book _1.jpgசு னாமி ஏற்படுத்திய சமூகச் சிதைவுகளையே மிஞ்சும் வகையில், இடைத்தரகர்களின் வக்கிரம் அந்த மக்களின் வாழ்வியல் உரிமையையே இல்லாததாக்குகின்றது. ஒருபுறம் பாதிக்கப்பட்ட மக்கள், மறுபுறம் பாதிக்கப்படாத மக்கள் என்று இருதளத்திலும் இந்தச் சமூக அவலம் அக்கம் பக்கமாகவே நிகழ்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களும், பாதிக்கப்படாத மக்களும் கூடிவாழும் வாழ்வியல் உரிமையையே இடைத்தரகர்கள் தமது அதிகாரங்கள் மூலம் மறுக்கின்றனர். மக்களுக்கு இடையில் இந்த இடைத்தரகர்கள் பெருமளவில் பெருகியுள்ளதுடன், ஒரு ஒட்டுண்ணியாகி நிற்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதிக்கப்படாத மக்கள் கொடுத்த உதவிகளின் பெரும்பகுதியை, இந்த இடைத்தரகர்கள் சூறையாடிக் கொள்கின்றனர்.

 பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்ற நிவாரணங்களை விட, இடைத்தரகர்களின் வீடுகளுக்குச் சென்ற நிவாரணங்கள்தான் அதிகம். இது தொடருகின்றது. அதேநேரம் பெரும் அளவிலான மக்களின் உதவிக்கு என்ன நடந்தது என்பதை யாரும் அறிய முடியாத சூனியமாகவே உள்ளது. இதுவும் கூட மக்களின் தலைவிதியாகியுள்ளது.

 

இதைவிட சமூக ரீதியான நெருக்கடிகள் மேலும் வக்கிரமடைகின்றது. சமூக ரீதியான இணைந்து செயற்படும் செயல் தளம் இன்மையால் சமூகங்கள் சிதைந்து போகின்றன. சமூக ரீதியான உளவியல் நெருக்கடிகள் பெருக்கெடுக்கின்றன. எங்கும் ஒரு மக்கள் விரோதப் போக்கு, பெருக்கெடுக்கின்றது. முட்டை இன்றி அடைகாத்த கோழி போல, வேகம் கொண்ட இடைத்தரகர்கள் மக்களைக் கொத்தி கிளறுகின்றனர். இந்தச் சமூக விரோத வக்கிரங்களைக் குறிப்பான தலைப்புகளில் விரிவாகப் பார்ப்போம்.


4.1 உளவியல் நெருக்கடியும் வக்கிரப் பிழைப்புகளும்


பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் நெருக்கடி பற்றி பற்பல இடங்களில் பலரும் புலம்ப முடிகின்றதே ஒழிய, ஒரு சமூக மாற்றை முன்வைக்க முடியவில்லை. இந்தப் புலம்பல் பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில் பணத்தைத் திரட்டுவதுடன் நிறுத்திக் கொள்கின்றது. சற்று அகலக் காலை வைப்போர் மருத்துவ உதவிகளைச் செய்வதன் மூலம் மட்டும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகளை முன்வைக்கின்றனர். களத்தில் செயல்படும் சிலர், எங்கேயோ ஒரு நெருக்கடி உண்டு என்பதை அனுபவ ரீதியாகவே உணருகின்றனர். ஆனால் அது என்ன என்பதைக் கண்டறிந்து தீர்க்க முடியவில்லை. பெருமளவில் அதை மருத்துவ ரீதியான ஒன்றாகவே காட்ட முனைகின்றனர்.


உண்மை இதற்கு வெளியில் வக்கிரப்பட்டே காணப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் நெருக்கடி என்பது சமூகம் சார்ந்த ஒன்றாகக் காணப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மனிதன் தனது உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களை இழந்து, சுற்றுச் சூழலை இழந்து காணப்படுகின்றான். அதாவது சமூகத்திலும் இயற்கையிலும் இருந்து வேரறுக்கப்பட்ட ஒரு மனநிலையில் வாழ்கின்றான். குறிப்பாகச் சமூக உணர்வு சார்ந்த பகிர்வு வாழ்வை இழந்து, தனிமனிதச் சிறைக்குள் சிக்கி விடுகின்றான். இந்த சமூகப் பிரச்சினைக்கான சமூகத் தீர்வை இயந்திரத் தன்மையில் தீர்க்க முடியாது. நவீன அறிவியல் தொழில்நுட்பம் கொண்டும் தீர்க்க முடியாது. வெறும் உளவியல் மருத்துவத்தினாலும் தீர்க்க முடியாது. ஆனால் இப்படித்தான் தீர்க்க முனைகின்றனர்.


உண்மையில் சமூகம் தான் இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியும். ஆனால் இதற்கான சூழல் எமது மண்ணில் கிடையாது. புலிகள் பணத்தைத் தம்மிடம் தந்தால் போதும் என்ற அடிப்படையில், சமூக உணர்வுகளையே மலடாக்கினர். மக்களின் உழைப்பை உறிஞ்ச மட்டுமே புலிகள் விரும்புகின்றனர். இதன் மூலம் புலிகள் பணத்தை தாம் எடுத்துக் கொண்டு, அந்த மக்கள் பற்றி பெயரளவில் புலம்புகின்றனர். இதைப் படிப்படியாக அரசுக்கு எதிரானதாக மாற்றி விடையத்தைத் திசை திருப்புகின்றனர். அரசு உதவி கிடைக்கவில்லை என்ற கூக்குரல் (பாட்டின்) ஊடாக, மக்கள் அவர்களிடம் ஒப்படைத்த, உதவிகளையே கண்ணுக்குப் புலப்படாத ஒன்றாக்குகின்றனர். இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு நிவாரணம் தரவில்லை என்று சொல்லி அதில் ஒரு பகுதியைத் திருடிக் கொள்ளும் எல்லைக்கு அப்பால் புலிகளின் தசைகள் ஆடவில்லை. இந்தத் திருட்டு பற்றி தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. அரசு இனவாதம் சார்ந்த புறக்கணிப்புடன் ஒதுக்கிய நிதியின் பெரும்பகுதி இடைத்தரகர்களாகச் செயல்படும் புலிகள் அபகரிப்பது அன்றாட நிகழ்வாகியுள்ளது. மக்களின் வாழ்வியலுடன் எந்தவிதமான சமூகப் பொருளாதார உறவையும் கொண்டிராத புலிகள், இப்படித்தான் அந்த மக்களின் வாழ்வுக்கு எதிராக வில்லன்களாகவே செயலாற்றுகின்றனர். ஏற்பட்ட சமூக நெருக்கடிகளில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் மீள, பாதிக்கப்படாத மக்கள் நேரடியாகவே செயல்பட புலிகளே தடையாக உள்ளனர்.


அரசோ அன்னிய உதவி, அன்னிய கடன் என்ற பெயரில் இலங்கையின் ஒட்டு மொத்த மக்களையே அடகு வைக்கின்றது. மக்களை அன்னியரின் அடிமைகளாக மாற்றும் பாதையில், மக்களின் வாழ்வியல் போக்குக்கு எதிராகவே திட்டவட்டமாகச் செயல்படுகின்றனர். அரசு சாராத நிறுவனமான தன்னார்வத் தொண்டு ஊழியர்கள் சமூகப் பற்று அற்றவர்கள். அன்னியரின் அரசியல் பொருளாதார நலன்களுக்குச் சேவை செய்பவர்கள். அதாவது கூலிக்குக் கையேந்தி பிழைக்கும் உறுப்பினர்களால் ஆனது இந்தக் குழுக்கள். இவர்கள் தத்தம் சம்பளப் பட்டியலுக்கு இசைவாக இந்தப் பிரச்சினையை வெறுமனே பயன்படுத்தும் கூலிக் கும்பலாகவே உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினை இதற்கு வெளியில் உள்ளது. உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் சிக்கல்கள் எதில் இருந்து தொடங்குகின்றது எனப் பார்ப்போம்.


1. சமூகம் என்ற எல்லைக்குள் சொந்தச் சமூகத்துடன் ஒன்றுபட்டு வாழ்ந்த மனிதன், வாழ்நாள் பூராவும் அதை இழந்து விடுகின்றான். அவனிடம் எஞ்சியிருப்பது தனிமை என்ற வெறுமைதான். சமூகக் கூட்டு என்ற அடிப்பøடயான உணர்வு சிதைந்து, தனிமையில் தனிமைப்படுத்தப்படுகின்றான்.


2. பாதிக்கப்பட்ட மனிதன் தனது நெருங்கிய குடும்பத்தையும், உற்றார் உறவினரையும், நண்பர்களையும் கூட இழந்து விடுகின்றான். எங்கும் ஒரு வெறுமை அச்சுறுத்துவதாக மாறிவிடுகின்றது.


3. தனது சொந்தச் சுற்றுச் சூழலை இழந்து வெறுமையான இயற்கை மீது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றான். இதில் 100 மீற்றர் மற்றும், 300 மீற்றருக்கும் வாழும் உரிமையைப் பறிப்பது மேலும் அவர்களின் தனிமை வாழ்வையும், விரக்தியையும் அதிகரிக்க வைப்பதாகவே அமைகின்றது.


4. தொடர்ந்து உயிர்வாழ தனது வாழ்வுக்கான ஆதாரமாகத் திகழ்ந்த உற்பத்தி மற்றும் உழைப்புக்கான அடிப்படை ஆற்றல்களையே அவன் இழந்து நிற்கின்றான்.


5. தனது சொந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், கையேந்தி நிற்கும் நிலை தொடர்ச்சியாகத் தக்க வைக்கப்படுகின்றது. சமூகம் எந்தத் தீர்வையும் வழங்க முடியாத தனிமைப்படுத்தலில் சிக்க வைக்கப்படுகின்றது.


