந்த கரு முட்டைகளே மாதவிடாயாகும். இந்த வகையில் முதன்முதலில் வெளியேறும் கரு முட்டைகள் கருக்கட்டும் முதிர்ந்த நிலையில் இருந்து வெளிவருவதில்லை. முதல் மாதவிடாய் ஏற்பட்டு இரண்டு வருடத்திற்குப் பின்பே பெண்ணின் கரு முட்டை கருக்கட்டும் நிலைக்கு முதிர்கின்றது.


பெண்ணும் சரி, ஆணும் சரி உடலியல் ரீதியான பாலியல் புணர்ச்சிக்கான இயற்கையின் உந்துதலை ஒட்டி, எல்லா ஆண் - பெண்ணுக்கும் மூளையின் தூண்டுதலால் ஏற்படும் ஹார்மோன்களின் சுரப்பால் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றம் வெளிப்புறத்தில் தெரியக் கூடியதாக ஆண் - பெண் இருபாலினருக்கும் பொதுவாக வெளி உடலில் நிகழ்கின்றது. இந்த மாற்றம் ஒரே நாளில் நடப்பதில்லை. அது மனித வளர்ச்சியுடன் படிப்படியாக நிகழ்வதுடன், இவை காலத்துடன் தொடர்புடைய வயதுடன் திடீரென ஒருசில (உதாரணமாக மாதவிடாய்) மாற்றங்கள் வெளிப்படுகின்றது. ஆனால் மாற்றம் தொடர்ச்சியாகப் பிறந்தது முதல் நிகழ்வதுடன், வயதுடன் தொடர்புடைய வகையில் தீவிர மாற்றத்தையும் உடல் சந்திக்கின்றது. இந்த மாற்றம் உடலின் உள் நிகழ்வதுடன் இது வெளிப்புறத்துக்கு வயது மாற்றத்துடன் தெரியத் தொடங்குகின்றது. இவை வெளிப்புறத்தில் மாற்றமாகத் தெரியும். அதே நேரம் உடலின் உள் அங்கத்திலும் இவை நடக்கின்றது. இதன் செயல்பாடுகளில் ஒன்றாகப் பெண்ணுக்கு மாதவிடாய் நிகழ்கின்றது.


மாதவிடாய் என்பது தனித்த ஒரு பெண்ணின் உடல் சார்ந்த செயல்பாடே ஒழிய சமூகம் சார்ந்த செயல் அல்ல. ஆனால் சமூகம் அதைச் சமூகம் சார்ந்த செயல்பாடாகக் கருதியது. இது வரலாற்று இயங்கியலின் அறியாமையுடன் கருத்து சார்ந்து உருவாக்கிய புனைவுகளின் விளைவு. இதன் மீதான அறிவியல் விளக்கத்தின் பின்பும் இது தொடர்வது அறிவீனத்தில் இருந்து வளர்ச்சி பெற்ற தனிச் சொத்துரிமையின் வளர்ச்சியுடன் கூடிய ஆணாதிக்கப் பண்பாடாக உள்ளது. இலங்கையில் ''70 சதவீதமான"19 பருவமடைந்த பெண் குழந்தைகளுக்கும், அதன் பெற்றோர்களுக்கும் இந்த மாதவிடாயை ஒட்டிய விளக்கம் அறிவியல் பூர்வமாகத் தெரியாது.


பெண் குழந்தைக்கு ஏற்படும் முதல் மாதவிடாயை ஒட்டி குழந்தைக்கு முன்கூட்டியோ, பின்னாலோ விளக்குவதற்குப் பெற்றோரிடம் அறிவியல் பூர்வமாக எந்த விளக்கமும் இருப்பதில்லை. பாரம்பரியக் கலாச்சாரப் பண்பாடான ஆணாதிக்க வெளிப்பாடுகளின் தொடர்ச்சியில் பெண்ணின் கற்பு பற்றிய விளக்கமானது திருமணத்துக்கு, அதாவது பெண் குழந்தையைப் பெறத் தயாராகி விட்டாள் என்ற விளக்கத்தையே பெற்றோரும், சமூகமும் அடையாளம் காட்டுகின்றனர். இதில் இருந்து ஆணாதிக்க ஒழுக்கத்தை வன்முறையில் திணிக்கத் தொடங்குகின்றனர். பெண் குழந்தை, இரத்தத்தையிட்டு உளவியல் ரீதியாக அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடையும் அதே நேரம், பின்னால் சமூகமும், பெற்றோரும் பெண் மீது திணிக்கும் கற்பு பற்றிய ஒருதலைபட்சமான கட்டுப்பாடும், மூடத்தனங்கள் மீதும் பயந்து வாழக் கோரும் உளவியல் நிர்ப்பந்தத்தைச் சந்திக்கின்றாள்.


