01_2006.jpgசென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரணம் பெறப் போனவர்களில் 42 பேர் கொல்லப்பட்டு, அவர்களின் உற்றார்உறவினர் கதறி எழும் ஓலத்தை விட ஓங்கி ஒலிப்பது, அந்தக் கொடுமையை தூர நின்று வேடிக்கை பார்த்து, ""ச்ச்சு''க் கொட்டும் நடுத்தர, மேட்டுக்குடி அறிவாளிகளின் வேறு வகையான, வழக்கமான ஒப்பாரிதான்:

 

""ஐயோ, அரசியல் பண்ணாதீங்க!'', ""அரசியல்வாதிங்கதான் எல்லாத்துக்கும் காரணம்!'', ""அரசியல்வாதிங்க தலையீடு செஞ்சுதான் எல்லாத்தையும் கெடுக்கிறாங்க!'', ""இந்தத் துயரச் சம்பவத்திலும் அரசியல் ஆதாயம் தேட முயல்றானுங்க!'', ""அழுகைச் சத்தத்திலும் ஓட்டுத் தேடும் அரசியல்கள்.''

 

எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சிகளும் குறிப்பாக கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒருவர் மீது மற்றவர் குற்றச்சாட்டுகள் எதிர்க் குற்றச்சாட்டுக்கள் வீசிக் கொள்வதைத்தான் இப்படிச் சொல்லி ஒப்பாரி வைக்கிறார்கள். முக்கியமாக இப்படிப்பட்டவாதப் பிரதிவாதங்களைச் செய்திகளாக்கிக் காசு பார்க்கும் செய்தி ஊடகம்தான், தங்களின் பெரும்பான்மை நேயர்கள் வாசகர்களான நடுத்தர, மேட்டுக்குடியின் சார்பாக இத்தகைய ஒப்பாரி வைப்பதில் முன்னணிப் பாத்திரம் வகிக்கின்றது. இதுவும் ஒரு வியாபாரத்துக்காகத்தான்!

 

உண்மையில் ""அரசியல் பண்ணுவது'' அரசியல் கட்சிகளின் முக்கியமான வேலைகளில் ஒன்று! அப்படிச் செய்யாமல் இருக்கும் அரசியல் கட்சி அரசியல் அரங்கில் நீடிக்கவே முடியாது, அழிந்து போகும்! அவை ""அரசியல் பண்ணு''வதால்தான் மக்களுக்குக் கொஞ்ச நஞ்சமாவது அரசியல் தெரிகிறது. இதுவும் ஒருவகையான அரசியல் விழிப்புணர்வுதான். அதனால் தான், எங்கே தன் ""குட்டு'' அம்பலப்பட்டு போகுமோ, மக்களிடையே தம் செல்வாக்கு மங்கிப் போகுமோ என்று ஓரளவு அஞ்சி அஞ்சி, அரசியல் கட்சிகள் குறிப்பாக, ஆளும் கட்சிகள் பயந்து நடக்கின்றன. கருணாநிதியோ, ஜெயலலிதாவோ யாராக இருந்தாலும் அவர்களின் செயல்பாடுகள், இலஞ்சஊழல், அதிகார முறைகேடுகள், நிர்வாகச் சீர்கேடுகள், குற்றங்குறைகள் ஆகியவை மக்களிடையே வைத்து அலசப்படும்போதுதான் ஓரளவாவது உண்மைகள் தெரியவருகின்றன.

 

""அரசியல் பண்ணப்''படுவதால்தான் சுனாமி நிவாரணத்தில் நடந்த ஊழல்கள், வெள்ள நிவாரணம் வழங்குவதில் நடந்த படுகொலைகள் போன்றவற்றுக்கு எந்த அளவு யார், யாருக்குப் பொறுப்பு இருக்கிறது என்பது தெரிய வருகிறது. இல்லையென்றால், இந்த உண்மைகள் எல்லாம் அடையாளம் தெரியாத பிணங்களாக வகைப்படுத்தி புதைக்கப்படும் அல்லது அதிகாரவர்க்க ஆவணக் குவியல்களுக்குள் புதைந்து போகும்.

 

இதுபோன்ற விவகாரங்கள் பொதுமக்கள் முன்பு வைத்து அலசப்படாமல் போவதால் அதிகபட்சம் ஆதாயம் அடையப்போவது போலீசும் அதிகாரவர்க்கமும்தான். ஏற்öகனவே, ஓட்டுக்கட்சிகளைப் போல மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு ஏதுமில்லாத இவர்கள் மேலும் கொழுத்துத் திரிவார்கள். உங்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை என்று ஏற்கெனவே திமிராகப் பேசித்திரிகிறார்கள்.

