11_2005.jpg"கராத்தே'' தியாகராஜன் சென்னை மாநகர மேயர் பொறுப்பில் இருக்கும் துணை மேயர். ஏறக்குறைய ஒருமாத காலம் தலைமறைவாக இருக்கிறார். திருவனந்தபுரம், பெங்களூர், மும்பை, தில்லி என்று ஓடிக் கொண்டிருக்கிறார். செய்தியாளர்களிடம் அன்றாடம் தொலைபேசியில் பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார். சென்னையில் தனக்கு வேலை எதுவும் இல்லாததால் கிளம்பி வந்து விட்டதாகக் கூறுகிறார்.

 

சென்னை நகரமே சமீபத்திய புயல் மழையால் வெள்ளத்தில் மிதக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் நகராட்சி பள்ளிகள், சத்திரங்கள், சமூகக் கூடங்களில் குவிந்துள்ளனர். சோறு தண்ணீர் கிடையாது; சாலைகள் உடைந்து போய்க் கிடக்கின்றன. தொற்று நோய்கள் வெடித்து மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. இதையெல்லாம் ""கவனிக்க'' வேண்டிய பொறுப்பு மேயர் நகருக்குத் திரும்பவில்லை. அங்கு தனக்கு வேலை இல்லை என்கிறார்.

 

ஆனாலும், வரிவசூல், ஒப்பந்த வேலைகள் போன்ற வழக்கமான மாநகராட்சிப் பணிகள் நடக்கின்றன. வெள்ள நிவாரணம் என்ற பெயரிலான (அதிலும் சுருட்டுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால்) பணிகள் நடக்கின்றன. ""கராத்தே'' தியாகராஜன் மற்றும் நேற்று வரை அவரது ""தெய்வத்தாயும் புரட்சித்தலைவியுமான அம்மா'' அவர்களின் புண்ணியத்தால் இப்போது நாட்டு மக்களுக்கு ஒரு உண்மை புலனாகிறது. மேயரோ, துணைமேயரோ, கவுன்சிலரோ இல்லாமலேயே, அதிகாரிகள், அலுவலர்கள் ஊழியர்களைக் கொண்ட மாநகராட்சி எந்திரம் இயங்கிக் கொண்டே இருக்கும். தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தேவையே இல்லை. சென்னை மாநகராட்சி உட்பட உள்ளூராட்சி அமைப்புகள் பலவும், பல பத்தாண்டுகள் தேர்தல்கள் இன்றியே அதன் பெயரால் நிர்வாக பணிகள் நடந்தே வந்திருக்கின்றன.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், ""வசூல் வேட்டை'' தவிர என்ன வேலை செய்தார்கள்? அவைக் கூட்டங்கள் எப்படி நடந்தன? குறிப்பாக, ""கராத்தே'' தியாகராஜன், வெற்றிவேல் ஆகிய தளபதிகள் (அரசியலில் இதன் பொருள் பொறுக்கி அரசியல் தலைவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்) முன்னிலை வகித்த போதெல்லாம் எதிர்த்தரப்பினரைத் தாக்கிக் குண்டுக்கட்டாக வெளியே தூக்கி வீசினார்கள். பிறகு ஆளும் தரப்பினர், ""புரட்சித்தலைவி அம்மா வாழ்க'' என்ற கூச்சல் போட எல்லாத் தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

 

அவையை நடத்துவதில் மட்டுமல்ல, தேர்தல்களை எதிர் கொள்வதிலும் ""அம்மா'' வழியிலே போராடி பல வெற்றிக் கனிகளைப் பறித்து அவரது காலடியில் சமர்ப்பித்து எண்சாண்கிடையாகப் படுத்துக் கும்பிட்டு வந்த ""கராத்தே'' தியாராஜன், அவரது நம்பிக்கை இழந்துவிட்டதற்கு என்ன காரணமென்று அறிய, தமிழகமே தவிக்கிறது! அதேபோல, சென்னை மாநகர ஆட்சியைப் பிடிப்பதற்கு பாலகங்கா, சேகர்பாபு, ஆதிராஜாராம், வெற்றிவேல், ஜெயகுமார், ""கராத்தே'' தியாகராஜன் ஆகிய புரட்சித் தளபதிகள் வைத்துக் கொண்டு "அம்மா!' ஜெயலலிதா என்ன பாடுபட்டார், பறிதவித்தார் என்பது பலருக்கும் தெரியும். அப்படியும், கருணாநிதி ஸ்டாலின் குடும்ப விசுவாசிகளிடம் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாநகர ஆட்சி கை நழுவிப் போய்விட்டது.

