10_2005.jpg'கங்கை கொண்டானில் கோக் ஆலையை அனுமதிக்கக் கூடாது என்று கோரி, 1,000 வழக்குரைஞர்கள் கையெழுத்துப் போட்ட மனு ஒன்றை மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுத்திருக்கிறோம். ஆனால், மனு கொடுப்பதால் மக்கள் பிரச்சினை தீர்ந்துவிடாது; சட்டத்தின் மூலமும் மக்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. மக்கள் பிரச்சினைகளை மக்களின் போராட்டங்கள் மூலமே தீர்க்க முடியும்" எனக் குறிப்பிட்ட அவர், இதனைத் தனது பொது வாழ்க்கை அனுபவத்தில் இருந்தும், வழக்குரைஞர் தொழில் அனுபவத்தில் இருந்தும் உணர்ந்து கொண்டதாகக் கூறினார்.

 

'இந்திய அரசியல் சாசனத்தின் 21ஆவது பிரிவு உணவு, காற்று, நீர், வசிப்பிடம் ஆகிய அடிப்படை வசதிகளைச் செய்து தருவது அரசின் கடமை எனக் குறிப்பிடுகிறது. ஆனால், இந்த அடிப்படை வாழ்வியல் உரிமையைப் பறிக்கும் முதல் நிறுவனம் அரசுதான். எனவே, இந்த அரசு, ஒரு பயங்கரவாத அரசு. பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்க உதவும் பயங்கரவாத அரசு" என இந்திய அரசின் ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தை அம்பலப்படுத்தினார், வழக்குரைஞர் தங்கசாமி.

 

'வரலாற்றுச் சிறப்புமிக்க பொருணை (தாமிரவருணி) நதியைக் கொள்ளையடிக்க கோக்கை அனுமதிப்பது கேவலம். இந்தக் கேவலத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம், நெல்லை வீரஞ்செறிந்த மண்தான் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வாய்ப்பு நெல்லை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது" எனக் குறிப்பிட்டு, நெல்லை மாவட்ட மக்களின் வரலாற்றுக் கடமையைச் சுட்டிக் காட்டினார்.