04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

போராட்டம்,வாழ்வு,தமிழுணர்வு:அரசியல்.

இன்றைய உலக வாழ் நிலையானது அதீத தனிநபர்வாதக் கற்பனைகளையுங் காலம் கடந்த மிதவாதக் கனவுகளையும் கலந்து புதிய பாணிலானவொரு ‘வாழ்வியல் மதிப்பீட்டைக்’கட்டிக்கொண்டுள்ளது.இந்த ஒழுங்கமைந்த கட்டகம் நிலவுகின்ற அமைப்பாண்மை வர்க்கத்தின் நலனை மையப்படுத்திய நெறிமுறைமைகளால் தீர்மானிக்கப்பட்ட’ஜனநாயகம்’எனும் கருத்தாக்கத்தால் தீர்மானிக்கப்பட்டதாக உலகு தழுவிய ஒப்பாண்மையாக எடுத்துரைக்கப்படுகிறது.இந்தச் சுகமான அரசியல் ‘ஒப்பாரி’ எந்தச் சந்தர்ப்பத்திலும் சமூகத்தின் விளிம்பில் உந்தித் தள்ளப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாகவில்லை!இது நடவாத காரியமும்கூட.எந்த வர்க்க மக்கள் கூட்டைப் ‘பிரதிநித்துவப்படுத்தும்’ ஆட்சியதிகாரமுள்ளதோ,அதைத்தாம் அந்த ஆட்சி கருத்தியற்தளத்திலும் விதைத்துக் கொண்டிருக்கும்.இதுவே அதன் விழுமியமாகவுமிருக்கிறது.

 

இதுதாம் வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலின் நிலை.

 

இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய’அரசியல்-பொருளியல்’வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல.திடீர் தயாரிப்பான இந்த ‘அலகுகள்’ அந்ததந்த நாடுகளில் இன்னும் ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை-தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய’அலகுகளை’உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை.இத்தகையவொரு சூழலில் எழும் ‘பொருளாதாரச் சிக்கல்கள்’ அந்தந்த மக்களின் -இனக்குழுக்களில் அதிகாரத்துக்காகத் துடிக்கும் சில உடமையாளர்களைத் தமது வசதிக்காக அரசியல் நடாத்தும் கூட்டமாக்கி விட்டுள்ளது.இதுவே நமது நாட்டில் இன்றைய கடைக்கோடி அரசியலாக நாற்றமெடுக்கிறது.இங்கு புலியென்ன ,ஈ.பி.டி.பீ என்ன எல்லாம் அராஜகக் கம்பனிகள்தாம்!

 

இங்கேதாம் தமிழ்பேசும் மக்களினங்களில் நிலவுகின்ற ‘ஊனங்களும்’அந்த ஊனங்களைப் பொறுமையோடு எதிர்கொள்ளப் பக்குவமற்ற அரசியல் வாழ்வும் நமக்கு நேர்கின்றது.இது மக்களையே தமது முன்னெடுப்புகளுக்கு எதிரானதாக மாற்றியெடுத்து அவர்களைப் பலியெடுப்பதில் அதிகாரத்தை உருவாக்கிறது.இந்தத் திமிர்தனமான அதிகாரத்துவம் ‘துப்பாக்கிக் குழலிலிருந்து வருவது’ஒருபகுதியுண்மை மட்டுமே.மாறாக அந்த அதிகாரமானது மிகக் கடுமையான’உளவியற் கருத்தாங்களால் ‘கட்டியமைக்கப்படுகிறது.இது துப்பாக்கியைவிட மிகப் பல்மடங்கு காட்டமானது.இதிலிருந்து கட்டியமைக்கப்பட்ட ‘மனிதவுடலானது’அந்த அதிகாரத்தை மையப்படுத்திய ஒரு வடிவமாக மாற்றப்படுகிறது.இந்த நிகழ்வுப் போக்கானது தலைமுறை,தலைமுறையாகத் தகவமைக்கப்பட்டுக் கடத்தப்படுகிறது.இதைக் கவனப்படுத்தும்போது இன்றைய நமது அரசியலானது இவ்வளவு கீழ்த்தரமாக’மக்கள் விரோதமாக’இருந்தும் அதைத் தேசியத்தின் பேரால் இன்னும் அங்கீகரிக்கும் மனிதவுடல்களையும் அந்தவுடல்களுடாகப் பரதிபலிக்கும் அதிகாரத்துவ மொழிவுகளையும் ‘நாம’; மிக இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.