 

கொஞ்சங்கூட அரசியல் அறிவும் ஈடுபாடும் இல்லாமல், தானுண்டு, தன்வேலை, தன் மனைவிமக்கள் உண்டு என்று பிழைப்புவாதத்தில் மக்கள் இருப்பதும், பொறுக்கித் தின்னுவதே அரசியல் என்றும் போராட்ட உணர்வு எதுவும் இல்லாது தலைவர்களின் காலில் விழுந்து கும்பிடுவதும் என்று தொண்டர்கள் இருப்பதும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற பாசிஸ்டுகளுக்கு வசதியாக இருக்கிறது.

 

பேருந்துக் கட்டண உயர்வு உட்பட ஒரே சமயத்தில் திடீரென்று 4000 கோடி ரூபாய் சுமையைத் தமிழக மக்கள் மீது மூன்றாண்டுகளுக்கு முன்பு ஏற்றி வைத்து அப்படியே அமுக்கினார், ஜெயலலிதா. இது வெறும் பொருளாதார சீரமைப்பு, கசப்பு மருந்து, இதை அரசியல் படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால், இது கருணாநிதி ஆட்சியின் சீர்கேட்டால், கருவூலம் காலியாக்கப்பட்டதன் விளைவு என்று தானே ""அரசியல்'' பண்ணினார். அன்று ஜெயலலிதாவுக்கு எதிராக பிற அரசியல் கட்சிகளும் தொழிலாளர், மாணவர் என்று பிற இயக்கங்களும் கடும் எதிர்ப்புக் காட்டியதால்தான் ஜெயலலிதா ஒரு உண்மையைப் போட்டுடைத்தார். ""தமிழ்நாட்டுக்கு நேரடியாகவும், மத்திய அரசு மூலமாகவும் கடன்தரும் உலக வங்கியும், சர்வதேச நிதியமும் கட்டண உயர்வு, வரி விதிப்பு போன்ற பல நிபந்தனைகள் விதிக்கின்றன. கடன் பெற வேண்டுமானால் அதன்படி செய்ய வேண்டியிருக்கிறது'' என்றார்.

 

அதேபோலத்தான் சுனாமி நிவாரணத்துக்காக ஒதுக்கப்பட்ட செலவிடப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய்களில் ஒரு சிறு துளி அளவுதான் பிரதமர் மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்தும் ""பொதுமக்கள்'' வழங்கிய நன்கொடையும் ஆகும். மிகப் பெரும் அளவிலான மீதித் தொகை எங்கிருந்து, எதற்காக வந்தது என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாக உள்ளது.

 

தமிழ்நாட்டில் இருந்து போன தி.மு.க. உள்ளிட்ட எம்.பி.க்களும், அமைச்சர்களும் இந்த மாநிலத்திற்காக எதுவும் செய்யவில்லை; மத்திய அரசிடம் தான்தான் போராடிப் பல கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதாக ஜெயலலிதா அடிக்கடி குற்றஞ்சாட்டுகிறார். அதேபோல, பல அந்நிய நாட்டு முதலீடுகளைப் பெற்று தனது சொந்த முயற்சியால் தமிழகத்தை தொழில்மயமாக்கி வருவதாக ஜெயலலிதா உரிமை பாராட்டிக் கொள்கிறார்.

 

இது உண்மையல்லவென்று மறுக்கும் தி.மு.க. காங்கிரசு தரப்பு, தாம் எவ்வளவு அந்நிய முதலீடுகள், தொழில்கள் வருவதற்கு காரணமாக இருக்கிறோம் என்று பட்டியல் போடுகிறார்கள். சுய உதவிக் குழுக்களுக்கான திட்டம் கடன், மத்திய அரசு உதவியிலானது என்றாலும் தமது சொந்த முயற்சியிலானது என்று கூறி அரசியல் ஆதாயம் தேடுகிறார், ஜெயலலிதர் அதேபோல சுனாமி நிவாரணத்துக்குப் பல ஆயிரம்கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது; இருந்தபோதும் அவை நிர்வாகச் சீர்கேடு, ஊழல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படாமல் போகிறது என்கிறது எதிர்த்தரப்பு.

 

இப்படி இவர்கள் ""அரசியல் பண்ணுவதில்'' கொஞ்சமாவது அரசு இரகசியங்கள் வெளிப்படுகின்றன என்றாலும் வெளியே தெரியாமல் போகும் மறைக்கப்படும் முக்கியமான உண்மைகளும் உள்ளன. எப்படி இவர்கள் போட்டி போட்டு, கொண்டு வரும் அந்நிய முதலீடுகள் தொழில்கள் ஏகாதிபத்தியப் பன்னாட்டுத் தொழில் கழகங்களின் சுரண்டலுக்காக செய்யப்படுகின்றனவோ, அப்படித்தான் சுய உதவிக் குழுக்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், சுனாமி நிவாரண வெள்ள நிவாரண உதவிகள் பணிகள் எல்லாமே ஏகாதிபத்திய சேவைக்காக உலக வங்கி ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற அந்நிய நிதி நிறுவனங்களின் கடன்கள் திட்டங்களுக்காகவே திட்டமிட்டு செய்யப்படுகின்றன.

