இனம் மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலைகள் ஆசிரியர்மாணவர் மாணவர்
வீகிதம் பாடசாலை வீகிதம்
தமிழ் 30 224 1267 90 23.85 335
சிங்களம் 22 661 1576 67 14.37 338
முஸ்லிம் 34 810 1038 79 33.53 440
தீவிர இனவாதத்தால் சூறையாடப்படும் திருகோணமலையில் சிங்கள மக்கள் அனுபவிக்கும் சலுகைளை நாம் மேலே தெளிவாக காண்கின்றோம். அதிலும் முஸ்லீம் மக்கள் கல்வியில் சந்திக்கும் நெருக்கடி தமிழ் மக்களை விட அதிகமாக இருப்பதை இது காட்டுகின்றது. உயர்தரபாடசாலைகளை யாழ்ப்பாணத்துடன் ஒப்பிடும் போது ஒரு விஞ்ஞான பாடசாலைக்கு மாணவர்கள் எண்ணிக்கை திருகோணமலையில் 6596 யும், யாழ்ப்பாணத்தில் 4940 யாகவும் காணப்படுகின்றது. ஒரு விஞ்ஞான ஆசிரியருக்கு யாழ்ப்பாணத்தில் 527 மாணவராக இருக்க திருமோணமலையில் 1118 யாக காணப்படுகின்றது. இது இனம் மற்றும் சிறுபான்மை இனம் என்று பிரிகின்ற போது ஆழமான கல்விப்பிளவை ஏற்படுத்துகின்றது. ஆனால் தமிழ் தேசியம் இந்த அடிப்படை விடையத்தையிட்டு என்றுமே போராடவில்லை. ஏன் என்பது தமிழ் தேசியத்தின் பிற்போக்குத் தன்மை துல்லியமாக நிர்வாணமாக்குகின்றது.
முஸ்லீம் மற்றும் மலையக தமிழ் மக்களின் கல்வி இலங்கையில் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது. 1981-82 கல்வி ஆண்டில் மருத்துவ துறைக்கான விகிதம் சிங்களவர் 72.4யும், தமிழர் 25.3யும் பெற்ற அதேநேரம், முஸ்லீம் உள்ளிட்ட மலையகத்தைச் சேர்ந்தோரும் 2.3சதவீதத்தை பெற்று புறக்கணிப்புக்குள்ளாகி காணப்படுகின்றனர். இங்கும் யாழ் சமூகமே அதிகரித்த இடங்களை பெறுகின்றது. 1969-70 இல் மருத்துவ துறைக்கு தெரிவான முஸ்லீம்களின் எண்ணிக்கை 0.9சதவீதமாகும். 1979-81 இலங்கையில் முஸ்லீம் டாக்டர்களின் எண்ணிக்கை 2.93 சதவீதம் மட்டுமேயாகும். கல்வியின் மிக மோசமான பாதிப்பை மலையக மற்றும் முஸ்லீம் மக்கள் சந்திக்கின்றனர். அதன் தொடர்ச்சியில் பின் தங்கிய தமிழ் மாவட்டங்கள் சந்திக்கின்றன. ஆனால் தமிழ் தேசியம் இதையிட்டு மூச்சுக் கூட விடவில்லை. இதை பூசிமொழுகியே போராட்டத்தை யாழ் நலன்களை பேணும் போராட்டமாக்கியது. இது ஒரு சமூகத்தின் அனைத்து துறையிலும் பொதுவாக பொருந்தும் வகையில் கையாளப்பட்டது. இந்த சமூக புறக்கணிப்பு வர்க்கம், இனம்,பிரதேசவாதம், சாதியம் என்ற அடிப்படையில் கையாளப்பட்டது. இதை இலங்கையை ஆளும் வர்க்கங்களும், தமிழ் தேசியத்துக்கு தலைமை தாங்கிய வர்க்கமும் திட்டமிட்டே இன்று வரை தனது பொதுக் கொள்கையாகக் கொள்கின்றது. இதனால் சமூகப் பிளவுகள் ஆழமாகின்றன.
