book _1.jpgசி ங்களப் பேரினவாதம் மீண்டும் மீண்டும் தனது இனவாதக் கூத்துகளை நடத்தி, அதில் குளிர்காய்கின்றது. இதைத்தான் திடீர் புத்தர் விவகாரம் மறுபடியும் எடுத்துக்காட்டுகின்றது. மனித இனத்தை மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் பந்தாடும் அரசியல் கூத்துகள் மூலமே, தமது சொந்த அதிகாரங்களை நிறுவி மனித இனத்தைச் சூறையாடுவதையே கறைபடியாத ஜனநாயகமாக்குகின்றனர். இந்த முயற்சியில் தான் திருகோணமலையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரம். பொதுஇடங்களிலும், ஒரு பிரதேசத்தின் முக்கியமான மையங்களிலும் நிறுவப்படும் புத்தர் சிலை மூலம், எதைத்தான் இந்த மனிதச் சமூகத்துக்குச் சொல்ல முனைகின்றனர்?

 

காலங்காலமாகச் சிறுபான்மை இனங்கள் மேலான பெரும்பான்மை இன மேலாதிக்கத்தை நிறுவி ஒடுக்கிய வரலாற்றின் பக்கங்கள் மூடப்படமாட்டாது என்பதைத்தான், திடீர் புத்தர் விவகாரம் மீண்டும் தேசியச் சிறுபான்மை இனமக்களுக்கு எடுத்துக்காட்டுகின்றது. சிங்களப் பேரினவாதம் மதத்துடன் தொடர்புபடுத்தி, தன்னைத்தான் புத்தர் சிலை வடிவில் வெளிப்பட்டு நிற்கின்றது. 1980களில் வவுனியா சந்தியில் சிறிதாக முளைத்த திடீர் புத்தர் சிலை, படிப்படியாகப் பெருத்து வந்த வரலாற்றை நாம் காண்கிறோம். ஒரு பிரதேசம் மீதான குடியேற்றம் சார்ந்த ஆக்கரமிப்பு எப்படி இருந்தாலும், சிறுபான்மை இனங்களின் மேலான ஒடுக்குமுறையாகவே மாறிவிடுகின்றது.


இதில் வேடிக்கை என்னவென்றால் பேரினவாதத்தைக் கைவிடும் உள்ளடக்கத்தில், சமாதானம் மற்றும் அமைதி பற்றி உலகில் உள்ள அனைத்துவிதமான கொள்ளைக்காரர்களும் மத்தியஸ்தம் செய்து வைக்கும் ஒரு நிலையில் தான், திடீர் புத்தர் முளைத்தெழுந்தார். சமாதானத்தின் காவலர்கள் மௌனமாக இந்தக் கூத்தை வேடிக்கையாக்கி, இனவாதத்துக்கு நெய் வார்த்தனர். பார்ப்பனியத்தின் கடைந்தெடுத்த பூசாரி வேலையைத்தான், சமாதான வெண்புறாக்களும் செய்து கொண்டிருந்தன. அரசியல் ரீதியாகக் கையாலாகாத்தனத்துடன் சேர்ந்து என்ன செய்வது என்று திண்டாடிக் கொண்டிருந்த புலிகளுக்கோ, இந்த திடீர் புத்தர் சிலை விவகாரம் குதூகலமான ஒன்றாகியது. அம்பலமாகிக் கொண்டிருந்த தேசிய வேடத்தை, மூடிப்போர்த்திவிடும் கனவுடன், புலிகள் மீண்டும் களத்தில் இறங்கினர்.


மக்கள் திரளை இனவாதத்துக்கு எதிராக அரசியல் ரீதியாக அணிதிரட்டி போராட வக்கற்றுப் போன புலிகள், மக்களை வெறும் மந்தைகளாக, கூலிகளாக களத்தில் இறக்கும் உத்தரவுப் போராட்டங்களைத் தொடங்கினர். இந்த வடிவில் தொடர்ச்சியான போராட்டத்தை, அரசியல் மயப்படாத மந்தை மக்களைக் கொண்டு நடத்திவிட முடியாது சூனியத்தில் திக்குமுக்காடினர். மாறாக வெடிக்குண்டு புரட்சி மூலம் புத்தர் சிலையை அகற்றும் போராட்டத்தையே புலிகள் தொடங்கி வைத்தனர். கர்த்தால் மூலம் கடையடைப்புகளை நடத்துதல், வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து அராஜகத்தை உருவாக்கி திடீர் புத்தரை எதிர்த்தனர். குண்டுகளை எறிவது, காயப்படுத்துவது, கொல்லுவது என்று திடீர் புத்தர் சிலைக்கு எதிரான போராட்டத்தைப் புலிகள் பினாமிகளின் பெயரால் நடத்தினர். இதற்குச் சிங்களப் பேரினவாதிகள் இதே பாணியில் பதிலடி கொடுத்தனர். சமூகவிரோதக் காடையர்களைத் தவிர, மக்கள் இதற்கிடையில் சிக்கி பரிதாபகரமாகவே தமது வாழ்வை இழப்பதைத் தாண்டி, எதையும் அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கவில்லை. போராட்டம் தொடர்ச்சியான கடையடைப்பு மற்றும் குண்டுகளை எறிவதன் மூலம் தொடர முடியாத நிலையில் நெருக்கடிகளைச் சந்தித்தது.


