07_2005.jpgதிருச்சி அருகே அமைந்துள்ள தரகு முதலாளித்துவ நிறுவனமான டால்மியாபுரம் சிமெண்ட் ஆலையில் 16 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியின்போது பலியானார்கள். மேலும், அதே இடத்தில் 18 கூலித் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். 28.5.05 அன்று மதியம் 12.50 மணிக்கு இக்குரூரம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது.

 

சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இருக்கும் டால்மியாபுரம் சிமெண்ட் ஆலையில், 10 ஏக்கர் பரப்பளவில் புதிதாக ஒரு "பிளாண்ட்' சட்ட விரோதமான முறையில் அவசர அவசரமாக உருவாக்கப்பட்டது. அதில், 500 மீட்டர் உயரமுள்ள கலனுக்கு கச்சாப் பொருட்களை கொண்டு செல்லும் அரை கி.மீ. நீளமும் 120 அடி உயரமும் கொண்ட கான்கிரீட் சாய்வுப்பாலம் இரண்டாகப் பிளந்தது. அப்போது, அப்பாலத்தின் மேல் கைப்பிடிச் சுவர் கட்டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பாலத்தோடு கீழே விழுந்து நசுங்கி பலியானார்கள். நிழலுக்காக அப்பாலத்தின் அடியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்களும் உடல் நசுங்கி அதே இடத்தில் இறந்தார்கள்.

 

ஆலை விரிவாக்கம் முறைகேடாக, அரசின் அனுமதியின்றி நடந்து வந்ததால், "கான்கிரீட்' இறுகுவதற்குக் கூட பொறுத்திராமல், அவசரமாக அதன் மேலேயே கைப்பிடிச் சுவர் எழுப்பியதால், பாரம் தாங்காமல் சாரம் சரிந்து பாலம் இரண்டாகப் பிளந்தது. தொழிலாளர்கள் குரூரமாகப் பலியானார்கள்.

 

கடந்த 10 ஆண்டுகளில் ஆலையினுள் நடந்த பல பயங்கர படுகொலைகளை மூடி மறைத்த டால்மியா நிர்வாகம், இந்தப் படுகொலைகளையும் மூடி மறைக்கவே எத்தணித்தது.

 

ஆனால், இக்கோர படுகொலை சம்பவத்தின் போது அங்கு வேலை பார்த்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்ற புரட்சிகர அமைப்பின் தஞ்சை பகுதி தோழர் துரைராஜ் பத்திரிகைகளுக்கு உடனே தகவல் கொடுத்தார். அதன் பிறகும் தொலைபேசியில் விசாரித்தவர்களிடம் ""அப்படி எதுவும் நடக்கவில்லை'' என்று புளுகியது, ஆலை நிர்வாகம். மீண்டும் மீண்டும் பலமுனைகளிலிருந்தும் பத்திரிகைகளுக்குப் பலர் தொடர்பு கொண்டனர். அதன் பிறகுதான் ஒவ்வொரு பத்திரிகையாளராக ஆலைக்கு வந்தனர். அதன்பிறகுதான் செய்தியின் முழு பரிமாணமும் வெளி உலகுக்குத் தெரிய வந்தது.

 

இக்கோரக் கொலையைக் கண்ட சக தொழிலாளர்கள் கொதிப்படைந்து, கட்டுமான ஒப்பந்த நிறுவனமான "பி அண்ட் சி' நிர்வாகத்தின் இயந்திரங்களை அடித்து நொறுக்கினார்கள். உடனே ஆலையின் "பாதுகாப்பு'க்கென டால்மியா நிர்வாகம் ரிசர்வ் போலீசை வரவழைத்தது. ஆலைக்குள் இருந்த தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றியது.

