04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

ஈர விழிகளும் இதய வலியும்...

உலக மக்களிடம் நாளந்தம் ஒரு நிகழ்வு நன்மையானதாகவோ அன்றித் தீமையாகவோ வந்து தொலைகிறது.இலங்கைத் தமிழிரின் வாழ்வில் இவை வேறொரு வடிவில்'சாவு,கொலை'- தீமைகளாகவே வருகின்றது!எம் வாழ்வில் மகிழ்வோடு பண்டிகைகள் வருவதில்லை.குருதி கொட்டி உயிரிழந்த உடல்களைச் சுமந்து வரும் பண்டிகைகளும்,வாழ்வும் எம்மை வருத்துகிறது.போதுமடசாமி!

 

போர்,இயற்கை அழிவு,ஆயுத்தால் மனிதவொடுக்குமுறை,அரச பயங்கரவாதம்-அட்டூழியம்!சர்வதிகாரச் சிங்கள அரசும்,ஆயுதக் குழுக்களும் பேயாட்சி செய்ய-இம்மென்றால் கொலையென்று காட்டாட்சி செய்ய, மக்களோ இருவேறு அரசஜந்திரங்களுக்கு முகங் கொடுத்து வாழும் துயரச் சூழலில்தாம் ஓ...அந்தத் துயரக் கொடுமை சுனாமிப் பேரலையாக எங்கள் குஞ்சுகளை,அவர்கள் உறவுகளை அள்ளிச் சென்றது.

 

அள்ளியுண்ட வாயும்,உணவளைந்த பிஞ்சுக்கரங்களும்,அம்மாவின் மடியில் தொட்டில் கட்டிய குழவியும்,முற்றத்தில் தவழ்ந்த சின்னக்கால்களும் அள்ளுப்பட்ட பேரலை அவலம் ஆருக்குத்தாம் நோகவில்லை? பல இரவுகள் அமைதியிழந்த உளத்தோடு நகர்ந்துள்ளன.அற்புதமான எங்கள் மழலைகள்- பிஞ்சுகளை இறால்களைப்போல் அள்ளிக் கொட்டிய அவலத்தை எப்படித்தாம் மறப்போம்?ஆருமே அறியாத பேரவலச்சாவு அவர்களைத் தேடிச்சென்று தின்று ஏப்பம்விட்டது.இதைச் சொல்லாமலா போகும் நமது பொழுது?பொழுதுகள் போகலாம்,மாதங்கள் நகர்ந்து வருடங்கள் கழியலாம்-காலம் கடந்து கண்ணீரும் வற்றலாம் என்றபோதும் சுனாமி அள்ளிச்சென்ற எம் பிஞ்சுகளின் குஞ்சுக் கனவுகளை மறக்கமுடியுமா?மௌனத்தில் ஆழ்ந்து சோகம் கப்பிய வலியோடு சென்ற வருடத்தை எதிர்கொண்டோம்.அதே வருடம் கழிந்து இன்னொரு வருடம் எதிர்வரப்போகும் இந்தப் பொழுதில் மீளவும் இதயத்துள் அதிர்வுகளைத் தரும் பொழுதுகளாகப் பிஞ்சுகளின் உடல்கள்...

 

ஐயோவென்றழைத்த பிஞ்சுக் குரலைக் கேட்டுப் பேசுவதற்காகக் குரலெடுத்த அன்னையின் பாசக்குரலை,நேசக்கரத்தை ஒடித்தெறிந்து,கடலோரத்தே கொன்ற இந்தச் சுனாமியை யார் அறிந்தார்!உப்புக்கு வழிதேடித் தன்னையுருக்கச் சென்ற அப்பன் கடலேறிச் சென்று கரையொதுங்குவதற்குள் அவன்கூடு பிய்த்தெறியப்பட்ட அவலத்தை யார் பாடுவார்? இதயத்தைக் கீறி நொந்த பொழுதுகளை அமிழ்த்தும் சுனாமி, என் தேசத்துப் பிஞ்சுகளைக் கொன்றழித்தபின் இன்னொரு சுனாமிக்கு வழிகோலும் இருளின் தூதர்களுக்கு மத்தியில் இதோ சில குரல்கள்!

