07_2006.jpg

குஜராத்தில் 2002இல் நடந்த பார்ப்பன பயங்கரவாத வெறியாட்டத்தின் போது, கீதாபென் என்ற இந்துப் பெண் பார்ப்பன பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டு வீதியில் வீசியெறியப்பட்டார். ஒரு முசுலீம் இளைஞனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதுதான் அவர் செய்த "குற்றம்'! இன்றும் அதேபோல் ஒரு காதல் விவகாரம்; அதே வெறியாட்டம். ஆனால், இந்து வெறியர்களின் இடத்தில் முசுலீம் மதவெறியர்கள். கீதாபென்னின்

 இடத்தில் பர்வீன். கொலைக்குப் பதில் அடித்து உதைத்து மொட்டையடித்து அவமானப்படுத்தல். வெட்கக்கேடு என்னவென்றால், குஜராத்தின் இடத்தில் தமிழ்நாடு!

 

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பழைய மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஜஹாங்கீர் ஒரு கூலித் தொழிலாளி. அவரது இரண்டாவது மகள் பர்வீனுக்கும் அதே பகுதியில் டீக்கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டு, வீட்டுக்குத் தெரியாமல் கடந்த ஜூன் 11ஆம் தேதியன்று கல்ராயன் மலையிலுள்ள வெள்ளிமலை கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தகவல் கிடைத்ததும் பர்வீனின் பெற்றோர் தமது மகளைக் காணவில்லை என்று கள்ளக்குறிச்சி போலீசு நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையறிந்த சுந்தரத்தின் நண்பர்கள், "18 வயது நிரம்பாத பெண்ணை அழைத்துக் கொண்டு சென்றுள்ளதால் போலீசார் உன்னைக் கைது செய்யக்கூடும்; எனவே, உடனே பர்வீனுடன் ஊருக்குத் திரும்பி விடு' என்று தொலைபேசி மூலம் சுந்தரத்துக்குத் தெரிவித்துள்ளார்கள். அதன்படியே சுந்தரமும் பர்வீனை அழைத்துக் கொண்டு கள்ளக்குறிச்சி போலீசு நிலையத்துக்கு 14ஆம் தேதியன்று வந்துவிட்டார். அங்கு போலீசார் கட்டப் பஞ்சாயத்து செய்து பர்வீனை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

 

போலீசு ஸ்டேஷனிலிருந்து அவர்கள் வீடு திரும்பும் வழியில் பள்ளிவாசல் பராமரிப்புப் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த {ஹமாயூன், சிராஜ், யாசின் உள்ளிட்ட 20 பேர் கொண்ட கும்பல், ""ஏண்டா உங்களுக்கு வேற மதத்து மாப்பிள்ளை கேக்குதா?'' என்று ஜஹாங்கீரையும் அவரது மனைவியையும் பர்வீனையும் சுற்றிவளைத்து தாக்கி, தெருவெங்கும் நாயைப் போல அடித்து இழுத்து வந்துள்ளது. ""ஏண்டி, இந்து மதத்தைச் சேர்ந்தவனையா காதலிக்கிற? பன்னி மேய்க்கிற பயலைத் தவிர வேறு எவனும் உன் கண்ணுக்குத் தெரியலையாடி?'' என்று கேட்டு ஆபாச வசவுகளுடன் பர்வீனைக் காட்டுமிராண்டித்தனமாக அடித்து உதைத்த அக்கும்பல், முடிதிருத்தும் தொழிலாளியான மணிகண்டன் என்பவரை மிரட்டி இழுத்து வந்து, ""இந்த முடி இருக்குறதாலதானே இவ புருஷனைத் தேடினா! இதை வெட்டுறா!'' என்று ஜஹாங்கீரின் வீட்டு முன்னே பர்வீனுக்கு மொட்டையடித்து அவமானப்படுத்தியுள்ளது.

 

இக்கொடுஞ்செயலைத் தடுக்க பர்வீனின் பெற்றோர்கள் காலில் விழுந்து கதறிய போதிலும், அவர்களை எட்டி உதைத்துவிட்டு, தமது "இலட்சியத்தை' நிறைவேற்றியுள்ளது, இந்த மயிர் பிடுங்கி மதவெறிக் கும்பல். இந்த அட்டூழியத்தை ஊரே கூடிநின்று வேடிக்கை பார்த்துள்ளதே தவிர, ஒருவர்கூட இதைத் தட்டிக் கேட்கவில்லை. புகார் கொடுக்க போலீசு நிலையம் சென்ற ஜஹாங்கீரை மிரட்டி விரட்டியுள்ளது போலீசு கும்பல். அதன்பிறகு ஜஹாங்கீரின் வீட்டைச் சுற்றி ஆட்களை நிறுத்தி, இந்த விவகாரம் பற்றி அவர் வேறெங்கும் புகார் செய்ய முடியாதபடி உருட்டி மிரட்டியுள்ளது இம்மதவெறிக் கும்பல்.

 

பின்னர், இக்கும்பலின் கண்ணில் படாமல் தப்பித்து விழுப்புரம் மாவட்ட போலீசு கண்காணிப்பாளரைச் சந்தித்து ஜஹாங்கீர் புகார் கொடுத்த பிறகுதான், இக்கொடுஞ்செயல் வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது. மாவட்ட போலீசின் தலையீட்டால் கள்ளக்குறிச்சி போலீசு முசுலீம் மதவெறிக் கும்பலைச் சேர்ந்த மூவர் மீதும், முடிதிருத்தும் தொழிலாளி மணிகண்டன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது. மற்றவர்கள் இன்னமும் சுதந்திரமாகத்தான் திரிகிறார்கள்.

