09282023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

தனியார்மயத்தின் தாக்குதலும் தொழிற்சங்கவாதத்தின் தோல்வியும் : ஹோண்டா தொழிலாளர் போராட்டப் படிப்பினை

11_2005.jpgஜூலை 25ஆம் தேதி ஹோண்டா தொழிலாளர்கள் மீது போலீசு நடத்திய வெறித்தாக்குதலை நாடே கண்டது. இந்தப் போலீசு அராஜகத்தின் எதிர்வினையாக போலீசைத் திருப்பித் தாக்கிய தொழிலாளி வர்க்கத்தின் கோபத்தை, வீரமதி என்ற பெண்ணின் வீரத்தை, இக்காட்சிகளைக் கண்ட தொழிலாளி வர்க்கம் நாடெங்கும் நடத்திய ஆர்ப்பாட்டங்களைக் கண்டோம். இந்தப் பரபரப்பு அத்தோடு அவிந்து அடங்கிவிட்டது.

 

அதன்பின் நடந்தது என்ன? சட்டவிரோதமாகக் கதவடைப்பு செய்து தொழிலாளிகளைப் பட்டினியில் தள்ளிய ஹோண்டா நிர்வாகத்தின் மீதும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா, கைது செய்யப்பட்ட தொழிலாளிகள் விடுவிக்கப்பட்டார்களா, அவர்களது கோரிக்கைகள் நிறைவேறினவா என்பன போன்ற கேள்விகளுக்கு யாருக்காவது விடை தெரியுமா? தெரிய வாய்ப்பில்லை.

 

தடியடிக் காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோதே, நாடெங்கும் கண்டனங்கள் எழுந்து கொண்டிருந்த போதே ""யாரையும் மீண்டும் வேலைக்குச் சேர்க்க முடியாது'' என்று திமிராக அறிவித்தது ஹோண்டா நிர்வாகம். அந்நிய முதலீட்டை எதிர்த்துப் பேசி எங்கள் மாநிலத்தின் தொழில் வளர்ச்சியைக் கெடுக்காதீர்கள் என்று எல்லோருக்கும் வேண்டுகோள் விட்டார், அரியானா முதல்வர் {ஹடா. பிறகு, ஹோண்டா நிர்வாகத்தின் காலில் விழுந்தார். ஏதாவது ஒரு ஒப்பந்தத்திற்கு இணங்குமாறு கெஞ்சினார்.

 

ஜூலை 30 இரவு முதல்வர் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி எல்லோரையும் வேலைக்கு எடுத்துக் கொள்வதாக ஏற்றுக் கொண்ட நிர்வாகம் மறுநாளே 200 காண்டிராக்டு தொழிலாளிகளை வேலை நீக்கம் செய்தது. அடிவாங்கிய தொழிலாளிகள் 63 பேர் மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்கு வாபஸ் பெறப்படவில்லை. ஆக.11 வரை அவர்கள் சிறையிலிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட 4 முன்னணித் தொழிலாளிகள் மீது முன்தேதியிட்டு கொலை வழக்கும் திருட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டன.

 

வேலை கிடைப்பதற்கே ஹோண்டா தொழிலாளிகள் கொடுக்க வேண்டியிருந்த விலை இத்தோடு முடியவில்லை. ""நிர்வாகம் நிர்ணயிக்கும் உற்பத்தி இலக்கை எட்டுவேன்; ஆலையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடமாட்டேன்; நிர்வாகம் தீர்மானிக்கும் நன்னடத்தை விதிகளைக் கடைப்பிடிப்பேன்; ஒரு ஆண்டுக்கு ஊதிய உயர்வு பற்றிப் பேச மாட்டேன்'' என்றெல்லாம் எழுதிய ஒரு உறுதிமொழிப் பத்திரத்தில் தனித்தனியே ஒவ்வொரு தொழிலாளியிடமும் கையெழுத்து வாங்கியது நிர்வாகம். அதன் பிறகுதான் ஆலைக்கதவு திறக்கப்பட்டது.

