04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

சில குறிப்புகள்... குறிப்பு:1

எனக்குச் சில நேரங்களில் தமிழ்ச் சனத்தின்மீதான கோவம் என்மீதாகவே வரும்.அந்த நேரங்களில் அதிகமாக விஸ்க்கி அருந்துவேன்.அப்படியருந்திவிட்டு மல்லாந்து எங்கவாதொரு தெருவில்"கூரையற்றவர்கள்"போன்றே நானும் என்பதாகச் சரிந்து...

 

இந்தக் காலம் குளிராகிறது.எங்கள் தேசச் சனங்களின் "எளிய"மனத்தை எண்ணிய போதெல்லாம் பாரதியின் பாடலொன்றே எண்ணமெல்லாம் நிறைந்து கொள்ளும்!

 

"சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற்சுட்டுச்

செத்திடுவார் ரொப்பாவார்,சினங்கொள் வார்தாம்

மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய

வாள்கொண்டு கிழித்திடுவார் மானுவாராம்.

தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்

சினம்பிறர் மேற் றாங்கொண்டு கவலையாகச்

செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்..."

 

இந்தப்பாடலை அவன் யாத்தபோது அவனுக்கு வயது வெறும் முப்பதே கடந்திருந்தது!இப்போத நமக்கு அறுபது கடந்தாலும் வாழ்வைப்பற்றிய உண்மை புலப்படவில்லை.என்ன நம்ம சனங்கள்!ஏதுசெய்தும் பிறன்வதைசெய்து, பிறவுள் நினைவு புகுத்தித் தீராது வன்மம் கொண்டலையும் மனிதாராகித் தமிழ்பேசிப் பயன் யாது?

 

இந்த வ+ப்பெற்றாலில் ஒரு ஆசியன் கடையை எனக்குத் தெரிய பலர் நடாத்தி நட்டப்பட்டு ஓடினபோது, ஒரு தமிழர் தனது பிள்ளைகளின் பல்கலைக்கழக படிப்பின் காரணமாகத் தன் மனைவி வீட்டில் தனித்திருப்பதால்-சனத்தோடு தொடர்பாடக் கடையொன்றின்மூலமாகத் தனது மனையாளின் தனிமையை விரட்டச் செய்த முயற்சியானது, பணம் சேர்ப்பதற்கான முயற்சி அல்லவே! வெறும் சீரகம்,பெருஞ்சீரகம் விற்றுப் பணம் சேர்க்க முடியுமோ அல்லது சனிக்கிழமைகளில் முடித்திருத்துபவருக்கு நிலக்கீழறையை ஒதுக்கி, வரும் சில தமிழருக்குச் சிரைப்பதால் பணம் சம்பாதிக்கமுடியும்?

 

பாழான தமிழனுக்கு இதுதாம் பொல்லாத பொறாமையாகிறது!தான்மட்டும் பிழைப்பதற்கே அவனுக்கு விருப்பம்.மற்றவனின் வளர்ச்சி ஒருபோதும் ஏற்புடையதில்லை.உடனே என்ன செய்வான்?

 

நேரே நகராட்சி மன்றம் செல்கிறான்-"தமிழ்க் கடையில் சனிக்கிழமைகளில் ஒரு பாபர் களவாக முடிவெட்டிப் பணம் பண்ணுகிறான்.வரி கட்டாமல் ஒவ்வொரு வாரமும் பெருந்தொகை சனத்துக்கு முடிவெட்டுகிறான்"போட்டுக் கொடுப்பதில் தமிழனுக்கு நிகர் தமிழனேதாம்!

 

ஒன்றல்ல,இரண்டல்ல!பதினைந்து பரிசோதகர்கள் அந்த கடையை முற்றுகையிட்டுப் பரதேசியான பாபரையும்,கடைக்காரரையும் எழுதிச் சென்றுள்ளார்கள்.அபாராதம் 25.000.யுரோவரையும் உயரும்.நல்ல தமிழா நன்றே வாழ்!உனக்குத் தமிழ் ஈழம் நிசமாய்க்கிடைக்கும்.

