நீதிபதி: எனது மேசையின் மீதுள்ள ஆவணங்கள், ""இவர் முக்தர் அல்ல'' எனத் தெளிவாகக் காட்டுகின்றன. ஆகையால், இவரின் உண்மையான பெயர் என்ன?


போலீசு அதிகாரி: அஃப்டாப் ஆலம் அன்சாரி என்பது இவரின் உண்மையான பெயர்.
நீதிபதி: நீங்கள் தவறான நபரைக் கைது செய்துள்ளீர்கள் என்பதுதான் இதன் பொருள். இந்தக் கொடூரமான தவறு எப்படி நடந்தது?

 

நீதிபதியின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் போலீசு அதிகாரி மௌனமாக நிற்கிறார்.


— இது ஏதோவொரு திரைப்படத்தின் திரைக்கதை வசனம் அல்ல. கடந்த ஆண்டு (2007) நவம்பர் மாதம் உ.பி.யில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த உண்மையான விசாரணை இது.


இந்த விசாரணையின் முடிவில் அஃப்டாப் ஆலம் அன்சாரி, கொல்கத்தா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி என்பதும், உ.பி.யில் நடந்த குண்டு வெடிப்புக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் நிரூபணமாகி, அவர் விடுதலை செய்யப்பட்டார்.


அப்பாவி அஃப்டாப் தீவிரவாதியாக உருமாற்றம் செய்யப்பட்ட கதையோ, புலனாய்வு என்ற பெயரில் போலீசார் நடத்திவரும் அத்துமீறல்களையும், அவர்களின் அடிமுட்டாள்தனத்தையும் ஒரு சேர அம்பலப்படுத்துகிறது. ""உ.பி.யில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக முகம்மதுகாலித், தாரிக் குவாஸ்மி என்ற இரு தீவிரவாதிகளைக் கைது செய்து உ.பி. போலீசு விசாரணை நடத்தியபொழுது, அவர்கள் உ.பி. குண்டு வெடிப்பின் மூளையாகச் செயயல்பட்டவன் "முக்தர் என்ற ராஜு என்ற அஃப்டாப்' என்றும்; அவன் கோரக்புரைச் சேர்ந்தவன் என்றும் சாட்சியம் அளித்தார்களாம். கொல்கத்தாவைச் சேர்ந்த அஃப்டாபையும் முக்தர் எனச் செல்லமாக அழைக்கும் பழக்கம் இருந்ததாலும், அவரும் கோரக்புரைச் சேர்ந்தவர் என்பதாலும் இந்த இரண்டு பொருத்தங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, கூலித் தொழிலாளி அஃப்டாபைக் குண்டு வைக்கும் தீவிரவாதியாகக் குற்றஞ் சுமத்திக் கைது செய்திருக்கிறது, உ.பி. போலீசு.


இனி இந்தியாவிலேயே பிறந்து, வளர்ந்து, வசித்துவரும் பின்லேடன்கள்கூட, போலீசாரின் புலனாய்வு திறனை எண்ணிக் கொஞ்சம் உஷாராகத்தான் இருக்க வேண்டும்; ஏதோ நகைச்சுவைக்காகவோ, அப்பாவிகளைப் பயமுறுத்துவதற்காகவோ இதனைச் சொல்லவில்லை. அப்பாவி முசுலீம்களைத் தீவிரவாதிகளாக முத்திரை குத்துவதோடு, குண்டு வைப்புகளை போலீசாரே ""செட்அப்'' செய்வதும் பல்வேறு வழக்கு விசாரணைகளின் பொழுது அம்பலமாகியிருக்கிறது.


""தில்லியைச் சேர்ந்த முகம்மது மொயரிஃப் கயாமர், இர்ஷத் அலி என்ற இருவரும் ""அல் பதார்'' இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்றும்; அவர்களிடமிருந்து 2 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு மருந்தும், சில கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாகவும் கூறி, அவர்களை பிப். 9, 2006 அன்று கைது செய்ததாக''ப் பத்திரிகைகளுக்கும், அந்த இருவரின் பெற்றோர்களுக்கும் தில்லி சிறப்புப் போலீசும், மைய அரசின் உளவுத் துறையும் தகவல் கொடுத்தன. இவ்வழக்கு விசாரணையின்பொழுது, போலீசாரின் சாட்சியங்களில் பல ஓட்டைகள் இருப்பதனைக் கண்டறிந்த தில்லி உயர்நீதி மன்றம், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.