 

சுனாமி நிவாரணத்துக்காக வழங்கப்படும் நிதி, மீனவர்கள் மீன்பிடிப் படகுகள் வலைகள் மற்றும் மீனவர்களின் குடியிருப்புகள் போன்ற மக்கள் நல்வாழ்வுக்காகச் செலவிடப்படுகின்றன என்றே பலரும் எண்ணுகின்றனர். அதேபோல மழை வெள்ள நிவாரணம் என்பது குடும்பத்துக்கு ரூ. 2,000, ரூ.1000 என்றும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு இவ்வளவு என்றும் ரொக்கமாகவும், வேட்டிசேலை, அரிசி, மண்ணெண்ணெய், சோற்றுப் பொட்டலம் ஆகியவற்றுக்காக செலவிடப்படுவதாகவும் பலரும் நம்புகிறார்கள்.

 

சுனாமி நிவாரணத்திற்காக இதுவரை மைய அரசு மூலம் வந்தது ரூ.679.61 கோடி ரூபாய். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நிவாரணம் வழங்குவதற்கு மாறாக, சுனாமியால் பாதிக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்புகளைச் சீர்செய்வதற்காக என்றே உலகவங்கி ரூ. 1903.5 கோடியும், ஆசிய வளர்ச்சி வங்கி ரூ. 646.88 கோடியும், வேளாண் வளர்ச்சிக்கான உலக நிதியம் ரூ. 67.50 கோடியும் கொடுத்துள்ளன. இவையும் கடனுதவி தாமே தவிர நன்கொடை உதவி அல்ல. இவற்றிலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை சீரமைக்க ரூ. 28 கோடியும், மீன்பிடிப்பு தொழிலை சீரமைக்க ரூ. 87.60 கோடியும் நான்கு, ஐந்து தவணைகளில் தரப்படும். மீதம் பெரும்பாலான தொகை சுற்றுலா வளர்ச்சி முதலிய வேறு தொழில்களுக்காக ஒதுக்கப்படும்.

 

இப்போது, ஜெயலலிதா கோரியிருக்கும் வெள்ள நிவாரணமும் இதே வகையானதுதான். வெள்ள நிவாரணமாக ஜெயலலிதா கோரியிருக்கும் ரூ.13,685 கோடியில் அடங்கியுள்ள விபரங்கள்; கூட்டுறவு சங்கங்களுக்கு விவசாயிகள் அசலும் வட்டியுமாக கட்ட வேண்டிய தொகையைத் தள்ளுபடி செய்யும் வகையில் ரூ. 4626 கோடி, சாலைகளைச் சீரமைக்க 2,523 கோடி, நீர்ப்பாசன ஆதாரங்களை சீரமைக்க774 கோடி, ஊரணிகள் மற்றும் குளங்களை புனரமைக்க 60 கோடி, வெள்ளப் பேரழிவால் வேலையிழந்துள்ள விவசாயத் தொழிலாளர்கள், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு உடல் உழைப்பு வேலைவாய்ப்பு (தினக்கூலி) வழங்க ரூ. 77 கோடியே 33 லட்சம் என்று கணக்கு சொல்கிறது, ஜெயலலிதா அரசு.

 

கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட சத்துணவுத் திட்டம் எம்.ஜி.ஆரின் உள்ளத்தில் சுரந்த கருணை மழையின் விளைவு என்று பலரும் எண்ணுகிறார்கள்; ஆனால், அது உலகவங்கியின் மூளையில் உதித்த திட்டம் என்பது அவர்களுக்குத் தெரியாது. மகளிர் சுயஉதவித் திட்டம் என்பது உலகவங்கி முதலிய ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் நுண்கடன் வழங்கு திட்டத்தின் கீழ் வருவது என்பதும் அவர்களுக்குத் தெரியாது. ஏதோ சில தொண்டு உள்ளம் படைத்த மனிதர்களின் முயற்சியால் உருவாக்கப்படுபவை அல்ல, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்; ஏகாதிபத்தியத்தின் திட்டமிட்ட சதித்தனமான ஏற்பாடுதான்.