 

இந்தச் சிக்கலான உறவுகளால் உண்மைபேசுவர்களுக்கு நேரும் கொடூரமான அவமானங்கள் அந்தச் சமுதாயத்தில் பொய்மையும் ,புரட்டும் எவ்வளவுதூரம் ஆழமாக வேரோடி விழுதெறிந்துள்ளதென்பதை நம்மால் உணரமுடிகிறது.இங்கு’விரோதி,துரோகி’என்பது மக்களின் நலனைச் சிதைக்கிறார்களேயெனும் ஆதங்கத்தில் எழுகிறது.தான் நம்பவைக்கப்பட்ட கருத்தியலுக்கு எதிராக உண்மையிருப்பதை அந்த உடலால் ஜீரணிக்க முடிவதில்லை.இந்தச் சிக்கலைத் தெளிவுற வைக்கும் போராட்டமானது முளையிலேயே கிள்ளியெறியப்பட்ட வரலாறு நமது வரலாறாகும்.தியாகி|துரோகி’ என்பதை சமூகவுளவியலில் மிக ஆழமாகவிதை;துவரும் தமிழக்; குறுந்தேசியமானது தனது இருப்பை இதனால் பாதுகாக்க இதுநாள்வரை முனைந்துகொண்டு வருகிறது.இங்கே புதுவை இரத்தினதுரைகளும்,காசி ஆனந்தன்களும் சமூகத்தின் அறங்காவலர்களாகப் பாடிக்கொண்டே தமது அடிவருடித் தனத்தைச் செவ்வனே செய்து பிழைப்பதில் காலத்தைத் தள்ளுவார்கள்.இவர்களைச் சுற்றிய ஊடகங்கள் இத்தகைய கருத்துக்களைத் தேசத்தின்-இனத்தின் நலனாக வாந்தியெடுத்து மக்களின் ஒரு பகுதியை இந்த இருண்ட பகுதிக்குள் கட்டிப் போடுகிறது.இதை வளர்த்தெடுக்கும் இயக்க நலனானது இவற்றைத் தேசிய எழிச்சியாகவேறு பிரகடனப்படுத்தி மக்களை இனவாதிகளாகச் சீரழிக்கிறது.இங்கே கொலைகளும்,மனங்களைச் சிதைப்பதும்,கொடூரமான வசவுகளும் மலிந்து’கொலைக்காரக் காட்டுமிராண்டிச் சமுதாயமாக’தமிழ்ச் சமூகம் சீரழிந்து போகிறது.

 

இது நோய்வாய்ப்பட்ட சமுதாயமாக மாற்றப்பட்டுள்ளது.இந்தச் சமுதாயத்துள் நிலவுகின்ற சமூகவுளவியலானது மிகவும் பின்தங்கிய மொழிவுகளால் முன் நிறுத்தப் பட்டவையல்ல.இது நவீனத்துவ அரசியலின் விளை பொருள்.இதையே முழு முதலாளிய நலன்களும் முன் தள்ளிக் கொண்டு தமது நலன்களைத் தகவமைக்கின்றன.மேற்குலகில் அகதியாக வாழும் நாமிதை வெகுவாக உணரமுடியும்.இந்த நாடுகளில் உருவாக்கப்படும் ‘கருத்தியல் வலுவை’ எமது அநுபவத்தோடு பொருத்தும்போது இவு;வுண்மை இலகுவாகப் புரியமுடியும்.

 

இதிலிருந்து எங்ஙனம் மீள்வது?

 

