![]()
ஏதோவொரு காரணத்தால் நிறுத்தப்பட்ட எனது உரை!
கனடா சமவுரிமை வெளியிட்ட "அன்பின் வழியது உயிர்நிலை" என்ற நூல் மீது, 19.04.2026 யாழ்ப்பாண விமர்சனக் கூட்டம் நடக்கவிருந்தது. இறுதி நேரத்தில் எனது உரை கூட்ட ஏற்பாட்டாளர்களால்; நிறுத்தப்பட்டது. அங்கு ஆற்றவிருந்த எனது உரை, இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.
கலை இலக்கியமானது சமூகம் சார்ந்ததாக இருக்க முடியும் என்று கூறி, ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட சமூகப் பிளவை யார் மறுக்கின்றனரோ, அவர்களே ஒடுக்கும் வர்க்கத்தினது கலை இலக்கியத்தைப் படைக்கின்றனர். இவர்கள் தங்கள் சமூகப் பார்வையை மூடிமறைக்க இலக்கியத்துக்குச் சமூக உள்ளடக்கமற்ற அழகியலாக, கலை உத்தியாகப் பூசி மெழுகுகின்றனர்.
தனிமனித முரண்களை, சமூக முரண்களை.. அனைத்தும் தழுவிய முரண்களிலிருந்து தனியாக்கி, முரணுள்ள சிந்தனைக்குள் - வாழ்வியலுக்குள் குறுக்கிக் காட்டி விடுகின்றனர்;. இது தான் ஒடுக்கும் தரப்பின் சிந்தனைமுறை. இரக்கம், அன்பு, பரிதாபம்… போன்ற மனிதவுணர்வுக்குள் ஒளித்துக்கொள்கின்றனர். முரணிலிருந்து விடுபடுவதற்கான வாழ்வியலைக் காட்டுவதில்லை.
வாழ்வின் அனைத்து நிகழ்வுகளும் அரசியலானது. அரசியல் கடந்த இலக்கியம் என்பது, வடிகட்டிய பொய். அழகியலே இலக்கியம் என்பது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அழகியல் என்பது, உள்ளடக்கத்தை முன்வைக்கும் வடிவங்களையே வேறுபடுத்துகின்ற உத்தியாகும். உள்ளடக்கத்தை வேறுபடுத்துவதல்ல உத்தி. உள்ளடக்கம் ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட, இந்த இரண்டில் ஒன்றாக இருக்க முடியும்.
"சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்" எது சட்டியில் இருக்கின்றதோ, அதுவே அகப்பையில் வரும். இது தான் எங்கும் தளுவிய உண்மையாகும்.
வாழ்நிலை தான் உணர்வுகளைத் தீர்மானிக்கிறதே ஒழிய, உணர்வுகள் வாழ்நிலையைத் தீர்மானிப்பவை அல்ல! வாழ்க்கை கடந்த கற்பனையில் உணர்வுரீதியில் முற்போக்காக வாழவும் சிந்திக்கவும் முடியாது. போலியாகப், புரட்டுத்தனமாக ஏமாற்றுவது, கலை இலக்கியப் படைப்பிலும்; நடக்கின்றது.
படைப்பாளிக்குச் சமூகம் குறித்து என்ன சமூகப் பார்வை உள்ளதோ, அதுதான் அவரின் படைப்பாகின்றது. மனித சமூகம் ஒடுக்கும், ஒடுக்கப்பட்ட இரு முரண்கூறுகளுடன் இயங்குகிறபோது. படைப்பாளி இதில் எதைச் சார்ந்து நிற்கின்றார் என்பது, அவரின் படைப்பில் பிரதிபலிக்கும்.
அன்றாட மனித வாழ்வில் ஏற்படும் முரண்பாடுகளும், அதற்கான தீர்வுகளும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை சமூகத்தின் பொதுத் தீர்வாக இருக்க முடியுமா என்றால் இல்லை. உதாரணமாக கடவுளிடம் முறையிடுதல் மூலம் சுயதீர்வு காணுதல், தற்கொலை மூலம் தன்னை அழித்துத் தீர்வு காணுதல் … இதுபோன்றவை சமூகத் தீர்வாக இருக்க முடியாது. தீர்வு என்பது முழுமையில் முரணற்ற வகையில் அணுகுதலே. இதைச் சொல்லும் விதம் அழகியல் மற்றும் உத்தி.
இந்த வகையில் இந்தக் கதைகள் மீதான எனது விமர்சனங்கள், அரசியல் உள்ளடக்கம் மீதே. குறித்த கதைக்குரிய அழகியல்கள் மீதானதல்ல.
இங்கு உள்ளடக்கம், அழகியல்.. இன்றி இலக்கியம் கிடையாது. இரண்டும் இருந்தால், அதை விமர்சிக்கக் கூடாது என்பது இலக்கியவாதிகளின் பொதுப்புத்தியாகவும், சிந்தனைமுறையாகவும் இருக்கின்றது.
முரண்பாடுகளைக் கதைக் கருவாக்கிவிட்டால், முரண்பாடு குறித்த கதையாசிரியரின் பார்வையை அங்ககீகரிக்க வேண்டும் என்பது இலக்கியப் பொதுப் புத்தியாகும். கதை முன்னிறுத்தும் கருவுக்குரிய முரண்பாடு பற்றி, சமூகத்தில் பலவிதமான கருத்துகள் காணப்படும் என்பதை இலக்கியவாதிகள் மறுக்கின்றனர். அனைத்தும் தழுவிய வகையில் முரணற்ற வகையில் முரண்களைக் காணவும், காட்டவும் மறுக்கின்றனர். உதாரணமாக வர்க்கம், சாதி, இனம், பால்… உள்ள முரண்களை, முரணற்ற சமூகக் கூறாக மாற்றும் இலக்கியத்தை, அதாவது சமவுரிமையை கொண்ட மனிதத்தன்மையை மறுதளிக்கும் இலக்கியங்கள் இருப்பதை மறுதளிக்கின்றனர்.
