01_2006.jpgபெருமழை வெள்ளத்தால் துயரத்தில் தத்தளிக்கிறது தமிழகம். தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிர்கள் அழிந்து, விவசாயிகள் மீளாக் கடனில் மூழ்கியிருக்கிறார்கள். சென்னை நகரில் வெள்ளம் மக்களுடைய உடைமைகளைப் பறித்தது என்றால், ஜெ. அரசின் வெள்ள நிவாரணம் ஏழை மக்களின் உயிரைப் பறித்திருக்கிறது.

 

சென்ற ஆண்டு சுனாமி; இந்த ஆண்டு வெள்ளம். இயற்கையின் சீற்றத்துக்கு ஏழை மக்களைக் களப்பலியாகத் தள்ளி விடுகின்றன ஆளும் வர்க்கங்கள். அவர்களுடைய அரசோ, தன்னுடைய "கருணைப் பார்வை'யினால் மக்களைச் சுட்டெரிக்கிறது. சுனாமி நிவாரணத்தில் தொடங்கிய அரசின் இந்தக் கொலைப்பணி வெள்ள நிவாரணத்திலும் தொடர்கிறது.

 

சுனாமி நிவாரணப் பணிகள் மற்றும் மறுவாழ்வு கோரும் மாநாடுகளை நடத்தும் பொருட்டு 2005ஆம் ஆண்டிற்கான தமிழ் மக்கள் இசைவிழாவை இரத்து செய்தோம். இந்த ஆண்டோ வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் போராட்டங்கள்! வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூர், திருச்சி மாவட்டங்களிலும், சென்னைமதுரவாயல் பகுதியிலும் டிசம்பர் 10ஆம் தேதி வரை நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்கள் எமது தோழர்கள். நிவாரணத்திற்கான போராட்டத்தில் மக்களையும் அணிதிரட்டினார்கள். தமிழக அரசு நடத்திய நிவாரணப் படுகொலைகளைக் கண்டித்து தமிழகமெங்கும் ஜெ.யின் உருவப் பொம்மையை எரித்த எம் தோழர்கள் சிறையில் இருக்கிறார்கள்.

 

இந்தச் சூழல் இசைவிழாவை நடத்துவதற்கு உகந்ததாக இல்லை. தமிழ் மக்கள் இசை என்பதை, மக்கள் விடுதலைக்கான போர் முழக்கமாகத்தான் எழுப்பி வருகிறோம் எனினும், நம்மைச் சூழ்ந்திருக்கும் இந்தப் பணிகளும், மக்களைச் சூழ்ந்திருக்கும் துயரமும், அவலமும் இவ்வாண்டு இசைவிழாவையும் நடத்தவியலாத நிலையைத் தோற்றுவித்துள்ளன.

 

தண்ணீர் தனியார்மயம் மறுகாலனியாக்கத்தை எதிர்த்து செப்.12இல், நெல்லையில் தோழமை அமைப்புகளுடன் இணைந்து நாங்கள் நடத்திய அமெரிக்க கோக் எதிர்ப்புப் போராட்டமும், அதனைத் தொடர்ந்து அந்த வட்டாரத்தில் மேற்கொண்டு வரும் பணிகளும், மக்களின் எதிர்ப்புணர்வுக்கு வீரியம் அளித்துள்ளன. காவல்துறை கோக்கின் ஏவல்துறையாக வெளிப்படையாகவே களமிறங்கியிருக்கிறது. ""கோக்கை எதிர்த்து எதுவும் பேசக்கூடாது'' என எழுத்துப்பூர்வமாகவே உத்தரவிடுகிறது. காலனி ஆதிக்க காலத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் இந்த இழிநிலையை எதிர்க்க வேண்டிய கடமை அவசியமானதாக முன்வந்து நிற்கிறது.

 

தமிழ் மக்கள் இசைவிழாவை பல்லாயிரக்கணக்கான ஜனநாயக சக்திகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் எமது ஆதரவாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், இவ்வாண்டும் விழா இரத்து செய்யப்படுவது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம். எனினும், நிலைமைகள் தோற்றுவித்துள்ள இந்த நிர்ப்பந்தத்தை அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்றே நம்புகிறோம்.

 

இசைவிழாவிற்கு வழங்கும் ஆதரவை எமது போராட்டங்களுக்கு வழங்கக் கோருகிறோம்!

 

இவண்

மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.