04_2006.gif

இதை அதிர்ச்சி என்று சொல்வதா? அல்லது, நாட்டுக்கே அவமானம் என்று சொல்வதா?

 

            ""எங்கள் கிராமம் விற்பனைக்குத் தயார்!'', ""எங்கள் சிறுநீரகம் விற்பனைக்குத் தயார்!''  என மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களின் பல கிராமங்களில் அறிவிப்புப் பதாகையுடன் விவசாயிகள் தமது அவலத்தை வெளியுலகுக்குத் தெரிவிக்கும் புதுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். தமது உடல் உறுப்புகளையும் தாம் பிறந்து வளர்ந்த மண்ணையும் மக்களையும் பகிரங்கமாக விற்பனை செய்யத் துணிந்து விட்ட விவசாயிகளின் இச்செயல், வழக்கம் போலவே செய்தி ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு இப்போது மெதுவாகக் கசியத் தொடங்கியுள்ளது.

 

            ""சிறுநீரக விற்பனை மையம்'' என்ற விளம்பரப் பதாகையுடன் ஒரு மூங்கில் கொட்டகை அந்தக் கிராமத்தின் நுழைவாயிலில் காணப்படுகிறது. ""ஆம்! இது உண்மைதான்! நாங்கள் எங்கள் சிறுநீரகங்களை விற்க முடிவு செய்துள்ளோம். பிரதமர் மன்மோகன் சிங்கையும் அரசுத் தலைவர் அப்துல் கலாமையும் இந்தக் கடையைத் திறப்பு விழா செய்து விற்பனையைத் தொடங்கி வைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளோம்'' என்கிறார்கள் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்திலுள்ள ஷிங்னாபூர் கிராமத்து விவசாயிகள்.

            ""இதில் ஆச்சரியப்படவோ, அதிர்ச்சியடையவோ ஒன்றுமில்லை. நாங்கள் எங்கள் கிராமத்தை  எங்களின் சிறுநீரகங்களை விற்கத் தடைவிதிக்காமல் ஆட்சியாளர்கள் அனுமதிக்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் கடனில் மூழ்கி ஓட்டாண்டிகளாகி விட்டோம். எங்களிடம் விற்பதற்கு எதுவுமில்லை  சிறுநீரகத்தைத் தவிர!'' என்கிறார் சம்பத்கிரி என்ற விவசாயி.

            ஷிங்னாபூர் மட்டுமல்ல; டோர்லி, லெஹேகான், ஷிவ்னி ரசுலாபூர் முதலான மகாராஷ்டிராவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள பல கிராமங்களில் சிறுநீரக விற்பனை குறித்த விளம்பரப் பதாகைகள் தொங்குகின்றன. ""எங்கள் கிராமம் விற்பனைக்குத் தயார்!'' என்ற அறிவிப்புப் பலகைகள் கிராமங்களின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டுள்ளன. ""கடந்த 10 மாதங்களில் எங்கள் வட்டாரத்தில் 309 விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளனர். முன்பு எனது நிலத்தில் கிணறு தோண்டி மின்சார மோட்டார் போட்டு விவசாயம் செய்து வந்த நான், இப்போது கடன்சுமையால் நிலத்தை இழந்து நிற்கிறேன். கூலி வேலையும் இப்பகுதியில் கிடைப்பதில்லை. எனது வீட்டில் உணவு இல்லை; துணி இல்லை; மின்சாரமில்லை. தெரு நாய்களைப் போல நாங்கள் பசியால் அலைந்து திரிகிறோம். வெறும் தண்ணீரைக் குடித்து எத்தனை நாட்கள் நாங்கள் உயிர் வாழ முடியும் என்று தெரியவில்லை. எங்களது அவலத்தை வெளியுலகுக்குத் தெரிவிக்க இப்படி விற்பனை அறிவிப்பு செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியும் தெரியவில்லை'' என்று குமுறுகிறார் அந்த விவசாயி.