இதனால் சமூக முரண்பாடு சார்ந்து கதைகள் விமர்சனத்துக்கு உள்ளாகின்றது. கதையின் உள்ளடக்கம் மீதான விமர்சனத்தைத் தவிர்க்க அழகியலையும், உருவத்தையும், உத்தியையும்.. முன்னிறுத்திப் பேசுகின்றனர். உள்ளடக்கத்தை விமர்சிப்பதை, இலக்கியம் மீதான வரட்டுப்பார்வை என்று கூறித் தப்பிக்க முனைகின்றனர்;.
இலக்கியக் கரு மூலம் முன்வைக்கும் சமூகப் பார்வை முரணுள்ளதாக இருக்க முடியாது. சமூகம் பொதுவாக ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட கூறாகப் பிளவுண்டுள்ளது. எந்தக் கருவாக இருந்தாலும், இதைத் தாண்டியிருப்பதில்லை. கருவை ஒடுக்கும் அல்லது ஒடுக்கப்பட்ட முரண்பாட்டுக்குள் பூசி மெழுகுவது என்பது, ஒடுக்கும் தரப்புக்கான இலக்கியமாகும்;.
மனித ஏற்றத்தாழ்வைப் போற்றுவது உன்னதமான அழகியலாக இருந்தாலும் இவை இன்றைய உலகத்தின் ஒடுக்கும் வர்க்கத்தின் கோட்பாடே!
மனிதனின் கண்ணுக்குத் தெரியும் புற - அக அழகைப் போற்றுவதும் - நியாயப்படுத்தும் கோட்பாடுகள், அனைத்தும் இந்தச் சுரண்டும் உலகின் வெவ்வேறு வடிவங்களாகும். உழைக்கும் மானிடப் பண்பை, சமூக இயக்கத்தை, சுயநலமற்ற வாழ்வியல் கூறை, மனிதநேயத்தை, மனிதப்பண்பை, வாழ்வியல் நேர்மையை, தன்மானத்தை, போராடும் பண்பை, சக மனிதனை மதிக்கும் பண்பை, அன்பை, ஆதரவை, அச்சமின்மையை, தேடும் பண்பை. முரணற்ற வகையில் இலக்கியத்தில் காண வேண்டும். பொதுப் புத்தியில் எதையும் காணவும், காட்டவும் கூடாது.
நாம் வாழும் முதலாளித்துவச் சமூக அமைப்பிலும், சிந்தனைமுறையிலும் தனிமனித வாதமும், மனிதக் குரோதமும், தனிமனிதத் தீர்வுகளும், சுயநலமும், தான் அல்லாதவரைச் சுரண்டுதலும் ஒடுக்குதலும், தேசங் கடந்த நுகர்வுவெறியும், சமூக வெறுப்பும், தான் அல்லாத உயிர்களை வாழ் தகுதியற்றதாகக் கருதும் பொது மனப்பாங்கு.. கொண்ட பொதுப் புத்தியும், பொதுச் சிந்தனையும் சமூக ஓட்டத்தில் காணப்படுகின்றது. இதுவே கலை இலக்கியத்தில் பிரதிபலிக்கின்றது.
இதை மூடிமறைக்க முற்படும்போது உதாரணமாக இயக்க மற்றும் அரசு வன்முறைகளை எதிர்ப்பது, நிலப்பிரபுத்துவப் பண்பாட்டுக் கலாச்சாரங்களை எதிர்ப்பது, ஏகாதிபத்தியம் சார்ந்த ஜனநாயகம், சுதந்திரம் என்ற மாமூல் முதலாளித்துவக் கண்ணோட்டத்தை முன்வைப்பதை.. கலை இலக்கியமாக்குகின்றனர். குறிப்பாக இலங்கைச் சமூகம் கொண்டுள்ள நிலப்பிரபுரத்துவ எச்ச சொச்ச முரண்பாடுகளை முதலாளித்துவக் கண்ணோட்டத்தில் அணுகுவது மூலம், தமக்குப் போலியான முற்போக்கு முகமூடியை அணிந்து கொள்கின்றனர்.
"அன்பின் வழியது உயிர்நிலை" என்ற சிறுகதை பிற்போக்கான யதார்த்தமான மாமூலை நிராகரித்து உண்மையான சமூகத்தைக் கண்டறிய முயலுகின்றனரா எனப் பார்ப்போம்.
1.
இறம்பொடை முத்துப்பழனி ராமதாஸ் எழுதிய "வாங்கி வந்த பட்டாசு, மத்தாப்பு"
என்ற கதை மலையகத்தில் வாழும் மனிதர்களின் வாழ்க்கைச் சுமைபற்றியது.மலையகத்திலிருந்து கல்விகற்ற ஒரு இளைஞனின் துயரங்கள் பற்றியது. தோட்டத்துக்குரிய சிறப்புச் சலுகை, தோட்டமல்லாத தரப்புக்கு மறுக்கப்பட்ட போது, கனவுகளின் சிதைவுகள் பற்றியது.
மலையகத்தில் வாழும் தோட்டத்து மாணவர்களின் கல்விக்கு அத்திவாரமிடக்கூடிய ஆசிரியர் பயிற்சிக்கான தேர்வுமுறையை தனது துயரத்துக்கான காரணமாகக் காட்டிக் கட்டமைத்துள்ள கதை, கொழும்புக் கடை முதலாளியின் சுரண்டல் பற்றி மவுனம் சாதிக்கின்றது.
இரு வேறு உழைப்பிலுள்ள மனிதவிரோதக் கூறுகளையும், உழைப்புக்கு வழங்க வேண்டிய கூலி மற்றும் கவுரவத்தை வழங்க மறுக்கும் சமூகத்தைக் கேள்விக்குள்ளாக்குவதற்குப் பதில், உழைப்பை வகைப்படுத்தி அதை முரண்பாடாக்கி ஒன்றுக்கொன்று எதிராக்கிவிடுவது, இந்தக் கதையில் பிரதிபலிக்கின்றது.