6. தனது அடிப்படைத் தேவைகளையே சமூகத்திடம் கேட்டுப் பெற முடியாத அல்லது உரிமையுடன் பெற முடியாத பல இடைத்தரகர்களின் வக்கிரத்தை எதிர் கொள்கின்றான்.


7. கணவனை இழந்த பெண்ணுக்கு விதவை (கைம்பெண்) பட்டத்தை, சமூகம் வாழ்நாள் பூராவும் கொடுத்து விடுகின்றது. அவளின் ஒழுக்கம் மீதான கண்காணிப்புடன் சந்தேகத்துடன் அணுகும் போக்கு தொடங்கிவிட்டது. அத்துடன் பலம் பொருந்திய ஆணாதிக்க வெறியர்களின், அத்துமீறல்களை அன்றாடம் எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட வேண்டி பல துயரங்களைப் பெண் சந்திக்கத் தொடங்கியுள்ளாள்.


8. மனைவியை இழந்த கணவன், குழந்தையை இழந்த தாய் என்ற இழப்புகளின் பின்னே உள்ள பொதுவான சமூக வக்கிரம், எஞ்சிய இந்த வாழ்வில் வக்கிரமாகக் காலம் பூராவும் பின் தொடர தொடங்கியுள்ளது.


9. மற்றவர்களின் அனுதாபத்தைச் சார்ந்து வாழ நிர்ப்பந்திக்கும் ஒரு வக்கிரம் திணிக்கப்படுகின்றது.


10. உதவி, அனுதாபம் (இதில் தனிமனிதர் விதிவிலக்கு) என்ற பின்னணியில், ஒரு விளம்பர உள்ளடக்கம் முதன்மை பெற்றுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் இதற்கு இசைவாக வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். ஒரு விதத்தில் இந்த விளம்பர உதவி பின்னால், எதிர்பார்ப்புடன் கூடிய ஒரு வக்கிரமாகக் கொப்பளிக்கின்றது.


11. மிக வறிய ஏழை மக்களான பாதிக்கப்பட்ட மக்கள், பொதுவான சமூகப் புறக்கணிப்புக்குள் தீவிரமாகவே ஒடுக்கப்படும் அவலம் தொடங்கியுள்ளது.


12. சாதி ரீதியாக மிகவும் அடிநிலைச் சாதி என்ற அடிப்படையில் ஏற்படும் சமூகப் புறக்கணிப்பு, இந்த மக்களின் வாழ்வியல் அவலமாகின்றது.


13. கிடைக்கும் நிவாரணங்கள் இடைத்தரகர்களின் சூறையாடுதலுக்கு உள்ளாகும்போதும், இந்த மக்கள் அதைத் தட்டிக் கேட்க முடியாத வகையில், போராடும் உணர்வை ஒடுக்கும் பாசிசக் கட்டமைப்புகள் கூட இந்த மக்களின் உளவியல் சிக்கலை அதிகரிக்க வைக்கின்றது. இதே போன்று நிவாரணம் வழங்க மறுக்கும் அதிகார வர்க்கத்தை எதிர்த்துச் சுயமாகப் போராட முடியாத வகையில் நடத்தும் சதிராட்டங்கள் கூட இதே விளைவையே ஏற்படுத்துகின்றது.


இப்படி பரந்த தளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் மேல் ஒரு அரசியல் பிழைப்பு, சூறையாடல், மதப்பிரச்சாரம், சிலரின் தனிப்பட்ட வாழ்வின் மேன்மை, அன்னிய ஆக்கிரமிப்பு என்று நீண்ட ஒரு வக்கிரமே அரங்கேறுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தச் சமூக உதவிகளும் நேரடியாகச் சமூகம் வழங்குவதைத் தடுப்பதுதான், உளவியலின் மிக பெரிய ஒரு சமூக நெருக்கடியை உருவாக்குகின்றது. பரந்துபட்ட மக்களின் செயலின்மையை உருவாக்கும் போக்கு, உளவியல் பிரச்சினைக்குத் தீர்வை வழங்க மறுக்கின்றது. சமூக உளவியல் பிரச்சினைக்குச் சமூகம் தான் தீர்வு வழங்க முடியுமே ஒழிய, சமூகத்துக்கு வெளியில் இயங்கும் அதிகார மையங்களோ, தொழில்முறை சார்ந்த கட்டமைப்புகளோ அல்ல.


மனிதன் போராடி வாழ்பவன். இது இயற்கையானது. வாழ்விற்கான போராட்டம் இயற்கையால் ஏற்பட்டாலும், செயற்கையால் ஏற்பட்டாலும் ஒன்றுதான். ஆனால் அவன் போராடி வாழ முடியாத வகையில், இடைத்தரகர்கள் தமது அதிகாரப் பாசிசக் கட்டமைப்புகளால் தடுத்து நிறுத்துகின்றனர். வாழ்வுக்கான போராட்டம் சமூகத்துடன் ஒன்றிணைவை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இதற்கு இடையில் அதிகாரம் கொண்ட இடைத்தரகர்கள் புகுந்து போராடி வாழ்வதையே தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் மக்களின் உளவியல் சிக்கல்கள் என்றுமில்லாத உச்சத்துக்கு இட்டுச் செல்லுகின்றது.


பாதிக்கப்பட்ட மக்கள் உளவியல் ரீதியாக இரண்டு பிரதான போக்கின் ஊடாகவே உளவியல் நெருக்கடியைச் சந்திக்கின்றனர்.


1. சமூக ரீதியான மரபு, பண்பாடு மற்றும் கலாச்சார நெருக்கடிகள்.


2. இடைத்தரகர்களாக உள்ள அதிகார வர்க்கங்களால் ஏற்படும் சமூக நெருக்கடிகள்.


முதலாவதாக, சமூக ரீதியான பொது நெருக்கடி மரபு, பண்பாடு, கலாச்சாரம் போன்ற வடிவங்களினால் ஏற்படுகின்றது. இது சாதியம், ஆணாதிக்கம், வர்க்கம், இனம் என்ற எல்லைக்குள்ளாக நிகழ்கின்றது. பொதுவாக ஏழை மக்கள் மேலான பொதுவான ஒடுக்குமுறைகள், சாதி ரீதியான பொது ஒடுக்குமுறை, ஆணாதிக்கப் பொது ஒடுக்குமுறை மற்றும் பண்பாட்டு ரீதியாக உள்ள சடங்குகள், மரபு ரீதியான சமூக வடிவங்கள் போன்று பல்துறைகளில் பாதிக்கப்பட்ட மக்கள் நெருக்கடியைச் சந்திக்கின்றனர். சமூகத்தில் காணப்படும் ஜனநாயக விரோதப் போக்கில் இருந்து இது உருவாகின்றது. இதுவே உளவியல் நெருக்கடியாகின்றது.


பாரம்பரியமாகவே பாதிக்கப்பட்ட மக்கள் சாதி ரீதியாக அடிநிலைச் சாதியைச் சேர்ந்தவராகப் பெரும்பான்மை மக்கள் இருப்பதால், இந்த அனர்த்தம் அவர்கள் மேலான புதிய ஒடுக்குமுறையாக மாறுகின்றது. உயர்சாதிய நிலையில் நின்றுதான், சமூகமும் இடைத்தரகர்களும் இந்த மக்களை அணுக முற்படுகின்றனர். இந்த மக்கள், நிலவும் சமூகத்தில் மிகவும் அடிநிலையில் வாழ்ந்த ஏழைகள். இதனால் பொதுவாகவே உயர்வர்க்கங்களின் பொது ஒடுக்குமுறையைக் கடந்து நிற்க முடியாது. இந்த இயற்கை அனர்த்தம், மேலும் கடுமையான வர்க்க ஒடுக்குமுறைக்குள்ளானதாகவே மாறிவிடுகின்றது. இதைவிட பண்பாடு மற்றும் மரபு சார்ந்த குடும்ப ஒழுங்குகள் சார்ந்த சமூக நெருக்கடிகள் உருவாகின்றது. குறிப்பாகக் கணவனை இழந்த பெண்ணை சமூகம் எப்படி பார்க்கும்? தாய்தந்தையை இழந்த குழந்தையைச் சமூகம் எப்படி பார்க்கும்? இதைச் சமூகப் போக்கில் என்ன நடக்கும் என்பதை நன்கு தெரிந்தவர்கள் தான் நாம். கணவனை இழந்த பெண்களை விபச்சார எல்லைக்குள் கற்பழிக்கவும், விபச்சாரியாக்கவும் விரும்பும் ஆணாதிக்கச் சமூகப் போக்கு அன்றாட நிகழ்வாகப் பாதிக்கப்பட்ட பெண் எதிர்கொள்ள தொடங்கிவிட்டாள். தனிமைப்பட்டு வாழவழியற்ற இந்த மக்களின் உழைப்பையும், உடலையும் மிக மோசமாகச் சுரண்ட, சுரண்டும் வர்க்கம் தொடங்கிவிட்டது. இப்படியான பொது சமூகத்தில் காணப்படும் ஜனநாயக விரோதப் போக்கு, பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் நெருக்கடியைத் தொடர்ச்சியாகவே மோசமாகத் தக்க வைக்கின்றது. இதை யாரும் இந்தச் சமூக அமைப்புக்குள் தீர்க்க முடியாது.