 

அதேநேரத்தில் சட்டவிரோதமாகக் கதவடைப்புச் செய்த நிர்வாகத்தின் மீதோ, சூழ்ச்சி செய்து தொழிலாளிகளைச் சிக்க வைத்துச் சுற்றி வளைத்துத் தாக்குதல் தொடுத்த போலீசின் மீதோ எவ்வித வழக்கும் இல்லை; நடவடிக்கையும் இல்லை. போராட்டத்திற்குப் பின் நடந்த இந்த அநீதிகள் குறித்து இந்தியத் தொழிலாளி வர்க்கத்துக்கு எதுவும் தெரியாது.

 

ஒரு பரபரப்புச் சம்பவத்துக்குரிய மலிவான விளம்பர மதிப்புக்கு மேல் வேறெதையும் குர்கான் தொழிலாளி வர்க்கப் போராட்டம் பெற்று விடக் கூடாது என்பதில் அரசும் முதலாளித்துவ ஊடகங்களும் மிகக் கவனமாக இருந்து அவற்றை இருட்டடிப்பு செய்து விட்டன.

 

நாடறிந்த ஒரு போராட்டத்திற்குப் பின்னும் இத்தகைய அவமானகரமானதொரு ஒப்பந்தம் அந்தத் தொழிலாளி வர்க்கத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள, போராட்டத்திற்கு முன் அந்த ஆலையில் நிலவிய சூழல் என்ன என்பதை அறிந்து கொள்வதிலிருந்து நாம் தொடங்க வேண்டும்.

 

ஒரு தொழிலாளியைத் தாக்கிய அதிகாரியைத் தட்டிக் கேட்டதற்காக 4 பேர் வேலை நீக்கம்; அதை எதிர்த்த 50 பேர் தற்காலிக நீக்கம்; இதைத் தொடர்ந்து ஜூன் 27 முதல் சட்டவிரோதக் கதவடைப்பு; 1000 தொழிலாளர்கள் நீக்கம் இவைதான் போராட்டத்தைத் தூண்டிய காரணிகள் என்று அப்போது வெளிவந்த செய்திகள் கூறின. எனினும் முழுமையான சித்திரம் என்பது வேறு.

 

32 நாடுகளில் 109 தொழிற்சாலைகளை இயக்கி வரும் ஜப்பானிய ஹோண்டா நிறுவனம் இரு சக்கர வாகனத் தயாரிப்பில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கிறது. அரியானா மாநிலம் குர்கானில் நான்காண்டுளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் 3000 பேர். இவர்களில் 1700 பேர் மட்டுமே நிரந்தரத் தொழிலாளிகள். மீதமுள்ள 1300 பேரில் 800 பேர் தற்காலிகத் தொழிலாளிகள் ஊதியம் 5000 ரூபாய்; 400 பேர் காண்டிராக்ட் தொழிலாளிகள் ஊதியம் 2200 ரூபாய்; 100 பேர் அப்ரன்டீஸ் தொழிலாளிகள் ஊதியம் 1100 ரூபாய். இந்த 1300 பேரும் எந்த நிமிடமும் எந்தக் காரணமும் கூறாமல் நிர்வாகத்தால் வெளியேற்றப்படுவார்கள்.

 

ஒரு நொடிக்கு ஒரு ஸ்கூட்டர் வீதம் உற்பத்தி செய்யும் இந்த ஆலையில் எழுதப்படாத ஒரு விதி துவக்கமுதலே அமலில் இருந்து வருகிறது. காலை ஷிப்டில் உரிய உற்பத்தி இலக்கை எட்டத் தவறியிருந்தால், மாலையில் வேலைக்கு வரும் தொழிலாளிகள் அதையும் சேர்த்து முடித்து அன்றைய இலக்கை எட்டியாக வேண்டும். ஒவ்வொரு தொழிலாளியும் ஒன்றுக்குப் பதில் இரண்டு எந்திரங்களை இயக்கியாக வேண்டும்.