இனவாதம் திட்டமிட்டு செய்யும் மொழி ரீதியான ஒடுக்குமுறையும், தமிழ் தேசியத்தின் குறுந்தேசியவாதமும் முஸ்லீம் மக்களை ஒடுக்குவதில் சமாந்தரமாக செயற்படுகின்றது. இது தமிழ்மொழிக் கல்விக்கு எதிராக மாறுகின்றது. 1991 இல் முழு நாட்டிலும் 44 775 முஸ்லீம் மாணவர்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இது மொத்த முஸ்லீம மாணவர்களில் 13.05 சதவீதமாகுமளவுக்கு இனவழிப்பு விரிவாகியுள்ளது. தமிழ் தேசியம் இவற்றை எல்லாம் தமிழ் இனம் என்ற அடிப்படையில் முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக்குரிய போராட்டத்தை கைவிட்டு, முஸ்லீம் மக்களை எதிரியாகக் காட்டி ஒடுக்கும் போது, தேசிய அழிப்புக்கு துணைபோவது தான் நிகழ்ந்தது, நிகழ்கின்றது. இதைத்தான் அன்று மலையக மக்களுக்கு எதிராக ஐp.ஐp. பொன்னம்பலமும் செய்தார். இதைத்தான் இன்று தமிழ் தேசியம் தமிழ் என்று பொதுமைப்படுத்தியபடி, மற்றைய சிறுபான்மை மக்களுக்கு எதிராக செய்கின்றது. இது தமிழ்தேசிய அடிப்படைக்கு எதிரானதாகவே இருக்கின்றது. இந்த யாழ் தேசியம் எப்படி தேசியத்தில் பிற்போக்காகவும், ஏகாதிபத்திய வாலாகவும் நீடிக்கின்றது என்பதற்கு அண்மைய அறிவிப்பு ஒன்று தெளிவாக வெளிப்படுத்தியது. அண்மையில் யாழ் உயர்தரப் பாடசாலை ஒன்றில் அனைத்துப்பாடத்தையும் ஆங்கிலத்தில் கற்பிக்க தொடங்கியுள்ளது. இந்த யாழ் மேட்டுக்குடிகளின் ப+ர்சுவாதனத்தையும், ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தையும் தமிழ் தேசியம் மௌனமாக அங்கீகரிப்பதுதான், இதில் வேடிக்கையான உண்மையாகும். இந்த அறிவித்தலையிட்டு தமிழ்தேசியத்தின் எந்த தரப்பில் இருந்தும் எதிர்ப்புக் குரல் கூட எழவில்லை. ஒரு மொழி அழிவுக்கு வித்திட்டுள்ள சவாலை தேசியம் அங்கீகரித்து ஆதரிக்கின்றது. இந்த யாழ் தேசியம் சொந்த மொழிக்கே எதிரானதாக இருப்பது தெளிவாகின்றது.
1998 இல் பொதுவாக இலங்கையில் 124 மாணவருக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் இருக்க, இது மலையகத்தில் 500க்கு ஒன்றாக உள்ளது. மலையகத்தில் பாடசாலை கல்வி நிர்வாகிகள் 118 பேர் தேவையாக இருக்க, வெறுமனே ஒன்பது பேரே உள்ளனர்.
தமிழ் தேசியம் தனது பொதுமைப்படுத்தலூடாக யாழ் தேசியத்தை உயர்த்தி, தனது நலன்களையே தக்கவைக்கின்றனர். இதற்காக மலையக மக்கள் பலியிடப்படுகின்றனர். இதை தெளிவுபடுத்தும் வகையில் 1998 இல் உயர் கல்விகான க.பொ.த (உ.த) பரீட்சையில் 180 000 பேர் பங்குகொண்டனர். இதில் மலையக மக்கள் 1000 முதல் 1500 பேரை பரீட்சை எழுதினர். க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு 1996இல் 5 லட்சம் மாணவர்கள் அமர்ந்தனர். இதில் மலையக மாணவர்கள் வெறுமனே 3000 பேர் மட்டுமே. சமூகத்தின் பிரச்சனைகளை தமிழ் தேசியம் என்ற பொதுமைப்படுத்துபவர்கள், அந்த மக்களுக்காக போராடவும் அவர்கள் உரிமையை கோரவும் விட்டுக் கொடுக்கவும் தயாராக இருந்ததில்லை, இருக்கப்போவதில்லை.
