05_2006.jpg

மக்கள் கலை இலக்கியக் கழகத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு சோர்வில்லாமல் பணியாற்றிய தோழர் மயிலாடுதுறை ஸ்டாலின், கடந்த 20.2.06 அன்று திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறினால் மரணமடைந்தார். சாதிமதச் சடங்குகளின்றி நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமான தோழர்களும் நண்பர்களும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த9.4.06 ஞாயிறு அன்று மயிலாடுதுறையில் தோழர் ஸ்டாலினது படத்திறப்பும் சிவப்பஞ்சலிக் கூட்டமும் தஞ்சை ம.க.இ.க. தோழர்களால் நடத்தப் பெற்றன. ம.க.இ.க. மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், பு.ஜ.தொ.மு. பொதுச் செயலாளர் தோழர் சுப.தங்கராசு, தோழர் ஸ்டாலினது படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். மயிலாடுதுறை பெரியார் பகுத்தறிவு மையத் தலைவர் தோழர் நாக.இரகுபதி, கவிஞர் தோழர் துரை.சண்முகம், சீர்காழி வட்ட வி.வி.மு. தோழர் அம்பிகாபதி, தமிழர் உரிமை இயக்கத் தலைவர் திரு.முரளி, இரயில்வே அலுவலர் திரு.கிருட்டிணன் ஆகியோர் தோழர் ஸ்டாலின் அவர்களின் உயரிய பண்புகளை நினைவு கூர்ந்தனர்.

 

            தோழர் ஸ்டாலின் தமிழக அறநிலையத் துறையில் முதல்நிலை செயல் அலுவலராகப் பணியாற்றிக் கடந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்றார். இளம் வயதிலிருந்தே உழைக்கும் மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் உணர்வோடு செயல்பட்டார். தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கு உதவுவதில் கவனம் செலுத்தி, தனது ஊதியத்தில் ஒரு பகுதியை அதற்காகவே செலவிட்டார். ஈழ விடுதலை, தமிழினக் குழுக்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட தோழர் ஸ்டாலின், பின்னர் ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் மட்டுமே உண்மையான புரட்சிகர அமைப்புகள் என்பதைத் தனது சொந்த அனுபவத்தில் உணர்ந்து, மார்க்சியலெனினிய சித்தாந்தத்தின் மீது பற்றும் நம்பிக்கையும் கொண்டு செயல்பட்டார். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கழுத்தெலும்பு தேய்வு என நிரந்தர நோய்கள் அவரை வாட்டிய போதிலும், விடுமுறை நாட்களில் கூட ஓய்வெடுக்காமல், இயக்கப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் முழு நேரத்தையும் இயக்கப் பணிகளுக்காகவே செலவிட்டார்.

            அவர் பணியாற்றிய துறையில், அப்பழுக்கற்ற அலுவலராகச் செயல்பட்டு அத்துறை ஊழியர்களின் பெருமதிப்பைப் பெற்று விளங்கினார். ""முழு நாத்திகரான தோழர் ஸ்டாலின்தான் பல கடவுள்களையும் அவர்களது சொத்துக்களையும் காப்பாற்றினார். பகல் வேஷம் போடும் பக்திமான்களான பல உயர் அலுவலர்கள் கடவுள் சொத்துக்களைச் சூறையாடியுள்ளனர்'' என்று தோழர் காளியப்பன் இந்நினைவஞ்சலிக் கூட்டத்தில் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை. தோழர் ஸ்டாலின் மரணமடைந்ததும் சில பார்ப்பன அர்ச்சகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதே இதற்குச் சான்று.

            மக்கள் மீது மாளாப்பற்று, புரட்சியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை, சுயநல மறுப்பு, நேர்மை, உயரிய தோழமை எனக் கணக்கற்ற கம்யூனிசப் பண்புகளின் உறைவிடம்தான் தோழர் ஸ்டாலின்.

            தோழர் மயிலாடுதுறை ஸ்டாலினின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

—  ம.க.இ.க.தஞ்சை.