06_2006.jpg

""இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போரில் தமிழகமும் குதிக்கிறது; 25.5.06 அன்று சென்னை  வாலாஜா சாலை அருகே ஆர்ப்பாட்டம்; சமத்துவத்துக்காகக் குரல் கொடுக்க அணிதிரளுங்கள்'' என்று இரு நாட்களுக்கு முன்னதாகவே பார்ப்பனமேல்சாதி வெறிக் கும்பல், இணையதளம் மூலமாகவும் ஈமெயில் மூலமாகவும் செல்ஃபோன்களுக்கு குறுந்தகவல் அனுப்பியும் மேட்டுக்குடியினரை நூதனமுறையில் பிரச்சாரம் செய்து அணிதிரட்டியது. பெரியார் பிறந்த மண்ணில்

 மீண்டும் தலைதூக்கும் இப்பார்ப்பனமேல்சாதிவெறிக் கும்பலின் திமிரை அடக்கும் நோக்கத்துடன், இந்த வக்கிர ஆர்ப்பாட்டத்தை எதிர்த்தும் பார்ப்பனக் கும்பலின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தியும், பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முதல்நாளே அண்ணாசாலைவாலாஜா சாலையிலும் இவ்வழியாகச் செல்லும் பேருந்துகளிலும் சுவரொட்டி பிரச்சாரத்தை நடத்தின. 25.5.06 அன்று பார்ப்பனமேல்சாதிவெறி மாணவர்கள் நடத்தவிருந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னரே அங்கு செங்கொடி ஏந்தி செஞ்சட்டையுடன் சென்ற தோழர்கள், அப்பகுதியெங்கும் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பன  மேல்சாதி வெறியர்களை அம்பலப்படுத்தும் பிரசுரங்களை விநியோகித்து பிரச்சாரம் செய்தனர். இந்த வக்கிர ஆர்ப்பாட்டத்தை முற்றுகையிட்டு எதிர்முழக்கமிடத் தீர்மானித்து தோழர்கள் முன்னேறிச் சென்றதும், தோழர்களைக் கைது செய்த போலீசு, அவர்களைத் திருவல்லிக்கேணி போலீசு நிலையத்துக்கு கொண்டு சென்றது. அங்கு உளவுத்துறை, கியூ பிராஞ்ச் போலீசு அதிகாரிகள் தோழர்களை சூழ்ந்து கொண்டு ""இன்னும் எத்தனை பேர் வந்துள்ளீர்கள்? என்ன செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள்'' என்றெல்லாம் பீதியுடன் கேட்டு விசாரித்துவிட்டு, பார்ப்பனக் கும்பலின் ஆர்ப்பாட்ட சடங்கு முடிந்ததும் அனைவரையும் விடுவித்தனர்.

 

            ஏறத்தாழ 50 பேர் கூட இல்லாத மேட்டுக்குடி மாணவர்கள்  அதிலும் பெரும்பாலானவர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்  ஆங்கிலத்தில் முழக்கமிட்டுக் கொண்டு கோமாளித்தனமாக நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தை பார்ப்பன பத்திரிகைகள் ஊதிப் பெருக்கி, ஏதோ மிகப் பெரிய போராட்டம் போல கொட்டை எழுத்தில் படத்துடன் செய்தியை வெளியிட்டன. வடநாட்டு தொலைகாட்சி நிறுவனங்கள் ஈறைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கி ஒளிபரப்பின. "சூத்திர' கருணாநிதி ஆட்சியோ, இப்பார்ப்பனக் கும்பலின் வக்கிரமான ஆர்ப்பாட்டத்துக்குத் தடைவிதிக்காமல் அனுமதி கொடுத்ததோடு, 300க்கும் மேற்பட்ட போலீசைக் குவித்து பாதுகாப்பு கொடுத்து "ஜனநாயக சேவை' செய்தது. சமூக நீதி பேசும் ஓட்டுக் கட்சிகளும் இயக்கங்களும் பார்ப்பன  மேல்சாதி வெறியர்களின் திமிருக்கு எதிராக களத்தில் நின்று போராடாமல் ஒதுங்கியிருந்த நிலையில், புரட்சிகர அமைப்புகள் நடத்திய இந்தக் கலகம் உழைக்கும் மக்களிடமும் மாணவர்களிடமும் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

 

 பு.ஜ. செய்தியாளர்கள்.