03_2005.jpgஆங்கில மாதக் கணக்குப்படி ஜனவரி, பிப்ரவரி, அதற்கு அப்புறம் மார்ச்(வரி). ஆங்கிலத்தில் மார்ச்சுவரி என்றால் பிணக்கிடங்கு என்று பொருள். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்திலதான் புதுப்புது வரிகள் போடும் அரசு வரவு செலவு அறிக்கையும் வருகிறது. அதாவது "வாட்' வரி, சேவை வரி போன்ற வரிச்சுமையேற்றியே மக்களை போ (மார்ச்) பிணக்கிடங்குக்கு என்று தள்ளிவிடுகிறார்கள் ஆட்சியாளர்கள்.

 

 

இப்போதெல்லாம் அநேகமாக எல்லா ஓட்டுக் கட்சிகளும் (கூட்டணிகள் மூலம்) ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகிக்கிறார்கள். புதுப்புது வரிகளால் அரசுக்கு வருவாய் குவியும் என்றால் அதில் இவர்களுக்கும் ஒரு பங்கு கிட்டத்தானே செய்யும். அதனால்தான் மக்கள் மீது எவ்வளவு வரிச்சுமை ஏற்றினாலும் ஓட்டுக் கட்சிகள் வாய்திறப்பதோ, சிறு முணுமுணுப்புச் செய்வதோ கூட கிடையாது.

 

மைய அரசின் 20042005 ஆண்டு வரவுசெலவு கணக்குப்படி மொத்தவரி வசூல் 3,17,723 கோடி ரூபாய். இது தவிர மாநில அரசுகளின் வரிவசூல் இன்னும் சில இலட்சம் கோடி ரூபாய். ஏற்கனவே விதிக்கப்பட்ட வரியைக் கறாராக வசூலித்தால், அதிலும் இலஞ்சஊழலை ஒழித்தால், வசூலித்த தொகையை வீண் விரயம் செய்யாமல் அவசியமான பணிகளுக்கு உருப்படியாக செலவு செய்தாலே புதிய புதிய வரிகள் விதிக்க வேண்டிய அவசியமே இல்லை. உச்சநீதி மன்றத் தீர்ப்பும், ஆண்டுதோறும் வெளியிடப்படும் பொதுத் தணிக்கை மற்றும் நெறிப்படுத்தும் ஆணையர் அறிக்கையும் இவ்வாறு கூறுகின்றன. ஆனால், தற்போதுள்ள வரிவிதிப்புகள் போதாதென்று இந்த ஆட்சிக் காலத்திலேயே அதை இரண்டு மடங்காக்குவதில் உலகவங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனத்தின் இந்தியக் கைக்கூலிகள் முனைத்து இறங்கியுள்ளனர். முக்கியமாக பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் ப. சிதம்பரம், திட்டக் கமிசன் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா ஆகிய மூவரும் தமது ஏகாதிபத்திய எஜமானர்கள் வகுத்துக் கொடுத்த கட்டளையின்படி இதைச் சாதித்து வருகிறார்கள்.

 

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையின் மிக முக்கியமான கூறு இந்த நாட்டுப் பொருளாதாரக் கட்டுமானத்தை மறுசீரமைப்பதாக உள்ளது. இதனால் வரிவிதிப்பு மற்றும் பிற வருவாய்த் துறைகளின் கட்டுமானத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துகினறனர். வரிவசூலிப்பதற்கான அடித்தளத்தை அதிகரிப்பது, சுங்கவரி மற்றும் இறக்குமதித் தீர்வையைக் குறைப்பது, உலகின் பலநாடுகளிலும் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வரும் மதிப்புக் கூட்டு வரி முறையைப் புகுத்துவதன் மூலம் வரிவசூலிக்கும் முறைகளை எளிமைப்படுத்துவது. இந்த மாற்றங்கள் அனைத்தும் வெறுமனே அரசு வருவாயைப் பெருக்குவதற்கானவை மட்டுமல்ல. ஏகாதிபத்திய பன்னாட்டுத் தொழிற் கழகங்களின் விரிவாக்கத்துக்கும் கொள்ளை இலாபத்துக்கும் வழி வகுப்பவையாகும். சுங்கவரி மற்றும் இறக்குமதி தீர்வை குறைப்பதன் மூலம் அந்நிய நுகர்பொருட்களுக்கான சந்தை வசதி செய்து தரப்படுகிறது. மதிப்புக் கூடுதல் வரிவிதிப்பின் மூலம் சிறு, நடுத்தர வியாபாரிகள் கூட கணினி வைத்துக் கொண்டு கொள்முதல், விற்பனை, விலை விவரங்களை அன்றாடம் முடிக்க வேண்டும். சிறு நடுத்தர வணிகர்கள் ஒழிக்கப்பட்டு, அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்யும் பலபொருள் சிறப்பு அங்காடிகள் (சூப்பர் மார்க்கெட்டுகள்) பல்கிப் பெருக வழிவகுக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள நுழைவுவரி, மத்திய வணிகவரி போன்றவற்றை நீக்காமலே, புதிதாக "வாட்' வரி என்கிற பெயரில் பலமுனை வரிவிதிக்கப்படுகிறது.