 

அப்படியும் கலைய மறுத்த தொழிலாளர்கள் ஆத்திரம் அடைந்து கைக்கு கிடைத்த கற்களை எடுத்து ஆலை வாயிலில் வீசினர். ஆலையின் பின்வாயிலை உதைத்து திறந்து உள்ளே சென்று கொலையுண்ட, படுகாயம் அடைந்த சக தொழிலாளிகளை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

 

இக்கோரச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு பாதிக்கப்பட்ட தொழிலாளிகளின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க, தங்கள் குழந்தைகளுடன் ஆலையினுள் குவிந்தனர். "யார் யார் இறந்தனர்? காயம் அடைந்தவர்கள் எங்கேயிருக்கிறார்கள்?' என்று அவர்கள் பரிதவித்தபோது, விபரங்களைக் கூடச் சொல்ல மறுத்தது, ஆலை நிர்வாகம்.

 

தரகு முதலாளித்துவ நிறுவனமான டால்மியா சிமெண்ட் ஆலையின் நிர்வாக இயக்குநர் கேஸ்பர் பெனிலானி என்ற கொலைக் குற்றவாளி, தொழிலாளிகளின் பிணங்களுக்கு நடுவே பத்திரிகைகளுக்கு திமிரோடு பேட்டி கொடுத்தார். ""இது ஒரு விபத்து, இதற்காக யாரையும் குறை சொல்ல முடியாது. வேலைகளை கான்ட்ராக்ட் விட்டுள்ளோம். விபத்துக்கும் நிர்வாகத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை. இருந்தாலும் உயிரிழந்தோருக்கு ஒரு லட்சமும், காயம் அடைந்தோருக்கு ஐம்பதாயிரமும் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப் போகிறோம்'' என்றார்.

 

""சட்டவிரோதமான'' முறையில் ஆலை விரிவாக்கம், ""விதிகளுக்கு புறம்பான'' முறையில் கட்டுமானப் பணி, 16 தொழிலாளர்கள் ஆலையினுள் பணியின் போது படுகொலை, 18 தொழிலாளர்கள் படுகாயத்தால் நிரந்தர ஊனம்; இவ்வளவு கிரிமினல் குற்றங்களுக்குப் பிறகும் எவ்வளவு தடித்தனமான திமிர் பேட்டி! இவன், தொழில் ரீதியிலான கிரிமினலா? இல்லை, நிர்வாக இயக்குநரா?

 

எதிர்பாராமல் நடக்கும் சாலை விபத்தில் கூட யாராவது காயமடைந்து விட்டால் வண்டி ஓட்டுநர், அடிக்கு பயந்து இறங்கி ஓடுகிறாரே! இவன் மட்டும் எப்படி இத்தனை தொழிலாளர்களைக் கொன்று விட்டு, அந்தப் பிணங்களுக்கு மத்தியில் பேட்டி கொடுக்கிறான்? யார் கொடுத்த தைரியம் இது?

 

தன்னுடைய இலாபவெறிக்காக, டால்மியா சிமெண்ட் ஆலை நிறுவனம் தொடர்ந்து அரங்கேற்றி வரும் சட்டமீறல்கள், கிரிமினல் குற்றங்களைவிடக் குரூரமானவை.

 

ழூ டால்மியா சிமெண்ட் ஆலைக்குத் தேவையான நீரை, காவிரி கொள்ளிடத்திலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக எடுத்த வகையில் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் 1000 கன அடிநீருக்கு 300 ரூபாய் என்ற விகிதத்தில் பாக்கி 57,43,812 ரூபாய். தற்போது புதிய "பிளாண்ட்'டுக்கு நாளொன்றுக்கு 3,200 கன மீட்டர் நீர் தேவை. இதற்கான அரசு அனுமதி வாங்கவில்லை.

 

ழூ புதிய "யூனிட்டு'க்குத் தேவைப்படும் கச்சாப் பொருளான சுண்ணாம்புக் கல் வெட்டியெடுப்பதற்கான ஒப்பந்தத்தை அரசிடமிருந்து முறையாகப் பெறவில்லை.

