book _1.jpgபொ துவான சமூகச் சூழல் ஜனநாயகத்தை ஆதாரமாகக் கொள்ளாத வரை, ஒரு மனிதன் சரியான பாதைக்குத் திரும்பி வரும் சூழலை உருவாக்காதவரை, மக்களின் நலன்களை முதன்மைப்படுத்திய அரசியலை முன்வைக்காத வரை, பிற்போக்கான நடைமுறைகளையும் அந்த அரசியலையும் விமர்சிக்கும் தகுதி யாருக்கும் கிடையாது.


இன்று கொலைகளே அனைத்துக்குமான சமூகத் தீர்வாகிப் போன தமிழ்ச் சூழலில், அதை இரசித்தும் ஆதரித்தும் வக்கரிக்கும் தமிழ்ச் சமூகத்தில், சமூக அக்கறையுள்ள ஒருவனின் தவறான பாதைகளை விமர்சித்து திருத்த முடியாது சமூகமே வக்கற்றுப் போகின்றது. இங்கு தனிமனிதனின் தவறுகளை மட்டும், நாம் தனித்து விமர்சிக்க முடியாது. கொலைக் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ்ச் சமூக அடித்தளத்தையே விமர்சிக்க வேண்டியுள்ளது.

 

இதனடிப்படையில் சமூகத்தின் நலன்களுடன் தம்மை இணைத்துக் கொண்டு, பொது வாழ்வில் ஈடுபடுபவர்களின் வாழ்வு என்பது எப்போதும் கேள்விக்குள்ளாகக் கூடியவைதான். இந்தக் கேள்விக்குள்ளாக்கல் அனைத்தும், மக்களின் வாழ்க்கையுடன் அவர்கள் எந்தளவுக்கு இணங்கிப் போனார்கள், போகின்றனர் என்பதையே அடிப்படையாகக் கொண்டது.


அண்மையில் உமாகாந்தன் இயற்கையாகவே மரணம் அடைந்துள்ளார். செயற்கையாகக் கொல்லப்படாத ஒரு சூழலில், மரணத்தின் பின் பற்பல தூற்றுதல்கள் மூலமும் பலமுறை செயற்கையான வதந்திகள் மூலமும் கொல்ல முனைகின்றனர். உமாகாந்தன் கடந்த முப்பது வருடங்கள் சளையாது பொதுவாழ்வில் தன்னை இணைத்துக் கொண்டவர். இந்தப் பொதுவாழ்வின் சில பக்கங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத பல கரடுமுரடான பாதையூடாகவே நகர்ந்தது. மிகக் கடுமையான விமர்சனத்துக்குரிய அரசியல் வழிகளைக் கூட அவர் பின்பற்றி இருந்தார். அவரின் அரசியலுடன் என்றுமே நான் உடன்பட்டது கிடையாது. கடுமையான நேரடி விமர்சனங்களை விவாதம் ஊடாக நான் முன்வைத்தேன். ஆனாலும் எனது நூல்களையும், எழுத்துக்களையும் படிக்க ஆர்வம் கொண்டு அவற்றைப் பெறுவதில் எப்போதும் அக்கறையாக இருந்தார். படித்தார். நூல்களைப் பணம் கொடுத்து வாங்கிப் படிக்கும் ஓர் எழுத்தாளராக, விமர்சகராக இருந்தார்.


எனது விமர்சனத்தின் போது நான் வைக்கும் கருத்தை என்றும் மறுத்தது கிடையாது. சரியென்று ஏற்றுக் கொண்ட போதும், நடைமுறையில் அதை முன்னெடுக்காத ஒருவராகவே இருந்தார். அவர் சார்ந்த இயக்கத்தை ஜனநாயக விரோதிகள் அழித்தபோது ஏற்பட்ட அதிருப்தி சமூக நம்பிக்கையீனமாக மாறியது. மக்கள் பற்றி அதீதமான நம்பிக்கையீனத்துடன் இருந்ததால், பொதுவான ஜனநாயக விரோதப் போக்கு எதிரானதும், மக்களுடன் இணங்கி நிற்காத எதிரணியுடன் தன்னை எப்போதும் இனங்காட்டினார். இந்த இடத்தில் அவரின் சமூகம் மீதான நம்பிக்கையீனம், பொதுவான புறச்சூழலில் இருந்து உருவாகின்றது. மக்களின் நலன் என்ற உன்னதமான சமூக நோக்கத்துடன் இயங்கும் இயங்கு சக்திகளை அரவணைத்துச் செல்லும், பொதுவான ஜனநாயகச் சூழலின்மை பலரைத் தவறான பாதைக்கு வழிகாட்டிவிடுகின்றது. மாற்றுக் கருத்தைத் துரோகமாக மட்டும் முத்திரை குத்தும் பொதுச் சமூகக் கண்ணோட்டம், மாற்றுக் கருத்து உள்ளவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற பட்டியலில் இணைக்கும் போது, பலரைத் தவறான அரசியல் பக்கம் பலாத்காரமாகவே தள்ளிவிடுகின்றது.


