04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

புழுதிகளால் தூங்காத துரோகிகள்!

புயலடித்த தேசத்தின் புழுதிகள்

ஒருபகுதி மனித முகங்களை மறைத்திருக்க

சில தெரு நாய்கள் ஓங்கிக் குரைத்தன 'வெற்றி,வெற்றியென'

முன் பின் தெரியாத குருட்டு விழிகளால் இவையறியப்படாது

வீண் கற்பனைகளாற்

சில முகங்கள் மலர்ந்தன

 

ஆனால்

தேச எல்லையில் தவம் புரியும்

இராட்ஷதத் திமிங்கலம்

நீண்ட நாளகப் பசித்திருக்கிறது

அதன் கொடிய தாகம்

இந்த மண்ணின் மீது நிழலாக விரிந்து

குரைக்கின்ற நாய்களுக்கு அச்சமூட்டியபடி

சில சூப்பர் மனிதர்களின் சுதந்திரம்

அவர்தம் நிழலுக்குள் முடக்கப்பட்ட நிலையில்

புயலுக்குப் பின்பும்

புனரமைக்கப் படாத தேசம்

மக்களின் மிச்சசொச்ச நம்பிக்கைகளையும் மீதமாகச் செரித்தபடி

மீள் புயலுக்குக் கட்டியம் கூறினும்

அது வருவதாக

எந்தச் சான்றும் மேற்கத்தைய வானிலையறிக்கையில் இல்லை

இது வேட்டைக்கான

கனிந்த காலமெனக் கண்ட

சில நாடோடிகளின் அம்புகளால்

துளைக்கப்படும் மான்கள்

குறையுயிரில் சேடம் இழுத்தபடி

நம் தோள்களில் அதன் சுமையைச் சுமக்கச் சொல்லும் அதிகாரத்தை

இந்த நாடோடிகள் தாமாகவே எடுத்துள்ளார்கள்

இருந்தும்

போடுகின்ற இடத்தில் உண்டி வளர்த்துக் கிடக்கும்படி

மக்களிடம் தட்டிப் பறித்துண்ணும்

தேசியப் 'புலமைப்' புலவரின் ஓலை

உரல்'களில் நிரையாக...

எனினும்

இவையனைத்தும் ஒரு பகற்பொழுதின் கனவாக

மறு பகுதி மக்களின் மனதை விலத்திக்கொள்ளும்

இதற்குள்

மண்டையைப் பிளப்பதாகவும்

தொண்டையை அறுப்பதாகவும்

சில கட்டாக்காலி எருமைகள் சாணமிட்டுக்கொள்ளும்

குருதியின் உலர்ந்த கறை கண்களில் பட்டு

கொடிய நெடிலாக மூக்கைத் துளைக்கும்போதும்

மரணத்தின் நீண்ட வலி நெஞ்சைப் பிழிந்த போதும்

தத்தம் வீடுகளில் இவையெட்டாதவரை

தேசமே விருப்புறுதியாகி

இவையனைத்தும் தியாகமென மெட்டமைத்துப் பாடப்படும்!

புலம்பெயர் நாடுகளில்

சாவோலை படித்துக்கொண்டிருக்கும் சில கிழட்டு நரிகள்

கருப்புத்துண்டை கக்கட்டில் சொரிகியபடி

சில்லறைக்கு மௌனித்துக்கொள்ளும் ஒளிச் சட்டகத்துள்

ஊராரின் உயிர்கள்

தேசமென்ற அரக்கியின் பெயரால் வேள்வியாக்பட்டு புதை குழி நிரம்பும்

கேட்பாரின்றி கோலாச்சும் மொழித் தர்பார்

உயிரினது உச்சந் தலையில் மோதிக்கொள்ளும்

உதிர்வதென்வோ

ஊரான் பிள்ளைகளாகத்தாமிருக்கும்

உன் வீட்டுப் பிள்ளையோ

ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும்

பாடம் படித்து

நாளை மேய்ப்பதற்குத் தயாராகும்!

சோசலிசம் புடுங்குவதாகக் கூறியவர்கள்

போதைக்குப் பலியாகி

போய்விடுவார் அற்ப ஆயுளில் உலகெங்கும்!

பரதேசிக் கோலம்பூண்டு

தெருவெல்லாம் படுத்தொழும்பி

தேசத்தின் இதயத்துள் துரோகியென்று பொறித்துவிட்ட

அப்பாவிக் குரல்களை

அடக்கிவிடத் துடிப்பர்

புயலடித்த தேசத்தின் புழுதி மறைத்த சில மனிதர்!

என்றபோதும்

தெரு நாய்கள் குரைப்பதை நிறுத்தாவரை

துரோகிகளும் தூங்க மாட்டார்.

 

22.03.2005

வூப்பெற்றால் ஜேர்மனி -ப.வி.ஸ்ரீரங்கன்

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்