book _4.jpgஉலகமயமாதல் என்ற கட்டமைப்பில் உள்ள பன்னாட்டு தேசங் கடந்த பொருளாதாரமே தமிழீழத் தேசியப் பொருளாதாரம் என்பதைப் புலிகள் நிறுவிவருகின்றனர். அண்மையில்  புலிகளின் விழாக்கள் அனைத்தும், தேசங்கடந்த பன்னாட்டுப் பொருட்களின் விளம்பரங்களால் அலங்கரிக்கப்பட்டே நடத்தப்படுகின்றது. வன்னியில் அவர்கள் நடத்தும் பேச்சு வார்த்தை மேசைகள் கூட, பன்னாட்டுச் சந்தை பொருட்களின் விளம்பரப் பொருளால் அலங்கரிக்கப்படுகின்றது.

 

  உதாரணமாக அண்மையில் மூன்றாவது தமிழீழத் தேசிய விளையாட்டு விழாவை புலிகள் 20.2.2004 அன்று கிளிநொச்சியில் நடத்தினர். அந்தத் தேசிய விழாவில் கொக்கோகோலா விளம்பரங்கள், புலிக் கொடியை விட பெரியளவில், புலிக் கொடியின் பின்னனியில் வடிவமைக்கப்பட்டிருந்தது. (பார்க்க 21.2.2004 தினக்குரல் பத்திரிகை) சாதாரண செய்திப் பத்திரிகையிலேயே இப்படங்கள் வெளியிடப்பட்டு இருந்தன. உத்தியோகபூர்வமற்ற வகையில் புலிகளின் ஆதரவுடன், தமிழீழத் தேசிய குடிபானம் கொக்கோகோலவாக மாறியுள்ளது. இதன் மூலம் தேசியக் குளிர்பானத்துக்கு, துரோகத் தண்டனையாக மரணதண்டனை வழங்கப்பட்டு விட்டது. இதை எதிர்த்து யாரும் உரிமை கோரவில்லை. இதற்காக வழமைபோல் யாரும் குரல் கொடுக்கவுமில்லை. புலிகள் பன்னாட்டுப் பொருட்களின் இடைத்தரகராக மாறிவரும் நிலையில், தேசியப் பொருளாதாரத்தின் எஞ்சிய மூச்சுகளும் சேடமிளுக்கத் தொடங்கியுள்ளது. புலிகளோ கொழும்புத் தரகர்களுக்குக் கீழ் இருப்பதை விட, நேரடித் தரகராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தான் சிங்கள இனவாதிகளுடன் பேச்சு வார்த்தை என்று கூத்தை நடத்துகின்றனர்.
 உலகத்தில் மிகத் தரமான ருசியான பழங்களை உற்பத்தி செய்யும் எம் மண்ணில், கிடைக்கும் பழங்களை தேசத்தின் மக்கள் உண்ணாது அவற்றை ஏற்றுமதி செய்யவும், அதில் உற்பத்தியாகும் குளிர்பானங்களை ஏற்றுமதி செய்யும் திட்டம் அமுலுக்கு வந்துள்ளது.  உலகத்திலேயே மிகக் கழிவான கொக்கோகோலாவை தமிழ் மக்கள் குடிக்க வைக்கும் புலிகளின் கொள்கை தேசிய கொள்கையாகியுள்ளது. இதனடிப்படையில் இயங்கும் பல்வேறு அமைப்புகள் வடக்கில் உற்பத்தியாகின்ற பலா, பப்பாளி, அன்னாசி மற்றும் கொடித்தோடை ஆகிய பழங்களை உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி பதனிட்டு ஏற்றுமதி செய்யும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கென பழ உற்பத்தியாளர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்க, பழ உற்பத்தியாளர்கள் குறிப்பிட்ட அமைப்புகளில் பதிவு செய்யக் கோரப்பட்டுள்ளது. இந்த மக்கள் விரோத நடவடிக்கையாக ஒருங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பிரதேச ரீதியாக வடமராட்சி - ~ஊற்று| நிறுவனமும், கோப்பாய் - இருபாலைச் சந்தியில் அமைந்துள்ள மக்கள் நலன்காக்கும் பிரிவும், நல்லூர் - சமூக அபிவிருத்தி மன்றமும், சங்கானை - சிறுவர் கல்விக்கும் பால்நிலை அபிவிருத்திக்குமான நிறுவனமும், தென்மராட்சி - அறவழிப் போராட்டக்குழு அலுவலகம் ஊடாக இந்த காட்டிக் கொடுப்பை ஏகாதிபத்தியத்துக்கு ஒழுங்கமைத்துத் தந்துள்ளனர். இப்படி பற்பல தேசிய உற்பத்திகள் சொந்த மக்களின் பாவனையில் இருந்து விலக்கப்பட்டு, வெள்ளையர்களின் நலனை உறுதி செய்கின்றனர். இதை இயற்கையான உணவு என்ற விளம்பரத்துடன் சந்தைப்படுத்திக் கொழுக்க ஏகாதிபத்திய மூலதனங்கள் இடைத் தரகர்கள் மூலம் களமிறங்கியுள்ளன. அதேநேரம் இயற்கை உணவு, குடிபானம் என்று விளம்பரம் செய்ய முடியாத வெள்ளை நாட்டு இரசாயனக் கழிவுகளை பளபளக்கப் பண்ணி, எமது தேச மக்களுக்கு தேசிய உணவாகத் தரப்படுகின்றது. தேசிய வீரர்கள் இதைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, கடை விரிக்கின்றனர்.


 மறு பக்கத்தில் எம் மண்ணில் அன்னிய மூலதனம்; கேட்பாரின்றி தாராளமாகப் புகுகின்றது. குடாநாட்டுக்கான மின்விநியோகத்தை ~அக்கிரிக்கோ| என்னும் பிரிட்டிஸ் நிறுவனம் அமெரிக்காவிடம் இருந்து அண்மையில் வாங்கியது. இதற்கு முன் ஒரு வருடமாக ~அல்ரெம்| என்ற அமெரிக்க நிறுவனமே மின்சாரத்தை வழங்கியது. வடக்குப் போக்குவரத்துத் துறையை அன்னியன் வாங்கியுள்ளான். இப்படிப் பற்பல. தேசிய வீரர்களின் சம்மதத்துடன், தியாகிகளின் பிணங்களின் மேலாக செங்கம்பளம் விரித்து அன்னியர்கள் வரவேற்க்கப்படுகின்றனர்.