மாதவிடாய்க்கான காரணங்கள், விளக்கங்கள், காரணக் காரியத் தொடர்புகள் பற்றி அறிவியலுக்குப் புறம்பாக விளக்கிய இந்து மதத்தின் தொடர்ச்சிகள் பல இன்றும் தொடர்வதால் அதைப் பார்ப்போம். இந்துக்களான பார்ப்பனர்களின் கிருஷ்ண யஜீர் வேதத்தில், இந்திரன் தனது பருவத்தை, பெண்களுடன் பகிர்ந்து கொள்ளக் கோரிய போது, 'என்னுடைய பிரம்மஹத்தி பாவத்தில் மூன்றிலொரு பங்கை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று இந்திரன் பெண்களுடைய சபையில் சென்று சொன்னான். பெண்களோ, நாங்கள் ஒரு வரம் கேட்கின்றோம். ருது சம்பந்தமான வீரியத்தினால் குழந்தை கிடைக்க வேண்டும். கர்ப்பத்திற்குக் கேடு வராத வகையில் ஆணின் தாம்பத்திய உறவு கிடைக்க வேண்டும் என்றனர். அதனால் பெண்களுக்கு ருது சம்பந்தமான வீரியத்தால் குழந்தை கிடைத்தது (கருவுற்றனர்). கருவுற்றபின் பிரசவம் வரை அவர்களுடைய கர்ப்பத்திற்குக் கேடு வராத வண்ணம் ஆணின் தாம்பத்திய உறவு கிடைத்தது. இந்திரனுடைய பிரம்மஹத்தி தோஷத்தின் மூன்றிலொரு பாகத்தை ஏற்பதற்காகப் பெண்கள் இந்த வரத்தை வேண்டினர். பிரம்மஹத்தியின் ஒரு பாகத்தை ஏற்ற பெண் பூப்படைந்தாள். அதனால்தான் மாதவிடாய் ஆன பெண்களுடன் பேசக் கூடாது. சேர்ந்து அமரக்கூடாது. அவள் தரும் உணவை உண்ணக்கூடாது. மாதவிடாய் ஆன பெண் பிரம்மஹத்தி வடிவை அணிந்து கொண்டிருப்பவள் என்று சொல்லப்பட்டது. எண்ணெய் முதலியவையும் அன்னத்திற்கு ஒப்பானது. அதனால் எண்ணெய் முதலியவற்றையும் மாதவிடாய் ஆன பெண்ணிடமிருந்து ஏற்றுக் கொள்ளக்கூடாது." மாதவிடாயைப் பாவத்தின் தொடர்ச்சியாக ஆணிடம் இருந்து பெண் ஏற்று வந்ததாக விளக்கம் சொல்லிவிடுகின்றனர். கர்ப்பமான பெண்ணுடனான ஆணின் உறவு பாதுகாப்பை வரத்தின் மூலம் பெற்றதாகவும், பாவத்தை ஏற்றதால் மாதவிடாய் ஏற்பட்டதாகவும் கூறி அப்பெண் ஒதுக்கப்படுகின்றாள். கேவலப்படுத்தப்படுகின்றாள்.


இந்த மாதவிடாய் விளக்கத்தை மீறி நடக்கும் பெண்ணின் குழந்தைகளுக்கான சாபத்தையும் இந்து மதம் வழங்குகின்றது. மனித அவலங்களை இப்படி விளக்கும் இந்துமதத்தின் நுனிக்கொம்பைப் பிடித்தே, இன்றைய சமுதாயத்தின் அவலங்களைப் பலவிதமாக விளக்குகின்றனர். அந்த நுனிக்கொம்பைப் பார்ப்போம்.


''மாதவிடாய் ஆன பெண்ணில் பிறப்பவன், இல்லாமையில் உழல்பவனாக இருப்பான்.
காட்டில் மாதவிடாய் ஆன பெண்ணில் பிறப்பவன் திருடனாவான்.


நாணத்தால் பாராமுகமாய் ஆன பெண்ணில் பிறப்பவன் சபையில் பேச திறமையற்றவனாவான்.


மாதவிடாயாக இருக்கும்போது குளிப்பவளின் மகன் மரணமடைய விரும்புவான்.
மாதவிடாயின் போது எண்ணெய் தேய்த்துக் குளிப்பவளின் மகன் தோல் வியாதிக்கு உள்ளவனாவான்.


மாதவிடாய் வேளையில் ஒவியம் முதலியவை வரைபவளின் மகன் வழுக்கைத் தலையனாகவும், துர்மரணத்தை அடைபவனாகவும் இருப்பான்.


மாதவிடாயின் போது பல் தேய்ப்பவளின் மகன், பலங்குன்றிய பற்களைப் பெறுவான்.


மாதவிடாய் சமயத்தில் கயிறு திரிப்பவளின் மகன் தூக்குப் போட்டு இறக்க விரும்புவான்.
மாதவிடாய் வேளையில் இலையில் தண்ணீர்விட்டு குடிப்பவளுடைய மகன் பைத்தியக்காரன் ஆவான்.


மாதவிடாயின் போது உணவைப் பக்குவப்படுத்தும் பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பவளின் மகன் வாமனன் (குள்ளன்) ஆவான் என்று குழந்தைகளின் மீது சாபங்களை அள்ளி வீசுகின்றது.


மேலும் மாதவிடாய் ஆன பெண் மூன்று நாட்கள் விரதம் இருக்க வேண்டும், இரண்டு கைகளையும் சேர்த்து தண்ணீர் மொண்டு குடிக்க வேண்டும் அல்லது உணவைப் பக்குவப்படுத்த பயன்படுத்தாத பாத்திரத்தில் தண்ணீரைக் குடிக்க வேண்டும் இவ்வாறு விரதம் இருப்பது பிறக்கப் போகின்ற வாரிசுகளுடைய பாதுகாப்புக்காகத்தான்"7 என்று விளக்கிச் செல்லும் ஆணாதிக்கப் பண்பாடுகள் பெண்ணை அடிமைப்படுத்தி, சிறுமைப்படுத்தியது. அன்றைய மாதவிடாய் விளக்கங்கள் காலம் கடந்த மாற்றத்தில் தன்னையும் மாற்றிக் கொண்ட அதே நேரம், பழைய தொடர்ச்சியின் உள்ளடக்கத்தை அடிப்படையாகத் தனக்குள் கொள்கின்றது. அறிவியலுக்குப் புறம்பாக மனிதனின் விளைவுகளை விளக்கிச் செல்ல, அதை இன்றைய அறிவுக்குப் புறம்பாகக் கடைப்பிடித்து விளக்க முற்படும் சமுதாயத்தின் பின்னால், ஆணாதிக்க அமைப்பு உறுதியாக இருப்பது கண்கூடு. இவைகளின் இன்றைய விளைவுகளைக் கீழே பார்ப்போம்.


சங்கக் காலத்தின் இறுதியில் முதல் மாதவிடாய் மற்றும் குழந்தை பிறப்புக்குப் பின் 30-40 நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பது நடந்துள்ளது. இது ~புனிறு|9 என்று அழைக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தை தனது முதல் மாதவிடாயின் போது, சாமத்தியச் சடங்கில் பெற்றோர்கள் அறியாமை மற்றும் ஆணாதிக்கப் பண்பாட்டுக் கலாச்சாரத்தின் போக்கிலும், நுகர்வு மற்றும் விளம்பரக் கண்ணோட்டத்திலும் செய்வதை ஆராய்வோம்.