சி.பி.ஐ. விசாரணையில், ""கயாமர் டிச.22, 2005 அன்று அவரது வீட்டில் இருந்து அடையாளம் தெரியாத சிலரால் கடத்தப்பட்டதும்; இர்ஷத் அலி, அதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே காணாமல் போய்விட்டதும்; அவர்கள் இருவரும் தில்லி போலீசு மற்றும் உளவுத்துறையால் சட்டவிரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்யப்பட்டதோடு, ஆர்.டி.எக்ஸ் மருந்து மற்றும் கைதுப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது என்பதெல்லாம் தில்லி சிறப்புப் போலீசாரே ""செட்அப்'' செய்து நடத்திய நாடகம் என்பதும்'' அம்பலமானது. கயாமரும், இர்ஷத் அலியும் அப்பாவிகள் என்பது தெரிந்து போனாலும் அவர்கள் இன்றுவரை சிறைக் கைதிகளாகத்தான் இருந்து வருகின்றனர்.


அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட சில தினங்கள் கழித்து, மும்பய் போலீசார் முகம்மது அப்ரோஸ் என்பவரைக் கைது செய்தனர். ""முகம்மது அஃப்ரோஸ் கொடிய தீவிரவாதி என்றும்; விமானத்தை ஏவுகணை போலப் பயன்படுத்தி, இங்கிலாந்திலும், ஆஸ்திரேயாவிலும் தாக்குதல் நடத்த அஃப்ரோஸ் திட்டமிட்டிருந்ததாகவும்'' பத்திரிகைகளுக்கு போலீசார் செய்தி கொடுத்தனர். முகம்மது அஃப்ரோஸின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த, ஒரு போலீசு குழு இங்கிலாந்துக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் பறந்து போனது. போலீசாரின் இந்த நாடகபாணி முனைப்புகள் அனைத்தும் விசாரணையின்பொழுது நீர்க்குமிழி போல வெடித்துப் போயின. அஃப்ரோஸைத் தீவிரவாதி என நிரூபிக்க போலீசாரால் ஒரு சிறு தடயத்தைக் கூட காட்ட முடியவில்லை என்பதோடு, அவ்வழக்கு போலீசாரால் புனையப்பட்ட பொய்வழக்கு என்பதும் அம்பலமானது.


ராசஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவில் அக்.11, 2007 அன்று நடந்த குண்டு வெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இக்குண்டுவெடிப்பு நடந்தவுடனேயே, ""வங்காள தேசத்தைச் சேர்ந்த ஹர்கத்அல்ஜிகாத் அமைப்புதான் இக்குண்டு வெடிப்பை நடத்தியிருப்பதாகவும், அவ்வமைப்பு பள்ளிவாசல்கள், மதரசாக்களை மையமாக வைத்து இயங்குவதாகவும்'' போலீசார் அடித்துச் சொன்னார்கள். தாங்கள் சொன்னதை நிரூபிப்பது போல, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், உ.பி., தில்லி ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களிலும், மதரசாக்களிலும் தேடுதல் வேட்டை நடத்தி பல முசுலீம் மத குருமார்களையும், மதரசா ஆசிரியர்களையும் கைது செய்தனர். ஆனால், ஆஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பையும், கைது செய்யப்பட்டவர்களையும் இணைப்பதற்கு ஒரு ஆதாரத்தைக் கூட உருவாக்க முடியாமல் போனதால், கைது செய்யப்பட்டவர்கள் கடும் சித்திரவதைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு மாநில போலீசாரின் கையில் இருந்து நழுவி சி.பி.ஐ. வசம் போய்விடக் கூடாது என்பதற்காகவே போலீசார் அவசரக்குடுக்கைத்தனமாக நடந்து கொண்டதாக முதலாளித்துவப் பத்திரிகைகளே இவ்வழக்கு விசாரணையை அம்பலப்படுத்தியுள்ளன.