            ஒரு காலத்தில் ""வெள்ளைத் தங்கம்'' என்று பெருமையாகக் குறிப்பிடப்பட்ட பருத்தி விளையும் கரிசல் காட்டு சொர்க்க பூமியாக விளங்கிய மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியம், இப்போது சுடுகாடாகக் காட்சியளிக்கிறது. கடந்த 15 ஆண்டுகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமயம் தோற்றுவித்த பயங்கரம் அப்பிராந்தியம் எங்கும் மரணஓலமாக எதிரொலிக்கிறது.

            ""எங்கள் வட்டாரத்திலிருந்து வண்டி வண்டியாக ஒரு காலத்தில் பருத்தியை ஏற்றிச் செல்வோம். இப்போது ஒரு வண்டி அளவுக்குக் கூட பருத்தி இல்லை. மாடுகளை விற்றுவிட்டோம்; இற்றுப் போன வண்டிகளை விறகாக்கினோம். பருத்தி விலை அடிமாட்டு விலைக்கு வீழ்ந்து விட்டது. உற்பத்திச் செலவோ 5 மடங்கு அதிகரித்து விட்டது. விலை வீழ்ச்சியால் இதர பயிர் சாகுபடிகளும் கட்டுபடியாகவில்லை. வங்கியில் வாங்கிய கடனைக் கட்ட முடியாததால், புதிதாக அங்கு கடன் தர மறுக்கிறார்கள். கந்துவட்டிக்காரர்களிடம் 10 வட்டி  12 வட்டிக்குக் கடன் வாங்கி போண்டியாகி நிற்கிறோம்'' என்று விம்முகிறார் சவாண் எனும் விவசாயி.

            தாராளமயமாக்கலுக்குப் பிறகு சந்தையின் மீதான கட்டுப்பாட்டை அரசு தளர்த்தியது. பருத்தி கொள்முதல் நிலையங்களை அரசு படிப்படியாக மூடியது. அமெரிக்க, ஐரோப்பிய பருத்தி விவசாயிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறுமாறு விவசாயிகளுக்கு உபதேசித்தது. ஆனால், அந்நாடுகளின் விவசாயிகளுக்கு அரசாங்கம் பல்லாயிரம் கோடி மானியம் கொடுத்து ஆதரிக்கிறது. இந்திய விவசாயிகளுக்கோ உலகவங்கி உத்தரவுப்படி ஏற்கெனவே கொடுக்கப்பட்ட மானியமும் வெட்டப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகள் எப்படி போட்டி போட முடியும்?

 

            மேலும், இந்திய ஆட்சியாளர்கள் தாராளமயமாக்கலின் கீழ், இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கிவிட்டனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பருத்திக்கு 10% தான் இறக்குமதி தீர்வை விதிக்கப்படுகிறது. இதனால் கப்பல் கப்பலாக வெளிநாட்டுப் பருத்தி குவிகிறது. அதன் காரணமாக, உள்நாட்டுப் பருத்தி கடும் விலை வீழ்ச்சிக்குத் தள்ளப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு கச்சா பருத்தியின் விலை ஒரு கிலோ ரூ. 100 என்று இருந்தது. இன்று அதன் விலை பாதியாகச் சரிந்துவிட்டது.

            ஒருபுறம், அன்னிய இறக்குமதியால் விலை வீழ்ச்சி; மறுபுறம் உற்பத்திச் செலவு அதிகரிப்பு, மானியக் குறைப்பு, மின்கட்டண உயர்வு என இரட்டைத் தாக்குதலின் கீழ் சிக்கிப் பருத்தி விவசாயிகள் கடனாளியாகி போண்டியாகிப் போனார்கள். இந்த நச்சுச் சூழலிலிருந்து மீள வழிதெரியாமல் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார்கள்.