சர்வதேச நிதி மூலதனமானது வட்டியை அறவிடுவதை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் அரச துறையை ஒழித்து வருகின்றது. எஞ்சிய அரச துறையில் ஆசிரியர் நியமனமானது, பின்தங்கிய பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு தரப்படுத்தப்படுகின்றது. இங்கு பின்தங்கிய பகுதியை முன்னேற்றுவதற்கு கையாளும் தரப்படுத்தலைத் தவறானதாக காட்ட முடியாது, மாறாக அரச துறையை ஒழிப்பதை, கதை கேள்விக்குள்ளாக்கவில்லை.இன்று தொழிலென்பது தனியார்துறையாகக் குறுகி வருக்கின்றது. தனியார்துறையில் கவுரவமான சம்பளம், உழைப்புக்கான சமூக மதிப்பு, தொழிலாளர் உரிமைகள்… படிப்படியாக மறுக்கப்பட்டு எப்படி ஒடுக்கப்படுகின்றோம் என்பதையும், அவை வாழ்க்கையில் எப்படிப்பட்ட துயரங்களாக, வெறும் கனவுகளாகச் சிதைக்கப்படுகின்றது என்பதை நாம் காணவேண்டும்.
மனிதவாழ்வில் சந்திக்கும் எதார்த்தமான சமூக அவலங்கள்; கற்பனையானதல்ல. இந்த எதார்த்தம் மீதான குறுகிய கண்ணோட்டம், மனிதவாழ்விற்கு ஒளியை ஊட்டிவிடாது. சமூக ஒளியை ஊட்டுவதே இலக்கியத்தின் பணி, எதார்த்தத்தை மீளச் சொல்வதல்ல.
2.
பொகவந்தலாவ ப.கனகேஸ்வரன் எழுதிய "நிலம் உடைத்து முளைக்கும் விதைகள்" என்ற கதை மலையகத்திலுள்ள சாதி ஒடுக்குமுறை பற்றியது
கொரோனா காலத்தில் சாக்கடையைச் சுத்தம் செய்யும் ஒருவர், ஊர் அடங்கியிருந்த காலத்தில் வேலை செய்கின்ற நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட - சாதியத்தைப் பற்றிய கதை. மலையகத்தில் சாதி எப்படி தொடர்ந்து இயங்குகின்றது என்பதை இந்தக் கதை இனம் காட்டுகின்றது.
கொரோனா காலத்தில் சாக்கடையைச் சுத்தம் செய்வது சமூக சேவை நோக்கியல்ல, வாழ்க்கைக்கான பொருளாதார தேவைக்காக இருப்பதையும், சாதி அடிப்படையில் இதை யார் செய்கின்றனர் என்பதை இந்தக் கதை தெளிவுபடுத்துகின்றது.
கதை சொல்லி இதை யார் செய்கின்றனர் என்ற சாதிய எதார்த்தத்தைக் சொல்லி, இதற்கு தீர்வாக வைப்பதைப் பார்போம்.
1.தன்னைப் போல் இருத்தல். அதே சாதியில் பிறந்து கல்வியைக் கற்று சாதி கடந்த தொழில் மூலம் தன் சாதியை மறைத்தல். அதாவது தொழிலைச் செய்யாது, வேறு தொழில் மூலம் சாதியை மறைத்தல்2.சாக்கடையைச் சுத்தம் செய்ய இயந்திரமயமாக்குதல்
இது சாதியை ஒழித்துவிடுமா? சாக்கடை சுத்தத்தில் இயந்திரமயமாதல் முதல் நவீன சாக்கடை வழித்தடங்கள் அமைத்தால், சாதி ஒழிந்துவிடுமா!? கல்வி சாதியை ஒழித்துவிடுமா!?
சாதியென்பது உற்பத்தி, உற்பத்தி உறவுகள் வடிவில் கட்டமைக்கப்பட்ட போது, உற்பத்தி மற்றும் உற்பத்தி உறவுகள் மாறி வந்த போது சாதி தொடர்ந்து நீடிக்கின்றது.
சாதியைத் தோற்றுவித்த உற்பத்தி, உற்பத்தி உறவுகள் மூலம் கட்டமைக்கப்பட்ட கலாச்சாரங்கள், பண்பாடுகள், சடங்குகள், சம்பிரதாயங்களும், இதன் அடிப்படையிலான மத நம்பிக்கைகள், சாதிய வடிவில் தொடர்ந்து இருக்கின்றது. அதாவது சாதிய உற்பத்தி, உற்பத்தி உறவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய மதம் சாதிய கலாச்சாரங்கள், பண்பாடுகள், சடங்குகள், சம்பிரதாயங்களுடன் தொடர்ந்து இயங்குகின்றது. இது மனிதன் பிறந்தவுடன் சாதிய அடையாளத்தை இடுகின்றது.
இந்தக் கதையில் கல்வி மூலம் தனது தந்தையின் சாதிய தொழில் சார்ந்து, உணர்வுபூர்வமாக அடையாளம் காட்டும் உணர்வு, தனது சாதியப் பிறப்பின் மூலம் தன்னைத்தான் சமூகம் முன் அடையாளப்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.
சாதிய உழைப்பு மூலம் இனம் காட்டுவதைக் கடந்து, சடங்குகள் சம்பிரதாயங்கள் எப்படி சாதியத்தைத் தக்க வைக்கின்றது என்பதை இனம் காணவேண்டும். நாம் பின்பற்றும் சடங்குகள் சம்பிரதாயங்கள் .. சாதியாக இருக்கின்றது என்ற உண்மை யாரும் முன்வைப்பதில்லை.
சாக்கடை மீதான உழைப்பு சாதி காரணமாக இழிவாகப் பார்க்கப்படுகின்றதா அல்லது உழைப்பு இழிவாகப் பார்க்கப்படுகின்றதா? இங்கு இரண்டு கூறுகளும் இருப்பதையும், இந்த உழைப்புக்கு உயர்ந்த கூலி மற்றும் சமூக அந்தஸ்து கொடுக்க மறுக்கும் சமூக அமைப்பு பற்றிய கேள்வியே மிகமிக அடிப்படையானது.