 

நாட்டின் 90 சதவீதத்துக்கும் மேலான மக்களை வரிவிதிப்பின் கீழ் கொண்டு வந்து வரிவசூலை விரிவுபடுத்துவதுதான் சேவைவரியின் நோக்கமாகும். 1994இல் மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்தபோது, தொலைபேசி காப்பீடு மற்றும் பங்குச்சந்தைத் தரகு வேலை ஆகிய மூன்று துறைகளுக்கு மட்டும் 5 சதவீத அளவு சேவை வரியை புகுத்தினார். இதுவரை அது 71 சேவைத்துறைகளுக்கு விரிவுபடுத்தி 10.2 சதவீத அளவு வரியாக உயர்த்தப்பட்டு ஆண்டுக்கு 14,150 கோடி ரூபாய் என்று வளர்ந்துள்ளது. இந்த ஆண்டு வரவுசெலவு அறிக்கையில் மேலும் 25 துறைகளுக்கு விரிவுபடுத்தி, 12 சதவீதமாக உயர்த்தி சேவை வரிமூலம் மொத்தம் 20,000 கோடி ரூபாயை வசூலிக்க இருக்கிறார்கள். கூரியர், உலர் சலவை, வாடகைகள், கேபிள் தொடர்பு, புகைப்படம் அச்சிடுதல், டுடோரியல், வங்கி முதல் திருமண மண்டபம் வரை அனைத்தும் சேவைத் தொழில்களாக அறிவிக்கப்பட்டு வரி வசூலிக்கப்படுகிறது. இனி, மருத்துவமனை, மருத்துவ சோதனை, தங்கும் விடுதிகள் என்று மேலும் மேலும் விரிவுபடுத்தப்படும். அதேசமயம் வரி ஏய்ப்பு செய்யும் முதலாளிகள், கருப்புப்பண ஆசாமிகள் போன்றவர்களுக்கு தானே முன் வந்து வருமானத்தை அறிவிக்கும் திட்டம், அதீத உற்பத்தி செய்த கம்பெனிகளுக்கு வரிவிலக்கு சலுகை என்று பல வகையிலும் முதலாளிகளுக்குச் சாதகமாகவே வரி விதிப்புகள் உள்ளன.

 

எந்தவகை வரி விதிப்பானால் என்ன, கருவூலத்துக்குத் தானே, அதாவது அரசுக்குத்தானே போய்ச் சேருகிறது; மக்கள் நலப் பணிகளுக்குத்தானே பயன்படும் என்று பலரும் அப்பாவித்தனமாக எண்ணுகிறார்கள். புதிய பொருளாதாரக் கொள்கையின்படி, ஏழை எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளான விவசாயம், உணவு, மருத்துவம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாக நிறுத்தப்பட வேண்டும்; மக்கள் நலப் பணிகளில் இருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும்; அதேசமயம், இந்த அரசு இயந்திரத்தை, குறிப்பாக அதன் இராணுவம், போலீசு போன்ற ஒடுக்குமுறை அமைப்புகளை நவீனப்படுத்துவதற்கு, விரிவாக்குவதற்கு மட்டுமே அரசின் கவனமும் வருவாயும் குவிக்கப்பட வேண்டும்.

 

ஏகாதிபத்திய எஜமானர்களின் இந்தக் கட்டளைகளை ஏற்று, உழைக்கும் மக்களைப் பிணக் கிடங்குகளில் குவிப்பதற்கான பணிகளைத்தான் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. ஆகவே, தற்போது இந்த மக்கள் விரோத, நாட்டு விரோ த வரி விதிப்பை எதிர்த்துப் போராடும் தமிழக வணிகர்களோடு அனைத்து உழைக்கும் மக்களும் கைகோர்க்க வேண்டும்.