            விதர்பா பிராந்தியமே வாழ்விழந்து பரிதவித்த நிலையில், வேலையில்லா விவசாய இளைஞர்கள் சிலர், மும்பைக்கு வேலைத் தேடிச் சென்று அங்கு கட்டுமானப் பணிகளில் கூலி வேலை செய்தனர். ஆனால் அங்கு வாரத்திற்கு 2 நாட்கள்தான் வேலை கிடைத்தது. சாலையோர நடைபாதைகளில் இரவில் படுத்துறங்கி, வேலை தேடி அலைந்த அவர்களுக்குத் தொடர்ச்சியாக வேலை கிடைக்கவில்லை. வேறு வழியின்றி திருட்டு ரயிலேறி அவர்கள் ஊருக்குத் திரும்பி விட்டனர். இப்படி பல கிராமத்து இளைஞர்கள் வேலை தேடி மும்பை, தானே, புனே, நாக்பூர் என பெருநகரங்களுக்கு ஓடுவதும், அங்கும் வேலை கிடைக்காமல் பட்டினியோடு ஊருக்குத் திரும்புவதும் அவலத் தொடர்கதையாக நீள்கிறது.

            வங்கி அதிகாரிகளும் கந்துவட்டிக்காரர்களும் கடனைக் கட்டச் சொல்லி எச்சரித்ததால், அவமானம் தாளாமல் கடந்த டிசம்பர் 16ஆம் தேதியன்று ஜகதீஷ் தேஷ்முக் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார். கணவனைப் பறிகொடுத்த அவரது மனைவி, காய்கறி பயிரிட்டு குடும்பத்தைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறார். அவரது 12 வயது மகன் பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு ஊர்ஊராக காய்கறி விற்கிறான். ""மின் வாரிய அதிகாரிகளோ, மின்கட்டண பாக்கியை உடனே செலுத்த வேண்டுமென எச்சரிக்கிறார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்டால் காய்கறிகூட பயிரிட முடியாமல் நாங்கள் பிச்சை எடுக்க நேரிடும்'' என்று கண்கள் குளமாகக் கதறுகிறார் தேஷ்முக்கின் மனைவி.

            நாடெங்கும் தாராளமயம் தோற்றுவித்துள்ள பயங்கரத்துக்கும் அவலத்துக்கும் இன்னுமொரு சாட்சிதான் மகாராஷ்டிரா விவசாயிகளின் ""சிறுநீரக விற்பனை மையங்கள்.'' தொழில் வளர்ச்சியில் முதலிடம் வகிக்கும் பணக்கார மாநிலமாகச் சித்தரிக்கப்படும் மகாராஷ்டிராவின் நிலைமையே இப்படி இருக்கும்போது, நாட்டின் பிற பகுதிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. விலை வீழ்ச்சியால் தக்காளியைத் தெருவில் கொட்டிவிட்டு கடன்சுமை தாளாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள், ஆலையிலிருந்து வெட்டுவதற்கான உத்தரவு வராமல் நட்டப்பட்டு, கரும்புக் காட்டையே கொளுத்தும் விவசாயிகள், உரிய விலை கிடைக்காமல் காய்கறிகளையும் பழங்களையும் தெருவிலே கொட்டி வேதனையை வெளிப்படுத்தும் விவசாயிகள், வேலை கிடைக்காமல் நாடோடிகளாக அலையும் விவசாயிகள்  என நாடெங்கும் விவசாயிகள் படும் அவலத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

            நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் உயிர் மலிவாகி விட்டது; உடல் உறுப்புகள் மலிவாகி விட்டது. நாடு சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாடு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருப்பதாக ஆட்சியாளர்கள் அவிழ்த்துவிடும் அண்டப் புளுகை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது இந்த அவமானக் கறையைத் துடைத்தெறிய தாராளமயத்துக்கும் துரோக ஆட்சியாளர்களுக்கும் எதிராகப் போராடப் போகிறோமா?

 

மு குமார்