 

ஒருமுறை லியோனியின் பட்டிமன்றத்தில் குறிப்பிட்ட வாக்கியமே இப்போது பொருத்தமாகிறது."ஒரு தமிழன் முன் கடவுள் தோன்றி,அன்பரே உனக்;கு நான் ஒன்று செய்தால், உன் பக்கத்து வீட்டானுக்கு இரட்டிப்புச் செய்வேன்.அந்த வகையில் உனக்கு ஒரு இலட்சம் பொன் தருகிறேன்,பக்கத்து வீட்டானுக்கு இரண்டு இலட்சம் பொன் கொடுக்கிறேன்.அல்லது உனக்கு ஒரு கண்ணைக் குருடாக்குவேன்,பக்கத்துவீட்டானுக்கு இரண்டு கண்களையும் குருடாக்குவேன்..."என்று கூறுவதை நிறுத்துமுன் அந்தத் தமிழனோ ஆண்டவனே எனக்கு ஒருகண்ணைப் பறியும் பக்கத்துவீட்டானுக்கு இருண்டு கண்மெல்லே போகும்... எண்டானாம்!

 

குறிப்பு:2

 

ஜேர்மனியில் அநேகமாகப் பலர் படிக்கும் பத்திரிகை"பில்ட் சையிற்றுங்".இப்பத்திரிகையானது கடைந்தெடுத்த இனவாதப் பத்திரிகை. நாளொன்றுக்கான இதன் மொத்த விற்பனை அலகுகள் கூமார் 5 மில்லியன்கள்.வாசகர் தொகை கிட்டத்தட்ட நாற்பது மில்லியன்கள் என்பது புள்ளிவிபரத்துக்கான சமஸ்டிக் காரயாலயத்தின் குறிப்பு.

 

இந்தப்பத்திரிகையானது சென்ற வியாழக்கிழமை கொட்டையெழுத்தில் "50.000.யுரோ அகதியான அந்நியனுக்குப் போகிறது..." என்று இனவாதத்தை தலையங்கமாகத் தீட்ட,அதுவே மக்களின்-பார்வையாளரின் பார்வையை வெகுவாகக் கவர,ஒவ்வொருவரும் தலையை ஆட்டி வெறுப்பை உமிழும் போது,அந்த சுப்பர் மார்க்கட்(லிடில்) நிர்வாகிமீதே எனக்குக் கோபமாக இருந்தது.மக்களின் பார்வைக்காகவே வைக்கப்பட்ட பத்திரிகைத் தாங்கிகளில் நான்கு கவுண்டகளிலும் இப்பத்திரிகை பதாதைகளாக இருந்தன!மக்கள் கூட்டத்துக்குள் கருத்துக்கட்டுபவரை அக் கூட்டத்துக்குள்ளே வைத்து அம்பலப் படுத்துவதைத் தவிர வேறு வழி கிடையாது.

 

கடை நிர்வாகியைக் கூப்பிட்டு,"இப்பத்திரிகையை இங்ஙனம் வைத்து நீ மக்களிடம் அந்நியர் வெறுப்பைத் தூண்டுவது நியாயமா?"-நான்.

 

"ஜேர்மனி ஜனநாயக நாடு,பத்திரிகைச் சுதந்திரம் உண்டு"-அவன்.

"அது தெரியும்,கெல்மட் கோல் "லொயினா சுத்திகரிப்பாலையை"பிரான்சுக்கு அறாவிலைக்கு விற்றுப் பல மில்லியன்கள் சுருட்டியபோது அந்தச் சுதந்திரத்தை இப்பத்திரிகைகள்.."நான் முடிப்பதற்குள் அவன் முகம் சிவந்தது.

 

"இங்கு பத்திரிகைச் சுதந்திரம் பற்றியது அல்ல என் கருத்து.அந்நியர்கள் மீது சேறடிப்பதுதாம் கூடாதென்கிறேன்"நான்.