உடல் உழைப்புக்கும், மூளை உழைப்புக்குமான சந்தை மதிப்பு, கிராம நகர உழைப்புக்குள்ள சந்தை மதிப்பு பற்றி, அறம் சார்ந்து அணுகவேண்டும்.
3.
கந்தலோயாத் தோட்ட நிவேதா எழுதிய "சவக்குழி" என்ற கதை மலையக
சாதிய ஒடுக்குமுறையைப் பற்றிப் பேசுகின்றது.
சுடுகாட்டில் இறந்த உடலை புதைக்கும் இடம் சாதிக்குரிய அடையாளத்துடன், ஏற்படும் சமூக முரண்பாடுகளைப் பேசுகின்றது. சாதிய அடையாளம் என்பது பிறப்பில் இருந்து சாதியக் கலாச்சாரம், சாதியப் பண்பாடுகளுடன் அடையாளப்படுத்தப்படும் வாழ்க்கைமுறை, சாதிய மயானம், சாதியக் கோயில்கள், சாதியப் பூசைகளாக இருக்கின்றது. சாதிய மயானம், சாதியக் கோயில்கள், சாதி வழிபாடு.. புதிதுபுதிதாகத் தோன்றி வளருகின்றது.சமூகமே முரண்பட்ட சாதியச் சமூகமாக வாழ்கின்றது. பிறப்பின் அடிப்படையில் சாதியச் சடங்குகள் கொண்ட சாதியக் கோயில்கள், சாதியச் சுடலைகள், சாதிக்குத் தனி இருக்கை என்று, சாதி அமைப்புமுறை சாதியச் சமூகத்தில் எங்குமாக இருக்கின்றது. ஒரு தனி முரண்பாட்டைக் கொண்டு சாதியைக் குறுக்கி விளக்குவது, கட்டுவது சரியானதா? சுhதியாகச் சாதி அமைப்பில் அங்கமாக வாழ்ந்து கொண்டு, சாதிய ஒடுக்குமுறையை விளக்க முடியாது. சடங்குகள் சம்பிரதாயங்களை வாழ்க்கை முறையாகக் கொண்டுள்ள சிந்தனையைப் பின்பற்றிக் கொண்டு சாதியை முரண்பாடாகக் காட்ட முடியாது.
சாதியிருப்பதால் போட்டி சாதியக் கோயில்களைக் கட்டிக் கொண்டு, சாதி அடிப்படையில் ஆகம வழிபாட்டை நடத்திக்கொண்டு சாதி ஒடுக்குமுறையைக் கேள்விக்குள்ளாக்குவது எப்படிச் சாத்தியம்?
இந்த கதையில் ஒடுக்கப்பட்ட சாதிகளைத் தெளிவாக இனம்காட்டும் போது, ஒடுக்குபவர்களைக் குடியானவர்கள் என்று கூறுவது எதனால்!? இதுவே சாதியச் சிந்தனைமுறை.
4.
நீர்கொழும்பு வஸீலா ஸாகிர் எழுதிய "பெண் வியர்வை" கதையானது
வெளிநாட்டு உழைப்பு, பாலியல் சுரண்டல், பாலியல் வன்முறை,
பெண்கள் மீதான பாலியல் சந்தேகம், குடும்பத்தின் சுரண்டல்கள்.. பற்றி பேசுகின்றது.மனிதத் தேவைக்கான உழைப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறும் பெண்களின் பொது அவலமும், பெண்ணின்; உணர்வுகளும் எப்படிச் சூறையாடப்படுகின்றது என்பதைக் கதை எதார்த்ததுடன் முன்வைக்கின்றது.
முஸ்லிம் பெண் சீதனமின்றித் திருமணம் செய்யும் மதநெறி எப்படி மறுதளிக்கப்படுகிற்றது என்பதையும், வெளிநாட்டுக்குச் செல்லும் பெண்ணின் உழைப்பை மறுதளித்து ஒழுக்கம் கெட்டவளாக முத்திரை குத்தும் சமூக அமைப்பில், காதல் கூட விதிவிலக்கல்ல என்பதை இந்தக் கதை மூலம் தெளிவாக்குகின்றது.
வெளிநாடுகளில் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் பெண்கள், பாலியல் சுரண்டலுக்கும், பெண்ணை பயன்படுத்திக் கொள்ளும் எமது ஆண்கள் எப்படி பெண்ணின் உழைப்பை, பாலியலையும் சுரண்டுகின்றனர் என்பதை கதை முன்வைக்கின்றது.
கதை பெண் மீதான பலவிதமான ஒடுக்குமுறைகளைக் காட்டுகின்ற அதேநேரம், இதற்கான சமூகப் பின்புலத்தைக் காணத் தவறி விடுகின்றது.
1. உலகில் பளபளக்கும் போலியான அரபு நாகரீகத்தின் பின்னுள்ள மனித உழைப்பு, உழைப்புச் சுரண்டல், உழைப்பவருக்குச் சட்டப் பாதுகாப்பற்ற அந்த நாடுகளின் போலிப் பிரமைகளைக் கேள்விக்குள்ளாக்கவில்லை.
2. இலங்கை மக்களுக்கு வேலைவாய்ப்பையும், சமூகப் பொருளாதார அடிப்படைகளை ஏற்படுத்தத் தவறிய அரசு பற்றி மவுனம் சாதிக்கின்றது. அன்னியச் செலவாணிக்காக, அதாவது பெண்களின் உழைப்பைச் சுரண்டி நிதிமூலதனத்துக்கு வட்டி கட்டும் உழைப்புச் சுரண்டல் அமைப்புமுறையே, இந்த பெண்களின் அவலத்துக்குக் காரணமாக இருப்பதைக் காணத் தவறுகின்றது. வட்டியைக் கட்டும் அன்னியச் செலவாணி என்ற அரச கொள்கை, பெண்களைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்கின்றது.