12 பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயிலும் 33 000 மாணவர்களில் மலையக மாணவர்கள் எண்ணிக்கை 200 க்கும் குறைவாகவே உள்ளனர். இது மொத்த மாணவரில் 0.5 சதவீதமாகும். மலையக மக்கள் இன விகிதாசார அடிப்படையில் வருடம் 540 பேருக்கு பல்கலைக்கழகம் கிடைக்க வேண்டும். இந்த அவலத்தை தமிழ்தேசியம் பிரித்தெடுத்துக் காட்டி அவர்களுக்காக போராடவில்லை. மாறாக தமிழ் என்ற பொதுமைப்படுத்தி பின் இன விகிதாசார குறைவுகளையும் சுட்டிக்காட்டி, யாழ் நலனை மறைமுகமாக கோருகின்றது. மலையகத்தின் கல்வி அவலம் நிலவுகின்ற அளவுக்கு நிலவும் சமூக பொருளாதார பண்பாட்டுச் சூழலை மாற்றி அமைக்க, தேசியம் மூச்சுக் கூட விடவில்லை. இதுவே யாழ் தேசியத்தின் பொதுக் கொள்கையும் கூட.
மலையகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது ஒருவிதியாக உள்ளது. மத்திய மாகாணத்தில் ஆசிரியர் தேவை 5220 யாக இருக்க, 1930 ஆசிரியர்களே உள்ளனர். மாணவர் ஆசிரியர் விகிதம் நுவரெலியாவில் 45க்கு ஒன்றாகவும், கண்டியில் 34 க்கு ஒன்றாகவும், மாத்தறையில் 32 க்கு ஒன்றாகவும், மாகாணத்தின் சராசரியாக 24க்கும் ஒன்றாகவும் உள்ளது. இந்த சராசரியை விரித்துப் பார்த்தால் சிங்கள ஆசிரியர்களின் அதிகரித்த எண்ணிக்கையும், மலையக மாணவர்களின் மேல் திட்டமிட்ட இன ஒழிப்பும் தெளிவாகவே அம்பலம் செய்கின்றது. ஆனால் தமிழ் தேசியம் இதைப் பற்றி அக்கறைப்பட்டதில்லை. தமிழ் தேசியத்தை பற்றி பீற்றும் தமிழர் ஆசிரியர்சங்கம், ஊளையிட்டுக் கூறும் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையை பொதுமைப்படுத்தி யாழ்மையவாதத்தை உயர்த்துகின்றனர். தமிழ் ஆசிரியர் பற்றாக்குறை என்பது உண்மையில் மலையகத்தில் ஆழமாகவும் அகலமாகவும் செறிந்துள்ளது. இந்தப் பற்றாக்குறையை தமிழ் தேசிய இனப்பிரச்சனையூடாக தீர்க்க முடியாது. தேசியம் யாழ் மையவாதமாக இருப்பதால் இதை தனக்கு சாதகமாகவே பயன்படுத்தும். அரசு துறையில் உள்ளவர்களை வேலையை விட்டு நீக்க கோரும் உலகவங்கியும் உலகமயமாதலும், தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க தடையாக இருக்கும். அத்துடன் அதிகளவில் காணப்படும் சிங்கள ஆசிரியரை குறைக்க முடியாத இனவாதம் புரையோடிப்போயுள்ளது. இந்த நிலையில் தமிழ் குறுந் தேசியம் தனது ஏகாதிபத்திய உலகமயமாதல் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, மலையக மக்களின் கல்விக்காக எதையும் செய்யப்போவதில்லை. மாறாக உலகமயமாதல் நிபந்தனைகளை மண்டியிட்டு செயல்படுத்துவார்கள்.