 

"ஏன் செய்யக் கூடாது? எங்கள் வரிப்பணத்தில் நீங்கள் வாழ்கிறீர்கள்!நான் மாதாமாதம் உங்களுக்குப் பணத்தை வரியாகத் தருகிறேன்"-அவன்

 

"அப்படியா? உன் நாட்டில் என்னதாம் இருக்குச் சொல்?,மூன்றாமுலகத்துக் கனிவளம்,அரபு நாட்டுப் பெற்றோல்,வளர்முக நாடுகளின் மலிவுத் தொழிலாளர்களின்றி உனதும்,மற்றைய ஐரோப்பிய நாடுகளால் உற்பத்தி செய்ய முடியுமா?"-நான்

 

"முடியாது!ஆனால் நம் மூளை இல்லையென்றால் நீங்களில்லை!"-அவன்

"அது சரிதாம்.மற்றவன் அணுவைத் தயாரித்தால் நீ தடுப்பது உன் அறிவின் இலட்சணம்தாம்,கூடவே ஒரு பேப்ரை விலைக்குத்தா"-நான்

வேண்டிய பேப்பரை சுக்கு நூறாய்க் கிழித்து அவன் மேசையில் வெட்டெறிந்து,இது என் எதிர்ப்பு-சுதந்திரம் என்றேன். என்ன உலகம்!

 

அவன் தன் மூளையைப் பற்றிப் பெருமிதம் கொண்டான்.நானோ எனது இனத்தின் மூளைகள் நாசாவுக்குள்,மைக்கரோ ஸ்சொப்ருக்குள்,பேராடும் பல்கலைக்கழகங்களுக்குள் கட்டுண்டு கிடப்பதையும்,அதைப் பயன்படுத்த முடியாத இந்தியா-இலங்கை போன்ற வங்கோலை நாடுகளையும் நொந்துகொள்ளவே முடிந்தது!

 

குறிப்பு:3

தேனியில் ஒரு கட்டுரை வந்துள்ளது, அதை எழுதியவர் நிச்சியம் எனக்குத் தெரிந்த நபர்தாம்.கட்டரையின் நியாயவாதமானது புலிகளை அழித்துவிட்டு,ஜனநாயகத்தைப் பற்றிய முன்னெடுப்பானது சாத்தியமென்பதாக... புலிகளென்பது "வெறும் அடியாட் படைதாம்"அதில் கருத்துவேறுபாடுகிடையாது.ஆனால் பாருங்கோ அந்தப் படையில் போராடுபவர்கள் நமது சிறார்கள்.அவர்களுக்கு "யாரது அடியாட்படையென்பதே" புரியாது.

 

அவர்கள் நிசமான தேச பக்கத்தர்கள்.

 

அவர்களைத் தேச பக்தர்களென்பதைப் புரியாத "புண்ணாக்கு அரசியிலால"; ஒரு மண்ணும் பண்ணமுடியாது.புலித் தலைமையின் துரோகத்துக்குப் பலியாவது மக்கள் மட்டுமல்லை, மாறாக எங்கள் வீரஞ்செறிந்த போராளிகளும்தாம்.அவர்களின் தியாக வேள்வியினாது புலித் தலைமையின் மோசடியால் அநியாயமாக அந்நியனுக்கு உடந்தையாகிறது.

 

புலிகளை அழிப்பதற்கு அந்நிய இராணுவத்தோடு கூட்டுச் சேருவதுகூட இங்கு நிகழலாம்(கட்டுரையாளர் இதைக் குறித்துப் பேசவில்லை.எனினும் சிலரிடம் இக் கருத்துண்டு).இது எந்தவித முற்போக்கு என்று எனக்குப் புரிகிறதில்லை!

 

எங்கள் பிள்ளைகள் போராடப் புறப்படுவது புறநிலை யதார்த்தமான இனவொடுக்குமுறையும் ஒரு காரணமாகும்.இதைத் தீர்மானகரமான தமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணயத்தின் போக்குகளில் வைத்துப் பார்க்காமல்"வெறும் குழு நலனுக்குள்"முடக்கும் கட்டுரையாளருக்கு சமூக அறிவு படு வளர்ந்த நிலையில், புலிகளைச் சுற்றியே பாசிசம் படர்கிறது.

 

அரசியலில் அரிச்சுவடி தெரியாத புலித் தலைமையிடம் போராளிகளைக் காட்டிக்கொடுக்கும் வர்க்க நலன் கொட்டிக்கிடக்கும்போது, இத்தகைய கட்டுரையாளர்களிடம் வரட்டுத் தனமான வக்கற்ற சமூகப் பார்வையே தொடர்கிறது.பல்லாயிரக்கணக்கான போராளிகளை,அவர்களது தேச பக்தியை கொச்சைப்படுத்தும் புலித் தலைமைக்கும் இத்தகைய கட்டுரைத் தனத்துக்கும் எந்த வித்தியாசமுமில்லை.

