அன்று கொன்றது சுனாமி! நின்று கொல்கிறது அரசு!

05_2005.jpgஇன்னுமொரு சாட்சியம்! சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர் சிங்காரத் தோப்பைச் சேர்ந்த பார்த்திபன் என்ற இளைஞர் கடந்த மார்ச் 27ஆம் தேதியன்று கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளார்.ஒரு நவீன எந்திரப் படகுடன் மீன்பிடித் தொழிலைச் செய்து வந்த இவர் சிங்காரத் தோப்பு மீனவர் பஞ்சாயத்தின் செயலராகவும் இருந்து வந்துள்ளார். சுனாமி பேரழிவினால் இவரது படகு உடைந்து நாசமாகி வாழ்விழந்து நின்றார். அரசு நிவாரணத்தின் மூலம் படகைச் செப்பனிட்டு கடனை அடைத்து, மீண்டும் வாழ்ந்து முன்னேற முடியும் என்ற அவரது நம்பிக்கையில் இடியாய் இறங்கியது அரசின் அற்ப நிவாரண உதவி.

 

உடைந்த படகை சீர் செய்யவே ரூ. 3 இலட்சத்துக்கு மேல் தேவைப்பட்ட நிலையில், நிவாரணமாக ஏறத்தாழ ரூ. 1 லட்சம் தருவதாக அதுவும் கடனாகத் தருவதாகக் கூறினர், ஆட்சியாளர்கள். என்ஜினை இலவசமாக சீர் செய்து தருவதாகப் பசப்பிய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த நைலான் கம்பெனி ரூ. 65,000 பில் போட்டு அவருக்கு அனுப்பியது. அற்ப நிவாரணத்தைக் கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் ஐந்து முறை மனு கொடுத்தும், நிலைமையை நேரில் விளக்கியும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நிவாரணத் தொகையாக அரசு அனுப்பிய காசோலையை வாங்க மறுத்து அவர் திருப்பியனுப்பி விட்டார். உரிய நிவாரண உதவியைச் செய்ய மறுக்கும் அரசின் அலட்சியப் போக்கை எதிர்த்து தீக்குளிக்கப் போவதாகவும் எச்சரித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துப் பார்த்தார். ஆனாலும் அரசு எந்திரம் அசைந்து கொடுக்கவில்லை. வாழ்விழந்து விரக்தியடைந்த பார்த்திபன், தற்கொலையைத் தீர்வாகத் தேடிக் கொண்டார்.

 

உரிய நிவாரண உதவியின்றி கடன் தொல்லை தாளாமல் பார்த்திபன் மரணமடைந்த செய்தியறிந்து திரண்ட பத்திரிகை புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சியினரை அ.தி.மு.க. குண்டர்கள் விரட்டியடித்து உண்மைக் காரணம் வெளிவராதபடி தடுத்தனர். போலீசாரோ, மாவட்ட ஆட்சியரிடம் பார்த்திபன் அளித்த மனுக்களை அள்ளிச் சென்று எந்தத் தடயமும் இல்லாமல் மறைத்து விட்டனர்.

 

பு.ஜ. செய்தியாளர், கடலூர்.