சிதம்பரம் நடராஜர் கோவில் கருவறையின் எதிரே அமைந்துள்ள திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடுவதை தில்லைவாழ் தீட்சிதர்கள், சாதிவெறி கொண்டு தடுத்து வருவதையும்; அப்பார்ப்பனக் கும்பலின் விருப்பத்துக்கு ஏற்ப சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றம், சிவனடியார் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல
மேடையேறித் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு இடைக்கால தடை விதித்திருந்ததையும்; அத்தடையை மீறி ஆறுமுகசாமி பாடச் சென்ற பொழுது, அவரையும், அவருக்கு ஆதரவாகச் சென்றவர்களையும் கோவில் வாசலைக்கூட நெருங்க விடாமல் தடுத்து போலீசார் கைது செய்ததையும் கடந்த இதழில் விரிவாக எழுதியிருந்தோம். தமிழ் மொழியின் சுயமரியாதையைக் காக்க, சிறு பொறியாக எழுந்த அந்தப் போராட்டம், இப்பொழுது மக்கள் இயக்கமாக வளர்ந்து வருகிறது.
போலீசையும், நீதிமன்றத்தையும் கைத்தடியாக வைத்துக் கொண்டு பீதியூட்டினால், போராட்டம் பிசுபிசுத்துப் போய்விடும் என தீட்சிதர் கும்பல் கனவு கண்டது. ஆனால், தமிழுக்காகப் போராடுபவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும்; நீதிமன்றம் போலீசின் பார்ப்பனக் கைக்கூலித்தனத்தை அம்பலப்படுத்தியும் உடனடியாக எடுக்கப்பட்ட சுவரொட்டி இயக்கமும்; அதனைத் தொடர்ந்து நடந்த தெருமுனைப் பிரச்சாரம், கண்டனப் பொதுக்கூட்டம் ஆகியவையும் தீட்சிதர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டன.
சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடச் சென்ற சிவனடியார் ஆறுமுகசாமியைத் தாக்கியும் தடுத்தும் வெறியாட்டம் போடும் தீட்சிதர் பார்ப்பனர்களைக் கண்டித்து, ஆகஸ்டு 5 அன்று, சிதம்பரம் மேலவீதியில் உள்ள பெரியார் திடலில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்பாக, இப்பிரச்சினையை விளக்கி சிதம்பரம் நகரின் முக்கிய இடங்களிலும் மற்றும் அண்ணாமலை நகர், குமுடிமூலை, கீரப்பாளையம், புத்தூர், காட்டுமன்னார் கோயில், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
மனித உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைத்து நடத்திய இத்தெருமுனைக் கூட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், சி.பி.எம்., வி.வி.மு., பு.ஜ.தொ.மு., ஆகிய அமைப்புகளும்; வழக்குரைஞர்கள் திருமார்பன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இத்தெருமுனைக் கூட்டங்களில், தமிழையும், தமிழனையும் இழிவுபடுத்தும் தீட்சிதர்களின் சாதித் திமிரும்; அக்கும்பல் தங்களின் காமவெறி களியாட்டங்களுக்கு நடராஜர் கோவிலைக் கேடாகப் பயன்படுத்தி வருவதும் அம்பலப்படுத்தப்பட்டது.