1. சிறுமியை வீட்டில் தனி அறையில் தனிமையில் விடுதல். ஆணின் கண்படாத வகையில் தனிக்கொட்டில் (தனிக்கட்டில்) முதல் பலவிதத்தில் தனிமைப்படுத்துதல்.


2. குளிக்கும் வரை ஒரு சிறுமியைத் துணைக்கு விடுதல்.


3. குளிக்கும் வரை தேங்காய்ப்பால் கலவாத உணவு மற்றும் மீன், இறைச்சி, முட்டை கொடுப்பதைத் தடுத்தல்.


4. மாதவிடாய் வந்த நேரத்தைக் குறித்து பலன் கேட்டல். சுபநேரமும் குறித்தல்.


5. சிறுமியின் அருகில் இரும்பு ஆயுதம் வைத்தல்.


6. சிறுமி மலசலகூடம் செல்லும் போது அவ்விரும்பு ஆயுதத்தைப் பேய் பிசாசிடம இருந்து தப்புவதற்கு என்று கூறிக் கொண்டு செல்லல்.


7. சுபநேரத்தில் வண்ணாரப் பெண்ணைக் (சாதிக் கடமையாகக் கூட இது உள்ளது.) கொண்டு குளிப்பாட்டுதல். அப்பெண் அணிந்திருந்த பொருட்களை அப்பெண்ணுக்குக் கொடுத்தல்.


8. குளிப்பாட்டும் நாளில் பலகாரம் மற்றும் விசேட உணவுகள் செய்தல்.


9. குளிப்பாட்டிய பெண்ணுக்குப் புத்தாடை அணிவித்தல்.


10. குழந்தைக்கு மூன்று மாதத்துக்கு வண்ணாரப் பெண் கொண்டுவரும் உடுப்புகளை உடுத்தல்.


11. குளிப்பாட்டிய பின் சடங்குகள் பல்வேறுபட்ட வகையில் செய்தல்.


12. உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்தல்.


13. இதை விளம்பரம் செய்தல், கோலாகலமாக ஊர் தெரிய சத்தம் போட்டுச் செய்தல்.


14. சிறுமி படுத்த பாயைச் சுற்றிக் கரியினால் கோடு போடுதல்.


15. சிறுமியைத் தீட்டுக் கழிக்கும் வரை அவ்வீட்டுக்கு யாரும் போக மாட்டார்கள். போனாலும் வெளியில் நின்றே பேசுவர். அங்கு குடிக்கவோ, சாப்பிடவோ செல்பவர்கள் குளித்து, மஞ்சள் தண்ணீர் தெளித்துதான், அதாவது செத்த வீட்டுக்குச் செய்வது போல் செய்துதான் குடிப்பர் அல்லது சாப்பிடுவர்.


16. இதே போல் அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் வேறு வீட்டுக்குச் செல்லமாட்டார்கள்.


17. ஆண்வழிக் குடும்பம் அனைத்துக்கும் துடக்கு உண்டு. தங்கை சாமத்தியப்பட்டால் அக்கா திருமணம் ஆனவள் என்றால் அவளுக்கு துடக்கில்லை. அண்ணன் திருமணம் ஆனவன் என்றால் அண்ணிக்குத் துடக்கு.


18. கிணறு, சமையல்அறை, சாமியறை, கோயில் என புனிதமான இடத்துக்குச் சமாத்தியப்பட்ட குழந்தை செல்ல முடியாது.


19. சடங்கு அன்று வீடு முழுவதும் கழுவி மஞ்சள் தெளித்து பார்ப்பான் என்ற பூசாரி கொண்டு தீட்டுக் கழிப்பர்.


20. புரோகிதர் தரும் தீர்த்தத்தைக் கொண்டு புனித இடங்களில் தெளித்து தீட்டுக் கழிப்பர்.


21. தொடர்ந்து ஏற்படும் மாதவிடாயின் போது கோவிலுக்குப் போகவோ, திருநீறு பூசவோ, சாமி கும்பிடவோ முடியாது.


22. தொடர்ந்து ஏற்படும் மாதவிடாயின் போது கிணற்றில் தண்ணீர் அள்ளவோ, வயலில் இறங்கி வேலை செய்யவோ கூடாது.


23. இந்த நாட்களில் தனியான பாய், தலையணி (சமையலுக்குத் தனியான சைவ மற்றும் அசைவப் பாத்திரம் உள்ளது போல்) பாவிப்பதுடன், குளித்து விட்டே சமைக்க வேண்டும்.


24. பரிசுப் பொருட்கள், பணம் ஆகியவற்றை எதிர்பார்த்துச் சடங்கைத் தொடங்குதல்.


25. ஆண் குழந்தையுடன் சேர்தலைத் தடுத்தல் மற்றும் ஆண் பற்றிய புதிய விளக்கங்களைக் கொடுத்தல்.


26. பெண்ணுக்குப் புதிதான ஒழுக்கவியலைக் கற்று கொடுத்தல். அதாவது கற்பு, அடக்கம், பணிவு... போன்றவற்றைப் பண்பாடாக்குதல்


27. பெண்ணுக்குச் சமையல் கற்றுக் கொடுத்தல்.


28. உடுத்தும் உடையின் வடிவத்தை மாற்றல்.


29. குனிந்து நடக்க கற்றுக் கொடுத்தல்.


30. அழகுபடுத்தக் கற்றுக் கொடுத்தல். இதன் மூலம் அழகியல் பற்றிய பிரமைகளை ஏற்படுத்தல்.


31. கல்வி கற்பதை நிறுத்தல்.


32. ஆணுக்கு அடங்கிப் போவதை நிபந்தனையாக்குதல்.


33. தாய்மாமனுக்குத் (இவர்தான் பெண்ணின் கணவனாக இன்றும் சில பிரதேசத்தில் நீடிக்கின்றது.) தலைவணங்குதல்.