ஆஜ்மீர் தர்கா குண்டு வெடிப்புக்கு முன் நடந்த ஹைதராபாத் குண்டு வெடிப்பிலும் ஹர்கத்அல் ஜிகாத் தொடர்புபடுத்தப்பட்டதோடு 20 இசுலாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த இளைஞர்களை அக்குண்டு வெடிப்போடு தொடர்புபடுத்த போதிய ஆதாரம் சிக்காததால், ஹைதராபாத் போலீசார் தங்களின் மானத்தைக் காத்துக் கொள்ள, அவ்விளைஞர்கள் அரசுக்கு எதிராகப் போர் தொடுக்கத் திட்டமிட்டதாகக் குற்றஞ்சுமத்தி, அவர்களைப் புதிய வழக்கில் சிக்க வைத்தனர். இப்புதிய வழக்கிற்கு போலீசார் காட்டிய ஆதாரம், அவ்விளைஞர்களிடம் இருந்து "கைப்பற்றப்பட்ட' குஜராத் இனக்கலவரம் தொடர்பான ஒளிக் குறுந்தகடுகள்தான்!


மும்பையில் உள்ள காட்கோபர் பகுதியில் 2002ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக க்வாஜா யுனுஸ் என்ற கணினிப் பொறியாளர் கைது செய்யப்பட்டார். வளைகுடா நாடுகளில் வேலை செய்துவிட்டு இந்தியா திரும்பியவர் என்பதால், க்வாஜா யுனுஸ் மீது போலீசாருக்குப் பெருத்த சந்தேகம் இருந்தது. சனவரி 7, 2002 அன்று க்வாஜா யுனுஸ் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து போனார். யுனுஸை விசாரணைக்காக மும்பையில் இருந்து அவுரங்காபாத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த பொழுது, அவர் தங்களிடமிருந்து தப்பியோடி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


ஆனால், இம்மர்மச் சாவு குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், க்வாஜா யுனுஸ் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டது அம்பலமானது. இக்கொட்டடிக் கொலை தொடர்பான வழக்கு விசாரணை மும்பய் உயர்நீதி மன்றத்தில் ஐந்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. ""யுனுஸைக் கொன்றது தொடர்பாக இரகசிய போலீசாரால் குற்றஞ் சுமத்தப்பட்ட பத்து உயர் போலீசு அதிகாரிகள், வழக்கில் இருந்து பின்னர் ஏன் விடுவிக்கப்பட்டனர்?'' என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு, மதச்சார்பற்ற காங்கிரசு கூட்டணி அரசாங்கம் பதில் தராமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. இக்குண்டு வெடிப்பு தொடர்பாக, ""தடா''வின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டது தனிக்கதை.


முசுலீம் தீவிரவாதம் மக்களுக்கு எதிரானதல்ல என்பதோ, முசுலீம் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகள் போன்ற அழிவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்பதோ நமது வாதமல்ல. ஆனால், அனைத்துக் குண்டு வெடிப்புகளுக்கும் முசுலீம் தீவிரவாதத்தை மட்டுமே குற்றவாளியாக்குவதும்; வகைதொகையின்றி அப்பாவி முசுலீம்களைக் கைது செய்து சித்திரவதை செய்வதும், போலி மோதல் கொலைகளில் அழித்தொழிப்பதும்; போலீசும், அதிகார வர்க்கமும் முசுலீம் சமூகத்தையே குற்றப் பரம்பரையினர் போல நடத்துவதும் ஏன் என்பதுதான் நமது கேள்வி.


போலீசு உள்ளிட்ட அரசு இயந்திரம் முழுவதும் காவிமயமாகிவிட்டதன் அறிகுறி என்று இந்த அத்துமீறல்களை நாம் குறிப்பிடுகிறோம். ஆனால், இந்துமதவெறி பாசிஸ்டுகள் மட்டுமின்றி, நடுத்தர வர்க்கத்தினர் கூட, கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் தான் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும் என வாதிட்டு, இந்த அத்துமீறல்களை நியாயப்படுத்துகின்றனர். காவிமயமான இந்த அரசு பயங்கரவாதம் ஒருபுறம் அப்பாவி முசுலீம்களின் வாழ்க்கையையும், உயிரையும் பறித்துவிடுவதோடு, மறுபுறம் முசுலீம் தீவிரவாதம் வளர்வதற்கான வளமான சூழலைதான் ஏற்படுத்திக் கொடுக்கிறது.


முசுலீம் தீவிரவாதம் வளரவில்லை என்றால், அரசு பயங்கரவாதமும், இந்து மதவெறி பயங்கரவாதமும் தமது இருத்தலை நியாயப்படுத்திக் கொள்ள முடியாது என்பதல்லவா உண்மை!


· தனபால்