பெண்களின் சமூக உணர்வை மலடாக்கி, சகிக்குமாறு நிர்பந்திக்கின்றது. நுகர்வுக் கலாச்சாரத்தைத் தூண்டி, மூலதனத்தைக் குவிக்கும் பொருட்களுக்குள் அடிமையாக்கி உழைக்கக் கோரும் சமூக அமைப்புக்கு, மக்கள் பலியிடப்படுவது அரச கொள்கையாக இருக்கின்றது.
இந்த வாழ்க்கையைப் பொது இயல்பாகக் கொண்டு சுரண்டும் உழைப்பும், உழைப்பைச் சுற்றி வீங்கிய சொந்தக் கனவுகளுடன் தவிக்க விடப்படும் பெண்கள், இலங்கை மக்களின் சமூக விழுமியங்களை அழித்து விடுவதுடன், வாழ்வு என்பது மகிழ்ச்சிக்குரியது என்பதை மறுதளிக்கும் கொள்கையை இந்த கதை மூலம் சொல்லியிருக்க முடியும்.
5.
தொட்டவத்தை கஸ்ஸாலி அஸ்ஸம்ஸ் எழுதிய "ஸீனியாவுக்குத் திருமணம்"
முஸ்லீம் சமூகத்தில் உள்ளான மத வேறுபாடு எப்படி மக்களை பிளக்கின்றது என்பதே கதை.நான் வேறு நீ வேறு என்று மனிதனைப் பிளந்து அடையாளப்படுத்தும் வெவ்வேறு குறுகிய அடையாளங்கள், மனிதத்தன்மைக்கு எதிரானதாகப் பயணிப்பதை இந்தக் கதை உணர்த்துகின்றது. கதைக் கருவானது எப்படி மனிதத்தன்மையற்ற குறுகிய அடையாளங்களாக, சுயநலமாக மாறி சமூகத்தைப் பிளக்கின்றது என்பதை, இந்தக் கதை உணர்வுபூர்வமாக வெளிக்கொண்டு வரவில்லை.
சமவுரிமையற்ற மனிதவிரோதச் சிந்தனை வடிவிலான வாழ்வியல் கண்ணோட்டங்கள் மானிட வாழ்வில் அன்றாட முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றது. உண்மைகளை, அதாவது எதார்த்தத்தை போகிற போக்கில் கடந்து செல்லும் வண்ணம் கதையாகச் சொல்வதால் சிந்தனை மாற்றங்கள், செயல் மாற்றங்களாக நடந்து விடாது.
கலை இலக்கியவாதி நடப்பதைக் கதையாகச் சொல்வதா!? இல்லை. நடப்பதைச் சுற்றி இயங்கும் மனிதத் தன்மையற்ற சிந்தனைகளை, வாழ்வியலைக் கேள்விக்குள்ளாக்கும் வண்ணம் கதை இலக்கிய நயத்துடன் அஓகவேண்டும்;. சமூகப் பொருளாதார அமைப்பு, முரண்பாட்டுடன் எப்படி பின்னப்பட்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
6.
ஏறாவூர் கறினாயாவின் "மனமாற்றம்"என்ற கதை குடும்பத்தில் பெண்ணின் உழைப்பு மறுக்கப்படுவதையும், ஆண் பெண் உழைப்பைச் சமமாக மதிக்க மறுப்பதையும் பற்றியது.
உழைப்பில் ஆணும், பெண்ணும் ஈடுபட்டாலும், வீட்டுவேலை பெண்ணுக்குரிய கடமையாகச் சுமையாக இருப்பதை பற்றிய கதையாகும். நிலப்பிரபுத்துவ குடும்ப அமைப்பில் ஆண் - பெண் வேலைப் பிரிவினைக்குப் பதில், முதலாளித்துவ உற்பத்திக்காகப் பெண்ணை வீட்டுக்கு வெளியில் கொண்டுவந்து சுரண்டத் தொடங்கியபின் - தொடருகின்ற நிலப்பிரபுத்துவச் சுரண்டலைப் பற்றியது.
ஆண் செய்ய மறுக்கும் வீட்டுவேலைக்குப் பதிலடியாக வேலைநிறுத்தம் செய்யும் பெண், ஆணுக்கு வீட்டுவேலையின் சுமையை உணர்த்தும் நடைமுறை மூலமான மனமாற்றம் நடப்பதாகக் கதை கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்தக் கதை நிலப்பிரபுத்துவத்தின் எச்சமாகவுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மன மாற்றத்திற்கான வழியாக இருக்க முடியுமா எனின் இல்லை. இப்படிச் சாத்தியம் என்று எண்ணும் தனிமனித முடிவு, ஆணாதிக்கச் சமூகத்திற்குப் பொருந்தாது. முரண்பாடுகள் குடும்பச்சுமையை அதிகரிக்க வைக்கும்.
குடும்பம் என்பது மகிழ்ச்சிக்குரிய சமூகச் செயற்பாடு. குடும்பம் என்பது சுமையாக, ஒருவர் உழைப்பை ஒருவர் சுரண்டும் கருவியாக இருக்க முடியாது. இதை அடிப்படையாகக் கொண்டு முரண்பாட்டை அணுகுவதே, குடும்ப முரண்பாட்டைப் புரிய வைப்பதற்கான சமூக அடிப்படையாகும்.
தனியுடைமை உருவாக்கும் சுயநலமும், நுகர்வுவெறியும்… இருவர் சேர்ந்து உருவாக்கும் சமூக உடைமை சார்ந்த சமூகக் கூட்டு வாழ்வியலைத் தகர்க்கின்றது.