இது போன்று சமுதாயத்தின் ஏற்ற இறக்க வளர்ச்சியை ஒட்டிப் பற்பல பண்பாட்டுப் பழக்க வழக்கத்தை ஒட்டி ஆணாதிக்கக் கண்ணோட்டங்கள் வேறுபட்டுக் காணப்படுவதுடன் சில மருவியும், சில புதிதாகவும் கடைப்பிடிக்கப்படுகின்றது. இது எப்போதும் பண்பாட்டுக் கலாச்சார வடிவத்தில் நியாயப்படுத்தப்படுவது எதார்த்தமாகியுள்ளது.


இச்சடங்கே பெண்ணின் தனிப்பட்ட உடல் சார்ந்த மாற்றத்தைச் சமூகமயமாக்குகின்றது. இந்தச் சமூகமயமாக்கல் என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமைக்கு எதிரானதாக ஆணாதிக்கம் சார்ந்து பெண் அடிமைத்தனத்தைக் கட்டியமைக்கின்றனர். பெண் மீதான ஆணின் மேலாதிக்கத்தை ஏற்படுத்துவதும், பெண்ணின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதும், பெண்ணின் நுகர்வு எல்லையை ஆணுக்குக் கீழாகக் கட்டுப்படுத்துவதும், பெண்ணை அசுத்தமானவளாக உருவகப்படுத்துவதும், பெண்ணை விளம்பரம் செய்வதும், பெண்ணை விற்று விபச்சாரம் செய்வதும், பெண்ணை மூலதனமாக்குவதும் என சாமத்தியச் சடங்கு ஆணாதிக்கப் பண்பாட்டுக் கலாச்சாரமாகவும், பொருள் திரட்டும் சடங்காகவும் மாறிவிட்டது. பெண்ணின் உடல் சார்ந்த தனிப்பட்ட நிகழ்வைப் பெண்ணுக்கு மறுத்து, பெண் மீதான ஆதிக்கத்தை இச்சடங்கு கோருகின்றது.


இயற்கை மீதான அறிவியலில் பின் தங்கியிருந்த ஆதி மனிதன், பெண் மாதவிடாய் ஊடாக வெளியேற்றிய இரத்தத்;தைப் பயந்த நிலையில் இருந்தான். மாதவிடாய் மீதான புனித மதிப்பீடுகளில் உருவாக்கப்பட்ட சாமத்தியச் சடங்குகள், மாறிவந்த பொருளாதாரச் சமூக மாற்றத்துடன் இச்சடங்குகளும் மாற்றத்தையும், புதிய விசயங்களையும் உள்ளடக்கி இன்று வெளிப்படுகின்றது.


இரத்தம் வெளியேறும் நாள் மலம் சிறுநீர் கழிப்பது போல், இயற்கையில் இவ்வெளியேற்றம் ஆரோக்கியமான போக்கில் இருந்தது. இந்தச் சமயத்தில் மனிதன் ஊட்டச்சத்தான உணவு கொடுத்தல் என்பது ஆணைவிட குறைந்த உணவைப் பெறும் பெண்ணின் வாழ்வில், சிறப்பான உணவு பெண்ணுக்குப் பலத்தைக் கொடுப்பதாக இருக்கின்றது. இது போல் மிகவும் வறிய குடும்பங்களில் இன்றளவில் கூட இச்சடங்குகள் மூலம் அப்பெண் தனது எதிர்கால வாழ்வுக்குச் சிறு ஆதாரப் பொருட்களைப் பரிசாகப் பெறவோ அல்லது மாற்று உடுப்பைக் கூடப் பெறும் வகையிலோ பெண்ணுக்கு உதவுவதாக இருக்கின்றது.


இது போன்ற அடிப்படை தேவையை ஒட்டியும், ஆடம்பர நுகர்வுக் கண்ணோட்டத்திலும் வேறுபட்ட சூழலில், பெண்கூட சாமத்தியச் சடங்கு செய்வதைக் குறித்தப் பொருளாதார சூழலுக்கு இசைவாகப் போராடுவதும், எதார்த்தமாக உள்ளது. இதன் பின்னால் சாமத்தியச் சடங்கு அதன் ஆணாதிக்கத் தன்மை பற்றிய அறிவு இன்மையும், குறித்தப் பொருளாதார நிலைமைகளும் இதற்குக் காரணமாக உள்ளது. எமது சமுதாயங்களில் கோலோச்சிப் போயுள்ள ஆணாதிக்கக் காட்டுமிராண்டித்தனமும், நிலப்பிரபுத்துவப் பண்பாடும் இதன் எல்லைக் கோடுகளாக உள்ளன.


இன்று புலம் பெயர்ந்த சமூகம் மற்றும் மத்திய தர வர்க்கத்திற்கு மேற்பட்ட பிரிவுகளிடையே இந்தச் சடங்கின் வடிவங்கள் நிலப்பிரபுத்துவத்துடன் கூடி ஏகாதிபத்தியப் பண்பாட்டுடன் மேலும் சீரழிகின்றது. ஏகாதிபத்தியச் சூறையாடலை ஊக்குவிக்கும் நுகர்வு மோகத்தை ஏற்படுத்த பெண்ணை விளம்பரம் செய்வது போல், சாமத்தியச் சடங்கில் பெண்ணை அழகுபடுத்துவதும், விளம்பரம் செய்வதும், திரைப்படம் போல் கவர்ச்சிப் படங்கள் எடுப்பதும், வீடியோ பிடிப்பதும், பணத்தைக் குறிவைத்து பெண்ணைச் சந்தைப்படுத்துவதும், தமது போலிக் கௌரவம்;;-அந்தஸ்தை இதற்கு ஊடாக நிறுவுவதும் என எல்லையற்ற வகையில் சீரழிந்து விட்டது. இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தில் வடமேற்குப் பகுதியில் ஜவுன்சர்பவர் பகுதியில் மனைவிமாரை விற்பதும், அடகுவைப்பதும் சர்வசாதாரணமாக நடக்கிறது. இதில் பெண் 100 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை பெறுமதியாகி ஆணின் சொத்தாகின்றாள். (8.6.2000)20 பெண் வெறும் சந்தைப் பண்டமாக ஆணின் சொத்தாகின்றாள்.