 

அதன் பிறகு, என்னென்னவோ ""சட்டபூர்வ'' தகிடுதித்தங்கள் செய்து ஸ்டாலினை விரட்டிவிட்டு, மாநகர மேயர் பொறுப்பைக் கைப்பற்றி தனது வளர்ப்புப் பிராணியை ஒத்த ""கராத்தே'' தியாகராஜனை பிடித்துப் போட்டு அப்பதவியை அலங்கரித்து அம்மா இரசித்தார். அவரும் விசுவாசமாக இருந்து ""எவ்வளவோ'' காரியங்களைச் சாதித்துக் கொடுத்தார். தேனெடுத்தவனுக்கு எச்சில் எச்சிலாகச் சொரிந்து புறங்கையை கொஞ்சம் நக்கிவிட்டார். அம்மாவின் உழவாரப் படையும், உளவுப் படையும் போட்டுக் கொடுத்துவிட போயஸ் தோட்டத்து வளர்ப்புப் பிராணிகளுக்கு வழக்கமாக தரப்படும் ""பரிசுகள்'' கராத்தேவுக்கும் கிடைக்க இருந்தது. வளர்ப்பு மகன் சுதாகரன், உடன்பிறவா சகோதரி நடராஜனின் "வைப்பு' செரினா போன்றவர்கள் மீது பாய்ந்த "கஞ்சா' வழக்குகளா? தூத்துக்குடி எம்.எல்.ஏ. ரமேஷ், மதுராந்தகம் ஆறுமுகம், ஆடிட்டர் இராஜகோபால் போன்றவர்களுக்குக் கிடைத்த அடி உதையா? "கராத்தே' தியாகராஜனுக்கு என்ன ""பரிசு'' என்று இன்னமும் தெரியவில்லை.

 

அடாவடி கிரிமினல் அரசியல் பொறுக்கித்தனம் என்பதைத் தவிர ஜெயாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் சாதிக்காரர் என்பதற்காகவும் அக்கும்பலால் தேடித் தெரிந்தெடுக்கப்பட்ட கராத்தே தியாகராஜனும் இரகசிய உலக நிழல் பேர்வழிகள், கிரிமினல் மாஃபியா தாதாக்களுடனும் நெருங்கிய தொடர்புடையவர். ஜெயா கும்பலுக்கு எதிராக தானும் நிறைய "அணுகுண்டு' இரகசியங்கள் வைத்திருப்பதாகவும் தன்னை ஒன்றும் ஆட்டவும் அசைக்கவும் முடியாது என்றும் அவரைப் போலவே சவால் விடுகிறார். தலைமறைவான பிறகு மும்பை மாஃபியா கும்பல்களுடன் நெருங்கிய தொடர்புடையவரும் மும்பை காங்கிரசு தலைவருமான இந்திரா காந்தியின் நிதி மூலாதாரமுமாகிய முரளி தேவ்ராவின் பாதுகாப்பில் தியாகராஜன் ஒளிந்து கொண்டிருந்திருக்கிறார். இப்போதும் மத்திய அமைச்சகத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கிறார். இச்செய்திகள் அறிந்தும் கூட ஜெயா கும்பல் அனுப்பிய உளவுப் படை போலீசால் அவரை நெருங்க முடியவில்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் ஆகிய அனைவரிடமும் விலகல் கடிதம் வாங்கி வைத்துக் கொண்டு கண்ணில் விரல் விட்டு ஆட்டும் ஜெயா கும்பலால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சட்டப்படியே கூட துணைமேயர் பதவியில் இருந்து எப்படியும் அவரை நீக்குவதற்கு வழியில்லை. போலீசால் தேடப்படும் ஒரு நபர் தமது நகரப் பொறுப்பு மேயராக இருப்பது குறித்து கற்றோர் நிறைந்த சென்னை மாநகரம் பெருமைப்படலாம்! எப்படியாயினும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் போலித்தனத்தையும், கேலிக்கூத்தையும் ஒருசேர வெளிச்சம் போட்டுக் காட்டிய ஜெயா கராத்தே தியாகராஜன் கும்பலுக்கு நாட்டு மக்கள் நன்றி செலுத்தியேத் தீரவேண்டும்.

 

சுப்பு