கண்டனப் பொதுக்கூட்டத்தின் அவசியத்தை விளக்கி கடலூர் மாவட்டம் முழுவதும் பேருந்துப் பிரச்சாரம் செய்யப்பட்டதோடு, பொதுமக்கள் மத்தியில் 25,000 துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன; 1,000க்கும் அதிகமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
சிவனடியார் ஆறுமுகசாமி முன்னிலை வகிக்க, மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராசு தலைமையில் ஆகஸ்ட் 5 அன்று நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில், முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. வீ.வீ.சுவாமிநாதன்; பா.ம.க.வின் மாநிலத் துணைத் தலைவர் திரு. வீ.எம்.எஸ்.சந்திரபாண்டியன்; பா.ம.கவின் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. வேல்முருகன்; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் தோழர் பால்கி; சி.பி.எம்.இன் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் செ.தனசேகரன்; சி.பி.ஐ.இன் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் மணிவாசகம்; விடுதலைச் சிறுத்தைகள் இணைப் பொதுச் செயலாளர் தோழர் மா.செ.சிந்தனைச் செல்வன்; திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் தோழர் துரை சந்திரசேகரன்; விடுதலைச் சிறுத்தைகள் கடலூர் மாவட்டச் செயலர் தோழர் இரா. காவியச் செல்வன்; கடலூர் நகரத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேரா. இரா.ச.குழந்தைவேலனார் மற்றும் ம.க.இ.க. மாநில இணைப் பொதுச்செயலாளர் தோழர் காளியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
""சிவனடியார் ஆறுமுகசாமி தனியொரு ஆளில்லை; அவருக்குப் பின்னே தமிழ் ஆர்வலர்கள் திரண்டுள்ளனர்'' எனச் சுட்டிக் காட்டப்பட்ட இப்பொதுக்கூட்டத்தில், ""சிதம்பரம் நடராஜர் கோவிலை தீட்சிதர்களின் கைகளில் இருந்து பிடுங்கி மக்கள் சொத்தாக மாற்ற வேண்டும்; ஆலயத்தை முற்றுகையிடும் மக்கள் போராட்டத்தை நடத்த வேண்டும்'' என்ற கருத்துகளும் வலியுறுத்தப்பட்டன. 2,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தன்னார்வத்தோடு திரண்டு வந்து பங்கேற்ற இக்கண்டனப் பொதுக்கூட்டத்தில், ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
""திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாட வேண்டும்'' என்ற ஆறுமுகசாமியின் கோரிக்கைக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகுவதைக் கண்டு ஆடிப் போன தீட்சிதர் கும்பல், தில்லை திருமறைக் கழகம், அர்த்தஜாம சிவபுராணக்குழு போன்ற ""லெட்டர் பேடு'' அமைப்புகளில் புகுந்து கொண்டு, ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை சிதம்பரத்தில் நடத்தியது. தீட்சிதர்களே பசை வாளியைத் தூக்கிக் கொண்டு போஸ்டர் ஒட்டி நடத்திய இக்கலந்துரையாடல் கூட்டத்தில், பார்ப்பன பாதந்தாங்கிகளைத் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை. ""தேவாரம் பாட வேண்டும் என வீண் விவகாரம் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்'' எனப் பேசி வன்முறையைத் தூண்டி விட இக்கலந்துரையாடலைப் பயன்படுத்திக் கொண்டது. தீட்சிதர் கும்பல்.
இதுவொருபுறமிருக்க, ஆறுமுகசாமிக்கு எதிராக தீட்சிதர்கள் தொடுத்த வழக்கை, ஊறப் போடும் விதத்தில் நீதிமன்றம் மெத்தனமாக நடந்து கொண்டது. இதனைக் கண்டித்தும், ஆறுமுகசாமி தேவாரம் பாட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்; வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் எனக் கோரியும் 28.7.06 அன்று நீதிமன்றத்தின் முன் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வழக்கு விசாரணையின் பொழுது, ""ஆறுமுகசாமி கால பூஜை நேரத்தில் தேவாரம் திருவாசகம் பாடப் போவதாகக் கூறுகிறார். அதனால்தான், அவர் பாடத் தடை விதிக்கக் கோருகிறோமேயன்றி, எங்களுக்கு வேறு உள்நோக்கம் இல்லை'' என தீட்சிதர் கும்பல் நியாயவான்களைப் போல வாதாடினர். இதற்குப் பதில் அளித்த ஆறுமுகசாமி தரப்பு வழக்குரைஞர்கள், ""பூஜை நேரத்தில் தேவாரம் திருவாசகம் பாடக் கோரமாட்டோம் என இங்கேயே எழுதித் தந்து விடுகிறோம். மற்ற நேரங்களில் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையேறிப் பாடுவதைத் தடுக்கக் கூடாது'' எனக் கூறி, தீட்சிதர்களின் பாசாங்கை அம்பலப்படுத்தினர்.
ஆனால், ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையேறித் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை, நிரந்தரத் தடையாக மாற்றி வெளிவந்திருக்கும் உரிமையியல் நீதிமன்றத் தீர்ப்போ, எவ்விதப் பாசாங்கும் இன்றி அப்பட்டமாகத் தீண்டாமையைத் தூக்கிப் பிடிக்கிறது.