மறுபுறம் பெண் பற்றிய ஆணின் பார்வைகள் நிலப்பிரபுத்துவப் பண்பாட்டில் இருந்து, ஏகாதிபத்தியப் பண்பாட்டுக் கட்டமைவின் எல்லைக்குள் விரிந்துள்ளது. பெண்ணை நுகர்வுக்குரிய பொருளாகப் பார்ப்பதும் (பெண் பிள்ளை பெறும் ஊடகம் என்ற பழைய நிலப்பிரபுத்துவப் பார்வையை மறுத்து), பெண்ணைப் பாலியல் நுகர்வுப் பண்டமாகக் காண்பதும், பெண் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் ஆணின் உணர்வைத் தீர்க்கும் ஊடகமாகப் பார்ப்பதும், பணத்தின் முன் பெண்ணின் உறுப்புகளை நுகரும் தனிமனித உரிமையாகப் பார்ப்பதும், கோருவதுமே வாழ்வு என்ற நிலையில் அனைத்து மனித விழுமியங்களும் மறுக்கப்படுகின்றன.


இந்த நிலையில், சாமத்தியச் சடங்கானது ஆணாதிக்க ஆண் முன்பு பெண்ணை ஊடறுத்த அங்கங்களின் மீதும், பாலியல் தேவைக்குத் தயாராகிவிட்ட சரக்காகவும் (இதற்கு இரண்டு அர்த்தமும் பொருந்தும். சந்தைப் பொருளாகவும், வழக்கமான பெண்ணைக் குறிக்கும் சொல்லாகவும்), ஆண்களின் கனவுக்கன்னியாகவும் மாறிவிடுகின்றாள். இதற்கு அப்பால் சாமத்தியச்சடங்கு அப்பெண்ணுக்கு எந்தப் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் புரிய வைத்து விடுவதில்லை.


இந்தப் போக்கில்தான் பெண் மீதான சாமத்தியச் சடங்கானது அப்பெண்ணை விளம்பரக் கன்னியாக (மொடலாக) மாற்றுகின்றது. இதை மூலதனம் ஆக்கிப் பணம் பண்ணும் போக்கும் அரங்கேறுகின்றது. ஒரு மேற்கத்திய விபச்சாரி அதிகமான நுகர்வுப் போட்டியில், ஏகாதிபத்திய நுகர்வுப் பண்பாட்டில் தனது உடலை காட்ட, தொட, புணர பணம் வாங்குவது போல் (இது மூன்றாம் உலக விபச்சாரிகள் பொதுவாகப் புணருவதுக்கே பணம் பெறுகின்றனர்.), நடுத்தர வர்க்கத்துக்கு மேற்பட்ட பிரிவுகளின் ஏகாதிபத்தியக் கனவுப் பண்பாட்டில் பெண்ணின் மாதவிடாயை விளம்பரம் செய்து ஊடறுத்து பார்க்கவும், இரசிக்கவும் அழைப்பதன் மூலம் பணத்துக்காக விளம்பரம் செய்து சம்பாதிக்கின்றனர். அனைத்து வர்க்கத்தின் சாமத்தியச் சடங்கும், தமது சொந்தக் கௌரவம் மற்றும் ஆணாதிக்க ஒழுக்கப் பண்பாட்டையும், அதன் வக்கிரத்தையும், இரசிக்கும் நிலைக்குள்தான்; சாமத்தியச் சடங்கு நீடிக்கின்றது.


இந்தச் சமூகத் தன்மை என்பது பொதுவாகவே சமூகத்தில் இருந்த போதும், சாமத்தியச் சடங்கு மூலம்விளம்பரம் செய்து அதை மூலதனமாக்குகின்றனர். மனிதனின் அறியாமையில் உருவாகி வளர்ந்து வந்த ஆணாதிக்கம், பெண்ணின் பாலியல் உறுப்புகள் வளர்ச்சியின் தொடர்ச்சியில் பெண் பிள்ளை பெறத் தகுதி அடைந்ததை முன்வைத்து, இச்சடங்கு திருமணத்துக்கான தெரிவுகளைச் செய்யும் போக்கில் வரலாற்றில் இருந்துள்ளது. ஆனால் இன்று பெண்ணின் கரு உருவாக்கம் மற்றும் மாதவிடாய்க்கான காரணங்கள் அறிவியல் ரீதியாகத் தெரிகின்ற போது, இதைத் தொடர்வது முட்டாள்த்தனமாகும். இச்சடங்கின் மூலம் ஆணாதிக்கத்தினுடைய, ஏகாதிபத்தியத்தினுடைய நுகர்வு வேட்டைக்குள் பெண் அடிமைப்படுத்தப்படுகின்றாள்.


அச்சிறுமியின் உளவியல் பாதிப்பு பற்றிய எந்தவிதமான அறிவுப்பூர்வமான மனிதாபிமானமும் இன்றி, முரட்டுத்தனமான பெற்றோரினதும், ஆணாதிக்கத்தினதும் வன்முறையைப் பண்பாட்டுக் கலாச்சாரத்தின் பின்புலத்தில் இருந்து அமைதியாகத் திணிக்கின்றனர். ஒரு குழந்தைக்கு ஏன் இச்சடங்கு செய்யப்படுகின்றது? என்பதோ, ஏன் தொடர்ந்து தான் ஆண் குழந்தைகளுடன் விளையாடக் கூடாது? என்பதோ, ஏன் முன்போல் வாழ முடியாது? என்பதோ புரிவதில்லை. மாறாக இவற்றிற்கு விளக்கங்கள் கூட இன்றி, வன்முறை மூலம் பெற்றோரால் எழுதப்படாத ஆணாதிக்கச் சட்டமாக இறுக்கப்படுகின்றது.