இந்தப் பொதுவான ஜனநாயக விரோதச் சூழல் இருப்பதால், மக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்து நிற்பதை யாரும் நியாயப்படுத்த முடியாது. எப்படி மக்களுக்கு எதிரான ஜனநாயக விரோதிகளுடன் இணைந்து நாம் நிற்க முடியாதோ, அதேபோல் தான் மக்களுக்கு எதிரான சக்திகளுடனும் நாம் இணைந்து நிற்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.


மக்களுக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை அழித்துக் கொண்டவர்கள் பல ஆயிரமாக இச்சமூகத்தில் உள்ளனர். ஆனால் இவர்கள் மக்களின் நலனைச் சரியாக இனம் காணமுடியாதவர்களாகவே அழிந்து போகின்றனர். இது தியாகத்தின் பெயரில் நடந்தாலும் சரி, ஜனநாயகத்தின் பெயரில் நடந்தாலும் சரி, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்து அன்னியமாகி முடிவற்று தொடருகின்றது. இன்று புறச்சூழல் சார்ந்து பொதுவான அரசியல் நீரோட்டத்தில், எதிரணியாகத் தம்மைக் கூறிக் கொள்ளும் இரண்டு மக்கள் விரோத அணி சார்ந்தே இவை நடக்கின்றது.


தனது மரணத்துக்கு முந்திய வருடங்களில் மாற்று இலக்கியப் போக்குடன் தன்னை அடையாளப்படுத்திய இவர், ஆரம்பத்தில் பொதுவான தமிழ்த் தேசிய எழுச்சியுடன், தன்னை இனம் காட்டி சிங்கள இனவாதிகளுக்கு எதிராகப் பாரிசில் பல போராட்டங்களை முன்னெடுத்தõர். பின்னால் அரசியல் நிலைப்பாடு சார்ந்து தன்னை ஈ.பி.ஆர்.எல்.எப். உடன் இணைத்துக் கொண்டார். இந்த இயக்கம் பல மாறுபட்ட காலகட்டத்தின் ஊடாகவே நகர்ந்த போது, மாறி வந்த அரசியல் அதிர்வுகளில் இருந்து இறுதி காலம் தவிர்ந்த மற்றைய காலத்தில் கூட தன்னை விலக்கி விடவில்லை. இவ்வியக்கம் தமிழ் மக்களைச் சார்ந்து நின்ற காலகட்டத்திலும், மற்றவர்களின் கைப் பொம்மையாக இருந்த காலத்திலும் கூட, இவர் அவர்களுடன் இணைந்து நின்றார்.


மக்களுக்காக மக்களுடன் இணைந்து நின்று போராடிய காலம் பல்வேறு விமர்சனங்களைக் கொண்ட போதும் எவ்வளவு முற்போக்கானதாக இருந்ததோ, அதேபோல் மக்கள் அல்லாத சக்திகளின் எடுபிடிகளாக இணைந்து நின்ற காலமும் பிற்போக்கானதுதான். இங்கு பொதுவான ஜனநாயக மறுப்புக்கு எதிரான ஒருதலைப்பட்சமான குரல் என்பதை மட்டும் அளவீடாகக் கொண்டு ஒருவரை மதிப்பிட்டுவிட முடியாது. எதிர்மறையில் இதேபோல் தேசிய விடுதலைப் போராட்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒருவரை மதிப்பிட்டுவிட முடியாது. இன்று எல்லா பிரச்சினையிலும் முந்திய பிந்திய என இரு காலகட்டத்தை வேறாக்கி, தனித்தனியாகவே பார்க்க வேண்டியுள்ளது. மக்களுடன் இணங்கி நின்ற காலகட்டத்தில், உமாகாந்தனின் சமூகப் பங்களிப்பு மதிப்புக்குரிய ஒன்றாகவே இருந்தது. மற்றைய பக்கம் கடும் விமர்சனத்துக்குரியதே. இங்கும் பொதுவான சூழல் ஜனநாயகத்தை ஆதாரமாகக் கொள்ளாத வரை, ஒரு மனிதன் சரியான பாதைக்கு திரும்பி வரும் சூழலை உருவாக்காதவரை, மக்களின் நலனை முதன்மைப்படுத்திய அரசியலை முன்வைக்காத வரை, பிற்போக்கான நடைமுறைகளை விமர்சிக்கும் தகுதி யாருக்கும் கிடையாது.


மக்களுடன் அவர் இணங்கி நின்ற காலத்திலும், பின்னால் அவர் முன்வைத்த பல கருத்துகள் பொதுஅறிவு மட்டத்தைக் கடந்து காணப்பட்டது. அவை மக்களின் அறிவை மற்றும் சிந்தனைத் திறனை ஏற்படுத்தும் அடிப்படையைக் கொண்டிருந்தது. ஆனால் அவரின் அரசியலால் வரையறுக்கப்பட்ட எழுத்து எல்லை, (அரசியல்) அனாதைகளுக்குரிய வரையறைக்கு உட்பட்டே காணப்பட்டது. உமாகாந்தனின் கடும் உழைப்புடன் கூடிய தியாக உணர்வு ஏற்படுத்திய மரணம் எமக்கு உணர்த்தி நிற்பது இதைத்தான்.