06222021செ
Last updateதி, 21 ஜூன் 2021 11pm

அவசர வேண்டுகோள் - ஆசிய மனித உரிமைகள் குழு AHRC

இரு இளவயது பிள்ளைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுதிய குற்றச் செயலையோ, மறுநாள் மீண்டும் வந்து மூத்த பிள்ளையை வெள்ளைவானில் கடத்திச் சென்ற கடத்தல் சம்பவத்தையோ பதிவுசெய்ய மறுத்தது பொலிஸ். அதுசம்பந்தமான எந்த நடவடிக்கைக்கும் தயாரற்று வாளாவிருந்தது பொலிஸ். கல்முனையில் 10,11 மே 2008 இல் நடந்தேறிய இந்தச் சம்பவத்தை ஆசிய மனித உரிமைகள் குழு (AHRC) பதிவுசெய்திருக்கிறது.

 

 

ஒரு மனிதாபிமான வேண்டுகோள்

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் உடனடியான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென கேட்டும், கடத்தப்படவரை வெளியில் கொண்டுவருவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் படியும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் பாதுகாப்புப் படையினரோ இல்லையோ இவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை மேற்கொள்ளும் படியும், இது சம்பந்தமான செயற்பட மறுத்த  பொலிசார்மீது நடவடிக்கை எடுக்கும்படியும்  கோரும் கடிதத்தை கீழுள்ள முகவரிக்கு (மின்தபால் மூலமாவது) அனுப்பிவைக்கும்படி மனிதாபிமானமுள்ள அனைவரையும் கேட்டுக்கொள்கிறது யுர்சுஊ. (அனுப்பப்பட வேண்டிய முகவரிகளும், கடிதத்தின் மாதிரி வடிவமும் கீழ் உள்ளது.)

விபரம் (ஆங்கிலத்தில்)

சீதா, அவரது கணவன், (18, 16 வயதுள்ள) இரு புதல்விகள் கல்முனையில் வாழ்ந்தவர்கள். சீதாவின் கணவன் வேலைக்குப் போய்வருபவர். 10 மே 2008 அன்று இவர்களின் வீட்டுக்கு வந்த மூவர் பலவந்தமாக வீட்டினுள் புகுந்தனர். இந்த நபர்கள் கத்திகள் கைத்துப்பாக்கிகளுடன் வந்திருந்தனர். பாதுகாப்புப்படையினர் என தம்மை அடையாளம் காட்டிய இந்த நபர்கள் வீட்டைச் சோதனையிடப் போவதாகக் கூறியிருந்தனர். இதற்கு ஒருசில மணிநேரத்துக்கு முன்னர் அம்பாறையில் குண்டுவெடிப்பொன்று நிகழ்ந்த சம்பவத்தோடு தொடர்பாக இத் தேடுதலை அவர்கள் மேற்கொள்வதாகக் கூறப்பட்டது.

அவர்கள் சீதாவின் வாயை அடைத்துவிட்டு கட்டிப்போட்டு அவரை அசையவிடாதபடி நிலத்தில் கிடக்கவிட்டார்கள். அவர்களின் வாய் குடிபோதையில் நாறியது. சீதாவின் இரு புதல்விகளும் படுக்கையறையுள் இருந்தனர். முதலிலேயே சீதா படுக்கையறையை பூட்டிவிட்டிருந்தார். இந்தக் கிராமத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பதால் அவர் இதைச் செய்திருந்தார். வந்தவர்களில் இருவர் பெறுமதியான பொருட்களைத் தேடிக்கொண்டிருந்தனர். ஒருவன் படுக்கையறையைத் திறக்க முயற்சித்தான். பிள்ளைகள் இருவரும் நிலைமையைப் புரிந்துகொண்டு கட்டிலின்கீழ் ஒளிந்துகொண்டனர்.  வந்தவர்கள் அந்த அறை ஏன் பூட்டப்பட்டிருக்கிறது, அதற்குள் என்ன இருக்கிறது என்று கேட்டு அதட்டினர். சீதா தான் மட்டுமே இப்போ வீட்டில் தனியாக இருப்பதாகவும் தனது மருமகன் அந்த அறையில் தங்கியிருப்பவர் எனவும் அவர் இப்போ கொழும்பில் நிற்கிறார் என்றும் சாட்டுச் சொல்லிப் பார்த்தார். அவர்கள் நம்பவில்லை. அறையை உடைத்தனர். அங்கு இரு பிள்ளைகளையும் கண்டனர். அவர்களை வெளியே இழுத்து கட்டிலில் போட்டனர். தமது வெறியாட்டத்தை நடத்தினர் இருவர். ஒருவன் சீதாவை மடக்கிவைத்திருந்தான். பிள்ளைகளின் கதறலில் சித்திரவதைப்பட்ட சீதா அநாதரவாகக் கிடந்தாள்.

பிறகு அவர்கள் அந்த இடத்தைவிட்டு விலகினர். போகும்போது இந்தச் சம்பவத்தை யாருக்காவது சொன்னால் கொலைசெய்வோம் என்று மிரட்டிச் சென்றனர். ஒருவாறு நடக்கமுடிந்த மூத்த புதல்வி மெதுவாக தாயாரை அணுகி அவரின் கட்டுகளை அவிழ்த்துவிட்டாள். இயைவள் மயங்கிப்போய்க் கிடந்தாள்.