அப்பெண் குழந்தையுடன் விளையாடிய மற்ற ஆண் குழந்தைகள், என்ன நடந்தது? எனக் கேட்டால், நாக்கைப் பிடுங்கிச் சாகும் அளவுக்கு வேதனையும், சொந்தச் சகோதர--சகோதரிகளின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத அவமானமும், முன்பு பழகிய ஆண்களின் வேறுபட்ட பார்வையும், அச்சிறுமியின் முன் பாரிய உளவியல் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. சாமத்தியச் சடங்கு பற்றி புரியாத சமூகத்தின் (இதைச் செய்யாத மற்ற சமூகங்கள்) கேள்விக்குப் பதில் தெரியாத அனாதையாக அவமானத்தால் சிறுமிகள் செத்துப் பிழைக்கின்றனர்.


சிறுமியின் உடலில் ஏற்படும் உள-;வெளி மாற்றங்கள் இயற்கையானவை. இது தனது சொந்த உடல் சார்ந்தது. இதை மற்றவர்கள் கூர்ந்து அவதானிப்பதும், ஆணாதிக்கச் சமூகத்தில் மானத்தை மறைக்கும் சட்டைக்குள் புகுந்து ஒழுக்கத்தை நிலைநாட்ட தேடும் பண்பாட்டுக் கலாச்சார வீரர்களின் செய்கையும், நடத்தையும், இதை மற்றவர்கள் முன் விளக்கி அறிமுகம் செய்வதும், தனது வாயால் இதை விளக்கக் கோரும் அவமானங்களும் சிறுமியின் உடல் மற்றும் உளவியல் பாதிப்பையும் ஏற்படுத்தி, நாக்கைப் பிடுங்கி சாகக் கோருவதாகவும் உள்ளது.


பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலைகளில் நடைபெறும் (இராக்கிங்) பகிடி வதையில் பெண்ணின் உள்ளாடை, அதன் அளவு, நிறம் என பல வண்ண(வகையான) ஆணாதிக்கக் கேள்விகளின் போது, ஒரு பெண் எந்த வகையான உளவியல் சிக்கல்களையும், அவமானத்தையும் சந்திக்கின்றாளோ, அதைவிட மோசமான நிலையைச் சமாத்தியச் சடங்கில் சிறுமி சந்திக்கின்றாள்.


பெற்றோரும், அதைச் சுற்றியுள்ள ஆணாதிக்கச் சமூகமும் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் பின்னால் பெண்ணின் மீது புதிய அடக்குமுறைகளை நிறுவுகின்றன. அதன் மூலம், சாதிக்கின்ற பணச் சேகரிப்பும், தனிப்பட்ட சுயக் கௌரவப் போலித் திமிர்த்தனமும், பெண்களின் இரும்புத் திரையாகின்றன.


பண்பாடு மற்றும் கலாச்சாரம் மீது இதைப் பாதுகாக்கும் பிரிவு எப்போதும் காலாகாலமாக இருந்து வந்தது என்றும், இது சீரழிவுக்கு எதிரான வேலிகள் என்றும் மேற்கின் சீரழிவுக்கு எதிரான உயர்ந்த பண்பாடு என்கின்றனர். இது போன்ற பிற்போக்குத்தனத்தை ஒட்டி, இந்தியாவில் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் (கி.பி.1925-களில்) சிறுமிகளின் திருமண வயதை 12 ஆகவும் பின்பு 14 ஆகவும் உயர்த்த நடவடிக்கை எடுத்த போது நடந்த விவாதத்தின் சிலபகுதிகளையும், அதையொட்டிய ஆய்வுகளையும் பார்ப்போம்.


''...ஓர் இந்தியச் சிறுமியை எடுத்துக் கொள்வோம். அவள் ருதுவான (சாமத்தியப்பட்ட) ஒன்பது மாதக் காலத்திற்குள் ஒரு குழந்தையைப் பெற்றுவிட வேண்டுமென்று எண்ணுகிறாள். ...... கணவன் என்ன சொல்லுகிறானோ அதன்படி ஆடவேண்டியதே அவளுடைய பாடம்.... வீட்டிலுள்ள பெரியோர்களோ ஒன்றுமறியாதவர்கள். மூடப் பழக்கவழக்கங்களில் நம்பிக்கையுள்ளவர்கள்.."


ஆபாசமான படங்களை எழுதுவதையோ, பிரசுரிப்பதையோ தடுக்க கி.பி.1912-ஆம் வருடம் செப்டெம்பர் மாதம் 12-ஆம் தேதி ஜெனிவாவில் கூடிய மகாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஒட்டி, இந்தியப் பாராளுமன்றத்திலும் சீர்திருத்தினார்கள்.


'ஆபாசமான புத்தகங்களோ, படங்களோ, சிற்பங்களோ மதச்சம்பந்தமான கோயில்களிலோ, வேறு இடங்களிலோ, கோயில் இரதத்திலோ காணப்படுமாயின் அதை இச்சட்டம் பாதிக்காது...."


பெண்களுக்கு 12 வயது வந்தபின் தான் மணம் செய்விக்க வேண்டுமென்று அரசு ஒரு சட்டம் கொண்டுவந்தது.... இதை மறுத்து சட்டச்சபையில் பழக்கத்திற்கு விரோதமாகப் போகக் கூடாது என்றும்..... புருஷனையும், மனைவியையும் பிரித்து வைப்பதற்கு உனக்கென்ன அதிகாரமிருக்கிறது என்றும்..... பெண்ணுக்கு வயது வரும்வரை அவளைத் தகப்பனார் வீட்டில் வைத்திருந்தால் அவளுடைய நடத்தை கெட்டுவிடுமென தகப்பனார் அஞ்சி அவளைக் கூடிய சீக்கிரம் மணம் செய்வித்துத் தன் கையைக் கழுவிவிட வேண்டுமென்றும் நினைக்கிறான்.... என்று பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டன.


எம். ஹரிவிலாச சர்தா என்ற சட்டச்சபை உறுப்பினர் மூன்று வயதிலும் நான்கு வயதிலும் பெண்களுக்குக் கல்யாணம் செய்வதைவிட, ஒன்பது அல்லது பத்து வயதுள்ள சிறுமிகளை மணந்து அவர்களிடம் புணருவதைவிட மானம் கெட்ட செய்கை உலகில் வேறு ஒன்றுமிருக்காது என்றார்....