தமிழ் குறுந் தேசியத்தின் பொதுமைப்படுத்தலுக்கு பின்னால் உண்மையை தெளிவாக புரிந்து கொள்ள மேலும் விரிவாக பார்ப்போம். மலையக தமிழ் ஆசிரியர்கள் 9228 பேர் பற்றாக்குறையாக இருக்க, 5433 பேரே உள்ளனர். திட்டமிட்ட இன அழிப்பிலும், வர்க்க ஒடுக்குமுறையிலும் தமிழ் தேசியம் சிங்கள அரசுடன் கைகோர்த்து நின்றதையே வரலாறு காட்டுகின்றது. மலையக தமிழ் பாடாசாலையில் பட்டதாரி ஆசிரியர்கள் 7 சதவீதமாக இருக்க, இது சிங்கள பகுதியில் 25 சதவீதமாகவும், முஸ்லீம் பாடசாலையில் 17 சதவீதமாகவும் காணப்படுகின்றது. மலையக பாடசாலையில் பயிற்றப்படாத ஆசிரியர் தொகை 55 சதவீதமாக உள்ளது. சிங்கள பாடசாலையில் 19.3 மாணவருக்கு ஒரு ஆசிரியரும், முஸ்லீம் பாடசாலையில் 20 பேருக்கு ஒருவரும், மலையகதமிழ் மாணவருக்கு 37 பேருக்கு ஒரு ஆசிரியரும் காணப்படுகின்றனர். 1994 இல் ஆசிரியர் மாணவர் விகிதம் சிங்கள மொழிப் பாடசாலையில் 18 க்கு ஒன்றாகவும், தமிழ்மொழிப் பாடசாலைகள் 43க்கு ஒன்iறாகவும், தமிழ் முஸ்லீம் மொழிப் பாடசாலைகள் 21க்கு ஒன்றாகவும் உள்ளது.
1996 ம் ஆண்டு மதிப்பீடுகளின் படி 72சதவீதமான சிங்கள ஆசிரியர்கள் பட்டதாரிகள் அல்லது பயிற்றப்பட்டவர்கள். இது முஸ்லீம் பாடசாலைகளில் 72யாகவும், மலையக தமிழ் பாடசாலைகளில் 45 சதவீதமாகவும் உள்ளது. இந்த அவலத்தை மாற்ற போராடாத தமிழ்தேசிய வரலாற்றுத் தலைவர்கள், இதைப் பாதுகாக்க மலையகமக்களின் "கூலி|| வாழ்கையை மாற்றக் கூடாது என்பதில் தொடர்ச்சியான வரலாற்றுக் காலகட்டத்தில் கவனமாக இருந்தனர். இதற்காக சிங்கள இனவாதிகளுடன் தோளோடு தோள் நின்றனர். இந்தக் "கூலி"களின் கல்வியை பறித்த பின்பு தான், தமிழ் தேசியம் திறமை பற்றி பீற்ற முடிகின்றது.
மலையக மாணவர்களின் கல்வியை சூறையாடியவர்கள் அதை எப்படி செய்துள்ளார்கள் என்பதைப் பார்ப்போம். மலையகத்தில் உயர்தர வகுப்புக்கு செல்வோர் சிங்கள மாணவர்கள் 5.6 சதவீதமாகவும், முஸ்லீம மாணவர்கள் 4.9 சதவீதமாகவும், மலையக தமிழ் மாணவர்கள் 0.8 சதவீதமாகவும் உள்ளனர். இலங்கையில் க.பொ.த. (உ.த) உயர் கல்வி கற்கும் 93937 மாணவர்களில் 616 அதாவது 0.04 சதவீதமட்டுமே மலையக மாணவர்கள். இதை மேலும் விரிவாக ஆராயின்
1.மலையக மாணவர் எண்ணிக்கை
2.சதவீதத்தில்
3. இலங்கையில் மொத்த மாணவர் எண்ணிக்கை
கற்கை நெறி 1 2 3
விஞ்ஞானம் 90 0.46 19 446
கலை 220 0.47 46 441
வர்த்தகம் 306 1.09 28 050
மொத்தம் 616 0.65 93 937
வர்க்க ரீதியாகவும் இனரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வெட்டு முகத்தை நாம் மேல் காண்கின்றோம். ஆனால் அவர்களின் துயரத்தில் பங்கு கொண்டு போராடவும், குரல்கொடுக்கவும் தயாரற்ற தேசியத்தை நாம் காண்கின்றோம் இந்த குறுந் தேசியத்தை நாம் ஈவிரக்கமற்ற வகையில எதிர்த்து போராட வேண்டியதையே எமக்கு இது தெளிவாக புகட்டுகின்றது.