Sun07122020

Last update12:49:40 pm

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

இந்தியா மற்றும் மற்றைய ஏகாதிபத்தியங்களின் தலையீடுகள்

  • PDF

book _4.jpgஅமெரிக்கா மட்டுமல்ல மற்றைய ஏகாதிபத்தியங்களும், இந்தியாவும் கூட பல எச்சரிக்கைகளை விடுகின்றது. 15.11.02 இலங்கை வந்திருந்த பிரித்தானியப் பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபை உறுப்பினர் நெஸ்பீ புலிகள் பயங்கரவாதப் போக்கைக் கைவிடவேண்டும் என்றார். புலிகள் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்றார். அவர் மேலும் கூறுகையில், புலிகள் தனியான இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸ் பிரிவு போன்றவற்றை வைத்திருக்க முடியாது என்றார். இவை இலங்கை அரசுடன் சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இது மிகவும் முக்கியமானது என்றார். தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்வதை வலியுறுத்தி அவர், உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசுடன் கைகோர்த்துக் கொள்ளவும் அழைப்புவிடுத்தார். ரூசியா இலங்கையுடன் இராணுவ ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. அமெரிக்காவுடன் சர்வதேச நிலைப்பாடுகளில் ஒன்று சேர்ந்து நிற்கும் பிரிட்டன் 30.12.2002 இல் தனது இராணுவக் கப்பலான கெபபாக்-ஐ இலங்கை துறைமுகத்துக்கு அனுப்பி மறைமுகமாகப் புலிகளை மிரட்டியது.

 

 சர்வதேசத் தலையீட்டின் ஒரு அங்கமாக ~~நொன் வயலன்ஸ் பீஸ் போய்|| என்ற அமைப்பு வன்முறைகளற்ற நிலையை உருவாக்க அமைதிப்படை ஒன்றை குடாநாட்டில் அமைத்தது. பல சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய இவ் அமைப்பின் திட்டப்பணிப்பாளர் வில்லியம் நொக்ஸ் (பிரிட்டனைச் சேர்ந்தவர்) இது தொடர்பான ஏற்பாடுகளைச் செய்ய யாழ்ப்பாணம் வந்தார். இவர் விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி துணையுடன் இந்தத் தலையீட்டைத் தொடங்கினார். சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 11 உறுப்பினர்களுடன் கொழும்பில் இயங்கிய இந்த அமைப்பு, தனது அலுவலகங்களை யாழ்ப்பாணம், வாழைச்சேனை, களுத்துறை, மூதூர் ஆகிய இடங்களில் அமைக்கவிருந்தது. பிரஞ்சு ஏகாதிபத்தியம் யாழ்ப்பாணத்தில் ~அலயன்ஸ் பிரான்ஸ்செய்ஸ்| என்ற மொழியல் அலுவலகத்தைத் திறந்துள்ளது. இதன் மூலம் தனக்குத் தேவையான இலங்கைக் கைக்கூலிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றது.


 இலங்கைக்கான ஜெர்மனியின் பிரதித் தூதுவர் ஹெய்ன்ஸ் பொப் யாழ் அரசாங்க அதிபர் செ. பத்மநாதனை சந்தித்த போது, ஜெர்மனி உட்பட மேற்கு நாடுகளில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்படும் அகதிகளுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு, அப்பணம் இலங்கையின் அபிவிருத்திக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே மேற்குலக நாடுகளின் கொள்கை என்றார். இதனடிப்படையில் யாழ்குடாவில் ஒரு தன்னார்வ நிறுவனத்தை ஐரோப்பா அமைத்துள்ளது. திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபா, சுய தொழிலின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. புலம்பெயர் அகதிப் பிரச்சனையின் அடிப்படையில் இலங்கையில் தலையிடும் உரிமையை, ஐரோப்பா இதனுடாக வலியுறுத்தி வருகின்றது. புலம்பெயர்ந்த மேற்கு நாட்டு அகதிகளை திருப்பி அனுப்புவது, சமாதானத்தின் ஒரு அங்கமாக இருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். அமெரிக்கா பிரிட்டன் அல்லாத மற்றைய ஏகாதிபத்தியங்களின் கூட்டு அணி, தமது நாடுகளுக்கு வரும்; இலங்கை அகதிகளை கட்டுப்படுத்துவதில் சமாதானமும் அமைதியும் முக்கியமானது எனக் கருதுகின்றன. இது அவர்களின் உள்நாட்டு அரசியல் வெற்றிகளைத் தீர்மானிக்கின்றது. யுத்தத்தைப் புலிகள் தொடர்ந்தால், அகதிகளின் வருகையைக் கட்டுப்படுத்த தர்க்க ரீதியாகக் கூட முடியாது என்பதால் புலிகள் மேலான அதிக நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகின்றனர். இதைவிட இலங்கையில் அதிகரித்து வரும் ஐரோப்பிய முதலீடுகளை, யுத்தம் நேரடியாகப் பாதிக்கும் என்பதாலும் புலிகளை எதிர்க்கின்றனர். புலிகளின் இராணுவ ரீதியான நடவடிக்கைகள் அமெரிக்காவின் அதிகத் தலையீட்டையும், ஆக்கிரமிப்பையும் ஏற்படுத்தும் என்பதால் இது ஐரோப்பிய இராணுவப் பொருளாதார நலனுக்கு பாதகமானது. இதனால் புலிகளின் இராணுவ முயற்சிகளை கடுமையாக எதிர்க்கும் நிர்ப்பந்தங்களை, அமெரிக்காவுக்கு நிகராக பிற ஏகாதிபத்தியங்கள் புலிகள் மேல் செலுத்துகின்றனர்.