ஒரு பெண் பக்குவமடைந்த (சாமத்தியப்பட்ட) சில நாட்களுக்குள் அவளுடன் புருஷன் சம்போகம் செய்து விடுகிறான்.... இதனால் ஒரு மனிதனின் ஆயுட்காலத்துக்குள் (இந்திய மக்களின் சராசரி ஆயுள் 22 வயதாகும்) 32,00,000 (32 இலட்சம்) பெண்கள் பிரசவ வேதனையால் இறந்து விடுகின்றனர்;. தங்களுக்குப் பிறக்கும் அடுத்த குழந்தை பெண் குழந்தையாயிருக்குமாயின், அதைக் கோயிலுக்குக் கடவுளின் பொருட்டுக் கொடுத்து விடுகிறோமென ஒரு பிராத்தனை செய்து கொள்வதுமுண்டு....அப்பெண்ணுக்கு வயது ஐந்து ஆன உடனே, கோயில் குருக்கள் அவளிடம் விபச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறான்...


மருத்துவமனைக்கு வந்த சிறுமிகளின் வியாதிகள் என்ன? என்ற ஆய்வில் 9 வயது சிறுமி கல்யாணமான மறுநாளே இடதுகால் எலும்பு பிசகி கருப்பை கவிழ்ந்து விட்டது. 10 வயது பெண் நிற்க முடியாது பெண் குறியில் புண் உண்டாகி இரத்தம் பெருகி ஒழுகிறது. 9 வயது பெண்ணுக்கு அவயத்தில் அதிக ரணம். இவள் புருஷனுக்கு வேறு இரு மனைவிகளும் உண்டு. 7 வயது குழந்தை புருஷன் கொடுமையால் தற்கொலை செய்தாள். 10 வயது குழந்தை திருமணம் செய்ததில் இருந்து எழுந்து நிற்க சக்தி அற்றுப் போனாள்... தொடர்ச்சியாக இந்தியாவில் 2,68,34,838 (இரண்டு கோடியே 68 லட்சம்) விதவைகள் இருப்பதை அரசு புள்ளிவிபரம் காட்டியது..."21


ஒருசிறுமி தனது முதல் மாதவிடாயைத் தொடர்ந்து பிள்ளை பெறவும், உடலுறவுக்கும் உள்ளாக்கப்பட்ட நடைமுறைகள் இந்திய இந்துப் பண்பாடுகளின் கேவலமான காட்டுமிராண்டித்தனமான ஆணாதிக்கம் என்பதை இவை ஆதாரமாகக் காட்டுகின்றது. ஆண்களின் பாலியல் தேவைக்குப் பெண்ணின் மீதான ஒழுக்கம் ஆணாதிக்கப் பண்பாட்டால் வரையறுக்கப்பட்டது. சிறுவயது திருமணம் அவளின் ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் என்ற வாதங்களைத்தான் இன்று சமாத்தியச் சடங்கைச் சீரழிவுக்குப் பின்னால் முன்வைத்து பாதுகாக்கின்றனர்.


மார்க்ஸ் இந்தியச் சமுதாயத்தை, இது போன்ற வக்கிரத்தைக் குறித்து தான், காட்டுமிராண்டிச் சமூகம் என வருணித்தார். இதை மார்க்சிய விரோதிகள் இன்று மார்க்ஸ்சுக்கு எதிராகக் கையாள்வதன் பின் இந்த ஆணாதிக்கக் காட்டுமிராண்டித்தனத்தின் தொடர்ச்சியைப் பாதுகாக்கத்தான்.


இளம் சிறுமிகள் மீதான இந்துப் பண்பாடு, கலாச்சார ஆணாதிக்கம் சிறுமியில் புணர்ந்து குழந்தைகளைப் பெறவும், அதுவும் பெண் குழந்தைகளை வேள்விக்குக் கிடாய் (ஆண்ஆடு) வளர்ப்பது போல், நாட்டின் உயர்ந்த மனிதர்களின் விபச்சாரத்துக்குக் கோயிலில் விட்டும் தமது காட்டுமிராண்டிப் பண்பாட்டைக் கலாச்சாரத்தை இன்று போல் அன்றும் பாதுகாத்தனர். அதே நேரம் இவை இளம் வயது விதவைகளை உற்பத்தி செய்து அவர்களின் பாலியல் தேவையைக் காயடித்தும், ஆயுளை மிகக் கீழ்நிலைக்குத் தாழ்த்திய பண்பாட்டின் வாரிசுகள் தான் சில மாற்றத்துடன் இன்றைய பண்பாட்டைக் கலாச்சாரத்தை முன்தள்ளுகின்றனர்.


இந்தப் பண்பாட்டில் உருவான ஆபாசமான எழுத்துகளை, சிற்பங்களை.... பாதுகாக்கவும், அதை ஆணாதிக்கப் பண்பாட்டால் நிலைநிறுத்தவும் போர்க்கொடி தூக்குகின்றனர். ஓரினச் சேர்க்கை போன்றவற்றின் அடிப்படைகள் கூட காயடிக்கப்பட்ட இந்தியப் பண்பாட்டின் கொடையாக அச்சமூகத்தில் இருப்பதால் ஆணாதிக்கச் சிற்பங்கள் அதைப் பிரதிபலிக்கின்றன. நவீன ஆணாதிக்கம் இந்தச் சிற்பத்தைக் காட்டி ஓரினச் சேர்க்கைக்குச் சட்ட அங்கீகாரத்தைக் கோருவதன் மூலம், உண்மையில் இந்தக் காயடிப்புகளை நிரந்தரமாக்கவும், அதை நுகரவும் துடிக்கும் போக்கு இன்றைய புதிய ஏகாதிபத்தியப் பண்பாடாகியது. சிறுமிகள் சிறுவயதில் திருமணம் செய்து அவர்களைச் சிறுவயதிலேயே விதவையாக்கிவிட்ட இந்து ஆணாதிக்கப் பண்பாட்டைப் பார்ப்போம்.22