 

""ஜஹாங்கீர் தனது மகள் வேற்று மதத்தவரைத் திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்து, என்னை அழைத்து மொட்டை அடிக்கச் சொன்னார்'' என்று மதவெறிக் கும்பலின் அச்சுறுத்தலுக்குப் பணிந்து பொய் வாக்குமூலம் கொடுத்துள்ளார், முடிதிருத்தும் தொழிலாளியான மணிகண்டன். "18 வயது நிறைவடையாத பர்வீனைக் கடத்திச் சென்று கற்பழித்து விட்டதாக' சுந்தரத்தின் மீது பொய் வழக்கு போட்டு இந்த விவகாரத்தை திசைதிருப்பவும் மதவெறிக் கும்பல் முயற்சித்து வருகிறது.

 

இசுலாம் ஒரு மதமல்ல் வாழ்க்கைக்கான மார்க்கம்; இங்குதான் சகோதரத்துவமும் பெண்களுக்குச் சுதந்திரமும் இருக்கிறது என்றெல்லாம் இசுலாமிய அடிப்படைவாதிகள் உபதேசம் செய்கிறார்கள். ஆனால், தமது மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எந்தவொரு இசுலாமிய அடிப்படைவாத இயக்கமும் பர்வீன் மீது ஏவிவிடப் பட்ட காட்டுமிராண்டித்தனத்தை இதுவரை கண்டிக்கவில்லை. எந்தவொரு ஜமாத்தும் இசுலாமிய ஏழைப் பெண் மீது நடத்தப்பட்டுள்ள இக்கொடுஞ்செயலுக்கு எதிராக வாய்திறக்கவில்லை.

 

""என்னை மாதிரியே எங்க ஊருல ஒரு முசுலீம் பொண்ணு. இந்து பையனோட ஓடிப் போயிருக்கு; அந்தப் பெண்ணோட அப்பா வசதியானவரு. இவனுங்களுக்குத் தைரியம் இருந்தா அந்தப் பொண்ணுக்கும் மொட்டையடிக்க வேண்டியதுதானே? எனக்கு மொட்டையடிக்க இவனுங்க யாரு?'' என்று கோபம் கொப்பளிக்க கேட்கிறார் பர்வீன். பணக்காரர்கள் என்றால் பல்லிளிப்பு; ஏழைகள் என்றால் காட்டுமிராண்டித்தனம் என மதவெறியர்கள் இரட்டை அளவுகோல்களை வைத்திருப்பதை அவர் உடைத்துக் காட்டிவிட்டார்.

 

கள்ளக்குறிச்சி பள்ளிவாசல் சொத்தை யார் முழு உரிமையோடு பொறுக்கித் தின்பது என்பதில் இரு மதவெறி கோஷ்டிகளுக்கிடையே நடக்கும் அதிகாரச் சண்டையில் பலிகிடாவாக்கப்பட்டுள்ள ஏழைப் பெண்தான் பர்வீன். "நாங்கள்தான் இசுலாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விசுவாசமாகக் கடைபிடிப்பவர்கள்' என்று தமது ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் எதிர்கோஷ்டிக்கு நிரூபித்துக் காட்டுவதற்காக ஒரு கோஷ்டி இப்படியொரு காட்டுமிராண்டித்தனத்தை தாலிபான் வழியில் நடத்தியிருக்கிறது. பள்ளிவாசல் பராமரிப்பு சங்கத் தலைவராக இருப்பவர் தி.மு.க.வின் இளைஞர் அணி அமைப்பாளராம். பகுத்தறிவு திராவிடம் காலிப் பெருங்காய டப்பாவாகி, சிறுபான்மையினர் ஓட்டுக்காக இத்தகைய மதவெறியர்களைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்துமளவுக்கு பிழைப்புவாதத்தில் தி.மு.க. புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது.

 

""நாட்டுல யாருக்குமே நடக்காத கொடுமையும் அசிங்கமும் எம்பொண்ணுக்கு நடந்திருக்கு. இனிமே நாங்க எப்படி வெளியே தலைகாட்டுவோம்னே தெரியலையே!'' என்று வேதனையில் புலம்புகிறார் ஜஹாங்கீர். மதவெறி குண்டர்களின் தாக்குதலால் வீங்கிப் போன கன்னங்களோடும் மொட்டைத் தலையோடும் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் பர்வீன், ""என்னை அடித்து அவமானப்படுத்திய ஒருத்தன் விடாம எல்லாருக்கும் தண்டனை கொடுக்கணும்'' என்று குமுறுகிறார். இது வெறும் குமுறல் அல்ல மதவெறி காட்டுமிராண்டித்தனத்தை எதிர்க்கும் ஒவ்வொருவருக்கும் விடப்பட்டுள்ள சவால்! பெரியார் பிறந்த மண் என்ற பெருமையுடன் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்குமா அல்லது மதவெறிக் காட்டுமிராண்டிகளின் அட்டூழியங்களுக்குத் தலைவணங்கி அவமானங்களையும் அடக்குமுறைகளையும் சுமந்து கொண்டு நிற்குமா என்பது மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் போராட்டத்தைப் பொறுத்தே உள்ளது.

 

மு தமிழ்மணி