புலிகளின் போராட்டம் மாற்று வழியின்றி குண்டுகள் மூலம் இனவாதத்தைத் தகர்த்துவிட முடியும் என்ற அளவில், இவை தனது சொந்த இயல்புடன் எச்சரிக்கைகள் ஊடாக தேங்கி நிற்கின்றது. ஒரு குண்டை வெடிக்க வைப்பதன் மூலம் இதைத் தகர்த்துவிட முடியும் என்ற புலிகளின் அரசியல் அகராதிப்படியே இதற்கு முடிவுகட்டவே எண்ணுகின்றது.


இதேநேரம் புலியெதிர்ப்பு இணையத் தளங்கள், வானொலிகள் புலிகளின் போராட்டத்தை எதிர்க்கத் தொடங்கினர். அர்த்தமற்ற நடவடிக்கைகள் என வசைபாடி வருகின்றனர். திடீர் புத்தர் சிலை இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் என்று ஒரு பல்லவியையே பாடி முடித்தனர். ரி.பி.சி. வானொலி காடையர்களால் சூறையாடப்பட்ட நிலையில், அது மீண்டும் தனது ஒளிபரப்பைத் தொடங்கி நடத்தியதை வாழ்த்தும் நிகழ்ச்சியிலும் தொடர்ந்து வந்த அரசியல் நிகழ்ச்சியிலும், புத்தர் வாழ்க என்ற கோசத்துடன் மறைமுகமாக இனவாத நடவடிக்கை போற்றப்பட்டது. இது புலிக்கு எதிரானது என்ற அடிப்படையில் விளக்கி, அதை ஆதரிப்பது புலியெதிர்ப்பின் மைய அரசியலாகும்.


புலிகளின் போராட்ட வழிமுறையில் உள்ள தவறுகளை விமர்சிக்கவும், அதை மக்கள் அரசியலாக மாற்றக் கோருவதற்கும் பதில் புலிகளைத் திட்டி தீர்த்தனர். புலிகளை மறுப்பதே இவர்களின் அரசியலாகிப் போன வக்கற்ற நிலையில், மக்களுக்குச் சரியான வழிகாட்டலென எதுவும் இருப்பதில்லை. புலிகளால் பாதிக்கப்பட்டவர்களைத் தம் பின்னால் அணிதிரட்டும் உத்தியைத்தவிர, மக்களைச் சரியாக அரசியல் ரீதியாக வழிநடத்தும் எந்த அடிப்படையும் அற்று வெறும் புலியெதிர்ப்பு கும்பலாகவே சீரழிந்து வருகின்றது.


உண்மையில் அரசியல் ரீதியான விமர்சனம் என்பது, பெரும் தேசியப் பேரினவாத வேடதாரிகளின் முகத்தை அம்பலம் செய்திருக்க வேண்டும். புலிகளின் குறுந்தேசிய போக்கை விமர்சித்து இருக்க வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினையைப் பொருளாதார விடுதலையின் பின்பாகத் தீர்ப்பதாகக் கூறும் ஜே.வி.பி. மவுனத்தை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். திடீர் புத்தர் சிலை விவகாரத்தில் இனவாதத்தைப் பாதுகாக்கும் ஜே.வி.பி.யினுடைய மௌனத்தின் உள்ளடக்கத்தை அம்பலப்படுத்தி தோலுரித்து இருக்க வேண்டும்.


திட்டவட்டமாகவே இனவாத நோக்கில் நிறுவப்பட்ட புத்தர் சிலைக்கு எதிரான போராட்டத்தை உண்மையான சமாதானமும் அமைதியும் வேண்டின் புலிகளை அனுமதியாது, மாறாகச் சிங்கள மக்களே இப்போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். உண்மையானதும் நேர்மையானதும் இது மட்டும் தான். ஆனால் ஜே.வி.பி.யோ அப்படி போரடவில்லை. ஜே.வி.பி.யை இனவாதிகள் அல்ல என்று கூறி, அவர்களை மிதவாதிகளாகக் காட்டும் வேஷங்களின் பின்னால் ஒட்டியிருப்பது, இனம் காணப்பட்ட பச்சை சிங்கள இனவாதம் தான். கபட வேடதாரிகளான ஜே.வி.பி. இதை எதிர்த்துப் போராடவில்லை. இதற்கு எதிராக அரசில் இருந்து விலகப் போவதாக அரசை எச்சரிக்கவில்லை. ஏன் இந்தத் திடீர் புத்தர் சிலையின் பின்னணியில் ஜே.வி.பி. அணிகளும் கூட கைகோர்த்து நின்ற சூழலே பொதுவாக அடையாளம் காண முடிகின்றது. சுனாமி பெயரில் ஓடிச் சென்ற ஜே.வி.பி. இங்கு நடத்தும் இனவாத நாடகமே தனியானது. தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகக் கூறும் சிங்களப் பேரினவாதக் கட்சிகள் கூட போராட்டத்தை நடத்தவிடவில்லை.


சட்டம், ஆணைக்குழு என்று இனவாதத்தை உறையவைக்கும் வகையில் காலத்தைக் கடத்தும் அரசியலே செய்கின்றனர். எங்கும் இனவாதச் சேற்றில் இருந்து மீளாத ஒரு அராஜகமே எஞ்சிக் கிடக்கின்றது. இந்தியாவில் பாபர் மசூதியில் திடீரென முளைத்தெழுந்த சிலையைப் போல், சிங்கள பேரினவாதம் கட்டமைக்கும் தொடர்ச்சியான ஒரு அம்சமே திடீர் புத்தர் சிலை. பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக முசுலீம் அடிப்படைவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு போல், புலிகள் குண்டுகளை வெடிக்க வைக்கின்றனர். இதன் மூலம் சமூகங்கள் பிளந்து, சிலர் குளிர்காய்வதே இதன் மொத்த நலனாகும்.

 

1.06.2005