""தீட்சிதர்களைத் தவிர்த்து மற்றவர்களையும் பாட அனுமதித்தால் அந்தத் திருக்கோயிலின் புனிதத் தன்மை கெட்டு விடும்; கோயிலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பும், நட்டமும் ஏற்படும். எதிர்மனுதாரர் ஆறுமுகசாமியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் திருச்சிற்றம்பல மேடையில் கலவரம் ஏற்பட வாய்ப்புண்டு. கனகசபை மீது ஏறி நின்று பாடுவதற்கு தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஐதீக நடைமுறை, பழக்க வழக்கம் தடையாக உள்ளது. அப்படி பாட முற்பட்டால் அது கோயிலின் நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறிய செயலாகும்.''
""மீண்டும் மீண்டும் அவர் திருச்சபையில் பாடவேண்டும் என்று பலருடைய கெட்ட துர்போதனைகளின் மூலமாகச் செயல்பட்டு வருவது நன்கு தெரிகிறது. கடலூர் மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மைய நிர்வாகிகள் தூண்டுதலின் பேரில் இந்த எதிர்மனுதாரர் செயல்பட்டு வருகிறார்'' எனப் பார்ப்பனக் கும்பலே அதிசயிக்கும்படி தீண்டாமை விஷம் தீர்ப்பில் கக்கப்பட்டுள்ளது.
தீட்சிதர்களைத் தவிர்த்து மற்றவர்களைப் பாட அனுமதித்தால், அந்தத் திருக்கோயிலின் புனிதத்தன்மை கெட்டு விடும் என்பதற்கு, தீண்டாமை சாதிப் பாகுபாட்டைத் தவிர வேறென்ன பொருள் கொள்ள முடியும்?
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, 8.5.2000 அன்று ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையேறிப் பாட முயன்றபொழுது, தீட்சிதர்கள் கோயிலுக்குள்ளேயே, பக்தர்களின் கண் முன்னாலேயே ஆறுமுகசாமியைக் கொடூரமாகத் தாக்கி, கையை முறித்து, கோவிலுக்கு வெளியே வீசியெறிந்தனர். அதனால்தான், ஆறுமுகசாமி, தான் திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாடுவதற்கு போலீசு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருந்தார். இதன்படி பார்த்தால், தீட்சிதர்களைத்தான் வன்முறையாளர்களாகக் குற்றம் சாட்டியிருக்க வேண்டும். ஆனால், தீர்ப்போ, மற்றவர்களை (பார்ப்பனர் அல்லாதவர்களை) வன்முறையாளர்களாக, அபாண்டமாகப் பழி சுமத்துகிது.
ஆறுமுகசாமி பாடுவதற்குத் தடை கேட்டு தீட்சிதர்கள் கொடுத்திருந்த மனுவில், கோவிலில் விலையுயர்ந்த நகைகள் இருப்பதை ஒரு காரணமாகக் காட்டியிருந்தனர். தீட்சிதர்களின் இந்த வாதத்தைதான், ""மற்றவர்களைப் பாட அனுமதித்தால் கோயிலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பும், நட்டமும் ஏற்படும்'' எனத் தீர்ப்பு வாந்தியெடுத்துள்ளது.
கோயிலுக்கு வரும் வருமானம் பற்றி முறையாகக் கணக்குக் காட்ட மறுக்கும் தீட்சிதர்கள்; அந்த ஆலயத்தின் நிர்வாகத்தைக் கண்காணிக்க அரசு அதிகாரி நியமிக்கப்படுவதை எதிர்க்கும் தீட்சிதர்கள் கோயில் நகைகள் பற்றி ஒப்பாரி வைப்பது மோசடித்தனமானது. மேலும், ஏற்கெனவே கோயில் நகைகள் காணாமல் போனதற்கும், தீட்சிதர்களுக்கும் தொடர்புண்டு என்பது ஊரறிந்த உண்மையாக இருக்கிறது.
""இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக, 1000 ஏக்கர் நிலமுள்ளது; உண்டியல் வைக்காமல், பக்தர்களிடமிருந்து தீட்சிதர்களே நேரடியாகப் பணம் பெறுகிறார்கள். நகைகள் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் காரணங்களால் இக்கோவிலில் அரசு நிர்வாக அதிகாரியை நியமிப்பது சரி'' என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வெங்கடாசலய்யா 1997இல் தீர்ப்பளித்திருக்கிறார்.
மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியன், விஜய நகரப் பேரரசன் கிருஷ்ண தேவராயன், பல்லவ மன்னன் சிங்க தேவன் ஆகிய மன்னர்களால் கட்டப்பட்டது சிதம்பரம் நடராஜர் கோயில் என்பதுதான் வரலாறு. சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரத்தில் தற்பொழுது வசித்து வரும் வீரப்ப சோழனார் என்ற முன்னாள் ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்களிடம்தான் நடராஜர் கோவிலின் நிர்வாகம் இருந்து வந்தது. இரவில் கோவில் நடையை மூடிய பிறகு, கோவில் சாவியைப் பல்லக்கில் வைத்து பிச்சாவரம் சோழனார் ஜமீன்தார் வீட்டில் ஒப்படைக்க வேண்டும். காலையில் போய் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் மரபாக இருந்து வந்தது. அந்த ஜமீன்தார் குடும்பத்தை ஏமாற்றி, கோவில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள் என்பது உலகமே அறிந்த உண்மை. வடநாட்டில் இருந்து ஓட்டி வரப்பட்டு சிதம்பரத்தில் குடியமர்த்தப்பட்ட தீட்சிதர்கள், இப்பொழுது சிதம்பரம் கோயில் தொன்று தொட்டே தங்களுக்குச் சொந்தமாக இருந்து வருவதாக வரலாற்றையே திரித்து விட்டார்கள்.
இப்படிப்பட்ட நிலையில், முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த கதையாக, தீட்சிதர்களை யோக்கியவான்களாகவும், மற்றவர்களைத் திருடர்கள் போலவும் தீர்ப்பு அபாண்டமாகப் பழி போடுகிறது.
ஐதீகம் மரபைக் காட்டி, திருச்சிற்றம்பல மேடையில் தீட்சிதர்கள்தான் தேவாரம்திருவாசகம் பாட உரிமை படைத்தவர்கள் என்கிறது தீர்ப்பு. ஆனால், 1987க்கு முன்பு வரை, தீட்சிதர்கள் கூட திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் பாடியது கிடையாது. திருச்சிற்றம்பல மேடைக்குக் கீழிருக்கும் மகாமண்டபத்தைத் தாண்டி தேவாரம் திருவாசகம் வருவதற்கு தீட்சிதர்கள் அனுமதித்ததேயில்லை. இத்தீண்டாமைக்கு எதிராக தமிழ் அறிஞர்கள் நடத்திய போராட்டத்தாலும்; 1987இல் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த வீ.வீ. சுவாமிநாதன் கொடுத்த நெருக்குதலாலும், தீட்சிதர்கள் தாங்களே திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் பாடுவதாகச் சமரசம் செய்து கொண்டார்கள்.
1999இல் கடலூர் மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படி, சிவனடியார் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடை ஏறி, தேவாரம் திருவாசகம் பாடி நடராஜனை வழிபட்டுள்ளார். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தவுடன், மற்றவர்களும் திருச்சிற்றம்பல மேடை ஏறிப் பாடி விடுவார்களோ என அரண்டு போன தீட்சிதர் கும்பல், தங்களுக்கு மட்டுமே அந்த உரிமையுண்டு எனப் புளுகத் தொடங்கியது. தங்கள் சுய இலாபத்திற்காக ஐதீகம் மரபுகளை உடைப்பதும், உருவாக்குவதும் பார்ப்பனர்களுக்குக் கைவந்த கலையல்லவா!