 

இவைபோலவே, சுனாமி நிவாரணம், வெள்ள நிவாரண வேலைகளிலும் உலக வங்கி முதலிய ஏகாதிபத்தியங்களின் நிதி, தொழில் நிறுவனங்களின் சதித்திட்டங்கள் ஒளிந்து கொண்டு வருகின்றன. குடிசைப் பகுதிகளையும், குப்பங்களையும் அகற்றுவது; அங்கே அந்நிய நிதி தொழில் தேவைக்கான கட்டமைப்புகளை உருவாக்குவது என்று அடாவடித்தனமாக ஜெயலலிதா செய்த முயற்சி ஏற்கெனவே முழுமையாக நிறைவேற்றப்பட முடியவில்லை. இப்போது சுனாமி வெள்ள நிவாரணம், மறுசீரமைப்பு என்ற பெயரில் செய்யப்படுகிறது.

 

வரலாறு காணாத வெள்ள பேரழிவில் தமிழக மக்கள் உயிரோடு அடித்துச் சென்ற அதேசமயம் தயாநிதி மாறனும் ஜெயலலிதாவும் அமெரிக்க பில்கேட்ஸ், ஜெர்மனியின் பி.எம்.டபுள்யூ முதலாளிகளோடு புதிய தொழில்களுக்கான ஒப்பந்தம் போடுகின்றனர். உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஜெர்மனியின் பி.எம்.டபிள்யூ.வின் துணைத் தலைவர் கிளாஸ் பெர்னிங், ""இதுவரையில் பி.எம்.டபிள்யூ நிறுவனம் கண்டிராத அதிவேகமான பதிலுக்காகவும், இந்த நிறுவனம் முதலீடு செய்வதற்கு வசதியாக தமிழக அரசு காட்டிய வேகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

 

""வெள்ளத்திற்கு அணை போட முடியாது. ஆண்டுதோறும், போதிய அளவு மழை பெய்யும் என்று இனி திட்டவட்டமாக கூறவும் முடியாது. இந்நிலையில் விவசாயிகள் வருமானத்திற்கு உத்திரவாதம் வேண்டும் என்றால் மரபுவழி விவசாயத்தை உடனடியாக கைவிட வேண்டும். அரசு அறிமுகப்படுத்தும் ஒப்பந்த பண்ணை விவசாயத்திற்கு மாற வேண்டும். பயோபெட்ரோல் தயாரிக்கப் பயன்படும் சக்கரைக் கிழங்கு, சக்கரைச் சோளம், பயோடீசல் தயாரிக்கப் பயன்படும் காட்டாமணக்கு மற்றும் ஏற்றுமதிக்கான மலர், பழம், மூலிகை பண்ணைகளாக விவசாயத்தை மாற்றுவதுதான் ஒரே தீர்வு என்கிறது, ஜெயா அரசு. அதற்காக தனியார் முதலாளிகளுடனான ஒப்பந்த பண்ணை சாகுபடிதான் செய்ய வேண்டும் என்று விவசாயிகளை நிர்பந்திக்க, கடன், நிவாரணம் மற்றும் மானியங்களைப் பயன்படுத்தி சதி வலையைப் பின்னுகிறது, அரசு.

 

வெள்ளப் பேரழிவை தங்கள் கண்ணாடி மாளிகைகளிலிருந்து பார்த்து ரசிக்கும் ஏகாதிபத்திய அடிவருடிகளுக்குத் தும்மல் வந்தாலும் துடித்துப் போகிறது, பாசிச ஜெயா கும்பல்.

 

குறிப்பாக, சென்னையைத் தாக்கிய வெள்ளத்திற்கு முக்கிய காரணம், 17 கி.மீ. நீளத்திற்கு சென்னைக்குள் ஓடும் பக்கிங்காம் கால்வாய்! ஆக்கிரமிப்பால் அது சுருங்கி போனதால், பிதுங்கிய பெருவெள்ளம் ஏகாதிபத்திய நிறுவனங்கள் மண்டி கிடக்கும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையை மூழ்கடித்து போக்குவரத்தை குலைத்து விட்டது. வெள்ளத்தால் முற்றுகையிடப்பட்ட ஏகாதிபத்திய நிறுவனங்கள் உடனடியாக நிலைமையைச் சரிசெய்யுமாறு ஜெயலலிதாவிற்கு ஆணை பிறப்பித்தன. ஜெயலலிதாவின் பட்டாளம் அவ்விடத்திற்குப் பதறிக் கொண்டு ஓடியது. அடுத்த சில நிமிடங்களில், பக்கிங்காம் கால்வாயில் இருந்து கடலுக்கு புதிய கால்வாய் வெட்ட, வரைபடத்தோடு உத்தரவு பிறந்தது.

 

சுனாமி நிவாரணமோ, வெள்ள நிவாரணமோ, தவறாமல் ""அரசியல் பண்ணும்'' ஆளும் கட்சிகள்எதிர்க்கட்சிகள், ஓரளவு உண்மைகள் வெளிவர உதவினாலும், தமது ஏகாதிபத்திய சேவை பற்றிய இரகசியங்கள் மட்டும் வெளிவராமல் எச்சரிக்கையாக இருக்கின்றன.