 இதற்கு வெளியில் பிராந்திய வல்லரசான இந்தியா ஒரு நிர்ப்பந்தத்தை புலிகள் மேல் கையாளுகின்றனர். இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் எம்.என்.ராஜ்கோத்ரா ~~இலங்கைக் கடற்பகுதியில் சட்டவிரோதமான கடற்படையின் தொல்லைகளை ஒழித்துக்கட்டவேண்டும். இரு நாடுகளும் இணைந்து கூட்டாகக் கடற்படை பயிற்சிகளில் ஈடுபடவேண்டும். இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை விடுதலைப் புலிகள் கைது செய்துள்ளனர். இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு இந்தியாவை ஆத்திரமூட்ட வேண்டாம் என விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நான் எச்சரிக்கின்றேன்|| என்றார். இந்திய மீனவர்களின் பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு இராணுவ நடவடிக்கையைச் செய்யத் தயாராகவே இந்தியா உள்ளது.


 இந்தியப் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சரின் உரை மீண்டும் இதை உறுதிசெய்தது. ~~தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், கடற்புலிகள் என்கின்ற பெயரில் கடற்படை அமைத்துவருவது இந்திய அரசுக்குத் தெரியும். ஒரே நாடான இலங்கைக்கு இரண்டு கடற்படைகள் கூடாது.|| இப்படிக் கூறியுள்ளார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ். மன்னார் கடற்பகுதியைக் கண்காணிக்க விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் மேலும்; கூறினார். இந்தியா தலையீட்டுக்கான நேரடி முகாந்திரமாக இது மாறியுள்ளது. இந்திய மீனவர்களின் பாதுகாப்பு என்ற பெயரில் இலங்கைக் கடல்பகுதியில் இந்தியக் கப்பற்படையும் விமானப்படையும் அத்துமீறி அடிக்கடி ரோந்து சுற்றுகின்றது. மீனவர் பிரச்சினையைப் புலிகள் தவறாக கையாண்டதன் விளைவு இது. புலிகள் இராணுவ ரீதியான ஒரு நடவடிக்கையாக இந்திய மீனவர்களின் பிரச்சனையை கையாண்டு, இந்திய மீனவர்களை பணயம் வைத்து இந்திய அரசை சரணடைய வைக்க முயன்றனர். இது இலங்கை இந்திய மீனவர்கள் பேசி முடிவெடுக்க வேண்டிய ஒரு பிரச்சனை. அதை விடுத்து பிரச்சனையின் முழுமையைப் புரிந்து கொள்ள முடியாது துப்பாக்கிகள் மூலம், புலிகள் தீர்வு காண முற்பட்டனர். புலிகளின் இந்தத் தொடக்கத்தை இலங்கை அரசு சாதகமாக பயன்படுத்தத் தொடங்கியது. அத்து மீறி மீன் பிடித்த இந்திய மீனவர்களை கடற்படை விசேடமான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக கைது செய்யத் தொடங்கியது. இதன் மூலம் இந்தியக் கடற்படையை இலங்கை கடலுக்குள் வலுக்கட்டாயமாக இழுத்து வந்தனர். இந்தச் செயல் திட்டம் மூலம் இந்தியாவின் எந்த வகையான இராணுவ நடவடிக்கையையும் நியாயப்படுத்தி, இந்திய ஆக்கிரமிப்புக்குரிய ஒரு நிலையை உருவாக்கி புகைக்க வைத்துள்ளனர். மீனவர்களின் பிரச்சனையை புலிகள் தமது வன்முறை சார்ந்த இராணுவ நடவடிக்கை மூலம் மீனவர்களின் பெயரில் நடத்தி சொந்த லாபத்துக்குப் பயன்படுத்த முற்பட்டன. சீன மீனவர் கப்பல் மேலான இராணுவத் தாக்குதல் ஒன்றை இனம் தெரியாத மூன்றாம் தரப்பின் மீது சுமத்தி பலரைக் கொன்றனர். இவை அனைத்தும் சர்வதேசத் தலையீட்டுக்கு உரிய சூழலைக் கனிய வைத்துள்ளது. சர்வதேசக் கப்பல் போக்குவரத்து, சர்வதேச மீன்பிடி என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலை கேள்விக்குள்ளாக்கியது இந்த நிகழ்வு, புலிகளின் கடல் நடமாட்டத்தின் மீது அதிகக் கண்காணிப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான நடவடிக்கை மூலம் புலிகள் தம்மைத் தாம் தனிமைப்படுத்தி செல்லும் சில உதாரணங்களாகும் இவை. ஆக்கிரமிப்புகளை வலியச் சீண்டி இழுக்கும் ஒரு நெம்பு கோலாகவே இது உள்ளது.


