'நீதிமன்றம் பொதுவானது என்பது மாயை!" - திரு. தி. லஜபதிராய், வழக்குரைஞர், மதுரை உயர்நீதி மன்றம், மதுரை.

10_2005.jpg'இந்திய நீதிமன்றங்களின் வர்க்கச் சார்பு" குறித்து உரையாற்றிய வழக்குரைஞர் லஜபதிராய், இதற்கு ஆதாரமாக, 1970இல் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த மறைந்த தலைவர் ஈ.எம்.எஸ்., ஒரு நீதிமன்றத் தீர்ப்பை, வர்க்கச் சார்பு கொண்டது என விமர்சித்ததற்காகத் தண்டிக்கப்பட்டது தொடங்கி, இன்றுவரை உள்ள பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டினார்.

 

'நர்மதை நதியின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டப்படுவதற்குத் தடை விதிக்கக் கோரி நர்மதை பாதுகாப்பு இயக்கம் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், நர்மதை நதி பழங்குடி

 மக்களுக்குச் சொந்தமானதா? இல்லை கரும்பு ஆலை முதலாளிகளுக்குச் சொந்தமானதா? என்பதற்குள் நாங்கள் நுழைய முடியாது எனக் கூறிய கையோடு, அணையைக் கட்டுவதற்கு அனுமதி தந்து, பழங்குடி மக்களுக்கு எதிராகத் தீர்ப்புக் கொடுத்தது."

 

'பழங்குடி மக்களின் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ. 1,000 நட்டஈடு தந்து, அவர்களை நிலத்தில் இருந்து அப்புறப்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 'நீதிபதிகளுக்கு, அவர்களின் சம்பளத்திற்குப் பதிலாக ஒரு கூடை சாணியைக் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்களா?" என இத்தீர்ப்பை விமர்சித்து எழுதியதற்காக எழுத்தாளர் அருந்ததி ராய் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. அவர் நீதிமன்றங்களுக்கு எதிராகக் கோஷம் போட்டார் என்ற "குற்றத்திற்காக', அவரை ஒருநாள் டெல்லி திகார் சிறையில் அடைத்துத் தண்டித்தது, உச்சநீதி மன்றம்."

 

'உ.பி. முதல்வராக இருந்த கல்யாண் சிங் பாபர் மசூதியை அப்படியே பாதுகாப்பேன் என நீதிமன்றத்திற்கு வாக்குக் கொடுத்துவிட்டு, அம்மசூதியை இந்து மதவெறிக் கும்பல் இடித்துத் தள்ள துணை போனார். இதனையடுத்து நடந்த கலவரத்தில், ஆயிரக்கணக்கான முசுலீம்கள் கொல்லப்பட்டனர். இதற்கு நீதிமன்றம் கல்யாண் சிங்குக்கு அளித்த தண்டனை 'நீதிமன்றம் கலையும் வரை, குளுகுளு நீதிமன்ற அறையிலேயே, உட்கார்ந்து இருக்க வேண்டும்" என்பதுதான். அருந்ததி ராய்க்கும், கல்யாண் சிங்குக்கும் அளிக்கப்பட்ட தண்டனைகளை ஒப்பிட்டாலே, நீதிமன்றத்தின் வர்க்கச் சார்பை புரிந்து கொள்ள முடியும்" என்ற அவர், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுள் ஒருவர்கூட இதுவரை உச்சநீதி மன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டதில்லை; 1950 தொடங்கி 2005 வரையில் இதுவரை நான்கு தாழ்த்தப்பட்டோர்தான் உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற அநீதியையும் சுட்டிக் காட்டினார்.

 

'உலகில், இந்தியாவைத் தவிர, வேறெந்த ஜனநாயக நாட்டிலும், குடிமக்களை விசாரணையின்றித் தண்டிக்கும் தடுப்புக் காவல் சட்டங்கள் கிடையாது. மிசா, தடா, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொடா ஆகிய அனைத்து கருப்புச் சட்டங்களுக்கும் அங்கீகாரம் அளித்து, மக்களின் உரிமைகளை நசுக்குவதில் நீதிமன்றங்கள் அரசுக்கு விசுவாசமாகவே நடந்து வந்துள்ளன" எனக் குறிப்பிட்டு, நீதிமன்றங்களின் ஜனநாயக முகமூடியைத் திரைகிழித்தார், அவர்.

 

'கல்வி பிரச்சினையை எடுத்துக் கொண்டால், தனியார் கல்லூரிகளில் ஏழைகளின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உச்சநீதி மன்றம், வெளிநாடுகளில் வாழும் பணக்கார இந்தியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடுகிறது."

 

'சிறுபான்மையினர் உரிமை பிரச்சினையை எடுத்துக் கொண்டால், பாபர் மசூதி இருந்த வளாகத்தைக் கையகப்படுத்தி, ஒருதலைப் பட்சமாக இந் துக்களுக்கு மட்டும் வழிபாட்டு உரிமையை உத்தரவாதம் செய்யும் மைய அரசின் சட்டத்தை, நீதிமன்றம் அங்கீகரிக்கிறது."

 

'இப்படி ஏராளமான வழக்குகளில் மக்கள் விரோதமாகத் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றங்கள், தேசிய கீதம் பாடுவது தொடர்பான வழக்கு உள்ளிட்டு, ஏதோ சில வழக்குகளில் நியாயமாகத் தீர்ப்பு வழங்கினால், அதை "நீதிமன்ற லாட்டரி பரிசு' என்றுதான் பார்க்க முடியும்."

 

'உதாரணமாக, கங்கையில் ஆலைக் கழிவுகளைக் கொட்டி அந்நதியை மாசுபடுத்தி வந்த 60,000 தொழிற்சாலைகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், கழிவை சுத்திகரித்து வெளியேவிடும் ஆலைகள்தான் இயங்க முடியும் என்று நீதிபதி குல்தீப் சிங் தீர்ப்பளித்தார். ஆனால் இந்தத் தீர்ப்பு வந்த ஒரே மாதத்திற்குள், 60,000 ஆலைகளும், 'நாங்கள் கழிவைச் சுத்திகரித்துதான் வெளியே அனுப்புகிறோம்" என அரசாங்கத்திடம் ஒரு சான்றிதழை வாங்கி வைத்துக் கொண்டு, ஆலைகளை நடத்தத் தொடங்கிவிட்டார்கள். நீங்கள் கோக்கிற்கு எதிராக வழக்கு தொடுத்தால், இப்படிக்கூட நடக்கலாம்" என எச்சரித்து, நீதிமன்றங்களின் மக்கள் விரோதத் தன்மையை தொட்டுக் காட்டினார், வழக்குரைஞர் லஜபதிராய்.