அட்டவணை-4

 இந்தியா             15,49,46,926       5,48,41,195      7,83,136       10,01,05,731    2,68,34,838       3,96,556
இந்துக்கள்         10,58,29,124       3,50,63,817      4,46,056         7,07,65,307    2,02,18,780       3,29,076
மற்றவர்கள்        4,91,17,801       1,97,77,373      3,37,080         2,93,40,424        66,16,058          67,480


குழந்தைத் திருமணம் விதவைகளை உற்பத்தி செய்கின்றன. அத்துடன் மறுமணம் மறுப்பு பெண்களின் கண்ணீரை ஓடவைத்து. இந்தியாவின் இந்து ஆணாதிக்கப் பண்பாட்டிலும், மற்ற மதங்களில் இந்து ஆதிக்கமும் இணைந்து நான்கு பெண்ணுக்கு ஒரு பெண்ணை விதவையாக்கியது. மேலும் ஒருதார மணத்தின் சொத்து வடிவத்தை இந்து வானரங்கள் சிதைவின்றி பேணிக் கொண்டது. பிறந்த குழந்தையைக் கூட விதவையாக்கிய ஆணாதிக்க இந்து தர்மம் தனது காட்டுமிராண்டித்தனமான வக்கிரங்கள் அனைத்தையும் கையாண்டது. கி.பி.1921-இல், பதினைந்து வயதுக்குள் நான்கு இலட்சம் குழந்தைகளை விதவையாக்கியதன் பின், ஒருதார மணத்தைப் பற்றியும் குடும்பத்தின் சுபிட்சம் பற்றியும், இந்து வானர நாய்கள் உபதேசம் பண்ணுவதில் என்றுமே பின்நிற்கவில்லை.


பெண்ணின் ஒழுக்கம், கற்பு பற்றிய பித்தலாட்டங்கள் பெண்ணின் கண்ணீரில் சுகம் கண்டன. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் கண்ணீர் இதைவிடக் கேவலமானது. திருமணம் இன்றியே வாழ்க்கையை நகர்த்த நிர்ப்பந்தித்தப் பெண்களின் பாலியல் உணர்ச்சிகளை எந்த இந்து வானரங்களும் புரிந்து கொள்ளும் தகுதியற்ற மரமண்டைகளே. இந்து இராஜ்ஜியம், இந்து சட்டத் தொகுப்பைக் கோரும் இந்து பாசிஸ்டுகளின் ஆட்சி, மீண்டும் பழையதை நோக்கி கனவு காண்கின்றது. இதுமட்டுமே, வயிறு முட்ட சும்மா இருந்து தின்று கொழுக்கும் பார்ப்பனிய மீட்சியாக இருக்கும். இதுதான் இந்து இராஜ்ஜியத்தின் நிஐமான முகமும், கனவுமாகும்.


சாமத்தியச் சடங்கு மூலம் சிறுமி மீதான நிலப்பிரபுத்துவ நவீன விளக்கங்கள் ஆணாதிக்க ஒழுக்கங்கள் மீது கட்டமைக்கப்படுகின்றது. சிரிக்காதே, மற்ற ஆண்கள் உடன் கதையாதே, தலை குனிந்து செல், வாய் காட்டாதே, அடக்கமாக இரு, ஆண்கள் சாப்பி;ட்ட பின் சாப்பிடு, ஆண்கள் உடன் போட்டியிடாதே, பெற்றோருக்கும், மூத்தவர்களுக்கும், தம்பிக்கும் அடங்கி சொல் கேட்டு நட, பெரியவர்கள் நிச்சயிக்கும் புருசனை எதிர்பார்த்து மதித்து நட, உடுப்பை அடக்க ஒடுக்கமாகப் போடு, அழகு செய்யாதே என்று நிலப்பிரபுத்துவப் பண்பாட்டை, பெற்றோர்கள் ஏகாதிபத்திய நுகர்வின் மேல் நின்று மாறுபட்ட சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுக் கலாச்சாரத்தை ஒட்டி ஆணாதிக்கக் கட்டமைவின் எல்லைக்குள் எழுதப்படாத சட்டமாக, பண்பாடாக இச்சாமத்தியச் சடங்கு மூலம் பெண் மீது திணிக்கின்றனர்.


ஒரு பெண் ஆணைப் போல் எல்லா உரிமையும், கடமையும், தெரிவையும் கொண்ட சுய ஆற்றல் உள்ளவள் என்பதை அனைத்துச் செய்கையும் மறுக்கின்றது. ஒரு பெண் தனது சுயக்கட்டுப்பாட்டையும், மனித வாழ்வியலில் சமூக நோக்கத்தையும், ஒழுக்கத்தையும் ஆணைப் போல் பெண்ணும் கடைப்பிடிக்க முடியும் என்பது எதார்த்தமாகும். இந்த இயல்பான மனிதச் சமுதாயத்தின் வளர்ச்சியுடன் ஆண் உடன் பெண் சேர்ந்து கடைப்பிடிக்கும் இயல்பான இயற்கையின் இயங்கியல் தன்மையை மறுக்கும் ஆணாதிக்கம், பெண்ணைத் தனக்கு உட்பட்ட தனது அடிமையாக, பிள்ளை பெறும் இயந்திரமாக, நுகர்வுப் பண்டமாக மாறுபட்ட சமூக எல்லைக்குள் பெண்ணை வழிநடத்தக் கோரும் வடிவங்களின் ஒன்றே சாமத்தியச் சடங்கு ஆகும்.


உன்னதமான மனிதச் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றால் பெண்-ஆண் பரஸ்பரம் மதிப்பைக் கொண்ட, யாருக்கும் யாரும் அடிமையற்ற சமூகத்தைப் போராடிப் பெற, நாம் சாமத்தியச் சடங்கின் வடிவத்தையும், அதன் ஆணாதிக்கப் போக்கையும், இந்தப் பண்பாட்டுக் கலாச்சாரப் பொருளாதார அமைப்பையும் தகர்க்க அறை கூவுவதும், போராடுவதும் மனிதச் சமுதாயத்தை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.