நாம் பிறக்கிறோம்,கற்கிறோம் வேலைக்குச்செல்கிறோம்,மணமுடித்துக் குழந்தைகள் பெறுகிறோம்!எங்களில் எத்தனை பேர்கள் நமது சூழலின் தூய்மை-மாசு பற்றிய உணர்வோடு வாழ்கிறோம்?எத்தனை பேர்கள் தத்தம் நாட்டின் அரசியல் பொருளாதாரச் சூழல் நெருக்கடியை உணர்வுப+ர்வமாக உள்வாங்கி அதை நிவர்த்தி செய்வதற்கான அழுத்தங்களை முன்வைக்கின்றோம்?


இன்றைய சூழலியல் நெருக்கடியானது மிக உண்மையானது.கடுமையானது!இந்த நெருக்கடியை தீர்த்தாகவேண்டும்.அங்ஙனம் தீர்க்கப்படாதுபோனால் புவிப்பரப்பில் இன்னும் ஓரிரு நூற்றாண்டில் உயிர் வாழ்தல் சாத்தியமின்றிப்போவது உண்மையாகும்.நச்சுக் கிருமிகளினதும்,விஷச்செடிகளினதும் இருப்பே சாத்தியப்படலாம்.இத்தகைய எதிர்காலத்தை எதிர்கொள்ளவா நாம் மாடாய் உழைக்கிறோம்,குழந்தைகளைப் பெறுகின்றோம்?

எமது உற்பத்தி முறைகளுக்கும்,சக்திவள நுகர்வுக்கும் எந்தப் பொறுப்பும் சுமத்தாமால் வெறுமனவே இலாப வேட்கையுடன் தொடர்ந்தாற்றும் மனித இடைச்செயலானது, நம் தலைமுறையையே நோய்வாய்ப்படுத்தியுள்ளதை எத்துணை மதிப்பீடுகளுக்குள் நாம் உட்படுத்தி ஆய்ந்திருக்கிறோம்?சமுதாயத்தின் முழுமொத்த மக்களும் ஆரோக்கியமற்ற மனிதர்களாகவும்,ஏதோவொரு குறைபாடுடைய சிசுவாகக் கருவில் உருவாகும் புதிய மனிதவுயிருக்கு யார் பொறுப்பாளிகள்?நமது வாழ்க்கை முழுதும் பெரும் குற்றவாளிகளாக மாறிவரும் இந்தப் பொருளாதாரத்தைக் கொண்டு நடாத்தும் "நம் கூட்டுழைப்பு" நம்மையடிமைப்படுத்தும் இன்றைய காலத்தில் வாழ்வின் அர்த்தம் என்ன?


அழகிய ஆணுக்கும்,பெண்ணுக்கும் பின்னால் விழி நகர்த்துவதா வாழ்வின் அர்த்தம்?கோடம்பாக்கப் பெண்களும்,ஆண்களும் மனித வாழ்வின் நெறிமுறைகளைப் பற்றிய உணர்வுப+ர்வமாகத் தெரிந்துகொண்டா ஆடைக்குறைப்புகளைச் செய்கிறார்கள்? மனித சமுதாயத்தை வெறும் காமக் களியாட்டமாக மாற்றியுள்ளச் சீர்கெட்ட சினிமா, மக்களின் மனங்களை எங்ஙனம் பதப்படுத்தியுள்ளது?இந்தச் சினிமாவினது பிடியில் சிக்கிய இளந் தலைமுறைக்கு என்ன பொறுப்புணர்வு- சொல்லித் தெரிந்திருக்கு?

சூனியத்துள் விழுந்துகிடக்கும் ஒரு ஊதாரிக்கூட்டமாக மாறியுள்ள தலைமுறைக்கு எதிர்காலத்தையும்,சூழலையும் அது சார்ந்த உயிர் வாழ்வையும்,மனித இடைச் செயலையும் பற்றிய மதிப்பீடுகளா முதன்மை பெறுகிறது?

"நாவிலுள்ள எச்சிலை விரலில் தொட்டு எங்கோ ப+சுவென்று "சேட்" பண்ணும்போது எழுதுகின்ற கூட்டமாக மாறியுள்ள இந்தத் தலைமுறைதாம்" நமது அடுத்த கட்டத்தை நகர்த்தப் போகிறது!நினைக்கவே தலை சுற்றுகிறது.எங்கே போகின்றது நமது தலை முறைகள்?

இந்தத் தலை முறையின் பின்னாலுள்ள உற்பத்தி-இலாப வேட்கையின் சூத்திரதாரிககளான இந்த முதலாளியப் பிசாசுகள் இப்போது குளோபல் வர்த்தகத்தின்மூலம் புவிப்பரப்பின் அனைத்துப் பாகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தபின், நமது சூழல் அனைத்து வடிவங்களிலும் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது!

இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தச் சூழல் பொறுத்துக் கொள்ளும்?

