10_2005.jpg'மக்கள் கண்காணிப்பகம்: அமெரிக்க சாத்தானின் கள்ளக் குழந்தை" என்ற தலைப்பில் ஜூலை 2005 புதிய ஜனநாயகம் இதழில் அம்பலப்படுத்தும் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதற்கு மறுப்புரை எழுதி அனுப்பியிருக்கும் மக்கள் கண்காணிப்பகம் அதைச் சுற்றுக்கு விட்டிருப்பதாக அறிகிறோம்.

 

மிகவும் புத்திசாலித்தனமாக எழுதுவதாகக் கருதிக் கொண்டு மக்கள் கண்காணிப்பகம் அளித்துள்ள மறுப்புரை, உண்மையில், அதன் ஏவலர்களால் இடப்பட்டிருக்கும் பணியாகிய அடுத்துக் கெடுக்கும் நயவஞ்சக நரித்தனத்தையே வெளிப்படுத்தியிருக்கிறது.

 

புதிய ஜனநாயகத்தின் மீது மக்கள் கண்காணிப்பகத்திற்கு எந்தப் பகையும் இல்லை என்றும் இதைப் பல ஆண்டுகளாக விரும்பிப் படிக்கும் அதன் உறுப்பினர்கள் இப்பத்திரிகை முன்வைக்கும் வாதங்களையும் கருத்தியல்களையும் வேதம்போல நம்பியதாகவும், இப்போது அந்த நம்பிக்கை தகர்ந்து போய்விட்டதாகவும் மக்கள் கண்காணிப்பகம் தனது மறுப்புரையில் எழுதியுள்ளது.

 

'மக்கள் கண்காணிப்பகத்தைத் தாக்கிய பின்புதான் நம்பிக்கை தகர்ந்ததாகப் பொருள் கொள்ள வேண்டாம். ஆனால், புதிய ஜனநாயகம் சரியான தகவல்களை இதுவரை தந்து கொண்டிருப்பதாக நம்பி வந்தோர்க்கு சீ இவ்வளவுதானா? என்று கேட்கும் அளவுக்கு நம்பிக்கை தகர்ந்து விட்டது. யாரோ ஒருவர், ஏதோ சுயநலத்தில் தந்த கருத்துக்களை, அல்லது எழுதிய கட்டுரையை உண்மையா, பொய்யா என்று விசாரிக்காமல் பிரசுரித்த புதிய ஜனநாயகத்தின் நம்பகத்தன்மை தாழ்ந்து போய்விட்டதை எண்ணி, இதுவரை இந்தப் பத்திரிக்கை இப்படித்தான் பொய்களை அள்ளி வீசியிருக்குமோ, இப்பொய்களை இதுகாறும் நம்பியுள்ளோமோ என்று எண்ணும்போது வெட்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லாது போய்விட்டது" என்கிறது, மறுப்புரை.

 

இந்தச் சொற்களும், சொற்றொடர்களும், அவற்றில் உள்ள சுயமுரண்பாடுமே, ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் கழுத்துப்பட்டை கட்டிய நிர்வாகிகளும், விளம்பர முகவர்களும் கலந்துரையாடி எழுதியனவென்று காட்டுகின்றன. முதலில் அந்த அமைப்பைத் ""தாக்கிய பின்புதான், புதிய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை தகர்ந்ததாகப் பொருள் கொள்ள வேண்டாம்'' என்று தொடங்குகிறது. தொடர்ந்து, அந்த அமைப்பு குறித்த கருத்துக்களை 'உண்மையா, பொய்யா என்று விசாரிக்காமல் பிரசுரித்ததால் புதிய ஜனநாயகத்தின் நம்பகத்தன்மை தாழ்ந்து போய்விட்டதாக"க் கூறுகிறது.

 