எல்லாவற்றுக்கும் மேலாக, ஏழாம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு வரை தமிழகக் கோயில்களில் தேவார திருவாசகமும், நாலாயிர திவ்ய பிரபந்தங்களும் ஓதப்பட்டதற்கான கல்வெட்டுச் சான்றுகள் ஏராளமாக உள்ளன. பார்ப்பனர்களைப் போலவே, தீர்ப்பும் இந்த வரலாற்று உண்மைகளைக் குழி தோண்டி புதைத்து விட்டு, தமிழுக்கும், தமிழனுக்கும் தடை போடுகிறது, சிதம்பரம் கோயிலில் விற்கப்படும் ""ஸ்தல புராணம்'' என்ற புத்தகத்தில் (இதுதான் தீட்சிதர்கள் கொடுத்த வரலாற்று ஆதாரமும்கூட) கூறப்படும் ""வரலாற்று''ப் பிதற்றல்களை ஆதாரமாகக் காட்டும் இந்தத் தீர்ப்பை, அறிவும், மானமும் உள்ள எவரேனும் ஏற்றுக் கொள்ள முடியுமா?
ஆறுமுகசாமியை மனித உரிமை பாதுகாப்பு மையம் தூண்டி விடுவதாகப் புலனாய்வு செய்திருக்கிறது தீர்ப்பு. 1999இல், திருச்சிற்றம்பல மேடை ஏறிப் பாட முயன்ற ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் தடுத்தபொழுது, ஆறுமுகசாமி கடலூர் மாவட்ட நீதிபதியிடம் தனது வழிபாட்டு உரிமைக்காக மனு கொடுத்தார். அப்பொழுது அந்த உரிமைக்காக அவரைத் தூண்டிவிட்டது யார் என்றும் புலனாய்வு செய்திருந்தால், தீர்ப்பு இன்னும் தெளிவாக இருந்திருக்கும்.
""நந்தன் முக்தியடைந்த இடம் தான் சிதம்பரம் நடராஜர் கோவில்'' என்ற பார்ப்பனப் புளுகை, வரலாற்று மோசடியை மேற்கோள் காட்டும் தீர்ப்பில், உண்மையையும், நியாயத்தையும் முட்டாள்கூடத் தேட மாட்டான்.
நியாயமாகப் பார்த்தால் தமிழர்களைத் தீண்டத்தகாதவர்களாகவும், திருடர்களாகவும், வன்முறையாளர்களாகவும் சித்தரித்துத் தீர்ப்பை எழுதிய நீதிபதி அம்பேத்கரைப் பதவி நீக்கம் செய்து, அவரை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்க வேண்டும். ஆனால், சூத்திரர்களின் ஆட்சி எனச் சொல்லிக் கொள்ளப்படும் கருணாநிதி அரசின் கீழ் இருக்கும் போலீசோ, நீதிபதி அம்பேத்கரைக் கண்டித்து சுவரொட்டி இயக்கம் எடுத்த வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. ஆகிய பரட்சிகர அமைப்புகள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
இத்தீர்ப்பை பல்வேறு சனநாயக அமைப்புகளும், தமிழின அமைப்புகளும் கண்டித்துள்ளன. மேலும், இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக ஆறுமுகசாமி தரப்பு வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, வீட்டுத் தரகர் ராயர், மூர்த்தி தீட்சிதர், செல்வராஜ் ஆகியோர் சிதம்பரம் கோயிலில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு இறந்து கிடந்ததைப் பற்றி விசாரிக்க வேண்டும் என முன்னாள் ஆடூர் ஊராட்சி மன்றத் தலைவர் என்.இளங்கோவன் கொடுத்த புகாரை விசாரிக்காமல் போலீசார் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இப்புகார் தொடர்பாக, முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் வீ.வீ. சாமிநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம்பசிவம் ஆகியோர் அனுப்பியுள்ள நினைவூட்டல் கடிதங்களையும் அதிகார வர்க்கம் கண்டு கொள்ளவேயில்லை.
இந்நிலையில் இப்புகார் மீது உடனடியாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கை ஏற்றுக் கொண்டுள்ள உயர்நீதி மன்றம், இது தொடர்பாக பதில் அளிக்கக் கோரி தமிழக அரசுக்கு ""நோட்டீஸ்'' அனுப்பியிருக்கிறது.
