book _1.jpg07. 07.2005 அன்று நடந்த ரி.பி.சி.யின் அரசியல் விவாதக்களம் தன்னை மற்றொரு புலி அமைப்பு தான் என்பதைப் பிரகடனம் செய்துள்ளது. நாம் கடந்த காலத்தில் புலியெதிர்ப்பு அணி மீதான எமது தொடர் விமர்சனத்தில் எதைச் சொன்னோமோ, அதை உறுதி செய்துள்ளது.


விவாதக் களத்தில் சுதந்திரம் என்பது ரி.பி.சி. கூறி வந்த கடந்த காலக் கருத்தாகும். ஆனால் திடீரென்று ரி.பி.சி. இதை மாற்றியுள்ளது. தனது நேயர்களுக்கு எதிராகக் கருத்துக் கூறமுடியாது என்று கூறி தொலைபேசி அழைப்புகளைத் துண்டித்தது. தமக்கு உதவ முடியாது என்று கூறுபவர்களுக்கு இனி இதில் இடமில்லை என்றனர். இதைத்தான் புலிகளும் செய்கின்றனர். அவர்கள் ஆயுதம் வைத்திருப்பதால், அதைச் சமூக மயமாக்குகின்றனர். உங்களிடம் ஆயுதம் இல்லாததால் உங்கள் அளவில் அதை மட்டுப்படுத்துகின்றீர்கள் அவ்வளவே.

 

விவாதத் தலைப்புக்குள் நின்று விவாதிக்கும் படி கோரிய ரி.பி.சி. மற்றவர்களுக்குப் பதிலளிக்க முடியாது என்ற அராஜகத்தை அரங்கேற்றியது. இது ஒரு வேடிக்கை தான். இதில் உள்ள ஒரு உண்மை என்னவென்றால் மற்றவர்களின் விவாதத்துக்குப் பதிலளிக்க முடியாது என்று கூறி தொலைபேசி அழைப்பைத் துண்டித்ததுதான். மற்றவர்கள் விவாதத் தலைப்புக்குள் விவாதித்து இருந்தால், பதிலும் அதற்குள் தானே இருக்கும். பின் ஏன் தொலைபேசி அழைப்பை இடைநிறுத்த வேண்டும். அப்படியாயின் உங்கள் நேயர்கள் விவாதத் தலைப்புக்குள் விவாதிக்கவில்லையா? அப்படியாயின் அதை எப்படி ரி.பி.சி. அனுமதித்தது. இவர்களுக்கு ஒரு அணுகுமுறை, மற்றவர்களுக்கு மற்றொரு அணுகுமுறையா?


இதைத்தான் ரி.பி.சி. செய்தது. புலிகள் படுதூசணத்தில் வந்து தூசிப்பதை நிறுத்துவதை நான் இங்கு குறிப்பிடவில்லை. விவாதிக்க முனைபவர்களுடன் விவாதிக்க முனையவேண்டும். இது ஜனநாயக ரீதியான ஒரு அணுகுமுறை. இதற்கு வெளியில் ஜனநாயகம் வாழமுடியாது. விதண்டாவாதத்தை தெளிவாகவும் நிதானமாகவும் அம்பலப்படுத்த வேண்டும். சந்தர்ப்பவாதத்தைத் தோலுரிக்க வேண்டும். அதை விடுத்து விவாதிக்க முற்படுபவனை, அதுவும் முன்னைய கருத்துக்குப் பதிலளிக்க முனைபவனுடன், உங்கள் எல்லைக்குள் விவாதிக்க மறுப்பது அப்பட்டமாக ஜனநாயக விரோதக் கருத்துச் சுதந்திர மறுப்புத்தான். நீங்கள் கூறிவந்த நிலைப்பாட்டுக்கு முற்றாகவே முரணானது. இதைத்தான் இயக்கங்கள் செய்தன. இதைத்தான் புலிகள் செய்தனர்.


பதிலளிக்க முடியாத ரி.பி.சி.யின் எல்லைகள், எப்போதும் முன்வைக்கும் சந்தர்ப்பவாத உங்கள் அரசியல் கருத்தில் தான் அடங்கியுள்ளது. மக்களுக்கான அரசியலை நேர்மையாக முன்வைக்கும்போது, எதற்கும் தெளிவாக நிதானமாகப் பதிலளிக்க முடியும். மக்களின் நலன்கள்தான், அனைத்து சமூக விரோத உள்ளடக்கத்தையும் தோலுரிக்கின்றது. சந்தர்ப்பவாதமாக அணுகுகின்ற போக்கு எப்போதும், இன்னுமொரு பாசிசத்தின் உள்ளடக்கத்தைத் தன்னகத்தே கொண்டே அணுகுகின்றது.