 

என் தேசக் குஞ்சுகளின் தோள்களில் மெல்லக் கரம் பதித்து நேசப் பொழிவுகளைச் சின்னக் குரல்களால் சொல்லும் 'அவர்கள'; நண்பர்களை நான் இங்கு அழைத்துக்கொள்கிறேன்!வாசுகி,அனுஷா,பகீரதி,ஆனந்தப்பா குரலெடுக்க என் அன்புக் கவிஞர் சிவம்,டானியல் ,லிங்கம் வரியமைக்க,உச்சி முகரும் இசையைப் பிழிந்து குழைக்கிறான் சம்பத் என்ற சிங்களத்துச் சோதரன்!அப்பப்பா ...இசை வலியைத் தூண்டி மரணித்த மழலைகளின் கனவுகளைத் தரிசிக்க வைக்கிறது.சின்னஞ்சிறுவரின் செல்லக் கனவுகளைச் சுமந்த டானியலின்,சிவத்தின் ,லிங்கத்தின் மென்னுணர்வை அதிர வைக்கும் இரக்கம் நிறைந்த இந்தப் பாடல்கள் எம் மக்களின்'அவலச் சாவை'இயற்கை அனர்தத்தால்-போரால் சிதைந்த வாழ்வைப் பாடுபொருளாக,இழந்தவுறவுகளை தினம் தேடியலையும் உயிர்த்திருக்கும் சொந்தங்களின் சோகக்கதைகளைச் சொல்லித்திரியும் ஈரவிழிகள்!

 

நொந்துபோன என் தேசத்து மக்களுக்காக,நைந்துபோன உறவுகளுக்காக ,சிதைந்துபோன அவர் கூடுகளுக்காக-நெஞ்சையள்ளி நினைவைச் சுமந்து நோகின்ற எங்கள் கவிக் காரர்கள் இந்தச் சின்னப் பாட்டுக் குறுந்தகட்டில் கூடிக் குரலிடுகிறார்கள்.

 

கனடாவின் பரந்த வெளிகளில் அங்கொன்றுமிங்கொன்றுமாகச் சிதறுண்டு வாழும் என் தேசத்து உறவுகள் நீட்டும் பாசக் கரங்கள் பேசும் இசைக் கோலம்தாம்'ஈரவிழிகள்'எனும் ஒலிப்பேழை.ரொறன்டோவின் மானுட நெரிசலில்,அவதியுறும் வேலைப் பளுவுக்குள் இந்த இசைத்தொகுப்பின் முயற்சியானது எமது மக்களின் உயிர்த்துடிப்பான மனிதாபிமானத்தைப் பறைசாற்றுகிறது.அன்பு-தேசத்தின்மீது,தன் குடும்பத்தின்மீது,தன்னைச் சுற்றி வாழும் சுற்றத்தின்மீது,தேசத்துத் தன் மக்கள்மீது பற்றோடு, பாசத்தோடு அன்பு கொள்வதாலேயேதாம் இந்தவுலகு இதுவரை பல தியாகங்களைச் செய்கிறது!இந்த உணர்வானது கனடாவில் அகதிகளாக வாழும் நம்மில் சிலரை வாழ்விழந்த எம் உறவுகளுக்காக தவித்துக்கொள்ளும் இதயத்தோடு ஒரு துளி நினைவைத் தடம்பதித்துப் பாடல்களாகத் தந்திவிடத் தூண்டியுள்ளது.

 

தொலைந்த தம்முறவுகளைத் தேடியலையும் மனிதர்களின் குரலாய் ஆனந்தப்பாவின் குரலில் வரும் அற்புதமான பாடல் வரிகளை டானியல் எழுதியிருக்கிறார். இலக்கியச் சந்திப்புகளில் மேசையில் தாளம் தட்டிப் பாடிய அவரது பாடல்களை ஞாபகப்படுத்திப்பார்க்கிறேன்.அற்புதமான கவியாற்றல் நிறைந்த கலைஞன்,தியாகவுள்ளம் நிறைந்த போராளிக்கலைஞன்,தனது மக்களுக்காகத் தன் உயிரையே விடுவதற்குத் தயங்காத அற்புதமான உள்ளங்கொண்டவனின் கவிவரிகள் நம் மனதில் பாச அதிர்வுகளை கிளப்பி எம் உறவுகள்மீது கவனத்தைக் குவிக்கிறது.சுனாமிக்காக,போருக்காக,அவலமாக மக்கள் இறக்கின்றார்கள். துரோகி-தியாகியென மக்கள்,உறவுகள் கொல்லப்படும் நமது சூழலில் ஒவ்வொரு வீட்டிலிலும் மரணத்தின் வலுக்கரங்கள் புதைந்துகிடக்கிறது.தினமும் தரையில் பட்டுத்தெறிக்கும் மனிதக் குருதியானது நமது வாழ்வின் அழகையே கறைப்படுத்திவிடுகிறது.உறவுகள் அழிந்து போகிறார்கள்.சுற்றஞ் சூழல் இல்லாதுபோய் வாழ்விடங்கள் சுடுகாடாய்ப் போகிறது.கவிஞன் தன் தலையிலடித்துக் கொண்டு உறவுகளைத் தேடியலைகிறான்,மனித அரவமேயின்றிக் கிடக்கும் யுத்தபூமியில் நின்று உறவுகளைத் தேடி நெடுந்தூரம் அலைகிறான்.எதுவுமே தென்படவில்லை.அப்போது அவன் உள்ளம் பாசத்தால் துவண்டு,நேசக்கரத்தோடு குரலெடுத்துப் பாடுகிறான்:

 

'ஈர விழியோடு

கூவி அழைக்கின்றேன்

தூரமான சொந்தம் தேடியழுகின்றேன்

என் அண்ணன் எங்கே,

என் தங்கை எங்கே,

என் அன்னை எங்கே

என் சுற்றம் எங்கே?...'

