Language Selection

புதிய ஜனநாயகம் 2005

12_2005.jpgவரப்போகும் சட்டமன்றத் தேர்தலைக் குறி வைத்து பாசிச ஜெயா அரசு கணக்கற்ற கவர்ச்சித் திட்டங்களை அன்றாடம் அறிவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இத்திட்டங்கள் எவையும் இதுவரை கிராமப்புறங்களைச் சென்றடைந்ததே கிடையாது. கடந்த தேர்தலின்போது வாக்குறுதி அளித்த திட்டங்களை நிறைவேற்றி விட்டதாக அதிகாரிகளும், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், ஊராட்சி மன்றப் பிரதிநிதிகளும் கணக்கு காட்டி ஏப்பம் விட்டதுதான் மிச்சம்.

 

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேமங்கலம், தனியாலம்பட்டு, பொய்கை அரசூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு இணைப்புச் சாலை போடுதல், காரப்பட்டு கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டுப் புதிதாக நிறுவுதல், இருவேல்பட்டு கிராமத்துக்குப் போதிய அளவு மின்னழுத்தம் கொண்ட மின்மாற்றி அமைத்தல் முதலான பல கோரிக்கைகளும் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கின்றன. இவ்வட்டார மக்கள் பலமுறை மனு கொடுத்தும் கூட இக்கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

 

இதனை அம்பலப்படுத்தி இவ்வட்டாரத்தில் இயங்கும் வி.வி.மு., ""அடிப்படை வசதியின்றிக் கிராமங்கள் தவிக்குது! அம்மாவோட திட்டமெல்லாம் வெறும் பேப்பரில் ஜொலிக்குது!'' என்ற தலைப்பிட்டு துண்டுப் பிரசுரம் வெளியிட்டு, கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்து மக்களைப் போராட்டத்துக்கு அறைகூவி அழைத்தது. மனு கொடுத்து ஏமாந்தது போதும்; இனி அதிகார வர்க்கத்தை முற்றுகையிட்டுப் போராடுவோம் என்று போராட்ட முறையை விளக்கி, திருவெண்ணெய் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தது.

 

திட்டமிட்டபடி 17.11.05 அன்று வி.வி.மு. தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகளுடன் சுமார் 300 பேர் திரண்டு ஆவேசமாக முழக்கமிட்டுக் கொண்டே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடத் தொடங்கியதும் போலீசு மறித்து, முன்னணியாளர்களைப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு கோரியது. வி.வி.மு. தோழர்கள் ஜோதி, ஏழுமலை, அம்பேத்கர் ஆகியோர் உள்ளிட்டு கிராமப் பிரதிநிதிகளும் பங்கேற்ற இப்பேச்சுவார்த்தையில், அதிகாரிகளும் போலீசு ஆய்வாளரும் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். குடிநீர் தொட்டி கட்டவும், குழாய்கள் பொருத்தவும், சாலை அமைக்கவும் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆவன செய்வதாகவும் உறுதியளித்தனர்.

 

இப்போர்க்குணமிக்க போராட்டம் இவ்வட்டார மக்களிடம் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. பீதியடைந்த ஆளும் கட்சியினர், ""சாலை அமைக்கவும் குடிநீர் தொட்டி கட்டவும் தொகையைப் பெற்றுத் தந்த எம்.எல்.ஏ. ஞானமூர்த்திக்கு நன்றி! நன்றி!'' என்று சுவரொட்டி விளம்பரம் செய்து தமது பிழைப்புவாத அரசியலைக் காப்பாற்றிக் கொள்ள அலைந்தனர். அரண்டு போன அதிகார வர்க்கமோ, ""போராட்டம் எதுவும் வேண்டாம்; பேசித் தீர்த்துக் கொள்வோம்'' என்று போராட்டத்துக்கு முன்பாக முன்னணியாளர்களிடம் நைச்சியமாகப் பேசிப் பார்த்தது. எவ்விதச் சமரசங்களுக்கும் மயங்காமல் மக்களைத் திரட்டி போர்க்குணத்தோடு வி.வி.மு. நடத்திய இம்முற்றுகை போராட்டம், உறுதியாகப் போராடினால் மட்டுமே நமது உரிமைகளைப் பெற முடியும் என்ற படிப்பினையை மக்களிடம் விதைத்துள்ளது.

 

விவசாயிகள் விடுதலை முன்னணி, திருவெண்ணெய் நல்லூர்.