இங்கேதாம் நமது எல்லை பிடரியில் மோதுகிறது.இவ்வளவு ஒழுங்கமைந்த கட்டமைப்பை-அரசியல் அதிகாரத்துவ நிறுவனங்களை எப்படி வீழ்த்துவது?இதைச் சில உதிரிச் சிந்தனையாளர்களால் வீழ்த்த முடியுமா?உதிரிகளாக அங்கொன்றுமிங்கொன்றுமாகக் கருத்திடும் நம்மால் முடியுமா?பதில் இல்லையென்பதே!பூர்ச்சுவா வர்க்கம்- கட்டமைப்பு தன்னை வலுவாகத் தகவமைத்துப் பாரிய நிறுவனங்களாகச் சமுதாயத்தில் அதிகாரத்தைக் குவித்து ஒழுங்கமைந்த கட்சியோடு வன்முறை ஜந்திரத்தைக் கட்டிவைத்துத் தன்னை மக்கள் பிரதிநிதியாகக் காட்டிக் கொலைகளைச் செய்யும்போது’சில உதிரிகள்’இவற்றுக் கெதிராகக் கலகஞ் செய்வது வரையறைக்குட்பட்டது,இது ஒரு கட்டத்துக்கு மேல் நகர முடியாது.இங்கே ஒழுங்கமைந்தவொரு ‘புரட்சிகரக் கட்சி’யின்றி எதுவும் சாத்தியமில்லை.

 

இன்றைய உலக ஆதிக்க வர்க்கம் மிகக் கவனமாக இருக்கிறது.ஒவ்வொரு தனிநபர்களையும் அதீத சுதந்திரத்தைக் கோரும் நிலைக்குள் தள்ளி சமூகக் கூட்டைத் தகர்த்து ஒற்றை மனிதர்களாக்கியபடியே அவர்களைச் சுய நலமிகளாக்கி விட்டுள்ளது.இத்தகைய மனிதர்களால் சமூகக்கூட்டோடு இசைந்து வாழ்வது முடியாது போய் தனித்த ‘தீவுகளாக’ வாழ்வு நாறுகிறது.இங்கே ஒருவரும் ‘பொதுவான’ வேலைத்திட்டத்துக்கு வரமுடியாதுள்ளது.அவரவர் கொண்டதே கோலமாகிறது.

 

அதிகார வர்க்கமானது ‘புரட்சிகரக் கட்சியின் ‘தோற்றத்தைத் தடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தே வருகிறது.இதை அறிவுத்தளத்திலும்,அதிகாரத்தளத்திலுமிருந்து நகர்த்தி வருகிறது.நவீனத்துக்குப் பின்பான கருத்தியல் வளர்ச்சியானது இதை அறிவுத்தளத்தில் அதிகாரத்துவத்துக்கெதிரான அறவியில் பண்பாக வளர்க்க முற்பட்டு’பின் நவீனத்துவ’தத்துவ விசாரணையாக வளர்த்தெடுத்தது.இங்கே அதிகாரங்களுக்கெதிரான சிந்தனை சோஷலிசக் கட்டமைப்புகளுக்கெதிரானதாக-புரட்சிக் கட்சிக்கு எதிரானதாக மொழியப்பட்டதேயொழிய ஒழுங்கமைந்த பூர்ச்சுவாக் கட்சிக்குகெதிராக ஒரு மண்ணையும் செய்யவில்லை.

 

இன்றைய நிலையில் எவரெவர் ‘புரட்சிக் கட்சி’க்கெதிராகக் குரலிடுகிறாரோ அவர் பாசிசத்தின் அடிவருடியே.தனிநபர்களைப் புரட்சிகரமாகப் பேசவிடும் இந்த முதலாளிய அமைப்பு,அவர்களை இணைத்துக் கட்சி கட்டவிடுவதில்லை.அப்படியொரு புரட்சிக் கட்சி தோன்றும்போது அதை வேரோடு சாய்க்கப் பல் முனைத் தாக்குதலில் இறங்கி, அந்தக் கட்சியைச் சிதைத்து மக்கள் விரோதக் கட்சியாக்கி விடுகிறது.இந்நிலையில் தனிநபர் எவ்வளவு புரட்சி பேசினாலும் ஒரு மண்ணும் நிகழ வாய்ப்பில்லை.இங்கேதாம்’மனமுடக்கங்களும்,சிதைவுகளும்’ தனிநபர்வாதமாக மாறுகிறது.இது தவிர்க்க முடியாதவொரு இயங்கில்போக்காகும்.