 

இந்தக் கேள்விகள்தாம் இன்றுவரை நம்மைக் குடையும் கேள்விகள்!தொலைக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் இலங்கைத் தமிழர்களிடம் இந்த உணர்வே எங்கும்,எதிலும் ஓங்கியொலிக்கிறது.மனதின் மூலையில் மௌனிக்க முடியாத இந்த உணர்வு தேசத்தின் விருப்புகளைக் கடந்து உறவுகளோடு அமைதியாக,அண்மித்துக்கொண்டு கரம்பிணைத்திடவும்,அன்னையின் கைகளால் குழைத்த பழஞ்சோற்றைக் கை நிறையவேண்டி உண்பதைக் கனவுகளாக்கிய காலத்தை எந்த வகையில் நோக? நிலாவின் நெஞ்சு நிறையும் குளிர்ச்சியும்,சித்திரைப் பனியும் சேர்ந்தே வரும் சோழகக்காற்றும் இழந்த இவ்வாழ்வால் சுனாமியின் சோகம் கப்பிய எம்மக்கள்தம் வாழ்வை நான் நெஞ்சு கனக்கப் புரிவது சர்வ சாதரணமானதாக நிகழ்கிறது.நாம் துயருறும் துன்பியலானது பொதுவில் அனைவருக்கும் பொதுவாகிறது. ஈர விழியாலே...என்ற பாடலை மிக நேர்த்தியாக இசையோடு இணைந்து குரலைப் பதப்படுத்தி அற்புதமாக அநுபவித்துப் பாடும் ஆனந்தப்பா எம்மை அதிர வைக்கிறார்.

 

சின்னஞ்சிறிய பாலகி வாசுகி கதிர்காமநாதன்.

'அம்மா அப்பா எங்கே

அண்ணன் அக்கா எங்கே

மாமா மாமி சின்னத் தம்பி எங்கே' -

 

என்று மழலை ததும்பக் குரலெடுத்துப் பாடும் அந்தக் கணமானது சுனாமியைச் சபிக்க வைக்கிறது.தன் வயதொத்த மழலைகள் மடிந்துபோன சோகத்தை நெஞ்சுக்குள் நிறைத்துப் பாடலாக்கிறாளா என்று எண்ணும்படி அழகாகப்பாடுகிறாள்.மீளமீளக் கேட்கும்படி மழலையால் தேம்பியழும் சின்னப் பெண்ணின் குரல் செவிகளில் ரிங்காரமிடுகிறது.

 

'சொல்லவா என் சோகம்

இல்லையே வாழும் தேசம்...'

 

என்ற பாடலானது சிவத்தின் அதீதமான உணர்வுத்தெறிப்பால் நம் நெஞ்சை உருக்கி விடுகிறது.இந்த அவரது உருக்கத்துக்கு அனுஷா சிவலிங்கம் தன் கணீரென்ற குரலால் வளம் சேர்க்கிறார்.இதற்கு மெட்டுப்போட்ட முறையே நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துவதும்,எமது சோகத்தை இன்னும் அதிகமாக்கி அந்தப் பெரும் சுனாமியால் அள்ளிச் செல்லப்பட்ட துணையை நினைத்து ஏங்கும் துணைவனின் மனதை எமது செவிகளுக்குப் பாடலாக்கி நமது உள்ளத்தைப் பிழிந்துவிடுகிறார் இந்தப் பாடகி.மிகச்சிறந்த எதிர்காலம் இந்தப் பாடகிக்கு இருக்கிறது.இவர் இன்னும் முயற்ச்சியெடுத்தால் தரமானவொரு பாடகியாக எதிர்காலத்தில் மிளிர முடியும்.