 இந்தியா இலங்கையில் தலையீட்டுக்கான தயாரிபின் ஒரு அங்கமாக ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில்; புலிகளை சம்பந்தப்படுத்தினர். இந்தத் தாக்குதலில் புலிகளின் தொழில் நுட்ப உதவியும், ஒத்துழைப்பும், பயிற்சியும் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது என்ற அறிக்கையை இந்தியா வெளியிட்டது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதான கண்ணிவெடித்  தாக்குதலுக்கு மக்கள் யுத்தக் குழு (P.று.பு) உரிமை  கோரியது. ஆனால்  இந்தக்  குழுவுடன்  நெருக்கமான  தொடர்புகளைக் கொண்டிருந்த சிலரே சென்னையில் திலீபன் மன்றம் என்ற பெயரில் புலிகளுக்கான முன்னணி அமைப்பாக செயற்பட்டு வந்தாக இந்தியா கூறியது. இக் கண்ணி வெடித் தாக்குதலுடன் புலிகளின்  தொடர்பு  ஊர்ஜிதமாகியிருப்பதாக இந்திய துணைப் பிரதமர் எல்.கே.அத்;வானியும் தெரிவித்தார். இப்படி ஆந்திர முதல்வரின் கொலை முயற்சியில் புலிகளை சம்பந்தப்படுத்திய நிகழ்வு தற்செயலானவை அல்ல. இவை எல்லாம் புலிகள் மேலான நேரடியான தாக்குதலுக்குச் சில ஆரம்பத் தயாரிப்புகளே. இந்தியாவில் நடக்கக் கூடிய சம்பவங்களைக் கூட புலிகளுடன் தொடர்பு படுத்தி புலிகள் மேலான தாக்குதல் ஊடாக இலங்கையில் ஆக்கிரமிக்க இந்தியா தயாராகவே உள்ளது.


 இதனடிப்படையில் பலாலி விமானநிலைய ஓடுபாதையை முற்றாகத் இராணுவத் தேவைக்கு ஏற்றபடி நவீனமாகத் திருத்தி அமைக்கும் பணிகளை இந்திய விமானப் படையினர் தொடங்கியுள்ளனர். எந்த நிலைமையையும் சமாளிக்க பலாலிக்கும் இரத்மலானைக்கும் இடையே படையினரது போக்குவரத்து பணிகளுக்கு இந்திய விமானப் படையினரின் உதவி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் புலிகளின் நேரடியான எந்த அச்சுறுத்தலையும் இந்தியா இராணுவ வலிமையைக் கொண்டு ஒடுக்கத் தயாராகி வருகின்றது. இதைவிட இந்தியாவும், இலங்கையும் விரிவான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கை எழுத்திடுவதற்கு முன்னேற்பாடாக இவ்விடயங்கள் அமுலுக்கு வந்துள்ளது. இவ் ஒப்பந்தம் இந்தியா இலங்கை தேர்தல் நடப்பதன் காரணமாக தற்காலிகமாக ஒத்திப் போடப்பட்டுள்ளது.


 புலிகளுக்கு எதிரான அரசுகளின் கைக் கூலிகளாகச் செயல்படுபவர்களைப் பாதுகாப்பதில் இந்திய அரசு அதிக அக்கறை காட்டுகின்றது. 26.11.02-இல் இந்தியத் தூதுவர் நிருபம் சென் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று எச்சரித்தார். அவரது பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நேரடியாகவே உத்தரவு இட்டார். இதனடிப்படையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துரோகிகளின் நலனில் இந்தியாவின் அக்கறை வானளவாக உள்ளது. புலிகள் தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்யும் ஒரு நிலை தவிர, எந்த நிலையிலும் சர்வதேச அழுத்தம் புலிகளுக்கு எதிராகவே உள்ளது. இலங்கை இனவாதிகளின் நீடித்த முரண்பாட்டைக் கடந்த ஒரு நிலையிலும் கூட, புலிக்கு எதிரான நிர்ப்பந்தமே முதன்மையானதாக உள்ளது. ஆக்கிரமிப்புக்கு உரிய அனைத்துத் தயாரிப்பும் எதார்த்தத்தில் அன்றாடம் உருவாக்கப்படுகின்றது.

 

Last Updated on Saturday, 31 May 2008 20:39