அது பொறுமையுடையதாக நாம் காணவில்லை!உலகெங்கும் புவி அதிர்வுற்றுப் பற்பல அழிவுகளையும்,வளிமண்டலத்தில் பலகோடி நோய்க் கிருமிகளையும் அது இயல்பாகமாற்றித் தந்துகொண்டேயிருக்கு. இன்றைய "எச்5 என்1"வைரஸ் அடுத்த பத்தாண்டுகளில் நம்மில் பலரைக் கொல்லப்போகிறது.இதை எந்தக் கொம்பரும் தடுத்துவிட முடியாது.அவரது எந்த மருந்தும் அதைத் தடுக்கும் ஆற்றலையும் பெறமுடியாது.இதுதாம் இன்றைய முதலாளிய உற்பத்திப் பொருளாதாரத்தின் மகத்தான பரிசு.இந்த நோயை வழங்கியது மனித இடைச்செயலேயன்றிச் சூழலல்ல!

எந்தப் பொறுப்புணர்வுமற்ற இந்தவுலகத்தின் அதிகார வர்க்கமானது முழுவுலகத்தையும் பாழாக்கிய பின் இன்னும் அணுவைக்கொண்டு இலாபமீட்டிவரும் பாரிய திட்டங்களோடு காரியமாற்றுகிறது.இந்த அணுவே இன்னுமொரு தலைமுறைக்கு-நூற்றாண்டுக்குமேல் உற்பத்திக்குக் கிடைக்காதுபோகும் சூழலில், அதன் கழிவுகளை நமது ஆயிரம் தலைமுறை கண்ணும் கருத்துமாகக் கட்டிக் காத்தாகவேண்டும்.இதை இந்த முதலாளியப் பொருளாதாரம் நமது தலைமுறைகளுக்குச் சுமத்தும்போது நாம் வாழாதிருக்கின்றோம்.

இன்றைய யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு!

யுரேனியத்தின் கச்சாவிருப்பு இன்னுமொரு தலைமுறைக்குச் செல்லமுடியாது.ஆகக்கூடிய அதன் வளம் இன்னும் எண்பது அல்லது நூறு வருஷங்களே

.இந்த அணுமின்,மற்றும் அணுச் செயற்பாடுகளை இந்த எல்லையிலிருந்து பார்க்குமொரு விஞ்ஞானிக்கு அதன் மாற்றைப் பற்றிய தெளிவு தெரிந்தேயிருக்கு.அந்த விஞ்ஞானி மனித இனத்தைக் காப்பதற்காக இன்றே மாற்றுச் சக்தி வளத்தைப் பயன் படுத்தும்படி கோரிக்கை செய்யும்போது(பேராசிரியர் எரிக் பீல் மற்றும் பொல்கர் பிறேயஸ்ரெட்:"தாவரத்திலிருந்து சக்தி" மற்றும் அவர்களது சமீபத்து நூல்:"சமத்துவ நிறை",எனும் நூல்களின் ஆசியர்கள்), நமது இந்திய பேரரசோ அவற்றை உதாசீனம் செய்து அமெரிக்காவோடு அடிமை ஒப்பந்தம் போடுகிறது(புதிய ஜனநாயகம்-ஏப்பிரல்2006).

என்னைப் பொருத்தவரை நமது பொருளாதாரமானது சூழலிருந்து திருடுவதை நிறுத்தாதவரை மனிதவினத்துக்கு எந்த விமோசனமுமில்லை.இதற்காகவேனும் இந்தப் பொருளாதாரமானது தேவைக்கேற்ற உற்பத்தியை அனுமதிக்கும் ஷோசலிசச் சமுதாயமாக மாற்றப்பட்டே தீரணும்(இப்படியெழுதும்போது கிழக்கு ஐரோப்பாவில் நிலவிய சூழற்கேடுகள் பற்றியவொரு மதிப்பீடு ஞாபகத்துக்கு வருகிறது,அதை இறுதியில் பார்க்கலாம்).

அவுஸ்ரேலியாவிலும்,தென் ஆர்ஜென்டீனாவிலும் பெற்றோர்கள் தமது குழந்தைகளை 13 நிமிடங்களே வெய்யிற் காலத்தில் வெளியில் அனுமதிப்பது நடக்கின்றது.இதற்கு மிஞ்சினால் தோற் புற்று நோயை அந்தக் குழந்தைகள் எதிர்கொள்வதில் முடியும்.புவியின் தென்துருவத்தில் மெலிதாகிப்போன ஓசான் பாதுகாப்பு உறை இன்று புற்று நோயைப் பரிசாக வழங்குகிறது!இன்னும் சில வருடங்களில் புவியின் வடதுருவத்திலும் ஓசான் ஓட்டை பெரிதாகி எல்லோருக்கும் இதைப் பொதுவாக்கிவிடும்.வருடமொன்றிக்கு அவுஸ்ரோலியாவில் 140.000. பேர்கள் தோற் புற்று நோய்க்கு உள்ளாகி வருகிறார்கள்.சுவாசப்பை மற்றும் கண்,தொண்டை,மூக்குப் பகுதிகளில் கண்ட கண்ட நோய்கள் வந்து தொலைக்கிறது.

200 வருடங்களுக்கு முன் இமானுவேல் கன்ட் எனும் தத்துவவாதி சொன்னார்:"இயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல மாறக மனிதர்களின் குற்றமே"அதாவது மனிதரின் இடைச் செயலே என்றான்.(என் வீட்டில் தொடர்ந்து ஒரே அலையில் கத்தித் தொலைக்குமொரு வானொலியால் இப்போதைக்குத் தொடர்ந்தெழுதுவது சாத்தியமில்லை.இடையில் தொடர்ந்து வருகிறேன்).

தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
09.04.2006.