நிலப்பிரபுத்துவக் குடும்ப அமைப்பில் பெண்ணின் உழைப்பைச் சுரண்டும் ஆணின் அதிகாரமானது, முதலாளித்துவ அமைப்பில் கேள்விக்குள்ளாகின்றது. அதேபோன்று நிலப்பிரபுத்துவப் பெண் முதலாளித்துவ அமைப்பில் ஆணின் உழைப்பை நிலப்பிரபுத்துவக் கண்ணோட்டத்தில் சுரண்ட முனைகின்றது. இங்கு உழைப்பு யாருக்கானது, எதற்கானது என்ற ஆண் பெண் இடையேயான அடிப்படை முரண்பாடு, குடும்பமாக இருப்பதை மறுதளிக்கின்றது. முரண்பாடாக மாறுகின்றது. இதுவே அதிகாரம், வன்முறை தொடங்கி குழந்தை தேவையற்றது, திருமணம் தேவையற்றது.. என்று பல வடிவங்களில் பொது வெளியில் வெளிப்படுகின்றது. சமூகமாக வாழ்வதா அல்லது தனித்து வாழ்வதா என்ற அடிப்படை முரண்பாடு ஏற்படுகின்றது.
உழைப்பின் மீதான தனியுடைமைக் கண்ணோட்டம், அதிகாரம், வன்முறை.. குடும்ப முரண்பாடுகளாக, விவாகரத்துகளாக மாறிவிடுகின்றது.
ஆண் பெண் என்ற எந்தப் பாகுபாடுமற்ற சமவுரிமையுடன் கூடிய சமூக உறவாக, ஆணாதிக்கமற்ற சமூகத்தை நோக்கிய சிந்தனையில், வாழ்வியலில் குடும்பம் என்பது சமூக உறவாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சமூக உறவு என்பது, உழைப்பைப் பகிர்ந்து கொள்வதுடன் தொடர்புபட்டது.
குடும்பம் என்பது பாலியல் தூண்டுதலான, அதாவது பரஸ்பரம் பாலியலால் உந்தப்பட்டு இயற்கையான சமூக உறவாக இருக்கின்றது. பரஸ்பரம் இணைந்த பாலியல் உறவு ஏற்படுத்தும் மகிழ்ச்சி, உழைப்பைச் சார்ந்தும் இணைந்த சமூக வாழ்வியலாக முன்னேற வேண்டும்;. இது தான் மகிழ்ச்சிக்கான குடும்பப் பொது அடித்தளம்.
இங்கு விட்டுக்கொடுக்கக் கோரும் குடும்ப அமைப்பு, ஒருவரை ஒடுக்குவதே. மகிழ்ச்சிக்குரிய குடும்பத்துக்கு இதுவொரு வழிகாட்டுதல் அல்ல. மாறாக முன்;னேறிய சமூக வாழ்வியலைக் கொண்டு, முரண்பாடுகளைக் களைய வேண்டும்;. பரஸ்பரம் பாலியல் மகிழ்ச்சி, இருவரின் உழைப்பும் இணையவேண்டும். சுயநலமற்ற பிறருக்கான சமூக இயக்கம் போல் குடும்பமும் இயங்கவேண்டும். குடும்பம் என்பது மகிழ்ச்சிக்குரியதாக, தன் துணையுடன் கூடி வாழ்கின்ற வாழ்க்கையாக அமைய வேண்டும்;.
7.
எம்.எம்.நௌசாந் எழுதிய "மின்னும் சிறு தாரகையே" என்ற கதை,
குறைபாடுகள் கொண்ட குழந்தை மீதான தாயினதும் தந்தையினதும் முரண்பாட்டைப் பேசுகின்றது.குழந்தையின் வெளித் தோற்ற அழகியல் குறித்தும், குழந்தை மூலம் சாதிக்க முனையும் தனிமனித ஈகோ பிடிவாதங்கள், நம்பிக்கைகள் முலம் கதை நகருகின்றது.
குழந்தையின் வெளித் தோற்ற அழகியலை மறுத்துக் கொண்டு கதை எதை முன்னிறுத்துகின்றதோ, இதற்கு எதிர்மறையாக இலக்கிய அழகியலைக் கொண்டு கதையாக்குவதை இந்தக் கதை, தனது முரண்பாடாக்கிக் கொள்கின்றது.
மனித அறிவியலைக் கதை மூலம் மறுதளிப்பதில் இருந்தே கதை தொடங்குகின்றது. குழந்தை குறைபாடு கொண்டது என்பதை மருத்துவரீதியாகத் தெரிந்த பின், அந்தக் குழந்தையை மருத்துவர் கருக்கலைப்புச் செய்யக் கோரிய போதும், அதை மறுதளிக்கும் கதை. இங்கு வலிந்து முன்வைக்கப்படுகின்றது. இதன் நோக்கம் என்ன?
குழந்தை வசதியான குடும்ப பின்னணியில் வளர்க்கும் கதைக்குரிய உள்ளடக்கம், வசதியற்ற குடும்பத்தில் சாத்தியமற்றது. ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தையாயின் குழந்தையின் நிலையென்ன? மருத்துவரீதியாகக் கண்டறியாத தற்செயலான குழந்தை பிறந்திருப்பின், கதையின் அழகியல் - பின்புலம் அப்பதமாகிவிடும்;.
குறைபாடு கொண்ட குழந்தைகள் பிறப்பதைக் கண்டறியும் மருத்துவ அறிவியலைக் கடந்து, பொருளாதார அழுத்தங்களைக் கடந்து பிறந்த குழந்தையைப் பராமரிக்க, சமூகம் தயாராக இருக்கின்றதா என்பதைப் பற்றிப் பேசவில்லை. தாய் - தந்தையின் பணக்கார முரண்பாடுகளைக் கொண்டு அஓகும் கதை, பொதுமைப்படுத்த முடியாதவை.
மருத்துவ உண்மைக்குப் புறம்பாக ஈகோவுடன் பெற்றெடுத்த குழந்தையை வைத்து, ஆண் - பெண் உறவையும், குழந்தையால் முடியும் என்ற பிரமையை ஊட்டுவதும், இதில் மகிழ்ச்சி கொள்ள வைப்பதும் எதற்காக?
மருத்துவ உண்மைகளை மறுதளிக்கும் மதவாதிகள், குறைபாட்டைக் கடவுளின் குழந்தையாக கற்பிக்கின்ற வரட்டுத்தனத்தை, இந்தக் கதை மூலம் மறைமுகமாக முன்வைக்கப்படுகின்றதா?
8.
