08_2005.jpgபுதிய ஜனநாயகம் ஜூலை 2005 இதழில், ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் காசு வாங்கி பிழைப்பு நடத்தும் ""மக்கள் கண்காணிப்பகம்'' என்ற தன்னார்வ நிறுவனத்தை அம்பலப்படுத்தி வெளியிடப்பட்ட கட்டுரை, அந்த அமைப்பின் ஊழியர்கள், விசுவாசிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.

 

மக்கள் கண்காணிப்பகத்தின் தலைமையில் இயங்கும் ""சித்திரவதைக்கு எதிரான பிரச்சாரம்'' எனும் அமைப்பு ஜூலை 9

 அன்று மதுரையில் நடத்திய கலை இரவில் பேசிய அவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜன், மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி டிபேன், தலித் ஆதார மையத்தின் இயக்குநர் மோகன் லால்பீர் உள்ளிட்டு அனைவருமே பு.ஜ.வில் வெளியான கட்டுரை பற்றித் தங்களின் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்கள். அக்கட்டுரையில் பு.ஜ. எழுப்பியிருந்த குற்றச்சாட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் பதில் அளிக்காமல், பு.ஜ. ஆதாரம் இல்லாமல் எழுதுவதாக அவதூறு செய்தனர்.

 

வீரப்பனைப் பிடிக்கச் சென்ற அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட இளைஞர்களையும், இன்னும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டு, உதவிக்காக இவர்களை நாடி வந்த அப்பாவிகளையும் இக்கலைஇரவின் பொழுது தொண்டர் படையாக மாற்றிப் பயன்படுத்திக் கொண்டது, மக்கள் கண்காணிப்பகம். ""ம.க.இ.க.காரன் உள்ளே நுழைந்து நோட்டீசு கொடுக்கிறானா?'' எனக் கண்காணிக்குமாறு தொண்டர் படைக்குக் கட்டளையிட்டிருந்த ஹென்றி டிபேன், தானும் கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு கண்காணித்தார்.

 

எனினும், ம.க.இ.க., பு.மா.இ.மு. தோழர்கள் மக்கள் கண்காணிப்பகத்தை அம்பலப்படுத்தி வெளியிடப்பட்ட பிரசுரங்களை, திடலின் வெளியேயும், உள்ளேயும் விநியோகித்தனர்; பார்வையாளர்களின் மத்தியில் பு.ஜ. இதழும் விற்பனை செய்யப்பட்டது.

 

திடலின் உள்ளே பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்த தோழர் ஒருவரைப் பிடித்த ஹென்றி டிபேன், ""தைரியம் இருந்தா வெளியே போய் கொடு'' என அசட்டுத்தனமாகக் கூறி, அவரை வெளியே விரட்ட முயன்றார். ""தைரியம் இருப்பதால்தான் உள்ளே வந்து கொடுக்கிறேன்'' எனப் பதில் அளித்து, ஹென்றி டிபேனின் மூக்கை உடைத்தார், அந்தத் தோழர்.

 

இந்த நிகழ்ச்சிக்காக அல்லும் பகலும் உழைத்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த பாரதி கிருஷ்ணகுமார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவேயில்லை. அவருக்குத் திடீரென உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டதாகச் சொல்லப்பட்டது. பு.ஜ.வில் வெளிவந்த கட்டுரை அவருடைய வயிற்றைக் கலக்கிவிட்டதோ, என்னவோ?

 

மக்கள் கண்காணிப்பகத்தில் பணியாற்றும் பொறுப்பாளர்கள், ஊழியர்கள் பு.ஜ. இதழைக் கையால் தொடக் கூட மறுத்துவிட்டனர். தொட்டால் வேலை பறிக்கப்படும் என்ற அச்சம் தான் இதற்குக் காரணம். மனித உரிமைகள் பற்றி பீற்றிக் கொள்ளும் மக்கள் கண்காணிப்பகத் தலைமையின் ஜனநாயக விரோதத் தன்மையை இது அம்பலப்படுத்திக் காட்டியது.

 

""பு.ஜ.வில் வெளியான கட்டுரையை எழுதிய ஏகலைவன் யார்? குன்னூரில் நடந்த விசயத்தை பு.ஜ.விடம் யார் சொன்னது?'' என ஒவ்வொரு ஊழியரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறாராம், ஹென்றி டிபேன். காற்றுப் புக முடியாத இடத்தில் கூட கம்யூனிஸ்டுகள் நுழைந்து விடுவார்கள் என்பது அவருக்குத் தெரியாதா?

 

மக்கள் கண்காணிப்பகத்துக்கும், ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் இடையே உள்ள கள்ள உறவை அம்பலப்படுத்தும் புகைப்பட ஆதாரமொன்றையும் வெளியிட்டுள்ளோம். இதற்கும் சேர்த்து விசாரணை என்ற பெயரில் அப்பாவி ஊழியர்களைச் சித்திரவதை செய்யும் முன், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா என்பது பற்றி சிந்தியுங்கள், ஹென்றி டிபேன்.

 

தகவல்:
ம.க.இ.க., பு.மா.இ.மு., மதுரை.