இரண்டாவதாக பொதுவாக அதிகார வர்க்கங்களால் ஏற்படும் வக்கிரமான சமூக நெருக்கடி ஒன்று தொடர்ச்சியாகவே ஏற்படுகின்றது. இதில் இடைத்தரகர்களாக உட்புகும் அதிகார வர்க்கங்களும், தன்னார்வக் குழுக்களும், அன்னிய படைகளும் என்ற விரிந்த தளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய உளவியல் சிக்கலை உருவாக்குகின்றது. குறைந்தபட்ச நிவாரணத்தைக் கூட பெற முடியாத வகையில், நிவாரணத்தின் ஒரு பெரும் பகுதியை இடைத்தரகர்களே சுருட்டிக் கொள்கின்றனர். அன்றாடம் கிடைக்கும் ஒரு கிலோ அரிசியில் கூட, ஒரு பகுதி சுருட்டப்பட்ட பின்பே கிடைக்கும் என்ற அவலம் உருவாகி உள்ளது. பரந்துபட்ட மக்களின் உணர்வுபூர்வமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதில் உள்ள தடைகள், அந்த மக்களின் உளவியல் சிக்கலை அகலமாக்குகின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் மேலான புதிய அதிகார வர்க்கக் கட்டளைகள் உருவாக்கப்படுகின்றது. இது என்றுமில்லாத அடிமைத்தனத்துக்குள் மக்களின் கழுத்தைப் பிடித்தே தள்ளிச் செல்லுகின்றது. இந்த மக்கள் நவீன அடிமைகளாக, நவீனக் கூலிகளாக மாற்றப்படுகின்றனர். சுதந்திரமாக உழைத்து வாழ்ந்த வாழ்வியல் சிதைக்கப்பட்டதால், புதிய நெருக்கடிகள் உருவாக்கும் உளவியல் சிக்கல்கள், கறைபடிந்த ஒன்றாகவே மாறிவிடுகின்றது.


தனித்துவமிக்க சுதந்திரமான வாழ்வை வாழும் அவர்களின் வாழ்வியல் உரிமையை இந்த இடைத்தட்டு பிரிவுகள் தடுக்கின்றன. அவர்களின் கடல் உரிமை, தொழில் உரிமை முதல் கடலைப் பயன்படுத்தும் சுதந்திரம் வரை எல்லாம் இடைத்தட்டு அதிகார வர்க்கங்களினால் தடுக்கப்படுகின்றது. மற்றும் இவை சார்ந்த வாழ்வியல் உரிமைகளையே தடுக்கும் முயற்சி உளவியல் நெருக்கடியை உருவாக்குகின்றது. இந்த மக்களின் வாழ்வைக் கடல் கொண்டு போனது ஒருபுறம் இருக்க, புதிய சூறாவளியாக இடைத்தட்டு அதிகார வர்க்கங்கள் வாழ்வதற்கான உரிமையைச் சூறையாடுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களிடம் கடல் விட்டுச் சென்ற அதாவது வாழ்வில் எஞ்சியதைக் கூட அந்த மக்கள் இழக்கும் நிலையை அதிகார வர்க்கங்கள் உருவாக்கி அதைக் கைப்பற்றுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களின் சுதந்திர உணர்வுக்கு உட்பட்டு இயங்க முடியாத எல்லையில் தான் புனர்வாழ்வு புனர் நிர்மாணம் கட்டமைக்கப்படுகின்றது. உண்மையில் அந்த மக்களின் உரிமை மற்றும் எஞ்சியதையும் சூறையாடும் சூறாவளியே புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் என்ற பெயரில் வீசிக் கொண்டிருக்கின்றது.


இந்த உளவியல் மற்றும் சமூக நெருக்கடிகளில் இருந்து மக்கள் மீள முடியாத வகையில் கடுமையான நிர்ப்பந்தமே உருவாக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுடன் பாதிக்கப்படாத மக்கள் கலந்து வாழும் உரிமையைத் திட்டவட்டமாகப் புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் தடை செய்கின்றது. பாதிப்படையாத மக்களின் உதவிகள் இடைத்தரகர்களின் கைகளில் குவிந்து கிடக்கின்றது. அதில் ஒரு பகுதி தன்னும் அந்த மக்களிடம் சென்றடைதல் என்பது நிபந்தனைக்குள்ளாகின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த அடிமைத்தனத்துக்கான சாசனத்தில் கையெழுத்திடுவதன் ஊடாகவே சாத்தியமானதாக உள்ளதை எதார்த்தம் நிறுவி வருகின்றது. தொடர்ச்சியான உளவியல் சிக்கல்கள் அந்த மக்களின் தலைவிதியாகி உள்ளது. பொதுவாக உளவியல் பற்றி பேசுபவர்கள், கடல் அள்ளிச் சென்ற எல்லைக்குள்ளான மருத்துவ ரீதியான செயலைப் பற்றி மட்டும் பேசுகின்றனர். இந்த உளவியல் சிக்கல் என்பது சமூகம் சார்ந்த ஒன்றாகவே உள்ளது. ஆனால் இதற்கு வெளியில் உளவியல் நெருக்கடிகள் பெருகிச் செல்லும் சமூகப் போக்கின் வக்கிரங்களை இனம் கண்டு அதனூடாக அணுகுவது என்பது, எமது சமூகத்தில் குறைந்து போய்விட்டது. அதிகார வர்க்கங்கள் மற்றும் இடைத்தரகர்கள் முகம் சுளிக்காத வண்ணம் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி பேசுவது நாகரிகமாகிவிட்டது. பொதுவான அணுகுமுறைக்குப் பதில் சந்தர்ப்பவாத அணுகுமுறை மூலம், பாதிக்கப்பட்ட மக்களின் முதுகில் குத்துவதே ஜனநாயக உரிமையாகிவிட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறுதியாக கிடைப்பதோ, இவர்கள் வீசியெறியும் எச்சில் எலும்புகள்தான்.


4.2 100 மீற்றர், 300 மீற்றர் பாதுகாப்பு பிரதேசம் என்றுஊளையிடுபவர்களின் பின்னணி நோக்கம் என்ன?


மக்கள் மீது திடீர் கரிசனை ஏற்பட்டுள்ளதாகக் காட்டிக் கொண்டு, அரசும் புலிகளும் போட்டி போட்டுக் கொண்டே 100 மீற்றர், 300 மீற்றர் பாதுகாப்பு பிரதேசம் பற்றி ஊளையிடுகின்றனர். அரசும் சரி, புலிகளும் சரி இதில் மட்டும் முரண்படவில்லை. அரசு 100 மீற்றரை பேச, புலிகள் 300 மீற்றராக அறிவித்துள்ளனர். புலிகள் தமது பாசிசச் சர்வாதிகாரக் கட்டமைப்புடன் மக்களின் மூச்சு பேச்சற்ற அடக்குமுறைக்குள் குடியெழுப்புகின்றனர். இதற்காகக் குறுந்தேசிய புலிகள் ஆலாய்ப் பறக்கின்றனர். மக்கள் உயிர் பற்றி என்ன அக்கறை, திடீரென புலிக்கும் அரசுக்கும் பொத்துக் கொண்டு வருகின்றது. மக்களின் உயிர்கள் மீதும், அவர்களின் வாழ்வாதாரங்களின் மீதும் ஏனிந்த திடீர் கரிசனை? அந்த மக்கள் ஒரு நேரக் கஞ்சிக்கே வழியின்றி வாழ்ந்த போது, இவர்கள் எஙகே தான் வாழ்ந்தார்கள். மக்கள் கடற்கரைகளில் மிக நெருக்கமாகச் சந்துபொந்துகளில் வாழவேண்டும் என்று அடம்பிடித்தவர்கள் அல்ல.


மாறாக ஒரு நேரக் கஞ்சிக்கும், தங்கிவாழ ஒரு குடிசையைப் போட்டுக் கொண்டு கடற்கரைகளில் நெருக்கமாக வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள்தான் இந்த மக்கள். சீரற்ற லும்பன் உழைப்பில் காலம் தள்ளி வாழ்வது, அவர்களின் வாழ்வியல் தலைவிதியாக இருந்தது. சொந்த நாட்டு மக்கள் இப்படி பரதேசிகளாக கண்ணீரே வாழ்வாகக் கொண்டு பரிதாபகரமாக வாழ்ந்த போது, இவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்த அரசும் சரி, புலிகளும் சரி எந்தவிதமான சமூக அக்கறையையும் ஒருநாளும் கொண்டது கிடையாது.


சுனாமியை தொடர்ந்து எழுந்த கடல் இந்த மக்களைக் கூட்டமாகவே அள்ளிச் சென்றபோது, இவர்களை மீட்பதற்கு என்று எந்த முயற்சியும் இவர்கள் எடுக்கவில்லை. கடல் எழுந்து வருவதை முன்கூட்டியே தெரிந்தும் அதை அறிவிக்காத மனிதவிரோதத்தை இட்டு, இவர்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஒரு கண்டனத்தைக் கூட முன்வைக்கவில்லை. ஆனால் மக்கள் பற்றிய திடீர் கரிசனை மட்டும் உருவாகி உள்ளது. மக்களைக் கடல் இழுத்துச் சென்ற பின், கடலில் பலர் உயிருக்காகப் போராடிய அந்த மக்களின் உயிரை இட்டு இவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு வீர வரலாறும் படைக்கவில்லை. மக்களை மீட்க கடலில் இறங்கிப் போராடியிருந்தால் அல்லவா வீரவரலாறுகள் உருவாகும். மிகப் பெரிய கடற்படை கொண்டுள்ள புலிகளும் சரி, அரசும் சரி கடலில் இறங்கி மீட்பில் ஈடுபடவில்லை. இதனால் பல ஆயிரம் உயிர்கள் கடலில் ஒரு துரும்பைப் பற்றிக் கொண்டாவது உயிர் வாழ்வதற்காகப் போராடி மடிந்தனர். மக்களின் மீட்பாளர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் கடலில் இறங்கிவிடவில்லை. அலைகளின் ஊடாக எந்த விஷ்ணுவும் வந்து அவர்களை மீட்கவில்லை. எந்தச் சாமியும், கடவுளும் கூட கடலில் மீட்புக்காக இறங்கத் துணியவில்லை. ஆனால் இறந்த பிரேதத்தைக் காட்டிச் சாமியாடுவதிலும், கொள்ளையடிப்பதிலும் மட்டும், மீட்பாளர்கள் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டனர்.