தமது அமைப்பின் உள்விவகாரங்களை புதிய ஜனநாயகம் ஏட்டிற்குக் கொடுத்தவர் யார் என்ற கேள்விதான் தற்போது அவர்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான தேடுதல் வேட்டையும், சந்தேகப்படும் சக ஊழியர்களையே பழிவாங்குவதும்தான் அவர்களின் ஒரே வேலையாகவும் உள்ளது. இதை மக்கள் கண்காணிப்பகத்தின் மறுப்புரையே ஒப்புக் கொண்டிருக்கிறது. 'புதிய ஜனநாயகம் கட்டுரையில் கூறியுள்ளபடி, உலகமயமாக்கலை ஆதரிக்க வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்பட்ட கருத்தரங்கு பற்றி ஹென்றி டிபேனிடம் கேட்ட போது, அவர் சொன்னதாக எழுதியுள்ள செய்தி ஒன்றே போதும், புதிய ஜனநாயகத்தின் தரத்தை நிர்ணயிக்க. ஹென்றியைச் சந்தித்தது யார்? எப்போது சந்தித்தார்? எந்த இடத்தில் சந்தித்தார்? என்று புதிய ஜனநாயகத்தால் சொல்ல முடியுமா? சாதாரண மஞ்சள் பத்திரிகை அளவுக்கு புதிய ஜனநாயகம் தரம் தாழ்ந்து போக வேண்டுமா? நடந்ததாகச் சொல்லப்பட்ட கருத்தரங்கு பற்றி மக்கள் கண்காணிப்பக அலுவலகத்தில் திரு. ஹென்றி டிபேனைச் சந்தித்துக் கேட்டிருந்தால் அவரே பதில் சொல்லியிருப்பாரே. அவரை நேரடியாகச் சந்தித்துப் பேசத் திராணியற்ற ஒருவர் எவ்வித ஆதாரமுமின்றி யாரோ ஒருவர் தந்த செய்தியை புதிய ஜனநாயகம் வெளியிட்டுத் தன்னை அசிங்கப்படுத்திக் கொண்ட போக்கு கேவலமானது; அநாகரிகமானது. (அழுத்தம் மக்கள் கண்காணிப்பகம்.)

 

மனித உரிமை, ஜனநாயகம் பற்றியெல்லாம் பெரும் கூச்சல், வெறுங் கூச்சல் போடும், மக்கள் கண்காணிப்பகத்திற்கு செய்திகளுக்கான மூலாதாரங்களை வெளியிடாமல் இருக்கும் உரிமை பற்றி தெரியாதா? தெரிந்தும் 'ஹென்றியைச் சந்தித்தது யார்? எப்போது சந்தித்தார்? எந்த இடத்தில் சந்தித்தார்?" என்று அழுத்தமாகவும் 'புதிய ஜனநாயகத்தால் சொல்ல முடியுமா?" என்று சவாலாகவும் சவடாலாகவும் கேள்விகள் எழுப்புவதிலிருந்தே அவர்களின் படபடப்பும் பரபரப்பும் தெரிகிறது.

 

அடுத்து, புதிய ஜனநாயகம், புலனாய்வுப் பத்திரிக்கை என்று சொல்லிக் கொண்டு நடத்தப்படும் 'கிசுகிசு" ஏடுகளைப் போன்றவை அல்ல் அவைதான் லஞ்ச ஊழல், முறைகேடுகள், சமூக விரோதச் செயல்களைக் கிசுகிசுப் பாணியில் எழுதிவிட்டு, சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குக் காரணமானவர்களிடமும் விளக்கம் கேட்டு எழுதி ஈடுகட்டும் சமரசம் செய்து கொள்ளும் இதழியல் தர்மம் பேணுபவை. அதுபோல புதிய ஜனநாயகம் ஏட்டையும் கருதி மக்கள் கண்காணிப்பகம் 'திராணியிருக்கிறதா? சொல்ல முடியுமா?" என்று கேட்டு சவால் விடுகிறது. அவர்களை நேரில் சந்தித்து விளக்கம் கேட்காமல் எழுதியதாலேயே புதிய ஜனநாயகத்தில் எழுதப்பட்ட கருத்துக்கள் ஆதாரமற்றவை, பொய்யானவை என்று கூறி ஒதுக்கிவிட எத்தணிக்கிறார்கள்.

 

புதிய ஜனநாயகத்துக்குக் கிடைக்கும் தகவல்களின் மூலாதாரம், அதன்மீது பு.ஜ. வைக்கும் நம்பகம்தான் தீர்மானிக்கக் கூடியதே தவிர, அவற்றால் பாதிக்கப்படுபவர் தரும் விளக்கங்கள் அல்ல. மேலும் புதிய ஜனநாயகம் 'நடுநிலை ஏடு, இதழியல் தர்மம்" என்ற முதலாளியக் கோட்பாடுகளுக்குள் அடங்குவதுமில்லை.

 

மக்கள் கண்காணிப்பகம் மறுப்புரை என்பதாகக் கருதிக் கொண்டுள்ள தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியிருப்பதைப் போன்று 'ஜனநாயகம்; ஜனநாயகம் தரும் சட்டத்தின் ஆட்சி; சட்டத்தின் ஆட்சியை நீதியோடு காப்பாற்ற வேண்டிய நீதித்துறையும் காவல்துறையும்" என்பதெல்லாம் கூட அனைவருக்கும் பொதுவானது, மேலானது, நடுநிலையானது, சார்பற்றது, முற்றும் முழுதானது என்பதெல்லாம் கூட உண்மையானதல்ல, மோசடித்தனமானது. ஆகவே, மக்கள் கண்காணிப்பகம் எதிர்பார்க்கும் தரும நியதிகளுக்கு புதிய ஜனநாயகம் கட்டுப்படவும் முடியாது.