 

"மாடர்ன் டைம்ஸ்' எனும் திரைப்படத்தில் சார்லி சாப்ளின் எள்ளி நகையாடும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் கோரமுகம், அதன் முழுப் பரிமாணத்தை ஹோண்டா தொழிற்சாலையில் காட்டியிருக்கிறது. கொடூரமாகக் கசக்கிப் பிழியப்படுவதனால் சதையும் எலும்பும் நைந்து நொறுங்கி தொழிலாளிகள் வெளியேறுவதும், பிள்ளைக் கறி தின்னும் நிர்வாகம் அந்த இடங்களில் இளம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

சிறுநீர் கழிக்கச் சென்றால் கூட அந்த நேரத்தைப் பதிவு செய்யவேண்டும். அனுமதி பெறவேண்டும். அவ்வாறு அனுமதி கேட்டுக் கிடைக்காமல் தவித்து, தனது எந்திரத்தை 10 நிமிடம் நிறுத்திவிட்டு கழிப்பறை சென்று வந்த தொழிலாளி அந்தக் கணமே வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பெண் தொழிலாளர்கள் உடை மாற்றும் அறையைக் கண்காணிப்பதும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதும் வாடிக்கை. ஒரு ஜப்பானிய அதிகாரியின் வன்புணர்ச்சிக்கு இலக்கான பெண், வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஓடியிருக்கிறார். சீக்கியத் தொழிலாளி ஒருவரின் தலைப்பாகை கிழித்தெறியப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இறுதியாக நிர்வாகி ஒருவனால் ஒரு தொழிலாளி தாக்கப்பட, அதைத் தட்டிக் கேட்ட தொழிலாளர்களும் வேலை நீக்கம் செய்யப்பட, தொழிலாளிகளின் கோபம் கொப்பளிக்கத் தொடங்கியிருக்கிறது.

 

தொழிற்சங்கம் வைப்பதற்கே அனுமதி மறுக்கப்பட்டிருந்த அந்த ஆலையில் ஒரு தொழிற்சங்கம் தொடங்கியாக வேண்டும் என்ற கருத்து சென்ற ஆண்டில்தான் தொழிலாளர்களிடம் உறுதியடையத் தொடங்கியிருக்கிறது. அதைத் தடுக்க தொழிலாளர்களிடம் வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்குவது, குண்டர்களை வைத்து மிரட்டுவது, குடும்பத்திற்கு எச்சரிக்கைக் கடிதம் எழுதுவது என எல்லா வகையான கிரிமினல் வேலைகளையும் செய்திருக்கிறது நிர்வாகம். இவையனைத்தையும் மீறி இந்த ஆண்டு மே 30ஆம் தேதி ஏ.ஐ.டி.யு.சி. சங்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.

 

ஆனால் மே 24ஆம் தேதியன்றே சங்கத் தலைவர்களான சுரேஷ் கவுர், குந்தன் சிங் மேத்தா ஆகியோரும் மேலும் இரண்டு முன்னணியாளர்களும் எவ்வித விசாரணையுமின்றி நிரந்தர வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து, மேலும் 50 தொழிலாளிகள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

 

ஜூன் 26ஆம் தேதி நள்ளிரவில் ஹோண்டா நிர்வாகத்தின் ஒரு உயரதிகாரியின் தலைமையில் இரண்டு போலீசாரும், 3 ரவுடிகளும் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த சங்கத் தலைவர் சுரேஷ் கவுர், செயலர் ஷாஃபி அப்துல் ஆகிய இருவரையும் இரண்டாவது மாடியிலிருந்து கீழே தூக்கி வீசியிருக்கின்றனர். முதுகெலும்பும் காலும் முறிந்து அவர்கள் மருத்துவமனையில் கிடக்க, ஜூன் 27ஆம் தேதி காலை ஆலைக் கதவுகள் இழுத்து மூடப்பட்டன.

 

இவ்வாறு ஆலையை மூடுவதற்கான முகாந்திரத்தை உருவாக்க, சங்கம் தொடங்கிய மறுகணமே சதி செய்யத் தொடங்கிவிட்டது நிர்வாகம். கச்சாப் பொருட்களின் சப்ளையை வேண்டுமென்றே குறைத்து உற்பத்தி இலக்கை எட்டமுடியாமல் செய்துவிட்டு ""வேண்டுமென்றே மெதுவாக வேலை செய்கிறார்கள்'' என்று தொழிலாளர்கள் மீது பழி சுமத்தி அதையே காரணமாக்கி கதவடைப்பு அறிவிக்கப்பட்டது.