தனது உறவினரின் உதவியுடன் சீதா பிள்ளைகளை கல்முனை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார். பின்னர் அவள் அவர்களை வீட்டுக்குக் கூட்டிவரவேண்டியதாயிற்று. அவர்களின் உடல் அதிவெப்பநிலையில் காய்ந்தது. மருத்துவர்கள் பயம்காரணமாக இதில் சம்பந்தப்படுவதைத் தவிர்க்க முனைந்தனர். சிகிச்சை முடிந்ததும் வைத்தியர்கள் பிள்ளைகளை உடனடியாகவே கூட்டிப்போக நிர்ப்பந்தித்தனர் என்கிறார் சீதா. அவரது உறவினர்கள் அவருடன் ஆறுதலுக்கு தங்கியிருந்தனர். சீதாவும் மோசமான அதிர்ச்சிக்கு உட்பட்டிருந்தார்.  பத்திரிகையொன்றுக்கு பின்னர் இதுபற்றித் தெரிவித்தபோது அவர் கூறினார்,

"நான் கற்றவுணர்வால் துடிக்கிறேன். என் முன்னிலையிலேயே எனது பிள்ளைகளை அவர்கள் துவம்வசம் செய்துகொண்டிருந்தபோது உதவிசெய்யமுடியாதவளாக நாதியற்றவளாக இருந்தேன். இந்தமாதிரியான ஒரு கொடுமை எந்தத் தாய்க்கும் நிகழக்கூடாது. நிலைகுலைந்து போனவளாய் என்னை நான் உணர்ந்த நேரங்கள் உண்டு. ஆனாலும் நான் உறுதியாக இருந்திருக்காவிட்டால் எனது பிள்ளைகள் இறந்திருப்பார்கள்" என்று கண்ணீர் வடிக்கிறாள் அந்தத் தாய்.

இந்தச் சம்பவம் நடந்தபின்னர் கணவன் வேலையால் வந்திருந்தார். சம்பத்தைக் கேள்விப்பட்ட அவர் மயங்கிவீழ்ந்தார். சுயநினைவுக்கு வந்தபின்னர் சீதா பொலிசில் முறைப்பாடு செய்வோம் என்று சொன்னபோது அவர் பயந்திருந்தார். இதை நாம் செய்தால் அவர்கள் திரும்ப வந்து எமது குடும்பத்தை அழித்துவிடுவார்கள் என்றார். "அவர்கள் ஏற்கனவே எமது குடும்பத்தை அழித்துவிட்டார்கள் இனியென்ன வேண்டிக் கிடக்கிறது" என்று சீதா கூறினாள்.

அன்று பின்னிரவில் மீண்டும் வந்தனர் அவர்கள். இப்போ ஐந்து பேர். கூரிய ஆயுதங்களுடனும் கைத்துப்பாக்கிகளுடனும் அவர்கள் வந்திருந்தனர். வீட்டை உடைத்து உள்ளே வந்தனர். சீதாவின் கணவரையும் அவர்களுடன் தங்கியிருந்த உறவினர்களையும் மிக மோசமாகத் தாக்கினர். படுக்கையறைக்குச் சென்ற அவர்கள் காய்ச்சலில் துடித்துக்கொண்டிருந்த பிள்ளைகளில் மூத்தவளை இழுத்துக்கொண்டு வந்தனர். வெள்ளைவானில் அவர்கள் அவளை கடத்திச் சென்றனர். அவளை அன்றுதான் இறுதியாக அவளின் குடும்பத்தார் கண்டார்கள். அவள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. உடனேயே சீதாவும் கணவரும் உறவினர்களுமாக இரத்தம் ஒழுக பொலிஸ் நிலையத்துக்குச் சென்றார்கள். பொலிசார் அவர்களின் முறையீட்டைப் பதிவுசெய்ய மறுத்தனர். தாம் தேர்தல் தொடர்பாய் நடந்த சம்பவங்களில் மூழ்கியிருப்பதாகச் சொல்லி மறுத்தனர். முறைப்பாட்டைப் பதிவுசெய்வதற்கு முன்னர் சீதா குடும்பம் கல்முனையில் வசிப்பதற்கான சான்றுப் பத்திரங்களோடு மறுநாள் வரும்படியும் அவர்கள் கோரியிருந்தனர்.

சீதா பொலிஸ் நிலையத்துக்கு திரும்பவும் போகவேயில்லை. அவர் தேசிய மனிதஉரிமைகள் குழுவிடம் தனது முறைப்பாட்டைப் பதிவுசெய்தார். மே 22ம் தேதி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு நிர்வாகம் (NஊPயு) இதுவிடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

சீதாவும் அவரது கணவரும் மோசமான மனவழுத்தத்துடன் காணப்படுகிறார்கள். இளையவள் மெல்ல பழையநிலைக்கு மீண்டுகொண்டிருக்கிறாள். அவர்கள் தங்கள் வீட்டுவாசலில் துயரங்களுடன் காத்திருக்கிறார்கள் மூத்தவளுக்காக!

http://udaru.blogdrive.com/archive/750.html


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்