 

நாங்கள் புலிகளைப் பாசிச சக்தியென்போம்,அந்நிய அடியாட் படையென்போம்,அவர்களின் வர்க்க நலன் தரகு முதலாளியத்தைத் தாங்குவதும்,அதையே தாமே செய்து புதிய மூலதனவாதிகளானார்கள் என்போம்.இவைகளைக்காக்கவே வீரம்செறிந்து எங்கள் குழந்தைகளைப் போராளிகளாக்கிப் பலி யெடுக்கிறார்கள் என்பதையும் ஏற்போம்.

 

ஆனால் இந்தப் போராளிகளை எங்ஙனம் வென்றெடுத்து மக்கள்போராளிகளாகப் போராடத் தூண்டுவது?இதுதாம் கேள்வி.தலைமை அழியும்போது கீழ்மட்டம் உதிர்ந்துவிடும் என்பது சமூகத்தில் என்ன பின் விழை(ளை)வுகளைத் தரும் தெரியுமா? இன்றைய குறுங்குழுக்களே அதற்குச் சாட்சியாக இருக்கும்போது- நாம் ஒன்றும் கூறுவதற்கில்லை!

 

இந்தப் போராளிகளின்றி இலங்கைத் தேசத்தில் ஒரு மண்ணையும் எவரும் செய்ய முடியாது.மக்களே வரலாற்றைத் தீர்மானிப்பவர்கள்.அந்த மக்களில் இந்தப் போராளிகளும்தாம் அடக்கம்.அதுவும் அவர்களின் போராட்ட வாழ்வும்,தியாகமும் மக்களைச் சாராதிருப்பதால் அவர்கள் துரோகிகள் கிடையாது. புலித் தலைமையையும்,கீழ்மட்டப் போராளிகளையும் ஒரு சட்டிக்குள் போட்டுக் கறிவைக்க முனைகிறார்,அந்தத் தேனிக் கட்டுரையாளர்.

 

புலிகளைவிட மோசமான சிங்கள இராணுவமானது இலங்கையில் தோல்வியைச் சந்திக்கவைக்க முடியாத இலங்கை தழுவிய மக்கள் நிலைமையானது, புலிகளைவிட மிக முன்னேறிய மக்கள் படையைக்கட்ட முடியாது.புலிகள் தமிழ் மக்கள் சமூகத்தின் அறிவுக்கேற்றபடியும்,அதன் பொருளியல் சமூக வாழ்வுக்கேற்றபடியேதாம் தோற்றம் பெற்றவர்கள்.தமிழ்ச் சமுதாயமானது சாரம்ஸ்சத்தில் ஏகாதிபத்தியத் தாசர்களாலேயே வழி நடத்தப்பட்டவொரு குறைவிருத்திச் சமூகமாகும்.அது புலியைத்தாம் தோற்றுவிக்குமே தவிர புரட்சிப்படையை அல்ல.

 

இந்த சமூக யதார்த்தைப் புரிய அந்தத் தேசிய இனவுருவாக்கத்தை ஆழப் புரிய மறுக்கும் எவராலும் முடியாது.பல பத்துப் போராளிக் குழுக்களையும் படு பிற்போக்காக வளர்த்தெடுத்த சக்கதிகள் தனியே அந்நியச் சதியால் நிகழ்ததில்லை.மாறாக நமது அரை நிலப்பிரபுத்துவத் தன்மையிலான கண்ணோட்டமும்தாம் காரணமாகிறது.உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமான சீரான எந்த வளர்ச்சியுமின்றித் தமது வருவாயைக் கடிதப் பொருளாதாரமாகக் கனவு காணும் மக்கள் குழுவுக்குள் புலியின் உருவாக்கம் ஆச்சரியமானதில்லை.நாங்கள் மேற்குலக்ச் சமுதாயங்களோடு நம்மை எந்த நிலையிலும் தொடர்புப்படுத்திட முடியாது.நாம் இன்னும் புலிகளை மதிப்பிடுவதில் தவறுவிடுகிறோம்.அதுவே புலிகளின் இருப்புக்கு அத்திவாரமாகும்.

 

ப.வி.ஸ்ரீரங்கன்

12.02.06

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்