இதற்கு வெளியில் மக்கள் கூட்டம்தான் தன்னிச்சையாக மீட்பில் ஈடுபட்டது. புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் என்ற அடிப்படை விடயத்தில் திடீரென்று அரசும் புலிகளும் ஆக்ரோசமாக மோதியபடி களமிறங்கின. நிதியுடன் தொடர்புடைய விடையமாக இருப்பதால், தாம் மட்டும் அதைச் செய்யும் உரிமையை முதன்மைப்படுத்தியே கூத்தாடத் தொடங்கினர். மறுபக்கத்தில் மக்கள் வாரி வழங்கிய ஆரம்ப நிவாரணங்களையே யார் செய்வது என்ற முரண்பாடும் தொடங்கியது. மக்கள் வழங்கிய ஆரம்ப நிவாரணங்களைப் பறித்தெடுத்து விநியோகம் செய்யத் தொடங்கினர். உண்மையில் இந்த மக்களையிட்டு அதிகாரத்தில் உள்ளவர்கள் துளியளவு கூட அக்கறை கொள்ளவில்லை. மக்கள்தான் அக்கறை கொண்டனர். மக்கள் தான் தமது உழைப்பின் ஒரு பகுதியை அவர்களின் மறுவாழ்வுக்காகக் கொடுத்தனர். ஆனால் அவற்றில் பெரும் பகுதி அந்த மக்களுக்கு உண்மையில் சென்று அடையவில்லை.


இந்த நிலையில் 100 மீற்றர் முதல் 300 மீற்றர் பாதுகாப்பு வளையம் என்று கூறி அரசும், புலிகளும் மக்களை அங்கிருந்து அகற்றுவதில் விடாப்பிடியாகச் செயல்படுகின்றனர். சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்பார்கள். கடற்கரை அண்டிய பிரதேசம் பாதுகாப்பு வளையம் என்ற அடிப்படையான விடயத்தின் பின், உலகமயமாதல் என்ற வர்த்தக நோக்கம்தான் இதன் உள்ளடக்கமாகும். சுனாமி உருவாக்கிய கடல் கொந்தளிப்பு போன்ற ஒன்றை முன்பே காணாத ஒரு மக்கள் கூட்டம், அடுத்த சுனாமியை மீளக் காண்பது என்பது பொதுவில் சாத்தியமற்றது. அடுத்த சுனாமி 100 வருடங்கள் பின் உருவாகலாம் அல்லது உருவாகாமல் இருக்கலாம். காலம் செல்ல மக்கள் இவற்றை மறந்துவிடுவர் என்பதும் உண்மை. ஆனால் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த மண், அவர்களின் உழைப்பைக் கண்ட மண்ணை விட்டு அவர்களை அகற்றுவதில் ஏன் இந்தளவுக்கு முனைப்பு காட்டுகின்றனர். பாதிக்கப்படாத பிரதேசத்தில் இருந்தும் 100 மீற்றருக்கு மக்களை அகற்றுவீர்களா? இந்த 100 மீற்றர் நடைமுறையை உலகம் முழுக்க முன்வைத்து அமுல் செய்ய முடியுமா? ஏன் இந்தச் சதிராட்ட நாடகம் நடக்கின்றது. சுனாமி அலைகள் தொடர்ச்சியாக ஏற்படும் அமெரிக்கா, ஜப்பான் பிரதேசங்களில் கூட இந்த நடைமுறை கிடையாது. இந்த நிலையில் புலிகளும் அரசும் சேர்ந்து, மக்களின் உயிரின் மேல் கரிசனை உள்ளதாகக் காட்டி நடத்தும் போலி நாடகங்கள் பின்னால் ஒரு உள்நோக்கம் உண்டு.


வெப்பமண்டல நாடுகளின் கடற்கரைகள் உலகமயமாதலில் டாலர்களையே உற்பத்தி செய்கின்றது. இது சொந்த நாட்டில் மட்டுமின்றி, மேற்கு நாட்டிலும் கூட டொலரை உற்பத்தி செய்கின்றது. இதன் பின்னால் சர்வதேசச் சுற்றுலாத் துறையே வாயைப் பிளந்து நிற்கின்றது. மக்களின் சொத்தாக இருந்த கடற்கரைகளை ஏமாற்றி அபகரிப்பதன் மூலம், விலைமதிப்பற்ற நிலத்தை அன்னியருக்குத் தாரைவார்க்கும் உள்நோக்கமே இதன் பின்னணியில் உண்டு. மக்களை எல்லாம் அந்த மண்ணில் இருந்து துரத்திய பின்பு, சில வருடங்கள் சென்ற பின்பு, இந்தக் கரையோரங்கள் மேற்கத்திய வெள்ளையர்களின் காமக்களியாட்டப் பொழுதுபோக்கு பிரதேசங்களாக மாற்றப்பட உள்ளது என்பதே உண்மை. 100 மீற்றர் கடற்கரையில் மக்கள் வாழக் கூடாது என்று பசப்பும் இவர்கள், கடற்கரைகளில் உல்லாசமாக இருப்பதைத் தடை செய்யவில்லை. தடைசெய்யப் போவதுமில்லை. இந்தச் சுனாமி கடற்கரைகளில் உல்லாசமாக இருந்தவர்களைக் கூட ஆயிரக்கணக்கில் பலி கொண்டுள்ளது. இப்படி உல்லாசமாக இருப்பவர்களின் உயிரை இந்த 100 மீற்றர் எப்படி பாதுகாக்கும்? இதைப்பற்றி மட்டும் இவர்கள் மூச்சு விடவில்லை. மக்கள் வாழ்வுக்காகவும், தொழிலுக்காகவும் வாழ்வதற்கு மட்டும் தடை விதிக்கின்றனர் என்றால் என்ன ஒரு அக்கிரமம்? கடற்கரைகள் சுனாமிக்கு முன்பாகவே தனியார்மயமாகிக் கொண்டிருந்தது. அன்னிய நிறுவனங்கள் இதை வாங்கிக் கொண்டிருந்தன. இந்தச் சுனாமிக்கு முன்பாகவே புலிகள் கூட, பல கடற்கரைப் பிரதேசங்களைப் பினாமி பெயரில் அபகரிக்கத் தொடங்கியிருந்தனர்.


கடற்கரையில் இருந்து மக்களைத் துரத்துவதன் மூலம், அவர்களுக்கு வாழ்வை வழங்கிய சிறியளவிலான மீன்பிடியை இல்லாது ஒழிக்க முடியும். மேற்கு பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்கள் கடலை ஆக்கிரமித்து வரும் நிலையில், சிறு மீன்பிடியாளர்களைக் கடலில் இருந்து அகற்றுவது உலகமயமாதலில் ஓர் அடிப்படை நிபந்தனை. சுனாமியின் பெயரில் இதைப் பூர்த்தி செய்வதன் மூலம், மீன் பிடித்து வாழ்ந்த மக்களின் வாழ்வியல் உரிமையை இல்லாது ஒழிக்க முடியும். மறுபக்கம் கடற்கரையைச் சுற்றுலா மையங்களாக மாற்றுவதன் மூலம், மக்களின் வாழ்வியல் உரிமையைப் பறிக்கும் வக்கிரம் நடக்கின்றது. இந்த மண்ணில் வாழ்ந்த மக்கள் தமது மனைவியையும், குழந்தைகளையும் கடற்கரையில் பொழுது போக்கும் வெள்ளைப் பன்றிகளின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்து பொறுக்கி வாழவே, ஏகாதிபத்திய வளர்ப்பு நாய்களாக உள்ள தேசியவாதிகள் வழிகாட்டுகின்றனர். இதுவே அரசினதும் புலியினதும் விருப்பமான விளையாட்டாக உள்ளது. அன்னியச் செலாவணி என்ற பெயரில், டொலர் நோட்டுகள் கிடைத்தால் நல்லது என்பது தேசியச் சிந்தனையாக உள்ளது.


சில்லறை மீன்கள் கிடைப்பதை விடவும் டொலர் நோட்டுகள் பெறுமதியானவை என்பது எல்லா மக்கள் விரோதிகளினதும் அடிப்படைக் கொள்கையாகும். இது நாட்டை முன்னேற்ற உதவும் என்பார்கள். ஆனால் எந்த நாட்டை முன்னேற்ற போகின்றீர்கள் என்றால், மூச்சுப் பேச்சே கிடையாது. பிடிக்கும் மீன்கள் மூலம் மக்களுக்குக் கிடைத்து வந்த கொஞ்ச நஞ்ச புரதச் சத்தையும் தேசியம் பேசும் புலிகளும், அரசும் பறித்துவிடவே முனைகின்றனர். புரதத்துக்குப் பதில் மேற்கத்தைய ஆணாதிக்க ஆண்கள் வெளியேற்றும் விந்துகளையே உள்வாங்க கோரும் பாதையில் தான், கடற்கரை பாதுகாப்பு விவகாரம் மண்டிக் கிடக்கின்றது.


ஒரு நேரக் கஞ்சிக்காக வாழ்வா? சாவா? என்ற வாழ்வியல் போராட்டத்தை நடத்தும் மனிதன், குறைந்தபட்சம் உழைப்பைப் பயன்படுத்தக் கூடிய வசதியான இடத்தில் வாழ்வதே சிறப்பானது. இங்கு இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வது என்பது, தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. இயற்கை அப்படித்தான் உள்ளது. 100 மீற்றருக்கு வெளியில் மற்றொரு இயற்கை அழிவு ஏன் வரமுடியாது? இயற்கையை எதிர்கொள்ள, இயற்கைக்கு இசைவான வகையில் நவீன அறிவியலை பயன்படுத்த முடியும். கடற்கோள் மட்டும் இயற்கை அழிவாக இயற்கை உருவாக்குவதில்லை. இலங்கையில் இயற்கை அழிவு வரக்கூடிய எத்தனையோ விடயங்கள் உண்டு. அதைப் பற்றி யாரும் மக்கள் நலன் சார்ந்து பேசமுடியுமா? ஏன் பாதிக்கப்படாத பிரதேசத்தில் 100 மீற்றருக்கு என்ன நடக்கும். உதாரணமாக கொழும்பில் கரையோரத்தைக் குடியெழுப்பத்தான் முடியுமா?


