book _4.jpgதமிழ்க் குழுக்களின் துரோகம், பிழைப்பு அனைத்தும் புலிகளின் ஜனநாயக விரோத அரசியலில் இருந்து துளிர்க்கின்றது. இதன் மூலம் பலமான சர்வதேச அடித்தளத்துடன், இவை புனர்ஜென்மம் எடுக்கின்றது. தம்மைத் தாம் நியாயப்படுத்த, புலிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அரசியலாக்கி முன்வைப்பது அதிகரிக்கின்றது. புலிகளுக்கும், துரோகக் குழுக்களுக்கும் இடையில் கொள்கை ரீதியான வேறுபாடுகளை அரசியல் ரீதியாக நுட்பமாக புரிந்து கொண்டால் மட்டும் இனம் காணமுடியம் என்ற நிலை உருவாகி வருகின்றன. சாதாரண மக்களுக்கு இரண்டுமே ஒன்றாகியுள்ளது.


 அமைதி, சமாதானம் என்ற போர்வையில் புலிகள் கையாளும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள், வரிக் கொள்கைகள் இவற்றுக்கு எதிராக, பரந்த தளத்தில் உருவாகும் அபிப்பிராயத்தை துரோகக் குழுக்கள் தமதாக்கியுள்ளன. புலிகளுக்கு எதிரான அபிப்பிராயம் மற்றும் உணர்வு சார்ந்து துரோகக் குழுக்கள் என்றும் இல்லாத வகையில் பலமாகி நிற்கின்றது. மக்களின் உணர்வுகளை துரோகக் குழுக்கள் அறுவடை செய்கின்றன. இதைப் புலிகள் மக்கள் மேலான மிரட்டல் மூலம், அடக்கிவிட முனைகின்றனர். ஆனால் அமைதி, சமாதானம், உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில் ஒரு அங்கமாகி விட்டதால், புலிகள் மேலும் மேலும் தனிமைப்படுவது அதிகரிக்கின்றது. புலிகளுக்கு எதிராக வெளிப்படையான செயல்தளம் யாழ் பல்கலைக்கழகத்தில் அன்றாடம் பிரதிபலிக்கின்றது. புலிகளுக்கு எதிரான அதிரடி பிரச்சார நடவடிக்கைகள் அன்றாட நிகழ்வாகியுள்ளது. மக்களின் சுயதீனமான (வரிக்கு எதிராக மின்பிடிக்க மறுத்தது, குழந்தைகளை கடத்துவதற்கு எதிரான போராட்டங்கள், வரி கொடுக்க மறுத்த போராட்டங்கள், பாலியல் குற்றங்களுக்கு எதிரான போராட்டங்கள் என பல புலிக்கு எதிராக சுயதீனமாக நடந்து வருகின்றது)  சில நடவடிக்கைகளை விட, மற்றயவற்றில் (யாழ்ப் பல்கலைக்கழகத் தொடர் போஸ்டர்கள் ஒட்டுதல், வன்னியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல், வன்னியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் போன்றன) பின்னணி சக்திகள் பலமாக உள்ளது.


 ஒட்டு மொத்தத்தில் துரோகக் குழுக்கள் புலிகளின் ஒவ்வொரு மக்கள் விரோதச் செயல்பாட்டையும் பயன்படுத்துகின்றனர். உண்மையில் டக்ளஸ் போன்ற பலரை, சமூகம் முழுக்கப் புலிகள் உருவாக்கி வருகின்றனர். மௌனமாகி நிற்கும் புலி விரோத உணர்வுடன், விதைக்கப்பட்டுள்ளவர்கள் பலர் சந்தர்ப்பம் கிடைத்தால், எதையும் புலிகளுக்கு எதிராகச் செய்யும் நிலையை அடைந்துள்ளனர். அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆக்கிரமிப்புகள் நம் மண்ணில் நடந்தால், ஒரு பலம் வாய்ந்த பல நூறு டக்ளிஸ்டுகள் மண்ணில் புற்றீசலைப் போல் வெளிவருவார்கள்;. அது புலிகளின் பினாமியத்துக்குள் புளுத்துப் போய் கிடக்கின்றது. புலிப் பினாமியம் குத்துக் கரணம் அடிப்பதையே அரசியலாக கற்றுக் கொண்டுவிட்டது. அதற்கான சகல அடித்தளத்தையும் புலிகள் உருவாக்கிவிட்டனர். புலிகளின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடத்தைகள், அன்றாடம் இந்த உருவாக்கத்தை விரிவாக்கி வருகின்றது.