இதையே அதில் கருத்துரைத்த குமாரதுரை அப்பட்டமாகவே சத்தியெடுத்தார். புலிகள் ஆயுதத்தை அழிக்க, பதிலாக ஆயுத வன்முறைதான் அவசியம் என்றார். ஏகாதிபத்தியங்கள் தலையிட்டு, புலிகளின் ஆயுதத்தை, ஆயுதத்தால் ஒழிக்க வேண்டும் என்றார். இதை ரி.பி.சி. அவரின் தனிப்பட்ட கருத்து என்றபோதும், இதற்குப் பதிலளிக்க யாரையும் அனுமதிக்க முடியாது என்றனர். இதை ரி.பி.சி. விமர்சிக்கவும் முன்வரவில்லை. அவரைத் தமது நேயராகவும், ரி.பி.சி. கட்டியமைத்தவர் என்றும் கூறி பாதுகாத்தனர். ஏகாதிபத்தியங்கள் புலிகளை அழிக்க ஆயுத வன்முறையை ஏவவேண்டும் என்ற வேண்டுகோளை குமாரதுரை, பிரிட்டனில் நடந்த தொடர் குண்டு வெடிப்பைப் பயன்படுத்தி கூறிய கருத்தாகும்.
குண்டுவெடிப்பைப் பயங்கரவாதமாகச் சித்தரிக்கும் ரி.பி.சி.யும் அதன் நேயர்களும், பிரிட்டனின் அரசு பயங்கரவாதத்தைத் தான் ஜனநாயகம் என்கின்றனர். உலகெங்கும் குண்டுவீசி அழிக்கும் ஏகாதிபத்தியத்தின் கால் தூசைத் துடைக்கும் இந்தக் கும்பல்கள்தான், புலிகளை அழிக்க ஏகாதிபத்தியத்திடம் ஆயுத வன்முறையைப் புலிகள் மேல் ஏவ அறைகூவல் விடுக்கின்றனர். ஈராக் மக்களை மீட்பதாகக் கூறிக் கொண்டு சென்றவர்கள், அங்கு பெண்களைக் கூட்டம் கூட்டமாகக் கற்பழித்தது முதல் பல பத்தாயிரம் மக்களைக் கடந்த ஒரு வருடத்தில் நரவேட்டையாடி கொன்றுள்ளனர்.


இந்த ஏகாதிபத்தியப் பன்றிகளைத் தான் குமாரதுரை ஜனநாயகத்தின் பெயரில், இலங்கையில் தலையிடக் கோருகின்றார். எமது மக்களைக் கொல்லவும், பெண்களைக் கற்பழிக்கவும் வருக வருக என்று ரி.பி.சி. ஊடாக அறைகூவல் விடுகின்றார். ஒரு யுத்தவெறியர்களாகவே ரி.பி.சி.யும், அதன் எடுபிடிகளும் குரல் கொடுக்கின்றனர். புலிக்குப் பதில் இந்தக் கும்பல் அதிகாரத்தைப் பெற்று பாசிசச் சதிராட்டம் போட நாயாக அலைகின்றனர். இதுதான் ஈராக்கில் சதாம் உசைனுக்குப் பதிலாக வந்த கைக்கூலிக் கும்பல் செய்கின்றது. நாளைப் புலிகளை அழிக்க ஏகாதிபத்தியம் அங்கு சென்றால், இந்தக் கும்பல்களும் அதன் அருவடிகளும்தான் அதன் கைப்பொம்மைகளாக இருப்பர். இதைத்தான் கலைச்செல்வன் மரணவீட்டுக்கு வருகை தந்திருந்த ஒரு சிலருடனான விவாதத்தின் போது இனம் கண்டு, கடுமையாக நான் அவர்களை விமர்சித்தேன். புலியெதிர்ப்பு அரசியல் ஏகாதிபத்தியக் கைக்கூலித்தனமாக இருப்பது, அவர்களின் அரசியலில் மண்டிக் கிடக்கின்றது. மக்களை நேசிக்க மறுக்கும் இவர்கள் மக்களின் நலன் எதையும் முன்வைப்பதில்லை. மக்கள் நம்பாத இந்தக் கும்பல், மக்களை இழிவுபடுத்தி இந்தளவு விரைவில் அம்பலப்பட்டு போவது ஆச்சரியமானதல்ல.

 

09.07.05