ஏன் இந்த இயற்கை அழிவை விட, கடந்தகால யுத்த அழிவு மிகப் பிரம்மாண்டமானது. அதை நிவர்த்தி செய்ய உங்களால் முடிகிறதா? மக்களின் அடிப்படையான ஜனநாயகக் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய உங்களால் முடிகிறதா? மக்களை மந்தை அடிமைகளாக, உங்கள் சொந்த தேவைக்காக அன்றாடம் மிதிக்கும் நீங்கள் தான், 100 மீற்றருக்கு அப்பால் குடியேற்றி மக்களைப் பாதுகாக்கப் போவதாகப் பீற்றுகின்றனர். இது உள்நோக்கம் கொண்ட மக்கள் விரோதச் சதியை அடிப்படையாகக் கொண்டது. இதைக் கண்டு கொள்ள சுயசிந்தனை உள்ள எந்த மனிதனுக்கும் பூதக்கண்ணாடி அவசியமற்றது.


4.3 சுனாமி குறித்து ஏகாதிபத்தியச் சதிகள்


உலகெங்கும் வாழும் மக்களுக்கு எதிரான சதிகளையும், நாடுகளுக்கு எதிரான திட்டங்களையும் தீட்டியபடிதான், ஏகாதிபத்தியங்கள் அன்றாடம் வக்கரிக்கின்றது. ஏகாதிபத்தியம் என்பது மக்கள் நலன் சார்ந்து எதையும் மக்களுக்காகச் செய்ய நினைப்பதில்லை. மக்களின் உழைப்பைக் கொள்ளையடிப்பது, மக்களின் சொத்தை அபகரிப்பது, நாடுகளைச் சூறையாடுவது என்ற திசையில் தன்னை ஒழுங்கமைத்து வருவதுதான் ஏகாதிபத்தியம். மூலதனத்தின் குவிப்பு தான் ஏகாதிபத்தியத்தின் உயர்ந்தபட்ச இலட்சியம்.


இந்த அடிப்படையில் செயல்படும் ஏகாதிபத்தியங்கள், சுனாமி நிகழ்வதை முன் கூட்டியே தாம் பதிவு செய்ததாக அறிவித்துள்ளன. சொந்த நாட்டுக் கடல் போக்குவரத்து, மீன்பிடி மற்றும் கடற்படைக்குத் தகவல்கள் பரிமாறியதையும் கூட ஒத்துக் கொண்டுள்ளன. ஆனால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இதை தாம் அறிவிக்கவில்லை என்பதையும் கூட ஏற்றுக் கொண்டுள்ளன.


ஹாவாய் தீவில் உள்ள ஆராய்ச்சி மையம் மூலம் டீயகோகிராசியஸ் இராணுவத்தளம் செய்தியைப் பெற்றுக் கொண்டது. அமெரிக்க நட்பு நாடுகளும் செய்தியைப் பெற்றுக் கொண்டனர். ஜெனிவாவில் உள்ள அணு ஆயுத பரிசோதனை கண்காணிப்பு மையம் நிகழ்வைப் பதிவு செய்துள்ளது. ஏன் இவற்றை மக்களுக்கு அறிவிக்கவில்லை என்று கேட்டால் கையைப் பிசைகின்றனர். தர்க்கமற்ற காரணங்களைக் கூறிக் கொள்கின்றனர். குறிப்பாகத் தமக்கு யாருக்கு அறிவிப்பது என்று தெரியாதாம். மனித இனத்தை மந்தைக் கூட்டமாக வைத்திருக்கும் வரை, இப்படி பதிலளித்து விட்டு ஒரு சர்வதேச குற்றத்தில் இருந்து தப்பித்து விடுகின்றனர். கேள்வி கேட்பவன் இதற்கு வெளியில் கேள்வி கேட்பதையே தவிர்த்துக் கொள்வது, இந்த நாகரிக அமைப்பின் மலட்டுத்தனத்தைப் பாதுகாக்க உதவுகின்றது.


ஒரு இயற்கை அனர்த்தம் நடக்க உள்ளதை முன்கூட்டியோ அல்லது நடந்தவுடன் அதை மக்களுக்குத் தெரியப்படுத்த மறுப்பது ஒரு சர்வதேச சமூகவிரோதக் குற்றமாகும். இது மனித இனத்துக்கு எதிரான ஒரு குற்றமாகும். உலக அதிகாரங்களையும், உலக அறிவையும் கைப்பற்றி கட்டுப்படுத்தி வைத்துள்ள அதிகார வர்க்கங்களும், அரசியல் மையங்களும், இதை மக்களுக்கு அறிவித்து முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கத் தவறிய நிகழ்வை ஒரு வரலாற்றுக் குற்றமாகவே பாட்டாளிவர்க்கம் பிரகடனம் செய்கின்றது. காலங்காலமாக இப்படி குற்றங்களைச் செய்து மக்களைப் பலியிடுவது, ஆளும் வர்க்கத்தின் வக்கிரமாகவே உள்ளது.


மக்களைப் பற்றி சிறிதும் அக்கறையற்ற அதிகார வர்க்கங்களின் தெரிவுகள் அனைத்தும், பணக்கார வர்க்கத்தைச் சார்ந்தே காணப்படுகின்றது. மக்களை இழிவாகவும், கேவலமாகவும் நடத்தும் உலக அதிகார மையங்கள், சுனாமியை முன் கூட்டியே தெரிந்தும் அறிவிக்கவில்லை. அவர்கள் கூறும் காரணங்கள் அனைத்தும் நொண்டிச் சாக்கானவை. முதலில் உலகம் முழுக்க தமது அதிகாரத்தை நிறுவவும், மக்களின் அறிவை மலடாக்கவும், உலகத்தைப் பொய்களில் புதைக்கவும் இவர்கள் உலகெங்கும் நடத்தும் உலகளாவிய செய்தி அமைப்புக்களில் கூட, இந்த இயற்கை அனர்த்தத்தைப் பற்றிய செய்தியை முன்கூட்டி அறிவிக்கவில்லை. இன்று ஏகாதிபத்தியத்தின் ஒரு சில செய்தியமைப்பைச் சார்ந்துதான், உலகின் 99 சதவீதமான செய்திகளை உற்பத்தி செய்கின்றனர். இப்படி உற்பத்தி செய்யப்படும் செய்திகள், மக்களுக்குப் பொய்யும் புரட்டுடனும் தான் சென்று அடைகின்றது. சுனாமி நடந்ததைப் பற்றி அறியாத நிலையில் அன்றைய நாள் உலகில் உள்ள மக்கள் செய்திகளைக் கேட்டபடிதான் தமது சொந்த மரணத்தையே வரவழைத்துக் கொண்டிருந்தனர். இயற்கையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி செய்திகளை, சர்வதேச செய்தி அமைப்புகளுக்கு ஒரு இராணுவ இரகசியம் போல் திட்டமிட்டே ஏகாதிபத்தியங்கள் வழங்க மறுத்து இருந்தன. தமது சொந்த இராணுவக் கட்டமைப்பு, மற்றும் சர்வதேச வர்த்தகப் போக்குவரத்துக்கு மட்டும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்ட கயவர்களால்தான் இந்த உலகம் ஆளப்படுகின்றது. இவர்களின் இந்த ஒழுக்கமே உலகச் சட்டமாக உள்ளது. மக்களுக்கு எதிரான இவர்களின் அன்றாட நடைமுறைகளைப் பாதுகாப்பது தான் இன்றைய ஜனநாயகம் மற்றும் சுதந்திரமாக உள்ளது.


4.4 சுனாமி இயற்கையாக உருவானதா? செயற்கையாக உருவாக்கப்பட்டதா?


இது தொடர்பான சந்தேகம் பலதரப்பில் எழுப்பப்பட்டிருந்தது. மக்கள் கூட இப்படி ஒன்று ஏன் நிகழ்ந்திருக்கக் கூடாது என்ற சந்தேகத்தைக் கொண்டிருந்தனர். அதேநேரம் இந்தச் சுனாமியை அமெரிக்கா ஏகாதிபத்தியம் நடத்தியதாக ஒரு அபிப்பிராயம் வெளிப்பட்டது. இந்த ஊகங்கள், சந்தேகங்கள் பற்றி, நாம் என்ன நினைக்கின்றோம் என்பதில் கூட அடிப்படையான அறிவியல் பிரச்சினையை எழுப்பி விடுகின்றது.


இன்று செயற்கையாகத் திட்டமிட்டு நடத்தும் இயற்கை போன்ற அழிவுகளை மக்களுக்காகப் போராடுபவர்கள் கண்டறியும் பலம் மற்றும் அறிவியல் தொழில் நுட்பம் பொதுவாகக் கிடையாது. இதனால் இதுதான் நடந்தது என்று உறுதியாகச் சொல்ல முடியாது போகின்றது. பொதுவாக மக்கள் நலனை முன்னிறுத்தாத சுயநலப் போக்கு உலகப் போக்காக இருப்பதால், உண்மையைக் கண்டறிவது மேலும் மிகக் கடினமாகி விடுகின்றது. உலகில் செயற்கையாக இயற்கை போன்ற பல திட்டமிட்ட தாக்குதல்களை அன்றாடம் ஏகாதிபத்தியம் பரிசோதிக்கின்றது. இந்த வகையில் நுண்ணுயிர் பரிசோதனைகள் மிக முக்கியமானது. இந்த மனித விரோத ஆயுதத்தை ஏகாதிபத்தியங்கள் தொடர்ச்சியாக அன்றாடம் பரிசோதிக்கின்றது. இதன் விளைவை அறிய திட்டமிட்டே செயற்கை நோய்களை உருவாக்கி, அதை இயற்கையாகப் பரப்புகின்றனர். இதைப் போன்று விவசாய உற்பத்திகளைக் கட்டுப்படுத்த விவசாயத்தை அழிக்கும் நவீன நுண்ணுயிர்களைச் செயற்கையாக உற்பத்தி செய்து இயற்கை அழிவை ஏற்படுத்துகின்றனர். இப்படியான பல பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. இப்படி நடக்கும் மனிதவிரோதக் குற்றங்கள் காலத்தால் மக்கள் தங்கள் கையில் அதிகாரத்தைக் கைப்பற்றும் போதே அம்பலமாகின்றன. இவை ஒன்றும் கற்பனையானவையல்ல.