 

சனநாயகம், சட்டம், சட்டத்தின் ஆட்சி, நீதி எல்லாம் சார்புநிலைக்கு ஏற்ப வளைக்கப்படுவதைப் போலவே, மக்கள் கண்காணிப்பகம் தனது மறுப்புரையில் ஒரு திரித்துப் புரட்டும் வேலையைக் காட்டியிருக்கிறது. மக்கள் காண்காணிப்பகத்தை அம்பலப்படுத்திய கட்டுரையில் 'தன்னை முற்போக்கு அமைப்பாகக் காட்டிக் கொண்ட நிறுவனம், மக்களின் பல்வேறு சிக்கலைத் தீர்த்து வைப்பதாகக் காட்டி கொண்ட இந்நிறுவனம் உலகமயமாக்கலை எதிர்ப்பதாகவும் காட்டிக் கொண்டது. இதை அறிந்த ஜெர்மனியைச் சேர்ந்த நிதி நிறுவனம் ஒன்று கடந்த மே மாதம் (22.5.05 முதல் 24.5.05) உதகையில் குன்னூருக்கு அருகில் உள்ள தியோடர் சர்ச்சில் மக்கள் கண்காணிப்பகத்தின் முழு நேரப் பணியாளர்களுக்கு உலகமயமாக்கலின் அவசியத்தை மூன்று நாள் முகாமாக நடத்தியுள்ளது. உலகமயமாக்கலை அவசியமாக ஆதரிக்க வேண்டும் என்பதே இந்த முகாமின் நோக்கம்" என்று தான் புதிய ஜனநாயகம் எழுதியிருந்தது.

 

ஆனால், 'உலகமயமாக்கலை ஆதரிக்க வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்பட்ட கருத்தரங்கு பற்றி" புதிய ஜனநாயகம் எழுதியதாக திரித்துக் கூறும் மக்கள் கண்காணிப்பகத்தின் மறுப்புரை (பக்.3) நான்கே வரிகள் தள்ளி 'நடந்ததாகச் சொல்லப்பட்ட கருத்தரங்கு பற்றி" என்று எழுதுகிறது. கருத்தரங்கு மறுமுகாம் வேறு. ஜெர்மனியைச் சேர்ந்த நிதி நிறுவனம் மக்கள் கண்காணிப்பகத்தின் முழு நேர ஊழியர்களைக் கூட்டி ஒரு முகாம் நடத்தியது. அதில் உலகமயமாக்கலை எதிர்க்கக் கூடாது, ஆதரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அந்த முகாம் எங்கே, எப்போது நடந்தது என்பதுதான் புதிய ஜனநாயகம் எழுதிய செய்தி. அப்படி ஒரு முகாம் நடந்ததா, அவ்வாறு அறிவுறுத்தப்பட்டதா இல்லையா, அது குறித்து ஹென்றி டிபேன் என்ன கருத்துச் சொன்னார்? இவைதான் முக்கியமான விசயம். இந்த விசயம் பற்றி மறுப்புரையில் எதுவும் சொல்லாமல், திரித்து மழுப்பித் திசை திருப்பும் முயற்சியில் மக்கள் கண்காணிப்பகம் ஈடுபடுகிறது. அப்படி ஒரு முகாம் நடந்ததையும் எப்போது, எங்கே என்ற விவரத்தையும் புகைப்பட ஆதாரத்தோடு புதிய ஜனநாயகம் எழுதிய பிறகு, 'நடத்தப்பட்ட கருத்தரங்கு" 'நடந்ததாகச் சொல்லப்பட்ட கருத்தரங்கு" என்று முன்னுக்கு பின் முரண்பாடாக மக்கள் கண்காணிப்பகம் எழுதுவது ஏன்? மறைப்பதற்கு ஏதோ இருக்கிறது என்பதால்தானே!

இவ்வாறு மக்கள் கண்காணிப்பகத்துக்கு எதிராக புதிய ஜனநாயகம் எழுதியுள்ள அம்பலப்படுத்துதல்களின் மையக் கருத்தை மூடிமறைத்துவிட்டு அல்லது திரித்துப் புரட்டிப் போட்டுப் பொருளற்ற, குதர்க்கமான கேள்விகளை அடுக்கினாலே தகுந்த மறுப்புரை ஆகிவிடும் என்று அந்த அமைப்பு நம்புகிறது. கூலிக்குத் தொண்டு செய்யும் தன்னார்வம் கொண்டவர்கள் தானே!

