04_2005.jpg· மைய அரசின் புதிய வரிவிதிப்புகளின் பின்னே மறைந்துள்ள உண்மையான நோக்கங்களை தலையங்கக் கட்டுரை எடுப்பாக உணர்த்தியது. மறைந்த ஓவியர் உதயனின் தூரிகையில் உருவான அற்புதமான அட்டைப்படக் கேலிச் சித்திரம் அவரது நினைவை என்றென்றும் நமது மனங்களில் நிறுத்தும். தன்னார்வக் குழுக்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் நோக்கங்கள் பற்றி தெளிவில்லாமல் இருந்த எனக்கு ""வட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்கள்'' என்ற கட்டுரை பேருதவியாக அமைந்தது.
புரட்சிக் கவிநேசன் தேரெழுந்தூர்

· வெனிசுலா அதிபர் சாவெசைத் தமது தோழராகக் காட்டிக் கொள்ளும் இடது வலது போலி கம்யூனிஸ்டுகளின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் விதமாக சரியான தருணத்தில் வெனிசுலா பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளது. சாவெஸ் அமெரிக்க எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார். ஆனால் தாங்கள் ஆளும் மே.வங்கத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பாய்விரித்துக் கொண்டிருக்கும் போலி கம்யூனிஸ்டுகளுக்கு சாவெசைப் பாராட்ட என்ன அருகதை இருக்கிறது?
கதிரவன் சென்னை.

· மிச்ச மீதியிருக்கும் கிராமப்புற பொருளாதாரத்தையும் சூறையாடக் கிளம்பிவிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பற்றிய கட்டுரையானது கிராமப்புற எதார்த்த உலகத்தை கண்முன் விரித்துக் காட்டியது. காத்திருக்கும் அபாயத்தையும் கடமையாற்ற வேண்டிய அவசியத்தையும் எடுப்பாக உணர்த்தியது.
மைவிழி சென்னை.

· அதுவேறு இதுவேறு என்று சந்தர்ப்பவாத சகதியில் புரளும் தமிழினப் பிழைப்புவாதிகளை மீண்டும் அம்பலப்படுத்திக் காட்டிய பெட்டிச் செய்தி வெகுசிறப்பு. தமிழகமே சுனாமி துயரத்தில் தத்தளிக்கும்போது பொங்கல் வைத்துக் கொண்டாடக் கூப்பிடும் இவர்களது வக்கிர தமிழர் கண்ணோட்டத்தை மானமுள்ள தமிழர்கள் காறி உமிழ்வார்கள்.
மா.சே. சென்னை.

· ஆழிப்பேரலை போன்று வரும் அரசு வரிவிதிப்புகளின் உள்ளர்த்தத்தை தெளி வாகச் சொல்லியிருக்கிறீர்கள். சுமார் 20 ஆண்டு காலமாக "வளரும் பொருளாதார' மயக்கத்தில் வீழ்ந்து கிடந்த நான் ""புதிய ஜனநாயகம்'' மூலம் புதிய கண்ணொளி பெற்றுள்ளேன். நரகம் வரப் போவதைப் பற்றி அறியாமல் சொர்க்கக் கனவுகளில் சீரழிந்து கொண்டிருக்கும் நம்மவர்களை அழிவிலிருந்து காப்பாற்றுங்கள்.
என்.ஜே. கந்தமாறன் நேமம்.