இந்த நிலையில் சுனாமி இயற்கையானதா? அல்லது செயற்கையானதா? என்ற கேள்வியும் மனித இனத்தின் முன் எழுந்துள்ளது. இதுபற்றிய தெளிவான தீர்ப்பைக் காலத்துக்கும், அறிவுக்கும் விட்டுவிடுவோம். ஆனால் நாம் இதில் உள்ள மற்றொரு உண்மையை ஆராய வேண்டியுள்ளது. பொதுவாகவே இந்தத் தாக்குதலை அமெரிக்காவே செய்திருக்கும் என்ற அடிப்படையான கருதுகோளின் பின்னுள்ள ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டியவராக உள்ளோம். அமெரிக்கா முதல் உலகில் உள்ள அனைத்து ஏகாதிபத்தியங்களும், உலகளவில் இப்படி ஒரு மனிதவிரோதத் தாக்குதலுக்கான தயாரிப்பு வேலையை செய்து வருகின்றன என்ற பரந்துபட்ட மக்களின் அனுபவத்தை, நாம் மீள பகிர்ந்து கொள்வது அவசியமானது. இதில் உள்ள பொது உண்மையை அறிவியல்துறை திட்டமிட்டே மறைக்கின்றது. ஏகாதிபத்தியங்கள் என்பதே மக்களுக்கு எதிராகச் செயல்படுபவை தான். இதில் யாருக்கும் சந்தேகம் அவசியமற்றது. மக்களின் வாழ்வைச் சூறையாடவும், நாடுகளை ஆக்கிரமிக்கவும் தேசங்களைத் திவாலடையச் செய்யவும், தன்னாலான அளவுக்குச் சமூக விரோத அடிப்படைகளுடன் களத்தில் செயல்படுகின்றனர்.


இதனடிப்படையில் சுனாமி போன்ற ஒரு செயற்கையான இயற்கை தாக்குதலை நடத்த என்றும் ஏகாதிபத்தியங்கள் பின்நிற்பதில்லை. குறிப்பாகப் பரிசோதனைக்காகவும், இயற்கை தாக்குதல் போன்ற ஒரு தாக்குதலை நடத்த எப்போதுமே தயாராக இருந்தனர் அல்லது தாக்குதலை நடத்துகின்றனர். இந்த உண்மையைத் தான், இந்தச் சுனாமிக்கு வெளியில் மனித இனம் புரிந்து கொண்டேயாக வேண்டியுள்ளது. நடந்த சுனாமி இயற்கையானதா? அல்லது திட்டமிட்ட வகையில் செயற்கையானதா? என்பதைக் கடந்து, செயற்கையாகவே ஏகாதிபத்தியம் இது போன்ற ஒன்றை நடத்தும் என்ற உண்மையை நாம் நிராகரித்துவிட முடியாது. பரந்துபட்ட மக்களின் சந்தேகம் நியாயமானது. இது ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஒரு வரலாற்று அனுபவமும் கூட.


உண்மையில் செயற்கை அலைகளைக் கொண்டு நாடுகளைத் தாக்கும் திட்டம் ஏகாதிபத்திய இராணுவப் பரிசோதனைகளில் இருந்தவையா என்றால், ஆம் இருந்தது. சுனாமி போன்ற ஓர் இயற்கை தாக்குதலை நடத்த, ஏகாதிபத்தியங்கள் பல பரிசோதனைகளைக் கடந்த காலத்தில் நடத்தியுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் போதே இதற்கான முதல் முயற்சி தொடங்கப்பட்டது. பகிரங்கப்படுத்தப்பட்ட நியூசிலாந்து ஆவணம் ஒன்றே இதை உறுதி செய்கின்றது. முதலில் நியூசிலாந்து கடற்பிரதேசத்தல் அணுகுண்டின் அளவு பலம் கொண்ட ஒரு தாக்குதல் மூலம், கடல் பேரலைகளை உருவாக்கி அழிக்கும் ஒரு திட்டம் மிகவும் இரகசியமாக ஆராய்ச்சி செய்யப்பட்டது. நியூசிலாந்து ஓக்லான்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் தோமாஸ் லீச் என்பவர் 1944, 1945இல் தொடரான குண்டு வெடிப்புகளை கடலின் ஆழத்தில் ஏற்படுத்தி பேரலைகளைக் கடலுக்குள் செயற்கை முறையில் உருவாக்கினார். இந்த மட்டுப்படுத்தப்பட்ட சிறிய பரிமாணமுடைய இவ்வலைகள் ஓக்லான்ட் வாங்கப்பரோஆ (Bikini Atoll) எனுமிடத்தில் தோற்றுவிக்கப்பட்டது.


இந்தப் பரிசோதனையின் இராணுவ முக்கியத்துவம் அமெரிக்காவை வெகுவாக கவர்ந்தது. இவ்வாராய்ச்சி இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாகப் பூர்த்தி செய்யப்படாமையால் தான், இது இரண்டாம் உலக யுத்தத்தில் போது பயன்பாட்டுக்கு வரவில்லை. இது அன்று பயன்பாட்டுக்கு வந்திருப்பின், அணுக்குண்டுகளுக்கு ஒத்த ஒரு ஆயுதமாக இரண்டாம் உலகப் போரில் இடம் பெற்றிருக்கும் என்று அமெரிக்க இராணுவ அதிகாரிகளே ஒத்துக் கொண்டிருந்தனர். Project Seal எனப் பெயரிடப்பட்ட சுனாமி பேரலைகள் பற்றிய ஆராய்ச்சி விபரங்கள் அடங்கிய 53 வருட இரகசிய ஆவணம் 6 வருடங்களுக்கு முன்பே நியூசிலாந்தின் வெளிநாட்டு மற்றும் வர்த்தகத் தொடர்பு அமைச்சு முதலில் உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டது.


இரண்டாம் உலக யுத்தத்தின் போது இரகசிய ஆவணங்கள் என இலச்சினையிடப்பட்ட இந்த ஆவணங்கள் மேல் அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் குறிப்பான கவனத்தைச் செலுத்தினர். அமெரிக்கா, இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட தோமாஸ் லீச் எனும் இப்பேராசிரியரை அமெரிக்காவின் ஆடிடுடிணடி அtணிடூடூ என்ற அணு பரிசோதனைத் தளத்துக்கு வருவித்து, அணுசக்தி வழிமுறைகள் ஏதாவது தோமாஸ் லீச்சின் ஆராய்வுக்குப் பயன்பட வாய்ப்பிருக்குமா எனவும் அறிவதற்காக விரும்பியது. ஆனால் பேராசிரியர் தோமாஸ் லீச்சின் அமெரிக்க விஜயம் நடைபெறவில்லை. ஆனால் அமெரிக்க அணு ஆயுதப் பரிசோதனை மையக் குழுவின் அதிகாரியான டாக்டர் கார்ல் கொம்ரன் என்பவர் நியூசிலாந்துக்குச் சென்று இதைப் பற்றி ஆராய்ந்தார்.


டாக்டர் கார்ப் கொம்ரன் இந்த தோமாஸ் லீச்சின் ஆராய்ச்சியின் முடிவுகள் பற்றி மிகுந்த வியப்புத் தெரிவித்ததுடன், இவ்வாராய்ச்சிக்குத் தகுந்த தொழில் நுட்பத் தகவல்கள் வழங்கப்படவேண்டும் எனவும் அமெரிக்க இராணுவ இணை நிர்வாகக் குழுவுக்கு, 1946ஆம் ஆண்டு வாஷிங்டனிலிருந்து வெலிங்ரனுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்தப் பரிசோதனையில் ஈடுபட்ட தோமாஸ் லீச் 1973இல் அவுஸ்திரேலியாவில் (ஆஸ்திரேலியா) இறந்தார். 1940இலிருந்து 1950ஆம் ஆண்டு வரை இவர் பல்கலைக்கழகப் பொறியியல் பீடாதிபதியாக இருந்தவர். மனித விரோத அழிவு யுத்தத்துக்கு ஏற்ற ஒரு ஏகாதிபத்திய ஆயுதத்தைக் கண்டுபிடித்ததற்காக, 1947இல் தோமாஸ் லீச்சுக்கு வழங்கப்பட்ட விருது (CBE - Companion of the Order of the British Empire) தான், இவரின் நாசகார திட்டம் பற்றிய ஊகங்கள் உலகில் கசிய காரணமாக இருந்தது.