 

காரணம் புரியாமல் திகைத்து நின்ற தொழிலாளர்களிடம், ""இனி வேலைநிறுத்தம் செய்ய மாட்டேம், சங்க நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம்'' என்றெல்லாம் எழுதி வாங்கிக் கொண்டு அதன் பின்னரும் ஆலையைத் திறக்க மறுத்தது நிர்வாம். 3000 தொழிலாளர்களுமே தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டதாக அறிவிப்பு வெளிவந்தது. ஆலைக்கு புதிதாக ஆளெடுப்பு செய்வதற்கான விளம்பரமும் ஏற்கெனவே வெளியாகியிருப்பதைத் தொழிலாளிகள் பிறகுதான் தெரிந்து கொண்டார்கள்.

 

இந்தக் கதவடைப்பும், தொழிலாளியிடம் எழுதி வாங்கும் முறையும், தற்காலிகப் பணிநீக்கத்துக்கான அறிவிப்பும் 1926இல் இற்றப்பட்ட தொழிற்சங்கச் சட்டத்திற்கே எதிரானவை. ஆனால், இது குறித்து எந்த அரசு அதிகாரியும் ஹோண்டா நிர்வாகத்தைக் கேள்விக்குள்ளாக்கவில்லை. இரண்டாவது மாடியிலிருந்து சங்கத்தலைவர்களைத் தூக்கியெறிந்த அதிகாரிக்கெதிராக வழக்கு கூடப் பதிவு செய்யப்படவில்லை.

 

இந்த நேரத்தில் வீடு புகுந்து தொழிலாளிகளைப் போலீசார் தூக்கிச் செல்வதும், இத்தகைய இரவு நேர "ரெய்டு'களுக்கு ஹோண்டா கம்பெனியின் வாகனங்களிலேயே போலீசார் வந்து இறங்குவதும் புதிதல்ல என்கிறார்கள், தொழிலாளர்கள். அந்நகர போலீசார் பலருக்கு தனது ஸ்கூட்டர்களை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறது ஹோண்டா நிர்வாகம். ஜூலை 25 போலீசு அராகஜம் நாடெங்கும் அம்பலமான பிறகும் ""தொழிலாளர் போராட்டங்கள் நசுக்கப்பட வேண்டும்'' என்று பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுக்கிறார் அந்நகரின் போலீசு ஆணையர்.

 

இந்த அடக்குமுறையும் புதிதல்ல் 1991இல் உ.பி. மாநில அரசுக்குச் சொந்தமான சிமெண்ட் ஆலை தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்த தொழிலாளர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்; 1991இல் ம.பி.யில் தொழிற்சங்கத் தலைவர் சங்கர் குஹா நியோகி கொல்லப்பட்டார். 1992இல் குறைந்தபட்ச ஊதியம் கேட்டுப் போராடிய தொழிலாளிகள் 16 பேரும், 1996இல் இந்த ஹோண்டா ஆலை அருகில் உள்ள பசுபதி மில்லில் வைப்பு நிதி, மருத்துவ வசதி கேட்டுப் போராடிய தொழிலாளிகள் 4 பேரும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

 

கதவடைப்பு மூலம் தொழிலாளிகளை வெளியேற்றுவதை ஒரு முன்மாதிரியாக 2001இல் செய்து காட்டியது டெல்லியிலுள்ள மாருதி சுசுகி கார் தொழிற்சாலை நிர்வாகம்; இமாசலப் பிரதேசத்திலுள்ள சிறீராம் ஹோண்டா ஆலை ""சங்கத் தலைவர்களை வேலை நீக்கம் செய்தால் அதை எதிர்க்க மாட்டோம்'' என்று தொழிலாளர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டுதான் கதவடைப்பை விலக்கிக் கொண்டது.