 

இத்தகையவொரு சூழலில் தமிழ்பேசும் மக்களின் இருள் சூழ்ந்த இந்தச் சமூகவாழ்வைப் போக்குவதற்கு இயலாமை நிலவுகிறது.இதனால் அராஜகத்துக்கு முகங்கொடுக்கும் மக்கள் ஸ்தாபனமடையாதிருக்கேற்வாறு’அதிகாரவர்க்கம்’செயற்படுகிறது.இத்தகைய நிலைமையில் அராஜகவாதிகளே தம்மை ‘ஜனநாயக வாதிகளாக’க்காட்டிக் கொண்டு மக்களரங்குக்கு வருகிறார்கள்(ஈ.பி.டி.பீ,ஈ.பி.ஆர்.எல்.எப்.,புளட் இப்படிப் பலர்…).இவர்களுக்குப் பாசிச உள்நாட்டு-உலக அதிகாரவர்க்கத்தோடு பாரிய கூட்டுண்டு.இவர்கள் நிலவுகின்ற கொடுமைகளுக்கெதிராகக் குரல் கொடுப்பது போல்(டக்ளசின் தினமொருமடலை அவரது வானொலியான இதயவீணை காவி வருவதைக் கவனிக்கவும்) தம்மைக் காட்டி மக்களைக் கருவறுக்கும் அரசுகளுக்கு-அதிகாரங்களுக்குத் துணைபோகின்றனர்.

 

இத்தகைய கயவர்களின் ஜனநாயக முழக்கமானது போலியானது.இதற்கும் புலிகளின்’கொடூர அராஜக’ அரசியலுக்கும் வித்தியாசம்’அடியாட்’படையில் மட்டுமே நிலவமுடியும்.இத்தகைய கயவர்கள் புலிகளுக்கு மாற்றுக் கிடையாது.எனவே நமக்கு நாமே துணையென மக்கள் தமது ‘ஸ்தாபனமடையும் வலுவைப்’ பேணி ‘புரட்சிகர’அரசியலை முன்னெடுக்க உதிரிகளான நாம் முதலில் ஒன்றிணையும் நிலைக்கு வந்தாகவேண்டும்.இது இல்லையானால் எமது எல்லைக்குட்பட்ட நகர்வு இறுதியில் நம்மைத் தோல்வியில் தள்ளிவிட்டு, நகர்ந்து வெகு தூரம் சென்றுவிடும்.இந்த நிலையில்,அராஜகம் மக்களைக் காவுகொண்டு, தன்னை முன் நிறுத்திய அரசிலூடாக நமது மக்களுக்கு’மாகாண சுயாட்சி’சொல்லிக் கொண்டு தமது வருவாய்கு ஏற்ற பதவிகளோடு ஒன்றிவிட்டு,மக்களைக் கொன்று குவித்து வருவதை எவராலும் தடுக்க முடியாது. இங்கே ஒன்றிணைந்த தொழிலாளர் ஒற்றுமை சிதைந்து உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்குப் பலிபோவது உலகம் பூராகவுமுள்ள சாபக்கேடாக இருக்கிறது.

 

ஐக்கியப்பட்ட இலங்கைப் புரட்சியானது நேபாளத்தின் ‘நிலைக்கு’ மாறுவதை உலகம் விரும்பவில்லை,குறிப்பாக இந்திய ஆளும் வர்க்கத்துக்கு இது பாரிய தலையிடி.இங்கே இந்த நிகழ்வை முளையிலேயே புலிகள் கிள்ளி எறிந்தும் இவர்கள் திருப்தியின்றி மேன்மேலும் புரட்சிகர அரசியலைச் சிதைக்கப் பலரூபம் எடுக்கிறார்கள்.அதில் ஒரு உரூபம் ஈ.பி.டி.பீயும்,டக்ளசும்.மற்றது ஆனந்தசங்கரி…சிங்களத் தரப்பில் ஜே.வி.பீ,பேரினவாதக்கட்சிகள்,பௌத்த துறவிகளெனப் பல வடிவங்களாக இது விரிகிறது.நாமோ உதிரிகளாகி உருக் குலையும் நிலையில் ஓலமிடுகிறோம்.

 

மக்கள் அராஜகத்துக்குப் பலியாகிக் கொத்தடிமையாகிறார்கள்.அகதியாகி அல்லல் படும் நாம் ‘சொகுசு’வாழ்வோடு கத்துகிறோமென்று கருத்துவளையத்துக்குள் தலையைக் கொடுத்தவர்கள் கூறுகிறார்கள்.காலம் நம்மெல்லோரையுங் கடந்து நகர்கிறது.அதை விட்டுவிட்டு,அதன் பின்னால் நாம் நாய்யோட்டம் போடுகிறோம்.வாழ்க மக்கள் ஜனநாயகம்.

 

ப.வி.ஸ்ரீரங்கன்


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்