நியூசிலாந்து மற்றும் அமெரிக்க அதியுயர் அதிகாரிகளின் மட்டங்களில் மட்டும் இந்த அழிவாயுத ஆராய்ச்சி குறித்து ஆதரவாக வெகுவாகப் பேசப்பட்ட போதும் ஆராய்ச்சி நடைபெற்ற காலப்பகுதியில் இதுபற்றிய விபரங்கள் யாவும் இரகசியப்படுத்தப்பட்டிருந்தது. தோமாஸ் லீச்சுக்கு உத்தியோக ரீதியில் பரீட்சயமான நீல் கீற்ரோன் என்பவர், நியூசிலாந்து பத்திரிகையான ஹெரால்ட்டுக்கு தகவல் தருகையில் இந்தப் பேரலைகளை உருவாக்கக் கடலின் அடியில் வெடிபொருட்களின் அடுக்குகள் உருவாக்கப்பட்டன என்றார். பசுபிக் சமுத்திரக் கடற்பரப்பிலும் நியூசிலாந்தின் வாங்கப்பரோஆ (Project Seal ) கடற்பரப்பிலும் சுனாமி அலைகள் பரிமாணத்தில் சிறிதாக உருவாக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. இப்பிரதேசங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தன. கணூணிடீஞுஞிt குஞுச்டூ என குறியிட்டழைக்கப்பட்ட இந்தப் பரிசோதனைத் திட்டத்தின் இறுதிக் குறிப்பு ஆவணங்கள் யாவும் வெலிங்ரன் பாதுகாப்புத் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இதன் தொடர்ச்சி பற்றி தெளிவான தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இந்தச் சுனாமியை உருவாக்கும் குண்டு அதன் முழுப்பரிணாமத்தில் ஒருபோதும் பரிசோதிக்கப்படவில்லை. இப்பரிசோதனைகள் தொடர்பாகச் சாதாரண மக்கள் யாருக்காவது தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும், மீளவும் இப்பரிசோதனைக்குப் புத்துயிர் கொடுக்கப்பட்டதா எனவும் கேள்வியெழுப்புகின்றார் நீல் கீற்ரோன் எனப்படும் தோமாஸ் லீச்சின் முன்னைநாள் தொழிற்சகா. சுனாமி கடல் அலைகளைச் செயற்கையில் உருவாக்கி, மனித அழிவை உருவாக்கும் திட்டம் எதார்த்தமானதாகவும் ஏகாதிபத்திய ஆயுதமாகவும் இருந்தன. இருக்கின்றன. மக்களுக்கு எதிராக இயங்கும் ஏகாதிபத்தியக் கட்டமைப்பு ஒன்றும் புனிதமானவையல்ல.


இதை விரிவாகப் புரிந்து கொள்ள விரும்புவோர் கீழ் உள்ள இணையத் தளத்துக்குச் செல்லவும். www.prisonplanet.comwww.prisonplanet.tv/subscribe/html.

 

 


இந்த இடத்தில் அமெரிக்கா செய்திகள் சுனாமி தாக்குதலுக்கு முன்பாகவே இலங்கை, இந்தியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியக் கரையோரங்களை விசேடமாகப் படம் பிடித்துள்ளது. தாக்குதல் நடந்த போதும், நடந்த பின்பும் கூட செயற்கைக்கோள் படங்களை எடுத்துள்ளனர். இந்தத் தாக்குதலின் விளைவை முன்கூட்டியே கண்காணிக்கும் அளவுக்கு அமெரிக்கா செயல்பட்டது ஏன்? இதன் அடிப்படையான உண்மை என்ன? என்ற பல கேள்விகளுக்குக் காலமும், மனித இனமும் தான் பதிலளிக்க வேண்டியுள்ளது.


இங்கு மற்றொரு உண்மை வெளிவந்துள்ளது. சுனாமி செய்திகள் முன் கூட்டியே சில மட்டத்தில் பரிமாறப்பட்டுள்ளது. அமெரிக்கா கடற்படைக்குச் செய்திகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் இலங்கை கடற்படைக்கும் செய்திகள் கிடைத்ததன் மூலம், கப்பல்கள் பாதுகாக்கப்பட்டது. இது பரந்த தளத்தில் நடைபெற்றுள்ளது. சுனாமி தாக்கும் முன்பே இது பற்றிய தகவல்கள் இராணுவப் பொருளாதார இலக்குகளில் பரிமாறப்பட்ட போது, பரந்துபட்ட மக்களுக்கு மட்டும் திட்டமிட்டு இது அறிவிக்கப்படவில்லை. இதன் உள்நோக்கம் அடிப்படையிலேயே மக்கள் விரோதத் தன்மை கொண்டவையாக இருந்துள்ளது.


4.5 ஏகாதிபத்தியத் தலையீடுகளும் அதன் விளைவுகளும்


சுனாமியைத் தொடர்ந்து ஏகாதிபத்தியத் தலையீடுகள் பல மட்டங்களில் அரங்கேறியுள்ளது. இராணுவ வடிவங்கள் முதல் ஏகாதிபத்திய நிதியாதாரத்தில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்கள் வரை களத்தில் செயல்படுகின்றன. இதன் மூலம் சுனாமி ஏற்படுத்திய சமூகச் சிதைவைவிட, சுனாமி பெயரில் நடக்கும் நிவாரணம் அதிக சமூகச் சிதைவை உருவாக்கி வருகின்றது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள், தமது அடிப்படையான சமூக வாழ்வியல் கட்டுமானத்தை இழந்துள்ள நிலையில், அவர்களின் புனர்வாழ்வு என்பது பல சிக்கல் நிறைந்த சர்வதேசச் சதிவலைகளுக்கு ஊடாகவே பயணிக்கின்றது. அன்னியத் தலையீடுகள் நாட்டில் என்றுமில்லாத ஒரு வேகத்தில் நடக்கின்றது. பாதிக்கப்பட்ட நாடுகளின் கடன்தொகை அதிகரிக்க வைக்கும் அடிப்படையில், திட்டங்கள் மிக நுட்பமாகவே தீட்டப்படுகின்றன. இதனடிப்படையில் உதவிகள் என்ற பெயரில் சில்லறைகள் வீசியெறியப்படுகின்றன. மறுபக்கத்தில் நாட்டின் மேல் கடன்கள் திணிக்கப்படுகின்றன. இங்கு உதவிகள் என்பது, கடனை அதிகரிக்கவும், வட்டியை ஒழுங்காகக் கிடைப்பதையும் அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகின்றது.


இதனடிப்படையில் சில சில்லறைகளை உதவியாகக் கொடுக்கின்றனர். இந்த உதவி கூட ஏகாதிபத்தியங்களில் கழிவுகளின் இருந்து கொண்டு வரப்படுகின்றது. உதாரணமாக ஐரோப்பாவில் பழைய உடுப்புகள் ஒவ்வொரு வீடாகச் சேகரிக்கப்பட்டுள்ளது. கடைகளில் விற்பனையாகாது தேங்கிய உடுப்புகள் மற்றும் தவறான வகையில் உருவான உடுப்புகள் மற்றும் இதுபோன்ற கழிவுகளின் சேகரிப்பு பிரமாண்டமான அளவில் நடைபெற்றுள்ளது. இவைதான் உதவி என்ற பெயரில் கொண்டு வரப்படுகின்றது. எதிர்காலத்தில் இயற்கை மற்றும் செயற்கை அழிவுகள் நிச்சயமாக அவசியமானதாகி விட்டது. இதன் மூலம் உதவி என்ற பெயரில், மேற்கத்தைய கழிவுகளை அகற்றுவதற்கான புதிய வழியாகிவிட்டது.


மறுபுறத்தில் இந்த உதவி என்பது ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் அரசுசாராத நிறுவனங்களின் ஆதிக்கத்தை உருவாக்கியுள்ளது. சொந்தநாட்டு மக்களை வேடிக்கை பார்க்க வைக்கின்றது. அவர்களைக் கையாலாகாத்தனமற்ற மந்தைகளாக மாற்றுகின்றது. சமூகப் பங்களிப்பு என்பது, சமூகத்துக்குக் கிடையாது என்பதைச் சொல்லிவிடுகின்றனர். இதன்மூலம் அரசு சாராத நிறுவனங்கள் அதிகாரமுள்ள உறுப்புகளாக மாறிவருகின்றது. அரசியல் பொருளாதாரத் துறைகளில் மிகவும் திட்டமிட்டே தலையீட்டை நடத்துவதுடன், உற்பத்தி மற்றும் தேசிய பண்பாடுகளையே மாற்றியமைக்கின்றனர். இது ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு இசைவாக மிகக் கவனத்துடன் திட்டமிட்டுப் புகுத்தப்படுகின்றது.


4.6 சிங்கள இனவாத அரசியலும் சுனாமியும்


ஏகாதிபத்திய உலகமயமாதலுக்குத் தலைகீழாக நின்றே சேவை செய்து வந்த சிங்கள இனவாதம், உள்நாட்டு நெருக்கடிகளால் திவாலாகிக் கிடக்கின்றது. உள்நாட்டு யுத்தம் முதல் சொந்த அரசைக் கூட உறுதியாக வைத்திருக்க முடியாத நிலையில் சிக்கி சிதிலமைகின்றது. அரசு சமாதானம் என்ற அடிப்படை கோசத்தின் கீழ் தன்னைத் தானே பூச்சுட்டிக் கொண்டு, அதற்கு எதிராகவே திட்டமிட்டுச் செயல்படுகின்றது. இன்றைய அரசும் சரி, வேறு எந்தச் சிங்கள இனவாதக் கட்சியும் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழ் மக்களின் பிரச்சினைக்குரிய தீர்வாக எதையும் முன்வைக்க முடியாது வக்கற்று கிடக்கின்றனர். குறிப்பாக தமிழ் மக்களின் நியாயமான (இங்கு புலிகளின் சொந்தக் கோரிக்கைகளை அல்ல) அரசியல் பொருளாதாரக் கோரிக்கைக்கு, எந்தவிதமான ஒரு தீர்வையும் முன்வைத்து மக்களை அணிதிரட்டுவது என்ற ஒரு நேர்மையான அரசியல் போக்கே கிடையாது.


தன்னிச்சையான நிலைமைக்கு ஏற்ற, அரசியலை முன்வைக்கும் பாரம்பரியமே இனவாத அரசியலாக மண்டிக்கிடக்கின்றது. பலம், பலவீனத்தைப் பொறுத்து, நிலைமைக்கு ஏற்ற அரசியல் செய்வது வழக்கமான ஒரு அரசியல் வழியாகிவிட்டது. இந்த நேரம் சுனாமி ஏற்படுத்திய அழிவு, சிங்கள இனவாதத்தின் மற்றொரு வக்கிரத்தைப் பூர்த்தி செய்யும் பூமாலையாகியது. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினையைத் திசை திருப்பவும், அரசியல் ரீதியாக மக்களை ஏமாற்றவும் இது வழி கோலியுள்ளது. சுனாமி நிவாரணம் பற்றிய வாதப்பிரதி வாதங்கள் ஊடாக, காலத்தையும் நேரத்தையும் இழுத்தடித்து தமிழ் மக்களின் நியாயமான அரசியல் பொருளாதாரக் கோரிக்கைகளை நீர்த்து போகச் செய்கின்றனர்.