சிதம்பரம் கோயிலுக்குள் நுழைய விடாமல் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்ட விவகாரம் சட்டசபையில் எழுப்பப்பட்ட பொழுது, ""இந்தச் சட்டப் பிரச்சினை குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் ஆராய்ந்து பார்த்து, இதை எப்படி எதிர் கொள்ளலாம் என அரசு முடிவு செய்யும்'' என்று தமிழக முதல்வர் கருணாநிதி உறுதியளித்தார். இதனை நினைவூட்டியும்; ""மற்றவர்கள்'' திருச்சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் திருவாசகம் பாடத் தடை செய்து தீர்ப்பு வந்துள்ள நிலையில், தமிழக அரசு இனியும் மெத்தனமாக இல்லாமல், இப்பிரச்சினையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் கையெழுத்து இயக்கமொன்றை, சிதம்பரம் நகர் பகுதியில் மனித உரிமை பாதுகாப்பு மையம், தி.க., பா.ம.க., சி.பி.ஐ., சி.பி.எம்., வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தி வருகின்றன.
பத்து நாட்களில் ஒரு இலட்சம் கையெழுத்துப் பெற்று, அந்த மனுவை தமிழக முதல்வரிடம் கொடுப்பது என்ற இலக்கோடு, இந்தக் கையெழுத்து இயக்கம் வீச்சாக நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நகரப் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான சாவடியில் ஆறுமுகசாமி தங்கியிருந்து இப்பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளித்து வருகிறார். கையெழுத்து இயக்கம் தொடங்கிய முதல் மூன்று நாட்களுக்குள்ளாகவே, ஏறத்தாழ 10,000 பேர் தாமாகவே சாவடிக்கு வந்து, இப்போராட்டத்திற்கு ஆதரவாகக் கையெழுத்திட்டுள்ளதோடு, ""ஒருவருக்கு ஒரு ரூபாய்'' என்ற போராட்ட நிதியினையும் வழங்கி வருகின்றனர். பல இளைஞர்களும், மாணவர்களும் அடுத்த கட்ட போராட்டத்திற்குத் தங்களையும் அழைக்கக் கோரி, பெயரையும், முகவரியையும் கொடுத்துச் சென்றுள்ளனர்.
பார்ப்பனர்களும், நீதிமன்றமும் தமிழ் வழிபாட்டு உரிமைக்கு குறுக்கே நந்தியாக நின்றாலும், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பக்தர்கள் இக்கோரிக்கைக்கு ஆதரவாக நிற்பதற்கு இதுவே சாட்சி. இவர்களை அமைப்பாக அணிதிரட்டிப் போராட்டத்தில் இறங்கச் செய்வதன் மூலம்தான், கோவில்களில் தமிழுக்கும், தமிழனுக்கும் எதிராகப் பார்ப்பனர்கள் கடைபிடிக்கும் தீண்டாமையை ஒழித்துக் கட்ட முடியும்.
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
கடலூர் மாவட்டம்.
திருட்டு தீட்சிதரே
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற கதையாக, சிதம்பரம் நகரில் மிதிவண்டிகளைத் திருடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் ராமராஜ் தீட்சிதர் என்ற திருட்டுப் பார்ப்பானை, அவன் 10.8.2006 அன்று ஒரு மிதிவண்டியைத் திருடிச் செல்லும் பொழுது பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தீட்சிதர் கும்பலோ, ராமராஜ் தீட்சிதர் மனநிலை சரியில்லாதவர் என்ற பொய்யைக் கூறி அவனை விடுவிக்க முயன்றது.
எனினும், பத்திரிகையாளர்கள் இத்திருட்டைப் புகைப்படம் எடுத்துவிட்டதன் விளைவாகவும்; மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தந்தி கொடுத்ததோடு, அத்திருட்டுப் பார்ப்பானைக் கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்ததன் விளைவாகவும், சிதம்பரம் நகர போலீசார் வேறு வழியின்றி, ராமராஜ் தீட்சிதரைக் கைது செய்ததோடு, அவன் ஏற்கெனவே திருடி மறைத்து வைத்திருந்த ஐந்து மிதிவண்டிகளையும் கைப்பற்றினர்.
ஊரான் வீட்டு மிதிவண்டிகளையே அமுக்கப் பார்க்கும் தீட்சிதர் கும்பல், நடராசர் கோவில் சொத்தைப் புறங்கையால் நக்காமல் விட்டு வைத்திருப்பார்களா? சிவன் சொத்து குலநாசம் என்பதெல்லாம் ""மற்றவர்களுக்கு''த் தான் போலும்!