 

சான்றாக, முசுலீம் அமைப்புகளைக் கேடாக மக்கள் கண்காணிப்பகம் பயன்படுத்திக் கொள்கிறது என்பது புதிய ஜனநாயகம் ஏடு எழுதிய மையக் கருத்து. இதை மறுப்பதற்குப் பதில் (மாறாக ஒப்புக் கொள்ளும் தகவலோடு) ஒரு விவரத் தவறை (ஜெனிவா கருத்தரங்கில் கலந்து கொண்டவர் பெயர் ஹைதர் அலி அல்ல, சவகருல்லா என்பதை) வைத்து வாதம் புரிகிறது, மக்கள் கண்காணிப்பகம். த.மு.மு.க. தலைவர் ஜெனிவா மனித உரிமை கருத்தரங்கில் கலந்து கொண்டதில் அதற்கான ஏற்பாடு செய்ததில் மக்கள் கண்காணிப்பகத்தின் பங்கு பற்றி புதிய ஜனநாயகம் எழுதியிருக்கிறது. தன் பயணம் பற்றி த.மு.மு.க. தலைவரே எத்தனையோ மேடைகளில் பேசியிருக்கிறார் என்ற தகவல் புதிய ஜனநாயகத்தின் கருத்தை எப்படி மறுப்பதாகிறது? மேலும், அவரது ஜெனிவா பயணத்தை மறைக்கப்பட்டது என்று பு.ஜ. எழுதவில்லை. இதுபோன்ற கண்துடைப்பு வேலைகள் மூலம் முசுலீம் மக்களின் உரிமைகளுக்குப் பாடுபடுவது போல மக்கள் கண்காணிப்பகம் காட்டிக் கொள்கிறது என்றுதான் பு.ஜ. எழுதியது; இது எப்படி பு.ஜ.வின் அங்கலாய்ப்பாகும்?

 

சித்திரவதைக்கெதிரான பிரச்சாரக் கூட்டமைப்பு நிகழ்ச்சிகளுக்கான நிதியை பங்கேற்கும் கட்சிகள் அமைப்புகளிடமிருந்து பெறுவதாகக் காட்டிக் கொண்டு, அப்படி வசூலாகும் முன்பே மக்கள் கண்காணிப்பகம் தானே செலவு செய்கிறது; அதற்கான நிதி ஆதாரம் என்னவென்பதுதான் பு.ஜ. எழுப்பிய கேள்வி. கடந்த மூன்றாண்டு விவகாரம் பற்றி கேள்வி எழுப்பினால் ' "தெரிந்தெடுக்கப்பட்ட" 200 பேர்களிடம் தனது வரவுசெலவு விவரத்தை மூன்றாண்டுகளுக்கு முன்பே காட்டி விட்டதாக பதில் எழுதுகிறது.

 

""மக்கள் கண்காணிப்பகம் தவிர, 'சுதந்திரா", 'மனித உரிமை கல்வி நிறுவனம்" என்று பல பெயர்களில் தன்னார்வக் குழுக்களைத் தொடங்கி உற்றார் உறவினர்களை, நண்பர்களை வைத்து பல பத்தாயிரக்கணக்கிலான தொகையை ஊதியம் என்ற பெயரில் சுருட்டிக் கொள்கிறார்கள்; அதேபோலத்தான் வரவுசெலவிலும் செய்கிறார்கள் என்பது பு.ஜ.வின் குற்றச்சாட்டு.

 

இதற்கு குதர்க்கமான எதிர்க்கேள்வி கேட்டு நழுவிக் கொள்கிறது மக்கள் கண்காணிப்பகம். 'புதிய ஜனநாயகத்திற்கு மக்கள் கண்காணிப்பகம் எங்கிருந்து நிதியைப் பெறுகிறது என்று சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை" என்று மழுப்பிவிட்டு, 'மக்கள் கண்காணிப்பக இயக்குநரும் அவர் துணைவியாரும் வாங்கும் சம்பளம் பற்றிய செய்தியாலாவது கொஞ்சம் உண்மை கலந்திருக்கக் கூடாதா? கொள்கை ரீதியான விமர்சனத்தைத் தாண்டி தனிநபர்களை விமர்சிக்கும் அளவிற்கு புதிய ஜனநாயகம் தரம் தாழ்ந்து போகவேண்டுமா?" என்று கேட்கிறது.