சர்வதேசத் தலையீட்டை வீம்புக்கு ஊக்குவித்து, அன்னியத் தலையீட்டை நாட்டில் திட்டமிட்டே உருவாக்கியுள்ளனர். ஒருபுறம் புலிகளை மறைமுகமாக மிரட்டுவதன் மூலம், தமிழ் மக்களின் கோரிக்கைகளைக் கண்டும் காணாமல் போகச் செய்யும் வழிமுறைகளில் நிலைமையை மாற்றுகின்றனர். வெறும் புனர்வாழ்வு என்ற எல்லைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினை சீரழிந்து வருகின்றது. சுனாமி மற்றும் யுத்த புனர்நிர்மாணம் என்ற எல்லைக்குள், பணத்தைச் சூறையாடும் ஒரு வரையறைக்குள், தமிழ் மக்களின் பிரச்சினையை மாற்றுவதில் அரசும் புலிகளும் கூட்டாகச் செயல்படுகின்றனர். நாட்டின் தேசியக் கூறுகள் அன்றாடம் ஏலம் விடப்படுகின்றது. அன்னிய உதவி, கடன் என்ற எல்லைக்குள் நாட்டை நிர்மாணம் செய்தல் என்பதில், தமிழ் மற்றும் சிங்களக் கட்சிகள் பேதம் இன்றி ஆதரித்து நிற்கின்றனர். அன்னியர் தேசத்தின் அடிப்படையான சுயநிர்ணயத்தையே இல்லாததாக்கும் அன்றாட முயற்சிக்கு, இவர்கள் வீம்பாகவே பச்சைக் கொடி காட்டுகின்றனர்.


மறுபுறம் புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் என்பதை எடுப்பின் இனவாத அடிப்படையில் முதன்மை இடத்தைச் சிங்கள மக்களுக்குத் திட்டமிட்டே வழங்குகின்றனர். சிங்கள இனவாதிகள் தமது சொந்த அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டு, சிங்கள மக்களின் புனர்வாழ்வுக்கே முதன்மையான பங்கை வழங்குகின்றனர். இதற்கு அடுத்த நிலையில் தமிழரையும், அதன் பின்பாகவே முஸ்லீம் மக்களையும் படிநிலையில் புறக்கணிப்புக்கு உள்ளாக்கி வருகின்றனர். புனர்வாழ்வு, புனர்நிர்மாணத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சமச்சீராகவே கையாள வேண்டியது ஒரு அரசின் கடமை. ஆனால் அரசு அப்படிச் செய்யவில்லை. அரசு இனவாத அரசாக இருப்பதால், இனப்பிளவில் குளிர்காய்கின்றது.


குறுந்தேசியப் புலிகளும் சுனாமியும்


சிங்கள இனவாத அரசு தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யாது என்ற அடிப்படையில், மேற்கில் செய்யும் பிரச்சாரங்கள் மூலம், தமிழ் மக்களுக்கு உதவ என்று பல கோடி ரூபா பெறுமதியான பணத்தைத் திரட்டிக் கொண்டனர் புலிகள். இந்தப் பணத் திரட்டலின் போது, தமிழ்க் குறுந்தேசிய இனவாதம் உச்சத்தை எட்டியது. எங்கும் சிங்கள மக்கள் தூற்றப்பட்டனர். தமிழ் மக்களின் புனர்வாழ்வைத் தமிழ் மக்களே செய்யவேண்டிய நிலையில் இருப்பதாகப் பறை சாற்றப்பட்டது. அப்படி கோடி கோடியாகத் திரட்டிய பணம், தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்குப் பயன்படுத்தப்படவில்லை. சிங்கள அரசு மட்டுமல்ல, புலிகளும் கூடத்தான் தமிழ் மக்களின் புனர்வாழவு நிதியை மோசடி செய்துள்ளனர்.


இப்படித் தமிழ் மக்களை மோசடி செய்து திரட்டிய பணத்துக்கு என்ன நடந்தது என்பதற்கு, காலம் தான் பதில் சொல்ல வேண்டும். சிங்கள இனவாத அரசு போலவே தமிழ் மக்களுக்குக் குறுந்தேசியவாதப் புலிகள் சேர்த்த பணத்தைப் புனர்வாழ்வுக்குப் பயன்படுத்தவில்லை. ஆனால் சிங்கள இனவாத அரசு தமிழ் மக்களின் வாழ்வியலுக்கு உதவ மாட்டாது என்று சொல்லி, பணத்தைக் கோடிக்கணக்கில் திரட்டினார்கள். இதைப் புனர்வாழ்வுக்குப் பயன்படுத்துவதைத் திட்டமிட்டே மோசடி செய்ததன் மூலம், சிங்கள அரசை விட மிக மோசமாகவே தமிழ் மக்களுக்கான புனர்வாழ்வைப் புலிகள் நிராகரித்துள்ளனர். புலிகளிடம் திரண்ட பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாகச் சென்றால், உள்நோக்கம் கொண்ட அன்னியப் புனர்வாழ்வு எதுவுமே அவசியமற்றது.


புலிகள் தமிழ் மக்களை மோசடி செய்து ஏமாற்றி திரட்டிய பணத்தை, பக்காத் திருடன் போல் ஒளித்து வைத்த படிதான் புனர்வாழ்வை இலங்கை அரசு செய்யவில்லை என்று எதிர்மறையில் குற்றம் சாட்டுகின்றனர். தமிழ் மக்களுக்கு முடிவாக அரசு புனர்வாழ்வும், அன்னியப் புனர்வாழ்வும் என்ற நிலைக்குச் சரிந்துவிட்டனர். இந்த நிலையில் புலிகள் அரசுடன் முட்டி மோதி நடத்தும் இழுபறியான பேரங்கள், உண்மையில் அதில் ஒரு பகுதியைப் புலிகள் சுருட்டிக் கொள்ளத்தான் நடக்கின்றது. இந்தப் பேரங்கள் தமிழ் மக்களின் நலன்களில் இருந்து அல்ல. புலிகள் நலன் சார்ந்த இந்தப் பேரங்கள், தமிழ் மக்களின் நிவாரணத்தைக் காலதாமதமாக்கி இல்லாததாக்குகின்றது. உண்மையில் இந்த இழுபறியான பேரங்கள், தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கல்ல. மாறாகத் தமிழ் மக்களை ஏமாற்றி திரட்டிய நிதி போல், அரசு நிவாரணத்திலும் ஒரு பகுதியைச் சுருட்டிக் கொள்ளவே பேரங்களை நடத்துகின்றனர்.


தமிழ் மக்களின் சமூகப் பொருளாதார அரசியல் நலன்களில் எந்தவிதமான சமூகப் பொறுப்புணர்வுமற்ற, சொந்தச் சுயநலத்தையே அடிப்படையாகக் கொண்ட குறுந்தேசியப் பேரங்களே நடக்கின்றன. இந்த இடத்தில் பிரிட்டனில் இயங்கும் வெண்புறா இயக்க இயக்குனர் வழங்கிய பேட்டியொன்றில், நிதி வழங்குங்கள் சிங்கப்பூராகவே மாற்றிக் காட்டுகின்றோம் என்கின்றார். அடுத்த நேரக் கஞ்சிக்கே வழியற்ற மக்கள் கூட்டத்தை அன்றாடம் உற்பத்தி செய்யும் புலிகள், சிங்கப்பூர் சொர்க்கத்தைப் பற்றி கதையளக்கின்றனர். அதாவது மதங்கள், வாழ்கின்ற உலகில் சொர்க்கத்தைக் காட்டமுடியாத போது, மரணத்தின் பின்பான சொர்க்கத்தை காட்டுகின்றது. இதையே தமிழ்ச் சினிமா கற்பனையில் சொர்க்கத்தை விதைக்கின்றது. இதேபோல தான் புலியும், புலிப்பினாமிய அமைப்புகளும் நிதி திரட்டும் போது கற்பனை நம்பிக்கைகளை ஊட்டுகின்றனர். உலகமயமாதல் வெம்பி வீங்கிய போது உருவான சிங்கப்பூர் பற்றியும், அரபு மக்களை அடக்கியொடுக்க மேற்கின் அடியாளாகச் செயல்படும் இஸ்ரேலியப் பாசிஸ்ட்டுகளின் வக்கிரங்களே தமது கனவு என்ற பிரமிப்பூட்டுகின்றனர். இதன் மூலம் முட்டாள் தமிழனின் கற்பனையை நம்பிக்கையாக மாற்றி, பணத்தைக் கறக்கின்றனர். ஆனால் மண்ணில் மக்கள் ஒரு நேரக் கஞ்சிக்கே வழியற்று, பரதேசிகளாகவே மாறுவதையே, புலிக் குறுந்தேசியம் கட்டமைக்கின்றது.


தமிழ் மக்களின் நிதியைத் திரட்டும்போது பீற்றும் இவர்கள், மறுபக்கத்தில் அரசிடமும், அன்னிய ஏகாதிபத்தியத்திடமும் கையேந்தி நிற்கின்றனர். அரசு தம்மைப் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி பேரம் நடத்துகின்றனர். இங்கே திரட்டியது எங்கே என்பது கேட்கக் கூடாத, துரோகத்துக்குரிய, மரணதண்டனைக்குரிய ஒரு இராணுவ இரகசியமாகி விடுகின்றது. இதன் மீது தான் சிங்கப்பூரும், இஸ்ரேலியக் கனவுகளும் சினிமாவாகி, கற்பனை ஓவியமாகின்றது.


முடிவாக
ஒட்டு மொத்தமாக மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வியலின் தலைவிதி கேடுகெட்ட சமூக விரோதிகளின் வக்கிரத்துக்குள் புதைந்து போகின்றது.


20.02.2005