08_2005.jpgஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் விவசாயிகளின் நிலைமை பேயிடமிருந்து தப்பித்துப் பிசாசிடம் மாட்டிக் கொண்ட கதையாகிவிட்டது. கடந்த ஐந்தே மாதங்களில், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள விதர்பா பகுதியில் மட்டும் 29 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போய் விட்டனர். அம்மாநிலத்தில் கடந்த ஒரே ஆண்டில் நடந்துள்ள விவசாயிகளின் தற்கொலைச் சாவு 400ஐத் தாண்டிவிட்டது. ஆனாலும், இவர்களுள் பெரும்பாலோர் விவசாயிகளே கிடையாது என முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயலுகிறது, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரசு கூட்டணி.

""அரசு வங்கி அல்லது கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியிருக்க வேண்டும்; அவ்வங்கிகள் கடனைத் திருப்பி அடைக்கக் கோரி நோட்டீசு அனுப்பியிருக்க வேண்டும்; வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர் என்பதற்கு ஆதாரமாக ரேசன் கார்டு வைத்திருக்க வேண்டும்; தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கடிதம் எழுதி வைத்திருக்க வேண்டும்'' இப்படி ஏறத்தாழ 40 சிவப்பு நாடாத்தனமான விதிகளை உருவாக்கி, இந்த விதிகளுக்குள் பொருந்தினால்தான், அந்தச் சாவுகளைத் தற்கொலை என ஏற்றுக் கொள்ள முடியும் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்திருக்கிறது. இந்த விதிகளுக்குப் பொருந்தாத விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளை, இயற்கையாக ஏற்பட்ட மரணத்தை நட்ட ஈடு பெறுவதற்காகத் தற்கொலையாகக் காட்டும் நாடகம் எனக் கூறி, பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களை அவமானப்படுத்துகிறது, காங்கிரசு ஆட்சி.

 

இத்தற்கொலைச் சாவுகள் ஒருபுறமிருக்க, மகாராஷ்டிர மாநில விவசாயிகள், தங்களுக்குத் தேவைப்படும் பயிர்க் கடனில் 60மூ சதவீதக் கடனை, 5 சதவீத வட்டிக்கு கந்துவட்டிக் கும்பலிடம் பயிரை அடமானம் வைத்து வாங்கித்தான் விவசாயம் செய்கிறார்கள். இதனால், 2,300 ரூபாய்க்கு விற்க வேண்டிய ஒரு குவிண்டால் பருத்தியை, தனியார் மண்டி வியாபாரிகளிடம் 1,600 ரூபாய்க்கு விற்றுப் போண்டியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

 

இப்படி போண்டியாகி, நிலங்களை இழக்கும் சிறு ஃ நடுத்தர விவசாயிகளின் எண்ணிக்கை இந்தியாவெங்கும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 198788இல் கிராம மக்கள் தொகையில் 35 சதவீதமாக இருந்த நிலமற்ற கூலி விவசாயிகளின் எண்ணிக்கை, 19992000 ஆண்டில் 41 சதவீதமாக அதிகரித்திருப்பது இதற்கு ஆதாரமாகக் காட்டப்படுகிறது.

 

தாராளமயத்தின் பின், விவசாயத்தின் மூலம் கிராம மக்களுக்குக் கிடைக்கும் வேலை வாய்ப்பு கொஞ்சம் கூட வளர்ச்சி அடையவில்லை என்பதோடு, மகாராஷ்டிரா, ஒரிசா, ராசஸ்தான், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பட்டினிச் சாவுகளும் பரவலாக நடந்து வருகின்றன.

 

இந்திய விவசாயிகளின் அழிவிற்கும், இந்திய விவசாயமே மீள முடியாத நாசப் பாதையில் தள்ளப்படுவதற்கும் தனியார்மயம் தாராளமயம்தான் காரணம் என்பதற்குப் புதிய ஆதாரங்கள் தேவையில்லை. ஆனாலும், ஆளும் கும்பலோ, ஒப்பந்த விவசாயம், ஏற்றுமதி பயிர்கள், பாசன வசதியைத் தனியாரிடம் ஒப்படைப்பது, அரசாங்கக் கொள்முதலைக் கைவிடுவது என விவசாயத்தில் தனியார்மயத்தை மேலும், மேலும் ஆழமாகப் புகுத்திக் கொண்டே போகிறது. பல கோடிக்கணக்கான விவசாயிகளின் அழிவில், இந்தியா ஒளிர்வதைவிட மோசடித்தனம் வேறெதுவும் இருக்க முடியுமா?