 

சிவத்தின் இந்தப் பாடலில் அதீதமான வீச்சு உறவுகளின் இழப்பைத் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் வரிகளுக்கே சொந்தம்.தன்னை இழப்பாக்கித் தன்வீட்டில் நிகழ்ந்த கொடுமையாகக் கவிஞன் தன்னையிந்தக் கோரத்துக்குள் திணித்துக்கொண்டு, தானே தன் துணையைத் தொலைத்து நடுத் தெருவில் நிற்பதாக உணர்கிறான்!இந்தக் காரியமானது நம்மை அந்தக் கவிதைகளுக்குள் இழந்துபோக வைக்கும் ஆற்றலை அந்தப்பாடல் கொண்டியங்குகிறது.இந்தச் சுனாமியின் கொடுமை சொல்லத்தக்க சோகத்தை எமக்குத் தரவில்லை.அதன் கொடூரம் நம் சிந்தைக்கள் அடங்காத மகாக் கொடூரம். உலகத்தின் இருப்பையே அசைத்த அந்தப் பேரலைகளைக் காவி வரும் கடலின் பேரதிவர்வையே அதிர வைக்கும் பாடல்களை இந்த ஒலிப் பேழை தாங்கி வைத்திருக்கிறது.

 

இங்கே-

'என் சோகமே...' என்ற லிங்கத்தின் வரிகள் பகிரதி செல்வராஜாவால் பாடப்படுகிறது.இசையும் பாடல் வரிகளும் தனித்தனியாக இழுபடுகிறது.பாடலின் உச்சமாக இருப்பது பகிரதியின் குரலும் அந்தப்பாடல் குறித்து வைத்திருக்கும் சோகச் சுமை காவும் வரிகளுமாகும்.இந்தப் பாடலுக்கு மெட்டுப் பொருந்தாமல் துருத்திக்கொண்டிருப்பினும் அடுத்தடுத்த பாடல்களில் மெட்டுக்கள் மெருக்கேற்றிவிடுகின்றன பாடல் வரிகளுக்கு.

 

'கேக்கிறதா கேக்கிறதா...' என்ற பாடலுக்கு அமைக்கப்பட்ட மெட்டானது மெல்ல அந்த வரிகளை அணைக்க முனைகிறது.அனுஷா இந்த ஒலிப் பேழையின் சிறந்த பாடகி. ஆனந்தப்பா இப் பேழையின் அதிகமான பாடல்களுக்கு உயிர் கொடுத்து சம்பத்தோடு மெட்டமைத்திருக்கிறார்.அற்புதமான குரலை இசைக் கேற்றவாறு பதமாக்கிப் பாடும் வலு இந்த ஆனந்தப்பாவுக்குக் கைகூடுகிறது.

 

'ஈர விழியோடு கூவி அழைக்கின்றேன்...'திரும்பத் திரும்ப நம்மைப் பாட வைக்கும் அற்புதமான பாடல்.

 

இவ்வொலிப்பேழையின் எட்டுப் பாடல்களும் ஒவ்வொரு வகையில் சுனாமியின் கோரத்தை நம்மோடு பகிர்ந்து நம்மை அந்தச் சோகத்தின் எல்லைக்குள் இழுத்து,மனிதநேயத்தை உரசிப்பார்க்கும் அதே வேளை இந்தக் கொடுமையின் வரலாற்றுப் பதிவுக்குள் வைத்திருக்கும் என்றும்.

 

இறுதியாக ஆனந்தப்பா தவிர்ந்து அனைத்துப் பாடகிகளும் வார்த்தைகளை விழுங்கியே பாடுகிறார்கள்.இவர்களுக்கு அற்புதமான குரல் வாய்த்திருக்கிறது.அதை வளர்தெடுப்பதும்,வார்த்தைகளைத் தெளிவாக உச்சரிப்பதும் பாடல்களை-வரிகளை உள்ளது உள்ளமாதிரி விளங்கிக் கொள்ள அவசியமாகும்.

 

இந்த நேரத்தில் என்னால் இன்னுமொன்றையும் புரிந்துகொள்ளமுடிகிறது! இந்தச் சிறிய பாடகிகள் யாவரும் மேல் நாடுகளில் பிறந்து அந்நிய மொழியில் கல்வி பயில்பவர்கள்.அவர்களது இந்த வாழ்வியலோடு தமிழை இந்தக் குழந்தைகள் இவ்வளவு அழகாகப்பாடுவதே மேல்தாம்!

 

இந்தப் பேழையின் உச்சபச்ச உருக்கமானது எங்கள் மக்களின் அவலத்தின் துயரச் சுமைகளை,வாழ்வின் விதியை-இயற்கையின் முன் மனிதர்கள் பட்ட அவதியைச் சொல்வதாகும்.அதைச் சொல்வதிலும் ,அந்தச் சோகத்தைப் புரிந்து கொள்வதிலும் குறியாகவிருக்கும் இந்த ஒலிப் பேழையின் கவிஞர்கள் தமது நோக்கத்தில் வெற்றியீட்டிவிடுகிறார்கள்.

 

ப.வி.ஸ்ரீரங்கன்

வூப்பெற்றால்,ஜேர்மனி.

03.12.2005

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்