திக்குவல்லை கமால் எழுதிய "மல்லிகா –சுல்ஃபிகா" என்ற கதை மத - இன முரண்பாடு கொண்ட சமூகச் சூழலில், இரு எதிர்நிலைக் குடும்பங்கள் சந்திக்கின்ற போது ஏற்படும் மனிதவுணர்வுகள் பற்றியது. மக்கள் மத்தியில் இன – மத வெறுப்பற்ற மனித இயல்பை, இந்தக் கதை பேசுகின்றது.
இயற்கையில் இருந்து உருவான மனிதர்களுக்கு இடப்படும் அடையாளங்கள், இயற்கையாக இருப்பதில்லை. மக்களின் வாழ்வியல் சூழலுடன் ஏற்பட்ட வேறுபாட்டை முரண்பாடாக்கி ஒடுக்குவதை, உழைப்பைச் சுரண்டி வாழும் வர்க்கங்களும், அதன் பிரதிநிதிகளுமே செய்கின்றனர்.
இனம், மொழி, நிறம், பிரதேசம், பொருளாதாரம், பண்பாடு.. சார்ந்த வேறுபாடுகள், இன்னொரு மக்கள் கூட்டத்துக்கு எதிராக இருப்பதில்லை. இங்கு மதம் என்பது தனிமனித நம்பிக்கை. இந்த நம்பிக்கை மற்றொரு நம்பிக்கைக்கு எதிராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
மனித வேறுபாடுகள் யாருக்கு அவசியமானது. மக்களை ஒடுக்கியாளும் சுரண்டும் வர்க்கமே, மக்களைப் பிரித்தாளுவதற்கு இவை அவசியமாகின்றது. சாதியின் பெயரால், பிரதேசத்தின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் .. மக்களைப் பிரித்து விடுகின்றனர்.
இந்தப் பிளவு மனிதத்தன்மையுடன் அணுகும் எந்த மனிதனிடமும் இருப்பதில்லை. இதையே இந்தக் கதை தெளிவுபடுத்துகின்றது. ஆனால் இந்தக் கதை தெளிவுபடுத்த எடுத்த சில எடுகோள்கள் எதிர்மறையாக இருக்கின்றது.
1.கொரோனா தொடர்பான மருத்துவ அறிவியலுக்கான பொது அறிவித்தலை – அதிகாரத்துடன் பொருத்திக் காட்டுவது மூலம், மருத்துவ உண்மைகளை எதிர்நிலைக்கு மாற்றிவிடுகின்றது.
2.பிணங்களை எரிப்பது தொடர்பாக பவுத்த சிங்கள அடிப்படைவாதிகள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை எதிர்க்கின்ற போது, மருத்துவ உண்மைகளை மதம் - இனம் சார்ந்து மறுதளிக்க முடியாது. புதைப்பதால் நோய் பரவும் என்று மருத்துவம் தெரிவித்தால் அதைப் பின்பற்ற வேண்டும் என்பதை தெளிவுபடுத்திக் கொண்டுதான், இன-மத வாதிகளின் அறிவியலுக்குப் புறம்பான வெறுப்புணர்வை அம்பலப்படுத்த வேண்டும். இங்கு முஸ்லிம் அடிப்படைவாதம் அறிவியல் உண்மையை மறுக்கின்றது என்பதை இனம் காணவும், காட்டவும் வேண்டும்.
9.
சம்மாந்துறை மசாறா எழுதிய "சுமக்க முடியாத சுமைகள்" மதத்தின் பெயரிலான
ஆணாதிக்க பாலியல் மூலம் பாதிக்கப்பட்ட பெண் பற்றிய கதை.முஸ்லீம் ஆண் நான்கு திருமணம் செய்யலாம் என்ற முகமதுநபியின் 6ம் நூற்றாண்டுக் கூற்று, பெண்களைச் சுரண்டும் ஆணாதிக்கத்தை மட்டுமல்ல – மனிதச் சிதைவுகளை இந்தக் கதை முன்வைக்கின்றது.
6ம் நூற்றாண்டில் முகமது நபி நடத்திய தொடர் யுத்தங்களால், யுத்தப் பிரதேசத்தில் ஆண்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து போனது. பெண்கள் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக சமூக ஒழுக்கக் கேடுகளும், வறுமையும், விபச்சாரமும் … பெருகியது. இதைத் தடுக்கவும், மக்கள் தொகையைப் பெருக்கவும் வசதியுள்ள ஆண்கள் நான்கு பெண்களைத் திருமணம் செய்யுமாறு கோரினார்;. இது அன்றைய சமூகத்தில் ஏற்பட்ட சமூக நெருக்கடிக்கான ஒரு தீர்வு.
இதை இஸ்லாம் மதத்தின் பெயரில் தொடர்வதும், நியாயப்படுத்துவதும், ஆணாதிக்க அமைப்பில் பெண்களுக்கு எதிரான கொடுமை. முஸ்லிம் சமூகத்தில் பெண்களைப் பாலியல்ரீதியாகச் சுரண்டவதற்கு, பெண்களை அடிமையாக வைத்திருப்பதற்கான அடிப்படையாக இருக்கின்றது. இந்தக் கதை அதை உணர்த்தி நிற்கின்றது.
தனிமனித மத நம்பிக்கையைக் கடந்து சமூக நம்பிக்கையாகத் திணிக்கும் போது, சமூகம் மீதான அதிகாரமாக, ஒடுக்குமுறையாக மாறுகின்றது. அறிவுபூர்வமற்ற, பகுத்தறிவற்ற .. மூட நம்பிக்கை கொண்ட மத அடிப்படையிலான சமூக அமைப்புமுறையை இந்தக் கதை கேள்விக்குள்ளாக்கவில்லை.
ஒடுக்குமுறை மத நம்பிக்கையின் பெயரில் இயங்கும் பொது, மதம் குறித்து பகுத்தறிவுபூர்வமாக கேள்வி எழுப்பாத கதை மக்களைச் சிந்திக்க வைப்பதில்லை.
