புதிய ஜனநாயகம் இதழில், ""மக்கள் கண்காணிப்பக''த்தை அம்பலப்படுத்தி வெளிவந்த கட்டுரையின் விளைவாகப் பழிவாங்கப்பட்டு, அந்நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பலரில், ஹென்றி டிபேனின் ஓட்டுநர் திரு. மோகன்குமாரும் ஒருவர். அவரது ஓட்டுநர் உரிமத்தையும் பாக்கி சம்பளத்தையும் தரமறுத்து, "மனித உரிமைப் போராளி' ஹென்றி டிபேன் அடாவடித்தனம் செய்து வருவதையும் புதிய ஜனநாயகம் செய்தியாக வெளியிட்டிருந்தது.
அதன் பின்னர், திரு.மோகன் குமார் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு எனும் அமைப்பின் மதுரைக் கிளையை அணுகிச் சட்ட உதவி கோரினார். சட்ட உதவிக்குழு வழக்கறிஞர்கள் பொற்கொடி, வாஞ்சிநாதன் ஆகியோர் முறையான விசாரணையோ, குற்றச்சாட்டோ இல்லாமல் திரு.குமாரை வேலை நீக்கம் செய்திருப்பது சட்டவிரோதமானது என்றும் அவரது ஓட்டுநர் உரிமத்தைப் பறித்து வைத்துக் கொண்டு தர மறுப்பது சட்டவிரோதமானதும் மனித உரிமை மீறலுமாகும் என்றும் மக்கள் கண்காணிப்பகத்துக்கு வழக்கறிஞர் அறிவிப்பை அனுப்பினர். அதற்கு பல நாட்களாகியும் பதில் அனுப்பாத நிலையில், திரு.குமார் 26.9.05 அன்று மீண்டும் ஹென்றி டிபேனிடம் தனது ஓட்டுநர் உரிமத்தை தரச் சொல்லி கேட்டுள்ளார். ஹென்றி டிபேனோ, அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, ""இவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கடா'' என்று தனது ஊழியர்களுக்கு உத்திரவிட்டு அடாவடித்தனம் செய்துள்ளார்.
திரு.குமார் இச்சம்பவத்தைப் பற்றி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்திடம் தெரிவித்தவுடன், மாவட்டச் செயலாளர் லயனல் அந்தோணிராஜ் மற்றும் பல வழக்கறிஞர்கள் திரண்டு மதுரைதல்லாகுளம் காவல்நிலையம் சென்று ஆய்வாளரிடம் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து ஆய்வாளரும் போலீசு உதவி ஆணையரும் மக்கள் கண்காணிப்பகத்துடன் தொடர்பு கொண்டு பேசி விட்டு, மறுநாள் வருமாறு கூறி, புகாருக்கு ரசீது கொடுத்தனர்.
மறுநாள், மக்கள் கண்காணிப்பகத்தின் சார்பில், நிர்வாக அலுவலர் என்.என்.செல்வம், வழக்கறிஞர்கள் வின்சென்ட், பன்னீர் செல்வம் ஆகியோர் காவல் நிலையத்துக்கு வந்தனர். ஹென்றி டிபேன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஆஜராகாமல் இருப்பது சட்ட ரீதியானது அல்ல என்று மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர் வாதிட்டபோது, ""பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டாம் சார்'', என்று ஆய்வாளர் கேட்டுக் கொண்டு, ஓட்டுநர் உரிமத்தை அவர்களிடமிருந்து வாங்கிக் கொடுத்தார்.
பின்னர் ஹென்றியின் வழக்கறிஞர்கள், ""மற்ற கணக்குகளையும் இங்கேயே முடித்து விடுங்கள்; இங்கேயே பணம் தருகிறோம்'' என்றனர். ஆனால், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர் இதை ஏற்க மறுத்து, சட்டமுறைப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கணக்குகளை முடித்துக் கொள்வதாகக் கூறிவிட்டனர். அதன்பின்னர், திரு.மோகன் குமாருக்கு 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறு சட்டப்படி, சம்பள பாக்கி ரூ.36,000 மற்றும் இத்தொகையை இதுவரை வழங்காமைக்குரிய இழப்பீடு உள்ளிட்டு அனைத்தையும் வழங்கக் கோரி மதுரை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தனது ஊழியரிடமே மனித உரிமையையும் ஜனநாயகத்தையும் மதித்து நடக்காத மக்கள் கண்காணிப்பகம், தனது உரிமைப் பயணத்தில் பத்தாண்டுகளை கடந்து வந்துள்ளதாகக் கூறிக் கொண்டு கூட்டம் நடத்திக் கொண்டாடிக் கொண்டிருப்பது கேலிக் கூத்து!
தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம் , மதுரை.