 

ஏகாதிபத்திய நிறுவனங்களிடமிருந்து நிதிபெற்றுக் கொண்டு 'தன்னார்வத் தொண்டு" என்று கூறிக் கொண்டு கூலிக்கு மாரடிக்கும் கும்பல் கொள்ளை ரீதியான போராட்டத்துக்கு அழைக்கிறது. இவர்களின் செயல்பாடுகள் எப்படி நாட்டுக்கும் மக்களுக்கும் விரோதமானவை, துரோகமானவை என்று புதிய ஜனநாயகக் கட்டுரையில் கோட்பாட்டு விளக்கம் தெளிவாகவே தரப்பட்டிருக்கின்றன. (பக்.26 ஜூலை 2005); இதில் போலி கம்யூனிஸ்டுகளின் பங்குபாத்திரத்தையும் விளக்கியிருக்கிறது.

 

இருந்தபோதும், புதிய ஜனநாயகத்திடம் 'ஒரு நிறுவனக் கோட்பாட்டை விமர்சனக் கண்ணோட்டத்தோடு விமர்சிக்கும் போக்கோ, நோக்கமோ இல்லை" என்றும், ' "தனிப்பட்ட வெறுப்பையும் பகையையும் வெளிப்படுத்துகிறது, தனிநபர்களை விமர்சிக்கிறது" என்றும், 'தோழமையை, கூட்டு முயற்சியை, கூட்டு நடவடிக்கைகளை சாடுகிறது" என்றும் எழுதி தங்களது பங்காளிகளையும் தன்னோடு சேர்த்துக் கொள்கிறது.


யாருடன், எந்த அமைப்புடன் தோழமை பாராட்டுவது, கூட்டு முயற்சி, கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது குறித்து பு.ஜ. தெளிவாகவே இருக்கிறது. தன்னார்வக் குழுக்கள் என்பவை மக்கள் நண்பனைப் போல நடித்து, கண்துடைப்பு வேலைகளை செய்து ஏய்க்கும் மக்கள் எதிரிகள் என்றே பு.ஜ. கணிக்கிறது. தற்போதைய கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு அதை பாதுகாப்பது என்பதுதான் தன்னார்வக் குழுக்களின், அவர்களின் தோழமை அமைப்புகளின் அடிப்படை நிலைப்பாடு. அதற்கு மாறாக, தற்போதைய கட்டமைப்பை தகர்ப்பது என்ற நோக்கோடு அதற்கு வெளியில் இருந்து செயல்படுவதுதான் புதிய ஜனநாயகத்தின் நிலைப்பாடு.

 

உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து நமது நாடு வெளியேற வேண்டும்; உலக வங்கி, ஐ.எம்.எஃப் போன்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களுடன் உள்ள உறவை முறித்துக் கொள்ள வேண்டும்; தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கையை முறியடிக்க வேண்டும் என்பதுதான் பு.ஜ.வின் நிலை. அதற்கு மாறாக, அவற்றுக்கெல்லாம் மனித முகம் கொடுக்க வேண்டும் என்பதுதான் தன்னார்வக் குழுக்கள் மற்றும் அவர்களின் தோழமை அமைப்புகளின் நிலை. இந்த நோக்கத்தோடு உருவாக்கப்பட்டவைதாம் இவர்கள் பங்கேற்ற உலக சமூக மன்றம், உலக முன்முயற்சி, ஆசிய மற்றும் உலக மக்கள் கண்காணிப்பகம் போன்றவை. இதற்கான ஆதாரம் மக்கள் கண்காணிப்பகத்தின் மறுப்புரையிலேயே இருக்கிறது.

 

ஆனால், ஜனநாயகம், சட்டம், சட்டத்தின் ஆட்சி, நீதி என்பதெல்லாம் போலியானவை; வர்க்க சார்புடையவை; அவற்றைத் தகர்த்து புதிய ஜனநாயகம் அடிப்படையிலான மாற்றுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதுதான் பு.ஜ.வின் நிலை.

 

இந்த அடிப்படை வேறுபாடுகளை அங்கீகரிக்க மறுத்து அல்லது மூடி மறைத்து பு.ஜ.விடம் தோழமையும் கூட்டு முயற்சியும் கூட்டு நடவடிக்கையும் இல்லையென்று புளுகுகிறார்கள். இந்த அடிப்படை வேறுபாடு காரணமாகதான் அவர்களை பு.ஜ. எதிர்க்கிறதே, தவிர தனிநபர் பகைவெறுப்பு என்பதெல்லாம் அந்த அமைப்புகள் இட்டு கட்டும், பு.ஜ.வின் விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க மறுக்கும் அஞ்சும் வாதங்கள்தாம்.

 

ஆசிரியர் குழு