 புலிகள் அல்லாத தரப்பு படிப்படியாக சிதைகின்றது. எல்லாம் டக்ளஸ் தரப்பு நிலைக்குச் சிதைந்து செல்லுகின்றது. புலிகளுக்கு எதிரான அனைத்தையும் ஆதரிக்கும் நிலைக்கு இது இட்டுச் சென்றுவிட்டது. பல பத்து எழுத்தாளர்கள், அறிவுத் துறையினர் என்று எங்கும் இந்தச் சிதைவு அவலமாகிவிட்டது. உண்மையில் புலிகள் அல்லாதவர்களுக்கு இடையில் ஒரு சுமுக உறவு காணப்படுகின்றது. புலி மற்றும் துரோகக் குழுவுக்கு எதிரான அணி மேலும் பலவீனமாகி வருகின்றது. புலிப் பினாமியமும், துரோகக் குழுவின் ஜனநாயக வேசமும்; எல்லாவற்றையும் செரிக்கின்றது. அரசியல் மீட்சிக்கான பாதை துரோகம் அல்லது புலிகளின் பினாமியம் என்ற வழிக்குள் சிக்காது மீள்வது என்பது மிகக் கடினமாகிவிட்டது. இரு தரப்பும் தங்களைத் தக்க வைக்கும் அரசியல் விளக்கங்களை அரசியல் மயப்படுத்துகின்றது. இரண்டுக்கும் இடையில் தேசியப் பிரச்சனையில்; தீர்வு ஒன்றாகி விட்டது. இவர்களுக்கிடையிலான முரண்பாடு என்பது புலிகள் அல்லாதவர்களை, தமக்கு சமமாக அங்கீகரிக்க மறுக்கும் உள்ளடக்கத்தில் இருந்து வெளிப்படுகின்றது.


 துரோகக் குழுக்கள் அரசின் ஊடாக ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து நிற்கின்ற தீர்வை வைக்கின்றது. ஆனால் புலிகளோ அரசு அல்லாத ஏகாதிபத்தியத்தை நேரடியாகச் சார்ந்து நிற்றல் என்ற தளத்தில் நின்று, வரையறுக்கப்பட்ட வகையில் அரசுக்கு ஊடாகத் தீர்வை வந்தடைய விரும்புகின்றனர். இதன் மூலம் எதிர்த்தரப்பின் அரசியல் சங்கமம் ஒரே கொள்கையாகி வருகின்றது. ஈ.பி.டி.பி, ஆனந்த சங்கரியின் கூட்டணி, புளாட், ஈ.பி.ஆர்.எல்.எப் வரதர் அணி, ஈரோஸ் (சங்கர், ராஜி அணி) புலி எதிர்ப்பு அணி என்று ஆடு களத்தில் நிற்பவர்கள் அனைவரும், புலிகளின் அரசியல் தீர்வையே தமது தீர்வு என்கின்றனர். சிலர் அதைத் தமது தீர்வு என்று உரிமையும் கோருகின்றனர். இவர்கள் யாரும் மக்களின் உரிமை பற்றி பேசவில்லை. மக்களின் பெயரில் தமது உரிமை பற்றியே பேசுகின்றனர்.


 தேர்தல் என்னும் அரசியல் களத்தில் இவர்கள் புலிகளுடன் முரண்பட்ட கோரிக்கையை வைக்கவில்லை. இதுவே சிங்கள இனவாதிகளும் செய்கின்றனர். எதிர்க்கட்சி, ஆளும் கட்சிக்கு இடையில் கொள்கை வேறுபாடுகள் இல்லை. எலும்பை யார் சுவைப்பது என்பதில், தமிழ், சிங்கள கட்சிகளுக்கிடையில் ஒரு போட்டி நடக்கின்றது. மக்களின் பெயரில் இவை அரங்கேறுகின்றது அவ்வளவே. மக்கள் நலனை முன்வைத்து யாரும் இன்று அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. மக்கள் நலனை உறுதி செய்யும், செயல் தளத்தில் இறங்கும் எந்த அரசியலும் இலங்கையில் இல்லை. மக்களை மந்தைகளாக மேய்க்கும் அரசியல், ஜனநாயகம் உரிமை போராட்டம் என்ற பெயர்களில் வேடமிட்டு ஆடுகின்றது. நாட்டை ஏகாதிபத்தியத்திடம் விற்றுவிடுவது என்பதில் யாருக்கும் கருத்து முரண்பாடில்லை. ஏகாதிபத்தியம் போடும் எலும்பை முழுமையாகக் கைப்பற்றுவதா அல்லது அதைப் பங்கிட்டுக் கொள்வதா? என்பதில், தமிழ், சிங்கள கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு இடையிலும், தமக்கிடையிலும் மோதிக் கொள்கின்றன. இதன் மூலம் மக்களை யார் அடக்கியாள்வது என்பதே தேசிய  ஜனநாயக அரசியலாகிவிட்டது.