இலங்கைத் தமிழர்கள் கதை சொல்லும் போது, வெள்ளாளியச் சமூகப் பண்பாட்டைச் சார்ந்து நின்று கதை சொல்லுகின்றனர். வெள்ளாளியச் சாதி அமைப்பைக் கேள்விக்குள்ளாக்காத தமிழர்கள் போல், முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமிய வாழ்க்;கையைக் கேள்விக்கு உள்ளாக்காத கதை என்பது, சமூக முரண்பாடுகளைத் தக்கவைக்கின்றது. தனிமனித எல்லைக்குள் தங்கள் வாழ்நிலையை மாற்றாது கதை சொல்வது, அந்த சமூக எல்லைக்குள் சமூகத்தை மண்டியிட வைக்கின்றது.
10.
அக்கரைப்பற்று ஆ.லெ.ஃபாத்திமா சன்பறா எழுதிய "உடைக்கப்பட்ட சிறகுகள்" என்ற கதை புலம்பெயர்ந்து செல்லும் பெண்கள் பற்றிய கதை.
மனித தேவைக்காக உழைக்கும் பெண், உழைப்பைக் கடந்து பல்வேறு கொடுமைகளைச் சந்திக்கின்றனர். இதில் பெண்கள் பாலியல்ரீதியாகவும், ஒழுக்கம் குறித்துமான தொடர் துன்புறுத்தலுக்குள்ளாகின்றனர்.
துயரங்களைத் தாங்கிய வண்ணம் உழைத்துக் களைத்த பெண்களின் உழைப்பு மீது சந்தை திணிக்கும் ஆடம்பர நுகர்வுப் பொருட்களுடன் திரும்பும் பெண்கள், பிறருக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம், ஆனால் அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக, சிறப்பாக அமைவதில்லை. இந்தக் கதை இதை எதார்த்ததுடன் வெளிப்படுத்துகின்றது.
பெண்களின் உழைப்புக்குக் கிடைக்கும் அற்பக் கூலி குடும்பத்தால் சுரண்டப்படுவதும், ஆடம்பர நுகர்வாக்கமாக அழிக்கப்படுவதும் நடந்தேறுகின்றது. உழைக்கும் பெண் உடல் பாலியல்ரீதியாக பல முனைகளில் சுரண்டப்படுவதும், உழைத்துவிட்டு வரும் பெண்ணை ஒழுக்கம் கெட்டவளாக சித்தரிப்பதை இந்தக் கதை பேசுகின்றது.
பெண்ணின் ஒழுக்கத்தை வரையறுக்கும் ஆணாதிக்கச் சமூகம் குறித்து கதை பேசவில்லை.
பெண்ணின் பாலியல் சார்ந்த பிரச்சனைகள், பாலியலுக்காக, புலம்பெயர்ந்த ஆண்கள் பெண்களைச் சுரண்டும் ஆணாதிக்கத்தை இந்தக் கதை பேசவில்லை.
பெண்களின் உழைப்பு எந்த நிலையில், எப்படிப்பட்ட வடிவத்தில் கொடூரமாக சுரண்டப்படுகின்றது என்பதைப் பேசவில்லை. இந்த உழைப்பு, அரபுலகை, சுரண்டிக் குவித்த பணக்காரர்களின் சொர்க்கமாக மாற்றியிருக்கும் எதிர்மறையைப் பேசவில்லை.
இந்தப் பெண்களை இந்த அவலநிலைக்கு ஆளாக்கி, பெண்களை ஏற்றுமதி செய்யும் அரசு பற்றியும், அரசின் அன்னியச் செலவாணி நோக்கம் குறித்த எதையும் பேசவில்லை. அன்னியச் செலவாணி எதற்காக, யாருக்காகத் திரட்டப்படுகின்றது என்பதைப் பற்றி, அதற்காக மனிதர்களை ஏற்றுமதி செய்வதை இந்த கதையில் காணமுடியாது.
முடிவாக
புதிய கலை இலக்கியவாதிகளுக்கு முன்னோடியாக இருக்கின்ற இலங்கை - இந்திய படைப்புகளைப் பின்பற்றுகின்ற பொதுப் புத்தியால், மக்கள் இலக்கியத்தைப் படைக்க முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்த சிந்தனையும், வாழ்வியலையும் தங்கள் நடைமுறை வாழ்வியலாகக் கொள்ளாதவர்கள் படைக்கின்ற இலக்கியம், ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்ததாகப் படைக்க முடியாது. சட்டியில் இருந்தாலே அகப்பபையில் வரும். இந்த உண்மையை மனிதகுலத்தை நேசிக்கும் படைப்பாளி புரிந்துகொள்ள வேண்டும்.இன்றைய முன்மாதிரியாக இருப்பது சாக்கடை. இதை விளங்கிக் கொண்டு கருவை அல்லது முரண்பாட்டைச் சுற்றி இயங்கும் அனைத்தும் தளுவிய உண்மையை உள்வாங்கிய இலக்கியமே மக்கள் இலக்கியமாக இருக்க முடியும். ஒடுக்கப்பட்ட மக்களைச் சாராத இன்றைய சாக்கடை இலக்கியமானது சுய பிழைப்புக்கானது. சுய புகழுக்கானது. பரஸ்பரம் முதுகு சொறிவதற்கானது.
மதுபானத்தைக் குடிக்கப் பயன்படும் சுவை உணவுகள் போல், சாக்கடை இலக்கியத்தில் சமூக முரண்கள் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு மது குடிப்பதே இலக்கு, சுவையை ரசிப்பதல்ல. இது போல் சாக்கடை இலக்கியத்தில் முரண்பாடுகள்;, தங்களைத் தாங்கள் சமூகத்துக்கு மேலாக முன்னிறுத்திக் கொள்வதற்கே. இதை விளங்கிக் கொண்டால், சிறந்த படைப்பை உருவாக்க முடியும்.
20.04.2026
"அன்பின் வழியது உயிர்நிலை" என்ற சிறுகதைத் தொகுப்பு மீதான அரசியல்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode