05_2006.jpg

"கல்லூரிக் கல்வியும் ஆங்கிலம் பேசும் ஆற்றலும் கொஞ்சம் கணினி அறிவும் இருந்தால் கால் சென்டர்களில் ஆயிரமாயிரமாய் சம்பாதிக்கலாம்; வேலை செய்து கொண்டே படித்து மேலும் மேலும் முன்னேறலாம்; அமெரிக்க வாழ்க்கையை இங்கேயே வாழலாம்; அதிருஷ்டமிருந்தால் அமெரிக்காவுக்கே போய்விடலாம்'' என்று பத்திரிகைகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றன. ""கால் சென்டர்கள்தான் நவீன இந்தியாவின் கோயில்கள்'' என்று மொத்தப்

 பொருளாதாரத்தையும் அந்தத் திசை நோக்கி நகர்த்தி வருகிறது மன்மோகன் சிங் அரசு. வேறு வேலை வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் படித்த இளைஞர்களின் ஒரே போக்கிடம் கால் சென்டர்கள் அல்லது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்தான் என்ற நிலைமை உருவாக்கப்பட்டு வருகிறது.

            பெங்களூர் கால் சென்டரில் பணியாற்றிய பிரதீபா என்ற பெண், அவரை அழைத்துச் சென்ற வாகன ஓட்டுனரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கால் சென்டர் சொர்க்கங்களின் ஒரு இருண்ட பகுதியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

            இரண்டு மாதங்களுக்கு முன் சென்னை டைடல் பார்க் கட்டிடத்தின் மேல் மாடியிலிருந்து குதித்து ஒரு கணினிப் பொறியாளர் தற்கொலை செய்து கொண்டார். அந்த இளைஞர் பற்றி பல கிசுகிசுச் செய்திகள் வெளிவந்தனவேயொழிய, உண்மை விவரங்கள் வெளியாகவே இல்லை.

            இந்த வரிசையில், சென்னை வடபழனியில் இயங்கும் ஒரு கால் சென்டரில் மாதம் 8000 ரூபாய் சம்பளத்திற்கு டிசம்பர் மாதம் முதல் பணியிலமர்த்தப்பட்ட 15 ஊழியர்களுக்கு இரண்டு மாதமாகச் சம்பளம் தரப்படவில்லை. இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரண்டரை மாதமாகச் செய்த வேலைக்குச் சம்பளம் கேட்டபோது, ஊழியர்களை ஆபாசமாகத் திட்டியதுடன், பெண் ஊழியர்களைப் படுக்கைக்கு அழைத்திருக்கிறான் அந்த கால் சென்டரின் முதலாளி மஜீத். இது குறித்து வடபழனி போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காததால், கமிசனரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள் அந்த ஊழியர்கள்.

            தொழிற்சங்க உரிமைகளோ, தொழிலாளர் நலச் சட்டங்களோ தீண்ட முடியாத கால் சென்டர் எனும் கொத்தடிமைக் கூடாரத்திலிருந்து இப்படியொரு போராட்டக் குரல் எழுந்துள்ளது மிகவும் அரிதானது. அடிமைத்தனத்தைத் தவிர்க்கவியலாததாகக் கருதி ஏற்கும்படி மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் மத்தியில், இத்தகையதொரு துணிவு வெளிப்பட்டிருப்பதும் அதிசயமானது என்பதால் அவர்களை நேரில் சென்று சந்தித்தோம்.

            கடந்த ஒரு ஆண்டாக சென்னை வடபழனியில் செயல்பட்டு வருகிறது ஐ.கியூ. நெட் என்ற நிறுவனம். பல்வேறு விதமான வணிக  அலுவலகப் பணிகளை குத்தகைக்கு எடுத்துச் செய்யும்  இந்த பி.பி.ஓ. நிறுவனத்திற்கு மதுரையில் ஒரு கிளையும் ஆந்திராவில் இரு கிளைகளும் உள்ளன. பல்வேறு அமெரிக்க நிறுவனங்களுடைய பணிகள், மொரிசியஸ் நாட்டிலுள்ள ஒரு பினாமிக் கம்பெனிக்கு குத்தகைக்கு விடப்பட்டு, அங்கிருந்து அந்தப் பணி சென்னையில் உள்ள இந்த நிறுவனத்திற்கு உள்குத்தகைக்கு மாற்றி விடப்படுகிறது. இங்கிருந்து ஆந்திராவுக்குத் துணைக் குத்தகை! மஜீத் என்ற முதலாளியால் நடத்தப்படும் இந்நிறுவனம் சென்ற ஜனவரி மாதம் 30 பேரைப் புதிதாகப் பணியிலமர்த்தியது. ""5 முதல் 7 நாட்கள் பயிற்சிக் காலம்  பயிற்சிக் காலத்திற்கே ஊதியம் உண்டு  அதற்குப் பின் வேலை  அனுபவி ராஜா அனுபவி'' என்று கூறிப் பணியில் அமர்த்தியிருக்கின்றனர்.

            இரவுப் பணிக்கு வரும் ஊழியர்களை அழைத்து வருவதற்கும், பணி முடிந்தபின் கொண்டு விடுவதற்கும் வாகனம் ஏற்பாடு செய்ய வேண்டியது நிறுவனத்தின் பொறுப்பு. ஆனால், வாகன வசதி எதுவும் செய்யப்படாததால், தம் சொந்தச் செலவிலேயே இவர்கள் அனைவரும் வேலைக்கு வந்து சென்றிருக்கின்றனர்.

            இரவு முழுவதும் தொடர்ச்சியாகக் கண் விழித்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஓரிரு முறை தேநீர் வழங்கப்படவேண்டும். அதுவும் கிடையாது. ஆண் ஊழியர்களின் துணையுடன் நள்ளிரவில் இரண்டு மூன்று முறை தாங்களே தேநீர்க்கடை தேடி சென்று வந்திருக்கிறார்கள் பெண்கள்.

            ""பந்தா''வான நட்சத்திர விடுதியில் நேர்முகத் தேர்வு. அலுவலகமோ எலியும் கரப்பானும் கொசுவும் குடியிருக்கும் கூடாரம். அத்தனைக் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு ஒன்றரை மாதம் மிகவும் விசுவாசமாக உழைத்திருக்கிறார்கள் அந்த ஊழியர்கள். ஆனால், யாருக்கும் வேலை நியமன உத்தரவே தரப்படவில்லை. கேட்கும்போதெல்லாம் இதோ அதோ என்று இழுத்தடித்திருக்கின்றனர்.

            இந்தப் போராட்டத்திற்காக, ஊழியர்களைப் பழிவாங்கும் நோக்கத்தில் இவர்களுடன் ஒன்றாக வேலைக்கு அமர்த்தப்பட்ட 4 வடமாநில இளைஞர்களுக்கு நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. மற்ற ஊழியர்களுக்கு நியமன உத்தரவு கிடைத்ததேயன்றி சம்பளம் வரவில்லை. இரண்டு மாதங்கள் முடிந்து பிப்ரவரி தொடங்கியும் சம்பளம் வராமல் போகவே 30 மணி நேரம் உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கியிருக்கின்றனர்.

            பிப்ரவரி 10ஆம் தேதியன்று முழுச் சம்பளத்தையும் போக்குவரத்துச் செலவையும் கொடுத்து விடுவதாகச் சொல்லியிருக்கிறான் முதலாளி மஜீத். அதை எழுதிக் கொடுக்குமாறு ஊழியர்கள் கேட்டவுடன் ஆத்திரமடைந்திருக்கிறான். பிப்ரவரி 9ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு பெண் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் உடனே வெளியேறுமாறு மிரட்டியிருக்கிறான் லாங்மத் என்ற அதிகாரி. ""மரியாதையாக வெளியே போகாவிட்டால் ரவுடிகளை வைத்து துரத்துவோம், அல்லது போலீசைக் கூப்பிடுவோம்'' என்று அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் முதலாளி மஜீதை தொலைபேசியில் அழைத்திருக்கின்றனர். அவனுடைய ஆபாசப் பேச்சைக் கேட்ட பெண்கள் போலீசுக்குப் போவோம் என்று சொன்னதும் ""உன்னால் ஆனதைப் பார். எனக்கு டி.ஐ.ஜி.யையே தெரியும்'' என்று மிரட்டியிருக்கிறான் மஜீத்.

            அதன் பிறகு வடபழனி காவல் நிலையம், எழும்பூர் கூடுதல் கமிசனர், தி.நகர் துணைக் கமிசனர், மாநகர கமிசனர் என்று நடையாய் நடக்கிறார்கள் ஊழியர்கள். ""எங்களுக்குச் சம்பளமே வராவிட்டாலும் பரவாயில்லை. பெண்களிடம் ஆபாசமாகப் பேசியதற்காகவும் மிரட்டியதற்காகவும் மஜீத் மீது வழக்கு பதிவு செய்யுங்கள்'' என்றுகூட போலீசிடம் மன்றாடிப் பார்த்துவிட்டனர் ஊழியர்கள். ஆனால், இதுவரை முதல் தகவல் அறிக்கை கூடப் பதிவு செய்யப்படவில்லை. மஜீதை போலீசு விசாரிக்கவும் இல்லை.

            ""இந்தியாவுக்கு அந்நியச் செலவாணியை அள்ளித்தரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் கலகம் செய்து நாட்டின் பொருளாதாரத்தையும் தேசிய வருவாயையும் சீர்குலைக்கிறீர்கள். இது சர்வதேசக் குற்றம். உங்கள் புகைப்படங்களை நாஸ்காமிற்கு (  கணினி முதலாளிகளின் கூட்டமைப்பு) அனுப்பி அதன் இணையத் தளத்தில் வெளியிட்டு உங்களுக்கு இந்தியாவில் எங்குமே வேலை கிடைக்காமல் செய்துவிடுவேன்'' என்று போலீசு நிலையத்திலேயே வைத்து ஊழியர்களை மிரட்டியிருக்கிறார்  மஜீதின்  வக்கீல்.

            இரண்டரை மாத உழைப்புக்கு ஊதியம் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டு, ஆபாச வசவுகளால் அவமானப்படுத்தப்பட்டு, தங்கள் பொறியியல் பட்ட, கணினிப் பட்டச் சான்றிதழ்களையும் இந்த பிளேடு கம்பெனியிடம் பறிகொடுத்துவிட்டு, போலீசின் கட்டைப் பஞ்சாயத்தில் அலைக்கழிக்கப்பட்டு, தவித்து நிற்கிறார்கள், பரிதாபத்திற்குரிய இந்த ஊழியர்கள்.

            உள்ளே நுழைந்தவுடனே ரூபாய் 8000, 10,000 என்று சம்பளத்தை வாரிக் கொடுக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மத்தியில் ஐ.கியூ போன்ற நிறுவனங்கள் ஒரு விதிவி லக்கு என்று நீங்கள் நினைக்கலாம். விதிவிலக்காகவே இருக்கட்டும். ஆனால், இதற்குச் சட்டப்படி நிவாரணம் வழங்கும் இடம் எது என்பதுதான் கேள்வி.

            இந்தக்கேள்வி ஐ.கியூ நெட் என்ற பிளேடு கம்பெனிக்கு மட்டுமல்ல, பத்தாயிரம் பதினைந்தாயிரம் சம்பளம் கொடுக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கால் சென்டர்களுக்கும் பொருந்தும்.

            குறிப்பிட்ட சம்பளம் தருவதாகச் சொல்வது  ஆனால், அதைவிடக் குறைத்துத் தருவது, 8 மணி நேர வேலை என்று சொல்லிவிட்டு 12 முதல் 15 மணிநேரம் வேலை வாங்குவது, மிகுதி நேரப் பணிக்கு ஊதியம் தருவதில்லை என்பதையே விதியாக வைத்திருப்பது, விடுமுறை நாட்களை ரத்து செய்வது, விடுப்பு எடுத்தால் வேலை போய் விடும் என்று அச்சுறுத்துவது, சம்பளம்  பணிநிலைமைகள் பற்றி சக ஊழியருடன் பேசினாலே வேலைநீக்கம் என்று விதிமுறை வைத்திருப்பது  என்பவையெல்லாம் கால் சென்டர்கள் எனப்படும் கொத்தடிமைக் கூடாரங்களின் பொது விதிகள்.

            வேலை உத்திரவாதம் என்பது இந்தத் துறைக்கே அந்நியமான ஒரு சொல். எத்தனைக் காலம் பணியாற்றியிருந்தாலும் ""நாளை முதல் நீக்கப்படுகிறாய்'' என்று யாரை வேண்டுமானாலும், காரணம் கூறாமலும் விளக்கம் கேட்காமலும் வெளியேற்ற முடியும் என்பதே இந்நிறுவனங்களின் விதி. தொழிற்சங்கம் என்ற சொல்லை இந்நிறுவனங்களின் வளாகத்தில் யாரும் உச்சரிக்கக் கூட  முடியாது.

            அப்படியொரு சங்கம் இருந்திருந்தால், சம்பள பாக்கி கேட்டு இந்த ஊழியர்கள் போலீசு ஸ்டேசனுக்குப் போயிருக்க வேண்டியதில்லை. ஊதியத்தைப் பெறுவது, பணிநீக்கத்தை ரத்து செய்வது, முறைகேடாகப் பேசிய முதலாளியைச் சந்திக்கு இழுப்பது என அனைத்தையும் ஒரு தொழிற்சங்கம் செய்திருக்க முடியும்.

            ஆனால், தகவல் தொழில் நுட்பத் துறையில் தொழிற்சங்கம் அமைப்பதென்பதை பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கை போலச் சித்தரிக்கிறது அரசு. இராணுவம், போலீசுக்கு அடுத்தபடியாக சங்கம் அமைக்கக் கூடாத துறை, "தகவல் தொழில்நுட்பத் துறை' என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. செய்த வேலைக்குச் சம்பளம் கொடு என்று கேட்ட ஊழியர்களை ""தேச விரோதிகள், சர்வதேசக் குற்றவாளிகள்'' என்றெல்லாம் மஜீதின் வழக்குரைஞர் வசை பாடியது வெறும் திமிர்ப் பேச்சல்ல, அதுதான் அரசாங்கத்தின் கொள்கை.

            அமெரிக்க சிலிக்கான் பள்ளத்தாக்கின் கணினித்துறை ஊழியர்கள் ""சிலிக்கான் பள்ளத்தாக்கின் தோட்டத் தொழிலாளர்கள்'' என்று அழைக்கப்படுகிறார்கள். அது மிகையல்ல, உண்மை. இந்த உண்மையை தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் உணரவேண்டும். கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகவும், பணிப்பாதுகாப்பு  உரிமைகளுக்காகவும் தொழிற்சங்கம் அமைப்பதற்கான முயற்சிகளில் உடனே இறங்க வேண்டும்.

மு தனபால்