 

ழூ மின் உற்பத்தி திறனுடன் கூடிய புதிய யூனிட்டின் கட்டுமானப் பணிக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை வேலை முடிந்த பிறகுதான் முறைகேடாக வாங்கியது. இந்த கட்டுமானப் பணிக்குத் தேவையான மின் விநியோகம், தண்ணீர் விநியோகம் உரிமைகளைச் சட்ட விரோதமாக உரிமம் இல்லாமல் அனுபவித்தது.

 

ழூ அனைத்திற்கும் மேலாக, ஒப்பந்த முறையில் தினக்கூலிக்கு தொழிலாளர்களை அமர்த்தி, உயிருக்கு ஆபத்தான வேலைகளை அவர்களுக்கு ஒதுக்கியது, நிரந்தர தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய சட்டப்பூர்வ சலுகைகள், பணி பாதுகாப்பு சாதனங்கள், விபத்துக் காலங்களில் அவசர மருத்துவ உதவி, நட்ட ஈடு மற்றும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை போன்ற உரிமைகள் ஏதுமின்றி, ஒப்பந்த கூலித் தொழிலாளர்களின் கடைசி சொட்டு இரத்தத்தையும் உறிஞ்சியது, டால்மியா நிர்வாகம். பணியின் போது இறந்த, படுகாயமடைந்த ஒப்பந்த தொழிலாளர்களை ஆலையின் கழிவுகளோடு கழிவுகளாக வெளியேற்றியது, சிமெண்ட் ஆலை நிர்வாகம்.

 

ழூ "எல் அண்ட் டி', "பி அண்ட் சி', மற்றும் சத்தியபாமா போன்ற தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் தொழிலாளர்களை "காண்ட்ராக்ட்' முறையில் கசக்கி பிழியும் வேலையைச் செய்கின்றன. பல தொழிலாளர்கள் பணியின் போதே பிணமாக்கப்பட்டு "விபத்தில் இறந்தவர்கள்' என்று புதைக்கப்பட்டு விட்டனர். பீகார் மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த தொழிலாளி தஷ்ரத், திருச்சி துறையூரைச் சேர்ந்த நல்லுசாமி, திருச்சி கே.எம்.சி. மருத்துவமனையில் இன்று வரை சுயநினைவு அற்ற நிலையில் இருக்கும் பாலசுப்பிரமணி (அடையாள அட்டை எண்: 12472), மற்றும் இதே மருத்துவமனையில் கருகிய நிலையில் கரிக்கட்டைகளாகச் சேர்க்கப்பட்ட "பவர் பிளாண்ட்' தொழிலாளர்கள் இருவர் என்று டால்மியா ஆலையின் கொடுங்கரம் முடிவேயில்லாமல் நீளுகிறது. ஆலையைச் சுற்றியுள்ள தேநீர் கடைகளில் தொழிலாளர்கள் வைத்துவிட்டு போன அழுக்கடைந்த மாற்று சட்டைகளும், சாப்பாட்டு தூக்குகளும் இன்றுவரை அப்படியே அங்கு உள்ளன. ஆலைக்கு வந்த அத்தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியாது!

 

ஓட்டுச்சீட்டு அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்கள், ஆலை நிர்வாகத்தின் பகற் கொள்ளை மற்றும் கிரிமினல் குற்றங்களுக்கு எதிராக அலட்டிக் கொள்வதே இல்லை. மாறாக, ஆலை நிர்வாகத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக இயங்கி, அனைத்து வசதிகளையும் அனுபவிக்கின்றனர்.

 

தினக்கூலியாக ரூ. 90 கொடுத்தால் போதும்; சாவதற்கும் தொழிலாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள். என்ன கொடுமை இது! புதிய பொருளாதாரக் கொள்கை, ஏழை விவசாயிகளுக்கு, கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கியிருக்கும் உயர்ந்தபட்ச வாழ்க்கைத்தரம் இதுதான்! தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கையின் குரூரம் இதுதான்!

 

பு.ஜ. செய்தியாளர்கள், திருச்சி