 

****

 

இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இவற்றின் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போதுதான் குர்கான் அடக்குமுறை விடுத்திருக்கும் அபாய அறிவிப்பை தொழிலாளி வர்க்கம் புரிந்து கொள்ள முடியும்.

 

கடந்த 15 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்கள் புதிய கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படவில்லை. அரசுத்துறை தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராகவும், தனியார்மயம் தோற்றுவிக்கும் ஆட்குறைப்புக்கு எதிராகவும், பணிச்சுமை சகிக்க வொண்ணாத அளவுக்கு ஏற்றப்படுவதை எதிர்த்தும், செய்த வேலைக்கு ஊதியம் கோரியும், பணி நிரந்தரம் கோரியும்தான் பெரும்பாலான போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதாவது ஏற்கெனவே போராடிப் பெற்ற உரிமைகள் பறிபோவதைத் தடுக்கவே இந்தப் போராட்டங்கள்!

 

ஆனால், அநேகமாக இவையனைத்தும் தோல்வியடைந்திருக்கின்றன அல்லது சரணடைந்திருக்கின்றன. ஆளும் வர்க்கமோ தனது தாக்குதல் நிலையைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. இத்தகைய போராட்டங்கள் நடத்துவதற்கு அவசியமான அடித்தளத்தையே அதாவது தொழிற்சங்கம் எனும் அமைப்பையே இல்லாதொழிக்க முயன்று வருகிறது.

 

இது வெறும் கோரிக்கையளவில் நிற்கவில்லை. தொழிலாளர் நலச் சட்டங்கள் எனப்படுபவையெல்லாம் பழங்காலத்தின் ஓலைச்சுவடிகளாக ஒதுக்கப்பட்டு, கடந்த 15 ஆண்டு காலத்தில் இந்தக் கொத்தடிமை முறைதான் தொழில் துறையில் கோலோச்சுகிறது.

 

ஏற்றுமதிக்கான உற்பத்தி நடைபெறும் அனைத்து தொழில்களிலும், மறுகாலனியாக்கக் கொள்கைகளின் தளப்பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் (குஉழூ) எந்தத் தொழிலாளர் நலச் சட்டங்களும் செல்லுபடியாவதில்லை. குறைந்தபட்ச ஊதியம், பணிப் பாதுகாப்பு, வேலைநேரம், தொழிற்சங்கம் போன்ற எந்தத் "தடை'களும் இல்லாத இந்தக் கும்பினியாட்சி மண்டலங்கள் தொழில்துறையின் முன்மாதிரிகளாக முதலாளி வர்க்கத்தாலும் அரசாலும் போற்றப்படுகின்றன.

 

அந்நிய முதலீடும், அதனைச் சார்ந்த தொழில் வளர்ச்சியுமே தேச முன்னேற்றம் என்ற கருத்தை போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லா ஓட்டுக் கட்சிகளும் ஊடகங்களும் பரப்பி வரும் நிலையில், மாநில அரசுகள் தத்தம் மாநிலத்தை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைப்பதற்கான போட்டியில் ஈடுபட்டு வரும் சூழலில் இவற்றை அம்பலப்படுத்தாத வரை, மறுகாலனியாக்கத்தை எதிர்த்த அரசியல் போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் ஈடுபடுத்தப்படாத வரை தொழிலாளர்களின் உரிமையைக் காப்பாற்றுவது குறித்த பேச்சுகள் பொருளற்றவையாகவே இருக்கும்.

சிந்திய இரத்தம் உலருமுன்னே அடிமை முறியில் கையெழுத்திட நேர்ந்த ஹோண்டா தொழிலாளர்களின் நிலை அவலமானதுதான். ஆனால் ""மனிதமுகம் கொண்ட மறுகாலனியாக்கம் சாத்தியமானதுதான்'' என்று போலி கம்யூனிஸ்டுகள் பரப்பி வரும் பிரமையிலிருந்து இன்னமும் விடுபடாமலிருக்கும் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வு நிலை அதனினும் அவலமானது.

 

பாலன்